மலேசிய இந்திய தூதரகத்தில் கண்டனப் பேரணி : 3,000 - க்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு.

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைப் போருக்கு இராணுவ உபகரணங்களையும் ஆலோசனையும் வழங்கி மனிதப் பேரவலத்திற்குத் துணை போகும் இந்திய அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் மலேசியாவில் கவனயீர்ப்புப் கண்டனப் பேரணி தமிழ் அமைப்புகளால் நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு மனோகரன் மாரிமுத்து, மாண்புமிகு கோவிந் சிங் கர்பால் சிங், மாண்புமிகு மாணிக்கவாசகம் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். அத்தடன் மலேசிய பொது அமைப்புகளைப் பிரதிநிதித்து பல்லின மக்களும் இப்பேரணியில் பங்கு கொண்டனர்.



தமிழீழ மண்ணில் நூற்றுக் கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகிற வேளையில் அதைத் தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசு மெளனமாய் இருப்பது ஏன்?

ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கும் இந்த போருக்கு இந்திய அரசு துணைப் போவது ஏன்?

இப்போரில் இந்திய அரசின் நிலைப்பாடு என்ன?

சிறிலங்கா அரசு மேற்கொண்டு தமிழினப் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்தியா உடனே ஆவன செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகள் போய் சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

எனக் கோரி இந்திய தூதரகத்திற்கு முன்பாக இக்கண்டனப் பேரணி நடைப்பெற்றது,

இந்திய அரசே! ஈழத் தமிழர்கள் மீது சிறி லங்கா அரசு நடத்திவரும் இனப்படுகொலைப் போருக்கு துணைப்போகாதே என்பதான கருத்துகளைத் தாங்கிய பதாகைளையும் படங்களையும் தாங்கியவாறு உணர்ச்சிகரமாக முழக்கங்களை எழுப்பியபடி தமிழர்கள் திரண்டிருந்தனர்.

கண்டனப் பேரணியின் உச்சகட்டமாக மலேசியாவிற்கான இந்திய தூதர் அசோக் கந்தா பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடியப் பின் கண்டன மனுவை பெற்றுக் கொண்டார். மனு இந்திய பிரதமருக்கு அனுப்பபடும் எனவும் உறுதியளித்தார்.

சில பொது கருத்துரைகளுக்குப் பின் கண்டன பேரணி நிறைவு பெற்றது. கண்டன பேரணியில் வழங்கப்பட்ட மனுவின் உள்ளடக்கம் கீழே தரப்பட்டுள்ளது.





















ஈழத்தமிழர்கள் மீது சிறீலங்கா அரசு கட்டவிழ்த்து விடும் இனப்படுகொலை மீதான கண்டன மனு

06.02.2009
மாண்புமிகு இந்திய பிரதமர்
புது டில்லி,
மலேசியாவிற்கான இந்திய தூதரகம் ஊடாக,
கோலாம்பூர்.

மாண்புமிகு டாக்டர் மன்மோகன் சிங்,

மலேசியத் தமிழர்களாகிய நாங்கள், சிறீ லங்கா அரசாங்கத்தால் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இனப்படுகொலை குறித்து உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். இந்திய அரசு இவ்விடயத்தில் உடனே தலையிட்டு போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்து தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்து போரினால் நிர்மூலமான தமிழர் தாயகத்தின் மீள்கட்டமைப்பிற்கு உதவிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தினரால் கண்டமூடித் தனமாக மேற்கொள்ளப்படும் கடுமையான ராணுவத் தாக்குதல் குறித்து நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைகிறோம். ஆண், பெண் குழந்தைகள் வேறுபாடின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் அவர்களின் வீடுகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், கோவில்கள், தேவாலயங்கள் இன்ன பிற சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

சிறீலங்கா அரசாங்கம், இராணுவத்தால், மற்றும் அதன் அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்படும் கருணையற்ற கொலைத் தன்மையுடைய செயல்கள் எழுத்தில் சொல்ல முடியாத அதிர்ச்சியை எங்களுக்குத் தந்திருக்கிறது. அகிம்சையின் மறு உருவமாக பார்க்கப்பட்ட இந்தியா, சிறீலங்கா இனவாத அரசாலும் இராணுவத்தாலும் தமிழ் மக்கள் கொலை செய்யப்படுவதற்குத் துணைபோவது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட நம்பிக்கை துரோகமாகவே எங்களுக்குப் படுகிறது.

