ஸ்ரீலங்கா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலில் வென்றுவிடும் சாணக்கியம்


"கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்!" என்பார்கள். அந்த மாதிரி இருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண இனப்பிரச்சினைக் கான தீர்வு குறித்து வெட்டிப் பிரபலாகிப்பது. அதைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்தப் பழமொழிதான் நினை வுக்கு வருகின்றது.
இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு ஆயுதம் தாங்கிய புலிகள் அமைப்பே முட்டுக்கட்டை என்று கூறிவந்தது தென்னிலங்கை. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நியாயத் தீர்வு வழங்கும் தாராளம் பெரும்பான்மையினருக்கு இருப் பது போலவும், விடுதலைப் புலிகள்தான் தீர்வு காண இடமளிக்காது இடைஞ்சலாக இருந்து வருகின்றார்கள் என்ற மாதிரியும் தென்னிலங்கை கூறி வந்தது.

ஆனால் இப்போது புலிகளைக் கூண்டோடு அழித்து நிர்மூலமாக்கிவிட்டோம் என்று தெற்கு மார்தட்டி ஐந்து மாதங்களாகின்றன. ஆனால் தீர்வுக்கான முன்முயற்சி சற்றுக்கூட முன்நகரவில்லை.

இனி, ஜனவரியில் நடத்த உத்தேசிக்கப் பட்டிருக் கும் ஜனாதிபதித் தேர்தலுக்கும், மார்ச்சில் நடை பெற விருக்கும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர் தலுக் கும் பின்னர்தான் எல்லாம் என்று அரசுத் தரப்பே உறுதி செய்துவிட்டது.

"மலையைக் கெல்லி எலியைப் பிடித்த மாதிரி" சுமார் நீண்ட மூன்று ஆண்டு காலம், ஏறத்தாழ இருநூறு அமர் வுகள் வரை மாநாடுகள், கூட்டங்கள் கூட்டி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு தயாரித்த யோசனைத் திட் டத்துடனும், அந்தத் திட்டத்தின் சுருக்கக் குறிப்பு அடங் கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதோடும் தீர்வுக்கான முயற்சி கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.

இனி, ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டி, அதன் பின்னர் மார்ச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நாடாளு மன்றத் தேர்தலில் ஜனாதிபதியின் தற்போதைய ஆளும் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான் மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர்தான் தீர்வுக்கான நகர்வுகள் என்று கூறியிருக்கின்றார் அனைத் துக் கட்சிக் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் விதாரண.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை டைமுறைப்படுத்துவதாயின் அரசமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும் திட்டத்தையே அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றது. அப்படி அரசமைப்பை மாற்றுவதாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனவே, அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் தரப்பு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் வரை அனைவரும் பொறுத்திருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை. இப்படி விளக்கம் கூறுகின்றார் அமைச்சர் விதாரண.
இலங்கையின் தற்போதைய விகிதாசாரத் தேர்தல் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், ஆளும் தரப்புக்கு அல்லது ஒரு கூட்டமைப்புக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைப்பது என்பது கனவிலும் நடக்க முடியாத விடயம் என்பது நோக்கர்களுக்கு நன்கு தெரியும்.

எனவே, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று, அதன் பின்னரே இனப்பிரச் சினைக்குத் தீர்வு என்று கூறுவதும், காத்திருப்பதும், "அலை ஓய்ந்தபின் கடலில் குளிக்கலாம் என்று காத் திருப்பதற்கு" ஒத்தது என்பது தெளிவு.

அது மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இதே மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்துகொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்துத் தமது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார். தாம் அதிகாரத்துக்கு வந்ததும் தென்னிலங்கை அரசியல் தரப்புகளை ஒன்று கூட்டி மூன்று மாத காலத்துக்குள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்க யோசனையைத் தாம் பெற்று வெளியிடுவார் என அவர் உறுதியளித்திருந்தார். அதன்படி ஆட்சிக்கு வந்த அவர், தமிழர் தரப்பு மீது பெரும் போரைத் தொடுத்தாரே தவிர, தென்னிலங்கையின் இணக்கமான தீர்வு யோசனையை முன்வைக்கவில்லை.

மூன்று மாதகாலம், மூன்று வருடங்களாகியும் பலனில்லை. இப்போது அவர் பதவிக்கு வந்து நான்கு வருடங்களாகின்றன.இப்போதும் கூட அவரது அரசுக் கூட்டமைப்பில் உள்ள பதினொரு கட்சிகளும் மற்றும் இரு கட்சிகளும் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியனவும்) சேர்ந்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு என்ற பெயரில் தயாரித்த தீர்வு யோசனையையும் கூட முடக்கி வைத்துவிட்டு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியீட்டுவதற்கு இனப்பிரச்சினைத் தீர்வு விவ காரத்தை துரும்பாகப் பயன்படுத்த எத்தனிக்கின்றார் ஜனாதிபதி!

