பிரணாப் முகர்ஜியின் அறிக்கை, தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது: வைகோ குற்றச்சாட்டு


நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி படித்த அறிக்கை ஈழ தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விட கொடுமையானது. இந்த துரோகத்துக்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் இன மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தாய்த் தமிழகத்து மக்களின் உள்ளம் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கையில், அந்த நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடும் அக்கிரமத்தை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சிங்கள கொடியோரின் ஊது குழலாக மாறி அறிக்கை தந்துள்ளார்.

மத்திய அரசின் மீது 4 ஆண்டு காலமாக நான் கொடுத்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு பிரணாப் முகர்ஜி தந்த அறிக்கையே ஒப்புதல் வாக்குமூலம் ஆகிவிட்டது.

வெறும் 150 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதுவும் 70,000 தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். தமிழர்களை சிங்கள இராணுவம் துடிக்க துடிக்க கொல்வதை மூடி மறைத்து தமிழர்களை விடுதலைப் புலிகள் கொல்கிறார்கள் என்று மன சாட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டுகிறார்.

முல்லைத்தீவு பகுதியில் ஏற்கனவே மூன்று இலட்சம் தமிழர்கள் இருந்தனர். இப்போது வவுனியாவிலிருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் முல்லைத்தீவுக்குள் வந்துள்ளனர்.

தமிழ் இனத்தையே அழிக்க தன் கொலைகார இராணுவத்தை ஏவி உள்ள ராஜபக்ச கூறியதை இந்திய வெளிவிவகார அமைச்சர் அப்படியே வழி மொழிகிறார். 35 ஆயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியில் இருந்து விடுபட்டு வந்து விட்டார்களாம்.

இலங்கை அதிபர் சொன்னதை இந்தியாவின் மந்திரியும் சொல்கிறார். அதுமட்டுமல்ல, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர். பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் வயது முதிர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், நெஞ்சை பிளக்கும் இந்த கொடிய துயரம் குறித்து ஒருவார்த்தைகூட பிரணாப் முகர்ஜி தன் அறிக்கையில் சொல்லவில்லை.

தமிழ்ப் பெண்கள் வவுனியா முகாமிலிருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு, அந்த இராணுவ மிருகங்களால் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு அதன்பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிங்களக் காடையர்கள் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியதை அறியும் போதே நம் அங்கமெல்லாம் பதறுகிறது. இதயமே நொருங்குகிறது.

இத்தனை கொடுமைகளையும், தமிழர் இன அழிப்புப்போரையும் சிங்கள அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க ஆயுதம் உதவி மட்டுமின்றி எல்லாவிதமான உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதால்தான் ஒப்புக்கு கூட போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்திய அரசு தயாராக இல்லை.

பிரணாப் முகர்ஜியின் அறிக்கை ஈழ தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விட கொடுமையானது. தமிழ் மக்கள் அருந்தும் தண்ணீர் தடாகத்தில் கலக்கப்படுகின்ற ஆலகால விஷம் ஆகும். இந்த துரோகத்துக்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது.

தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட கொடூர சதித்திட்டத்தை யார் வகுத்தார்களோ அந்த மாபாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. வினையை விதைத்து இருக்கிறார்கள். வினையை அறுப்பார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.