மற்ற உலக நாடுகளை விடுத்து, இந்தியா, கடவுளாகக் வணங்கப்படும் கிருஷ்ணா, புத்தர், அசோக மன்னன் அவதரித்த மண்; நம் காலத்தில் மகாத்மா காந்தியும் ஜவஹர்ல் நேரும் வாழ்ந்த மண். இன்றைய நிலையில் இனவாத சிங்கள அரசுடன் கைகோர்த்து தமிழர்கள் கண்மூடித் தனமாக கொல்லப்பட்டு தமிழர் தாயகம் அழிக்கப்படுவதற்குத் துணை போகிறது.

சிறீலங்கா இனவாத அரசோடு இணைந்து சிறீலங்காவிலிருந்து தமிழர்களை முற்றாக துடைத்தொழிக்க இந்தியா துணை போகிறது என்பதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை. ஆனால், நாம் அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, சிறீலங்காவில் பல ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் போராட்டத்திற்கும் உள் நாட்டுப் போருக்கும் தமிழர்கள் மூல காரணம் அல்லர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.

சிறீ லங்கா நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போருக்கு வித்திட்ட இரண்டு முக்கிய காரணங்களைத் தாங்கள் அறிந்திப்பீர்கள்.

இதற்கு முதல் காரணம் சிங்கள பெரும்பான்மையால் முன்னெடுக்கப்பட்ட சிங்கள பேரினவாத கொள்கை. இரண்டவாதாக இந்திய நாட்டிற்கு பிராந்திய அதிகாரம் மீதான கவனம்.

மஹாவம்ச நம்பிக்கையின் படி சிங்களவர்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள புத்தர்கள் இனரீதியாக தமிழர்களை விட மேன்மையானவர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. இந்த நம்பிக்கை உறுதியாக வலியுறுத்தும் முக்கியமானவர்களில் ஒருவரான அநாஹாரா தர்மபாலா, "தமிழர்களும் சிங்களவர்கள் அல்லாதவர்களும் அந்த தீவில் வாழ்வதற்குத் தகுதியற்றவர்கள்" எனக் குறிப்பிடுகின்றார்.

சிங்களப் பேரினவானத்தை முன்னிலைப்படுத்தும் ஒன்றாகத்தான் " 1915 சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கு இடையிலான இனக்கலவரம்" நடைப்பெற்றது. இந்த விடயத்தை பிரைவி கவுன்சிலுக்கு எடுத்துச் சென்றவர் ஒரு தமிழர். இந்த நிலைப்பாடுதான் சிங்கள அரசாங்கத்தில் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

1948ஆம், சிலோன் அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளும் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 1955 தொடக்கம், சிங்கள அறிவுஜீவிகள் தங்கள் சமுதாயத்தை மேல் கொண்டுவர போட்டி போட்டுக் கொண்டு தமிழ் மக்களை அடிமட்டத்திற்குத் தள்ளி விட்டனர்.

மொழி என்பதானது சிங்கள புத்திஜீவிகளுக்கும் கிருத்துவராய் இருந்து பின் புத்தமதத்தைத் தழுவிய பண்டாரநாயக்க அவர்களுக்குமிடையே அரசியல் போராட்டங்கள் ஏற்படுவதற்கு காரணமானது. ஒரு காலத்தில் தமிழ் மொழியை ஆதரித்த இவர் அப்படியே மாறி "மொழிப்பிரிவினை சிங்கள இனத்தின் அழிவிற்கு வித்திடும்" என கூறினார்.

இதற்கும் ஒரு படி மேலே சேர் ஜோன் கொத்தலாவல சிங்களம் மட்டுமே அதிகாரப்பூர்வ மொழி என்ற அறிவிப்பினை வெளியிட்டார்.