தீர்வு என்று பேசிப் பேசியே தேர்தலை வென்று விடும் எத்தனத்தில்தான் ஆளும் தரப்பு மும்முரமாக இருக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.
எத்தனை காலம்தான் இப்படி ஏமாற்றுவார்களோ.......கடவுளுக்குத்தான் வெளிச்சம்......!

மேற்குலகை எதிர்க்கும் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்தும்


தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க அரசியல் விமர்சக ராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும், பத்திரிகை யாளராகவும் கருதப்படுபவர்களுள் ஒருவர் விக்டர் ஐவன்.
1977 முதல் 17 ஆண்டுகள் நீடித்த ஐ.தே.கட்சியின் அதி கார யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அப்போதைய எதிரணியின் போராட்டத்திலும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் போக்குக்கு எதிராக நீதியை நிலை நாட்டும் திடசங்கற்ப போராட்டத்திலும் சளைக்காமல் ஈடு பட்டு மதிக்கப்பட்டவர் விக்டர் ஐவன்.

ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் வேண்டப்பட்டவராகக் கருதப் படும் அவர்,இப்போது ராஜபக்ஷ அரசின் செயற்போக்குக் குறித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல சில கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

மேற்குலகைப் பகைத்துக் கொள்ளும் இந்த அரசின் போக்கு விபரீதத்துக்கு வித்திடும் என்பதை அவர் கோடி காட்டுகின்றார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுத யுத்தத்தில் அரசு வெற்றிகொண்டிருப்பது உண்மைதான். இந்த அரசு வெற்றி கொள்ள வேண்டிய சவால்களில் அது பிரதான மானதுதான். ஆனால் அதற்குப் பின்னும் பல சவால்களை இந்த ஆட்சிப்பீடம் வெற்றிகொண்டாக வேண்டும். அவற்றை வெற்றிகொள்ள முடியாமல் போகுமானால், முன்னைய யுத்த வெற்றி அர்த்தமற்றதாக அபத்தமாக போய்விடும் என்று அவர் விளக்குகின்றார்.

மேற்குலகைப் பகைத்துக்கொள்ளும் அல்லது அதனை வெட்டி ஓடும் கொழும்பின் போக்கு நாட்டுக்கு நன்மை தராது. மேற்குலகைச் சார்ந்து நிற்காது விடினும் கூட, குறைந்தபட்சம் மேற்குலகுக்கு விரோதம் என்ற இறுக்கமான போக்கை அரசு கடைப்பிடிக்காமல் இருப்பதே உசிதமானது என்று சுட்டிக்காட்டுகின்றார் அவர்.

நாட்டின் பொருளாதாரம், சர்வதேச வர்த்தகம் என்ற கருத்துடன் தீர்க்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றது. மேற்குலகின் உதவியின்றி இலங்கையால் செம்மையாக இயங்கமுடியும் என்று பேச்சுக்குக் கூறப்பட்டாலும் கூட அது சாத்தியமற்றது என்பதே உண்மையாகும்.

சர்வதேச நாடுகளுடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் போக்கில் அசிரத்தையுடன் நடந்துகொண்டால் விளைவு மோசமாக அமையும் என்ற நல்ல முன்னுதாரணம் இலங் கைக்கு உண்டு என்பதையும் விக்டர் ஐவன் நினைவூட்டு கின்றார்.
"1977 ஆம் ஆண்டின் தேர்தல் மேடையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வீற்றிருந்த வேளையில், இந்திரா காந் தியை விமர்சித்து அவரைப் பசுமாட்டுக்கு உதாரணப் படுத்தி உரையாற்றினார். அதன் காரணமாகப் பின்னாளில் இலங்கை பெரும் விலை செலுத்தவேண்டி நேர்ந்தமை மறக்கக் கூடியதல்ல.

"பிரதமர் இந்திரா காந்தியின் நிர்வாக காலத்தில் இந்தியாவுடன் இலங்கை கசப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கடும் அமெரிக்க சார்பு மற்றும் மேற்குலகைச் சார்ந்து நின்ற தனது கொள்கைப் போக்கின் மூலம் இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றே இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கையின் காரணமாகவே நிவாரணப் பொருள் களுடன் இலங்கை நோக்கி வந்த இந்தியப் படகுகளைத் திருப்பி அனுப்பும் பணிப்புரையை ஜே.ஆர்.விடுத்தார். அவரின் அந்த முடிவை நாட்டின் பொதுமக்களும் திருப்தியுடன் வரவேற்றனர். எனினும், இந்தியா, இலங்கையின் வான்பரப்பை ஆக்கிரமித்துக்கொண்டு விமானங்கள் மூலம் யாழ். குடாநாட்டுக்குள் நிவாரணப் பொருள்களை வீசியபோது, ஜனாதிபதி ஜெயவர்த்தானாவின் இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு ஒத்தூதிய எந்த மேற்கு நாடும் இந்தியாவின் அச் செய்கைக்குக் கண்டனம் கூடத் தெரி விக்க முன்வரவில்லை. அந்த நாடுகளின் அப்போக்கு ஜெயவர்த்தனாவுக்கு ஆச்சரியத்தையும், ஆதங்கத்தையும், கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இறுதி யில் இலங்கை தனது பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அர சின் முன் மண்டியிட வேண்டிய நிலைக்குக் கொண்டுவந்து நிறுத்தியது அது.'' என்பதைச் சுட்டிக்காட்டுகின் றார் ஐவன்.

