ஈழத்தமிழினத்தின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள்: மருத்துவர் ராமதாஸ்
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள் என்று தமிழர்களின் தாயக பகுதியில் நாள்தோறும் தமிழ் மக்களை சிங்கள அரசு அழித்து வருவதைக் கண்டித்தும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார்.
’ஈழத்தமிழர்களின் தாய்மண்ணில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.
2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடங்கள் சந்தித்து உரையாடினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார்.
ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக் கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.
இலங்கையில் தற்போது நாள்தோறும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் காவலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது. எனவே 27-ந் திகதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று தனது உரையில் தெரிவித்தார்.
தலைப்புகள்
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.