சிங்கள பேரினவாதம் மெல்ல தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கான வேர்பரப்ப தொடங்கியது. தமிழர்கள் இது தொடர்பில் குரல் எழுப்பவுதற்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இதுவே பின் தொடர்கதையானது. சிறீலங்கா அரசு மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றியது. கல்வித் தரப்படுத்தல் என்ற பெயரில் கல்வி வாய்ப்புகளைப் பறித்தது. ஒரு குடிமகனுக்குறிய அடிப்படையான உரிமைகளைக் கூட அவர்களிடமிருந்து பறித்தெடுத்தது.

அன்றைய தமிழ் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியைத் தழுவின. முன்னாள் பிரதமர் விக்கிரம சிங்க, தமிழர்கள் அகிம்சை முறையில் நிலைமைச் சரி செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர்கள் முன்னெடுத்த அறவழிப் போராட்டங்கள் பேரினவாதிகளால் நசுக்கி ஒடுக்கப்பட்டன. போராட்டவாதிகளில் பல நிலைகளில் துன்புறுத்தப்பட்டனர். இனியும் பொறுத்து கொண்டிருக்க முடியாது என்ற நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை தொடங்கினர். அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தோற்றத்திற்கும் தனிநாட்டு கோரிக்கைக்கும் வித்திட்டது.

அன்றைய நிலையில் டெலோ என்ற அமைப்பின் பெயரில் செயல்பட்ட போராட்ட குழவினருக்கு இந்திரா காந்தி அம்மையாரும் ரா அமைப்பினரும் முதல் ஆயுத பயிற்சியினை வழங்கினர்.

1987ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகையின் கீழ் யாழ்ப்பாணம் வந்தபோது இப்பிரச்சினையில் இந்தியா நேரடியாக தலையிட்டது. அந்த தலையீட்டிலிருந்து தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையிலான ஆயுத மோதல் இன்றைய நிலைக்கு வந்து நிற்கிறது.

சிறீ லங்கா தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு இந்தியாவின் நலனுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்க ஒன்றாக இருப்பதை இந்தியா எப்போதுமே உறுதி செய்து வந்துள்ளது. இது ஒரு சுயநலச் செயலே தவிர தமிழர் நலனைக் காக்கும் செயல் அல்ல!

இதற்காக விலையாக அப்பாவி தமிழ்மக்கள் ஆண் பெண், குழந்தைகள் வேறுபாடின்றி தங்கள் உயிரை இழந்து வருகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கூட ஒரே தாக்குதலில் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறீ லங்கா தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை இந்தியா தான் வளர்த்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. சிறீ லங்கா இராணுவத்தின் பக்கத்தில் நின்று கொண்டு தமிழர்களின் போராட்டத்தை இறுதி வரை நசுக்கப் பார்க்கிறது.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, இதுதான் உயர்மட்ட நம்பிக்கை துரோகம். நடந்து கொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தை அமைதியாக இருந்து பார்ப்பதும் ஒருவகையில் துரோகம்தான்.

மாண்புமிகு பிரதமர் அவர்களே, மலேசியத் தமிழர்களாகிய நாங்கள் இந்தியா உடனடியாக இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கீழ்க்காணும் தீர்வினை முன்வைக்க வேண்டும் என் விரும்புகின்றோம்.

இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட வழிவகுத்தல்
இரு தரப்பினரும் போரை நிறுத்தி அமைதி ஒப்பந்திற்கு சம்மதிக்க வைத்தல்.
தமிழர் தேசத்தை மீள் கட்டமைப்பதற்கு முறையான ஒதுக்கீடுகளை தமிழர்களுக்கு வழங்குதல்.
தமிழர் உரிமைகளை அங்கீகரித்து அவர்களின் தனிநாட்டு கோரிக்கை வழி விடுதல். ( கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேசமா உருவாக்க முடிந்தால், ஏன் தமிழீழத்தை உருவாக்க முடியாது?)

மாண்புமிகு பிரதமர் அவர்களே, இந்தியா தனது சுயநலத்தைக் கருத்தில் கொள்ளாமல் மக்களின் நலத்தைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியா உடனடியாக தலையிட்டு இச்சிக்கலில் தீர்வு காணும் என பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.