அதுமட்டுமல்ல வியட்நாமையும் அவர் உதாரணம் காட்டுகின்றார். சோவியத் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியது வியட்நாம். போர் ரீதியில் அமெரிக்காவைப் பின்னடைவுக் குத் தள்ளவும் அதனால் முடிந்தது. ஆனாலும் அந்த வெற்றி யின் பின்னால் அதனால் பலம் பொருந்திய நாடாக மாற முடியவில்லை. ஏழ்மையிலேயே அது மூழ்கியது. அந்தத் துன்பியல் நிலையிலிருந்து மீண்டெழுவதற்கு அதுவரை தான் பகைமை பாராட்டிய அமெரிக்காவின் உதவி, ஒத்தா சைகளை யாசிக்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது.

பலம்மிக்க நாடுகள் தமக்கு எதிர்ப்புக் காட்டி நிற்கும் நாடொன்றை உடனடியாகப் பாதிப்புக்கு உள்ளாக்கி விடு வதில்லை. படிப்படியாகவே கொஞ்சம் கொஞ்சமாகவே தமது அக்கருமத்தை அவை நிறைவேற்றி முடிக்கின்றன.

இவ்விதமாகப் பெரும் பலவான்களால் ஏறி மிதித்துக் குட்டிச்சுவராக்கப்பட்ட நாடுகளை நாம் சிந்தையில் நிறுத் திக் கற்றுத் தேறவேண்டியுள்ளது என்கிறார் விக்டர் ஐவன்.
அனைத்து மேற்குலக நாடுகளும் ஓரணியில் நிற்கும் போது அந்த ஒருங்கிணைந்த பலம் இலங்கைத் தேசத் தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும் ஆபத்து உள்ள மையை விக்டர் ஐவன் தொட்டுக்காட்டி எச்சரிக்கின்றார்.

ஆனால், புலிகளைத் தோற்கடித்த கணிப்பில் நிற்கும் கொழும்பு அதிகார வர்க்கம், அதே பாணியில் மேற்குலக மிடுக்கையும் முறியடித்து விடலாம் என்று கருதிச் செயற்படுவதாகவே தோன்றுகின்றது.

ஆட்சியில் உள்ளவர்கள் புரியும் இந்தத் தவறு, பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற நிலைக்கு இந்நாட்டு மக்களைத் தள்ளிவிடும் அபாயம் உண்டு.

தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்க புதிய நடைமுறை தேவை


இந்த நாட்டின் அந்நிய செலாவணி சேமிப்புக்கு முதுகெலும்பாக விளங்கும் மலையகத் தோட்டத் தொழிலாள ரின் சம்பளப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறிப்படுகின்றது.

இப்பத்தி எழுதப்படும் சமயத்திலும் நேற்று மாலை யும் இவ்விடயம் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம் மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மூன்றாவது சுற்றுப் பேச் சுகள் நடைபெற ஏற்பாடாகியிருந்தன.
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுகளும் இணக்கம் காணப் படாமல் முடிவுற்ற நிலையில் நேற்று மூன்றாவது சுற்றி லும் உடனடியாகவே தீர்க்கமான இணக்கமான முடிவு எட் டப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன என்று நேற்று முற்பகலில் பேச்சுக்கு முன்னர் கூறப்பட்டது.

எது எப்படியென்றாலும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அடுத்த நான்கு நாள்களுக்குள் இவ்விடயத்தில் ஏதே னும் ஒருமுடிவு வந்துவிடும் என்று தாங்கள் நம்புகின்றார் கள் என மேற்படி பேச்சுகளில் பங்குபற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
இலங்கையில் வறுமை நிலை உயர்வாக உள்ள பிரதேசம் மலையகமே. அந்தப் பிரதேசத் தோட்டத் தொழிலாளர்களே இலங்கையில் அதிகம் பின்தங்கிய மக்களாக உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நாடு முழுவதும் வறு மையின் வீதம் 14 ஆக இருக்க மலையகத்தில் மட்டும் அது 34 வீதமாக உயர்ந்து நிற்கின்றது.

உண்மையில், இலங்கையில் அபிவிருத்தியும், உதவியும், ஊக் குவிப்பும் விரைந்து வழங்கப்பட வேண்டிய பிரதேசமாக மலையகமே உள்ளது. ஆனால் அந்த மக்களின் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வேதனம் குறித்துக் கூட எவரும் சிந்திக்கின்றவர்களாக அக்கறை காட்டுபவர்களாக இங்கு இல்லை என்பதே உண்மை.

