ஈழத் தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்த 'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தனின் இறுதி நிகழ்வில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனால் ஊர்வலத்தின் ஒரு பகுதியினர் கலைந்து சென்றுள்ளனர்.
பேருந்துகள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதில் பல பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. முக்கிய சாலையில் இருந்த வங்கி மற்றும் சில கடைகளும் சேதமடைந்தன.
மஞ்சக்குப்பம் அரசு பணியாளர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தன் உடலுக்கு லட்சக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களான மருத்துவர் இராமதாஸ், பழ. நெடுமாறன், வைகோ, தொல். திருமாவளவன், வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன், விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வம், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு, மாநிலத் துணைத் தலைவர் திருமால்வளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திருஞானம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ,
"இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை வெளிநாட்டுத் தமிழர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரை மாய்த் கொண்டுள்ளனர். யாரும் உயிர் மாய்த்துக் கொள்ளவேண்டாம். தமிழ்வேந்தன் விட்டுச் சென்ற தீ இனி யாரையும் தொடக்கூடாது. இனி உயிருடன் இருந்து எல்லோரும் போராட வேண்டும்" என்றார்.
பழ. நெடுமாறன் உரையாற்றிய போது,
"தமிழ்வேந்தன், அர்ப்பணித்த உயிர் நம்மை நெகிழ வைக்கிறது. உணர்ச்சிவயப்பட்டு யாரும் இனி உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது. அமைதியான தமிழ்வேந்தன் எரிமலையாக வெடித்திருப்பது உலகத் தமிழர்களை உசுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இதனை நினைத்து உலகத் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தத்திற்குப் போராட வேண்டும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக உயிர்நீத்த தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாவாக உதவியாக வழங்குகின்றோம்" என்றார்.
மருத்துவர் இராமதாஸ்,
"தமிழகத்தில் தனித்தனியாகப் போராடியவர்கள் இப்போது ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஏற்படுத்தி ஓரணியாகப் போராடி வருகிறோம். திருமாவளவன் 4 நாள் உண்ணாநிலை இருந்தபோது உடல் சோர்ந்ததே ஒழிய உள்ளம் சோர்வடையவில்லை.
நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்வதில் எந்த நன்மையும் கிடையாது. நாம் ஒன்றாக இருந்து மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி தமிழக அரசையும், ஒன்றுமே செய்யாத இந்திய அரசையும் திசை திருப்பும் அளவிற்குப் போராட்டம் நடத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம் என்றேன்.
அதனை ஏற்று அவரும் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இதுவரை ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியாவையும், உலகத்தையும் வலியுறுத்தி வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர்.
இன்று நடைபெற்ற நிகழ்வில் படுகாயமடைந்து 64 பேர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தமிழ்வேந்தனோடு இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை விட்டுவிட வேண்டும். இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வழிகளை சிந்தியுங்கள்.
இந்தச் சிக்கலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடைசிவரை போராடுவோம். இலங்கையில் நடப்பது போர் அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைப் புலிகள் எப்போதும் தோல்வியடைய மாட்டார்கள். ஈழம் வெல்லும். எனவே அனைவரும் நம்பிக்கையோடு இருப்போம். இணைந்து போராடுவோம். எல்லா முயற்சியும் செய்து போர் நிறுத்தம் செய்வோம். தமிழ்வேந்தனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்" என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலம் கடலூர் முதுநகரில் உள்ள சுடுகாட்டை அடைந்து அங்கு தமிழ்வேந்தனின் உடல் புதைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கடைசியாக வந்த சிலர் வழியில் இருந்த சில பதாகைகளை அப்புறப்படுத்தினர். அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இதில் யு.என்.ஐ. ஊடகவியலாளர் சிறீதர், 'தினகரன்' ஒளிப்படக் கலைஞர் சேகர் மற்றும் முருகவேல் ஆகியோரையும் காவல்துறையினர் அடித்து விரட்டினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.