இப்போது சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் தோட்டத் தொழி லாளர்களின் சம்பளம் பற்றிய விடயம் பெரும் சர்ச்சையாக உருவாகி இழுபடுகின்றது. 2007 இல் அவர்களின் நாள் சம் பளம் சுமார் இருநூறு ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்துக்கான செயற் காலம் காலாவதியாகி சுமார் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் கூட வெறும் இரு நூறு ரூபா நாள் சம்பளத்துடன் அவர்கள் கையேந்தி அவலப்படும் நிலைமை நீடிக்கின்றது. இத்தகைய சொற்ப வேதனத்துடன் அவர்களைப் பணிக்கு அமர்த்தி இழுத்தடிப்பது அநியாயத்திலும் அநியாயமாகும்; அக்கிரமத்திலும் அக்கிரமமாகும்.

இந்த மலையக மக்களுக்கு உரிய காலத்தில் உரிய வேதன உயர்வை பெற்றுத்தர முடியாத, பெற்றுத்தர வக் கற்ற இந்தக் கூட்டு ஒப்பந்த முறையால் அந்த மக்களுக்கு என்ன பயன்? இப்படி மலையக மக்களின் அடிப்படைப் பிரச் சினைக்கு உரிய காலத்தில் உரிய முறையில் தீர்வு காண் பதற்கான வாய்ப்பை வழங்காத இந்தக் கூட்டு ஒப்பந்த முறைமை இனியும் தொடரத்தான் வேண்டுமா? என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுவது நியாயமானதே.
அத்தோடு இத்தகைய கூட்டு ஒப்பந்த ஏற்பாடு மூலம் மலையகத் தொழிலாளர்களின் வேதனத்தைத் தீர்மானிக் கும் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்களும் காட்ட மாக முன்வைக்கப்படுகின்றமை இச்சமயத்தில் கவனிக் கத்தக்கதாகும்.

ஒருசில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மட்டும் இப் படி வேதன அளவைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பங்கு பற்றும் அதிகாரத்தைத் தம்வசம் வைத்துக்கொண்டு ஆட் டம் போடுவது நியாயமற்றது. பல காத்திரமான தொழிற் சங்கங்களின் கருத்துகளும், நிலைப்பாடுகளும் உள்வாங் கப்படாமல் ஒரு சில தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளி டம் முழுப் பொறுப்பும், அதிகாரமும் ஒப்படைக்கப்படுவது தவறு. அத்தகைய அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர் கள் அதை வைத்துக்கொண்டு, மலையகத் தோட்டத் தொழி லாளர்களுக்காகத் தாங்கள் போராடுவார் கள் என வெளி வேஷத்துக்குக் காட்டிக்கொண்டு, முதலாளி மாருடன் மறை வில் இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையை சுருட்டிக் கொண்டு, தொழிலாளர்களைக் காட் டிக் கொடுத்து விடு கின்றனர் என்றெல்லாம் கூட முறைப்பாடுகள் கூறப்படு கின்றன.அவற்றில் உண்மை இருக்கலாம். உண்மை இல் லாமல் போகலாம்.
தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க விடயங்களுக் காகப் பேச்சு நடத்துவது என்பது வெகு நுட்பமான விடயம்.

"நூறு பெறவேண்டுமென்றால் நூற்றியைம்பது கேட்கவேண்டும். அப்போதுதான் நூறாவது கிடைக்கும்" என் பார்கள்.

இதுபோலவே மலையகத் தோட்டத் தொழிலாளரின் வேதனமும் நாளொன்றுக்கு 450 ரூபாவாகவாவது இருக்கவேண்டும் என்றால் ஐந்நூறு ரூபாவாக அதைக் கேட்டால்தான் இழுபறிப்பட்டு, சற்றுக் கீழிறங்கி இணக்கத்துக்கு வருவார்கள். அப்படி இணக்கத்துக்கு வந்ததும் "தினசரி ஐந்நூறு ரூபாவாக வேதனம் உயர வேண்டும்" என வற்புறுத்திய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இப்போது முதலாளிமார்களுடன் மறைமுக இணக்கத்துக்கு வந்து, பெரும் தொகையைக் களவாகச் சுருட்டிக்கொண்டு, விட்டுக்கொடுத்து, ஐந்நூறு ரூபாவுக்குக் குறைந்த தொகை நாள் வேதனத்துக்கு இணங்கிவிட்டார்கள் என்று எதிர ணியில் இருந்து சேற்றை அள்ளி வீசுகின்றார்கள். இப்படி இன்னொரு தரப்பில் விசனம் கூறப்படுகின்றது
கடந்த தடவையும் 2007 இலும் இப்படி மலையகத் தொழிலாளரின் வேதனம் தொடர்பான விடயத்தில் தோட்ட உரிமையாளர் சம்மேளனத்துக்கும் கூட்டுத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கருத்து வேற்றுமை வந்தபோது அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவே தலையிட்டு ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டியவரானார்.

இந்த விடயங்களைச் சீர்தூக்கிப் பார்க்கையில் மலை யகத் தோட்டத் தொழிலாளரின் வேதனத்தைத் தீர்மானிக் கும் விடயத்துக்குத் தற்போதைய கூட்டு ஒப்பந்த நடை முறைக்குப் பதிலாகப் புதிய பொறிமுறை ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவது அவசியம் என்பது தெளிவாகின்றது.

நாட்டையும் மக்களையும் சீரழிக்கும் மஹிந்த அரசைத் தோற்கடிப்போம்! அனைத்து மக்களையும் அணிதிரள ரணில் பகிரங்க அழைப்பு.



ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் சீரழித்துக்கொண்டிருக்கும் மஹிந்த அரசின் ஆட்சியைத் தோற்கடிப்பதற்கு அனைத்து மக்களும் அணிதிரளவேண்டிய தருணம் வந்துவிட்டது என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

63 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து இன மக்களின் ஒத்துழைப்போடு ஐக்கிய தேசியக் கட்சியால் ஈட்டிக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை ஜனாதிபதியும் அவரது அரச தரப்பினரும் தவிடுபொடியாக்கி வருகின்றனர் என்றும் ரணில் குற்றஞ்சாட்டினார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்க சிறுவர் நூலக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் 63 ஆவது வருடாந்த மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மண்டபம் நிறையக் கட்சியின் ஆதரவாளர்கள் அங்கு கூடியிருந்தனர். இதற்கு முன்பதாக அவர் கட்சியின் ஸ்தாபகரான டி.எஸ்.சேனாநாயக்காவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்துக் கட்சியின் மறைந்த தலைவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பேசுகையில் கூறியதாவது நாம் அருமைபெருமையாகப் பெற்ற சுதந்திரத்தின் மகிமையால் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து மக்களும் அமைதியாகவும் இலங்கையர் என்ற அடிப்படையிலும் வாழ்வதற்கான சூழ்நிலையை எமது மூத்தத் தலைவர்கள் உருவாக்கினார்கள். இதே கொள்கைகளையே நானும் இங்கு உறுதிப்படுத்துகின்றேன். அரசியல் முன்னெடுப்புகளையும் இதே நோக்கத்தில் எமது கட்சி பின்பற்றி வந்தது. இதன்பொருட்டு அனைத்து இன மக்களின் அமைப்புகளும் எமக்கு உதவினர். இதனை நம்பியே மக்கள் எமது கட்சியோடு இணைந்துகொண்டனர்.

நாம் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே எமது கட்சியின் கொள்கை அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இங்கு வாழும் பல்லின மக்களின் மொழி, கலாசாரம், பண்பாடுகள் ஆகிய விழுமியங்கள் பேணப்படவேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் அடிப்படையிலே நாட்டின் அபிவிருத்திகள் அனைத்தையும் படிப்படியாகக் கட்டி எழுப்பினோம். மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடக்கம் எல்லோராலும் கையாளப்படும் கையடக்கத் தொலைபேசி வரை அனைத்துத் தேவைகளையும் எமது கட்சி அரசே பெற்றுக்கொடுத்தது.

இவற்றை எல்லாம் சீரழித்துவிட்ட இன்றைய அரசு ஜனநாயக மரபுகளை மதியாமல் தாம் விரும்பியபடி குடும்ப ஆட்சியையும் தமக்குத் தேவைப்பட்டவர்களையும் காப்பாற்றிக்கொள்ளும் வகையில் கருமங்களை முன்னகர்த்தி வருகின்றது.

இந்த நாட்டில் மகா மன்னர் என்ற ஒருவர் இல்லை. நாம் எல்லோருமே மன்னர்கள்தான். எமது நோக்கம் நாட்டில் இறைமை பாதுகாக்கப்படவேண்டுமென்பதாகும். பல சமூக மக்கள் வாழும் இந்த நாட்டில் அரசும் பல சமூக அமைப்பாக இடம்பெறவேண்டும். இந்த நல்லெண்ணத்தை தவிடுபொடியாக்க இடமளியோம். புலிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மூலமாகவே ஜனாதிபதி மஹிந்தரும் இன்று தொடர்ந்து பதவியில் இருக்கிறார்.

இன்று நாட்டைத் தவறான முறையில் இட்டுச்செல்லும் மஹிந்தரின் ஆட்சியைத் தோற்கடித்து ஐ.தே.கட்சியைப் பதவியில் அமர்த்த நீங்கள் எல்லோரும் முன்வரவேண்டும். இந்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் முன்வரவேண்டும். 13 ஆவது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை இன்றைய அரசு களியாட்ட விழா போன்று நடத்தி வருகின்றது.நாட்டு மக்கள் இந்த அசாதாரணங்களை பொறுமையுடன் அவதானித்தவண்ணம் இருந்து வருகின்றனர்.

எமது கட்சி விரைவில் எடுக்கப்போகும் தீர்மானங்களுக்கு ஏற்ப கட்சியைச் சீர்குலைக்க உள்ளும் புறமும் எதிராகச் செயற்படும் சக்திகளுக்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம். மக்களின் அபிமானத்தைப் பெற்ற டி.எஸ்., டட்லி, சேர். ஜோன், ஜே.ஆர்., பிரேமா, டி.பி. ஆகிய தலைவர்களின் ஆதர்ஷ நடைமுறைகளை ஒதுக்கிவிட இயலாது. இவ்வடிப்படையில் கட்சியின் முன்னேற் றத்துக்கு பாதகமான செயல்படுபவர்கள் மீது நாம் மிகுந்த அவதானத்துடன் ஒழுக்க நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம். எம்மை நம்பி வாழ்கின்ற மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கவும் இயலாது எனவும் ரணில் மேலும் தெரிவித்தார்.

இன்று நடக்கும் முக்கிய சந்திப்புகள்


இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்தவரை இன்று இடம்பெறும் இரண்டு சந்திப்புகள் முக்கியமான வையாகின்றன.

ஒன்று வடக்கு, கிழக்குத் தமிழர்கள் சம்பந்தமானது.
மற்றையது மலையகத் தமிழர்கள் தொடர்பானது.


முதலாவது சந்திப்பு வடக்கு, கிழக்குத் தமிழர்க ளைப் பெருமளவில் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இலங்கையின் அரசுத் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடை யில் நீண்ட காலத்தின் பின்னர் இடம்பெறுவது. இன்று மாலை இச்சந்திப்பு நடக்கிறது.

அடுத்தது மலையகத் தமிழர்களின் பிரதான வாழ் வாதாரமாக இருக்கும் தோட்டத் தொழில் சம்பந்தமான வேதனம் குறித்த பேச்சுகள்.

மலையகத்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான விவகாரம் இழுபறிக்குள் சிக்கிய நிலையில் இன்று கூட்டு ஒப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் மிக முக்கிய சந்திப்பு நடைபெறுகின்றது.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திக ழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், அவர்க ளின் உழைப்பை உறிஞ்சியபின் உரிய வேதனம் அளிக் கப்படாமல் தேயிலைச் சக்கை போல பிழியப்பட்ட பின் நாதியற்றவர்களாக வீசப்படும் நிலைமை நீடிக்கின்றது.

அவர்களின் முக்கிய தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் மலையகத் தோட்டத் தொழிலாளரின் சம் பளம் தொடர்பாக ஏற்கனவே செய்யப்பட்டிருந்த ஒப் பந்தம் கடந்த மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஐந்து மாதம் கடந்தும் அது புதுப்பிக்கப் படவில்லை. இரண்டரை வருடத்துக்கு முன்னர் நிர் ணயிக்கப்பட்ட வேதனப்படியே இன்றும் சம்பளம் பெற வேண்டிய அநீதி நிலைக்குள் அதீத கஷ்டத்துக்குள் மலையகத் தொழிலாளர்கள் சிக்குண்டிருக்கும் அவலம்.
தோட்டத் தொழிலாளரின் சம்பளத்தை குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஐந்நூறு ரூபாவாக உயர்த்த வேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தத் தொற்சங்கங்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலைமையில், கடந்த முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்கள் ஒத்துழையாமைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. ஆனால் அத்தகைய ஒத்து ழையாமைப் பணி எத்தகையது என்பதில் கூடத் தொழிலாளர்களிடையே குழப்பம் நீடிக்கின்றது. "இது வேலை நிறுத்தமும் அல்ல, மெதுவாகப் பணி செய்யும் போராட் டமும் அல்ல' என்று சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் விளக்கம் கூறப்படுகின்றது. ஆனால் அவற் றுக்கு அப்பால் ஒத்துழையாமைப் போராட்டம் எத்தகை யது, அதை எப்படி முன்னெடுப்பது, அந்தப் போராட்டத்தின் பண்பியல்புகள் எவை என்பன பற்றியெல்லாம் தெளிவான வரையறை இல்லை. இதனால், இவ்வாறு தங்கள் சார்பில் சம்பள உயர்வு கோரி நடத்தப்படும் போராட்டங்களுக்கு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் முன்வந் துள்ள போதிலும், அந்தப் போராட்டத்தை எந்த வழி முறை யில் முன்னெடுப்பது என்பதில் போதிய விளக்க மில் லாமல் அவர்கள் தடுமாறி நிற்கின்றமையும்கண்கூடு.

இந்நிலையில்தான், இவ்விடயம் குறித்து இறுதி முடிவு ஒன்றை எடுக்கும் இலக்கோடு கூட்டு ஒப் பந்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை இன்று சந்திக்கின்றனர். தோட்டத் தொழிலாளரின் நாள் கூலியை ஐந்நூறு ரூபாவுக்கும் அதிகமாக உயர்த்தும் ஓர் இணக்கப்பாடு இந்தச் சந்திப்பில் எட்டப்படுமாயின், அது அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களின் வயிற் றில் பால் வார்த்ததாக இருக்கும்.

அடுத்ததாக இலங்கை ஜனாதிபதிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று மாலை இடம் பெறும் சந்திப்பு நோக்கற்பாலதாகும்.

அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்த நிலையில், அரசுத் தலைவருடன் அரசியல் தீர்வுக்கான விடயங்கள் குறித்து சந்தித்துப் பேசுவதைத் தவிர்த்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது புலிகள் இயக்கம் முற்றாக அழித் தொழிக்கப்பட்டுவிட்டது என அரசுத் தரப்பால் அறிவிக்கப்பட்டு சுமார் மூன்றரை மாதங்களின் பின்னர் முதல் தடவையாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று நேரடிப் பேச்சுகளில் ஈடுபடவிருக்கின்றது.

வன்னியில் நலன்புரி மையங்கள் என்ற பெயரில் இயங்கும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் தமிழர்க ளின் பேரவல நிலைமை
வன்னியில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களின் எதிர்காலம்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எதிர்கால வாய்ப்புகள்

தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தமது வழமை யான பணிகளை முன்னெடுப்பதில் உள்ள இடைஞ்சல்கள் வன்னிக்கு அப்பால் வடக்கு, கிழக்கின் ஏனைய இடங்க ளில் வாழும் தமிழர்கள் எதிர்கொள்ளும் அன்றாட நெருக்கடிகள் , இவை போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள் ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடை யில் இன்று இடம்பெறும் பேச்சுகளின்போது முக்கியமா கக் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில் இன்று நடைபெறும் இந்த இரண்டு சந்திப்புகளுமே இந்த இலங்கைத் தீவில் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய விடயங்களில் முக்கிய பங்கை இடத்தை வகிக்கப் போகின்றன.

கொடுமை தாங்காமல் முகாம் மக்கள் சிங்களப்படையினருடன் மோதும் நிலை வரும்!

வன்னி தடுப்பு முகாம்களில் மக்கள் அளவிட முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதை அடுத்து அங்கு மக்களுக்கும் சிங்களப் படையினருக்கும்

இடையில் மோதல்கள் வெடிப்பதற்கான சாத்தியங்கள் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எச்சரித்துள்ளது.

முகாம்களில் காணப்படும் கொடூரமான வாழ்க்கைச் சூழல் காரணமாக அங்குள்ள மக்கள் மிகப் பெரியளவில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முகாம் மக்களின் நிலை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்கம்பிகளால் அடைக்கப்பட்ட பகுதிக்குள் அந்த மக்கள் வாழ்கிறார்கள். பருவமழை காரணமாக அந்தப் பகுதி நீரில் ஊறிப் போய்க் கிடப்பதுடன் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ளது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்.
அங்கு மிகக் கொடூரமான நிலைமை காணப்படுகின்றது.

அடுத்த மாதம் வடக்கு - கிழக்கில் பருவமழை பெய்யத் தொடங்கிவிடும். அதன் பின்னர் நிலைமை இன்னும் மோசமாக மாறிவிடும். முகாம்களுக்குள் வாகனங்கள்கூடச் செல்ல முடியவில்லை.

இத்தகைய நிலையால் அங்குள்ள மக்கள் படையினருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தகையதொரு நிலை குறித்து நாங்கள் எச்சரிக்கின்றோம்.
முகாம்களில் சிறுவர்கள் நோயால் மடிந்துகொண்டிருக்கிறார்கள். இதனைப் பார்த்துக்கொண்டு பெற்றோர்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.

நோய் வாய்ப்பட்டுள்ள சிறுவர்களை மேற்கொண்டு சிகிச்சைக்காக முகாமில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் படைத்தரப்பு அதற்கு அனுமதி மறுத்துள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்பத்திரிகளில் வேதனையுடன் சிறுவர்கள்


கிழிந்த மெத்தைகள் வரிசையாகக் காணப்பட்டன. இலங்கையின் தலைநகர் கொழும்பை ஜன்னலால் காயமடைந்த குழந்தையொன்று பார்த்துக்கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவேளை அந்தக் குழந்தையை பெண் உறவினர் ஒருவர் சாந்தப்படுத்திக்கொண்டிருந்தார். வட இலங்கையில் மோதல் இடம்பெற்ற இறுதிக் கட்டங்களின் போது வயிற்றில் சூட்டுக் காயங்களுடன் இந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தப் பெண் குழந்தையின் வயிற்றின் குறுக்கே அதிகளவு தையல்கள் போடப்பட்டிருந்தன. மருத்துவர்கள் சத்திரசிகிச்சை செய்து சன்னத்தை அகற்றியிருந்தனர். அக்குழந்தையின் வலது காலில் கணிசமானளவு சதை எடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலுள்ள மருத்துவமனைகளில் பொதுமக்களின் பார்வைக்குத் தென்படாமல் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் இந்தச் சிறுமியும் ஒருவராவார். ஆஸ்பத்திரி வார்ட்டுகளில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த காயமடைந்தவர்கள் தங்களால் எழுந்து நடக்கக்கூடிய நிலைமைக்கு வந்த பின்பே அவர்கள் முகாம்களுக்கு திரும்பிச் செல்வார்கள். அந்த முகாம்களில் சுமார் 3 இலட்சம் மக்கள் தங்கியுள்ளனர்.

யுத்தம் நடைபெற்ற இறுதி வாரங்களில் மிக மோசமாக காயமடைந்த சிறுவர்கள் வயது வந்தோர்களுக்குத் தேவையான சிகிச்சையளிப்பதற்காக நாட்டின் மருத்துவ சேவைகள் போதியளவு இல்லையென்று சுகாதார பணியாளர்களும், மனித உரிமைகள் ஆர்வலர்களும் கூறுகின்றனர். இந்த அனர்த்தத்தின் உண்மையான அளவு பொதுமக்களின் கண்களுக்குத் தென்படாத தன்மையே காணப்படுகின்றது. மோதல் பகுதியில் பணியாற்றிய 3 மருத்துவர்கள் இழப்புகள் தொகை தொடர்பாக திரித்துக் கூறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. வின் உத்தியோகபூர்வமற்ற புள்ளிவிபரத்தின் பிரகாரம் கடந்த 4 மாதங்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகி இருப்பதாகவும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் கடைசி 3 நாட்களில் இடம்பெற்ற இழப்புகள் தொடர்பாக உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. பிந்திய எண்ணிக்கை தொடர்பான விபரம் தன்னிடம் இல்லை என சுகாதார அமைச்சு கூறுகிறது. சிறுவர்களின் இழப்புகள் அதிகளவில் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.

முழுத்தொகையில் சிறுவர்கள் இழப்புகள் 45% என்று கூறப்படுகின்றது. இதன் பிரகாரம் 3600 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 7650 பேர் காயமடைந்தும் இருப்பதாக கணிப்பிடப்படுகிறது. ஆயினும், காயமடைந்தவர்கள் சிகிச்சையளிக்க முடியாததால் பின்னர் மரணமடைந்திருப்பதாக நம்பப்படுவதாக சிலர் கருதுகின்றனர். கொழும்பிலுள்ள சிறுவர்கள் மருத்துவமனைக்கு 23 ஆம் திகதி சனிக்கிழமை சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பேசுவதற்கு முயற்சிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையின் 6 ஆம் மாடியில் வார்ட் இருந்தது. அங்கு மிகவும் மோசமாக காயமடைந்த சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அது மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்தும் காட்சியாகும். அங்கங்கள் இழந்த, துப்பாக்கிச் சூட்டுக்கு காயமடைந்த, தோல் எரியுண்ட சிறிய பிள்ளைகள் அந்த வார்ட்டில் இருந்தனர். இந்த மாதிரியான பலர் அங்கு வந்ததாக அங்கிருந்த தலைமைத் தாதி கூறினார். யுத்த வலயத்திலிருந்து சிகிச்சைக்காக விசேட சிறுவர் மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு தொகையினர் என்பது பற்றி அவரால் கூறமுடியவில்லை. இந்த சிறுமிக்கு வயிற்றில் சுடப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருத்துவர்கள் சன்னத்தை அகற்றிய பின் போடப்பட்ட தையல்களே இவை என்று அவர் தெரிவித்தார்.

ஏனைய குழந்தைகள் கதிரைகளில் அமர்ந்திருந்தனர். ஒரு குழந்தையின் தோள்மூட்டில் பிளாஸ்டர் போடப்பட்டிருந்தது. பையன் ஒருவன் எரிகாயப்பட்டிருந்ததாகத் தோன்றியது. ஏனையோர் தொட்டில்களில் இருந்தனர். அவர்களின் காயங்களுக்கு கட்டுப் போடப்பட்டிருந்தது. வார்ட்டுகள் துப்புரவாக இருந்தன. அவர்கள் அங்கு விருந்தாளி ஒருவர் வந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்ததாக தென்பட்டது. ஏனெனில், ஆஸ்பத்திரிக்கு பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்தக் குழந்தைகள் குணமடைந்தவுடன் வவுனியாவிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் தமது பெற்றோரிடம் அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு காயமடைந்தது என்பது பற்றி நிரூபிப்பதற்கான சாத்தியம் இல்லை. மருத்துவமனையின் பணிப்பாளரின் அனுமதியின்றி நோயாளரின் உறவினர்களையோ அல்லது நோயாளிகளையோ பேட்டி காண்பதற்கு அங்குள்ள ஊழியர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பத்திரிகையாளர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஏனையோர் கூறிய விபரத்தின் பிரகாரம் ஏனைய மருத்துவமனைகளிலும் நிலைமை ஒரே மாதிரித்தான் என்று தெரிவிக்கப்பட்டது.

யுத்தத்தால் ஏற்பட்ட இழப்புகளினால் வார்ட்டுகள் நிரம்பி வழிந்தன. மருத்துவர்கள் குணப்படுத்துவதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். அளவுக்கதிகமாகவும் பயங்கரமாகவும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கொழும்பிலுள்ள யுனிசெவ் பேச்சாளர் ஜேம்ஸ் ஹெல்டர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவ முறைமைகள் முழு அளவில் பயன்படுத்த வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார். காயமடைந்த குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருக்கிறார். சிலரே காயமடைந்தும், கொல்லப்பட்டும் இருப்பதாக நிரூபிப்பதற்கான தீர்மானத்துடன் அரசாங்கம் இருப்பதாகத் தென்படுவதாக மாற்றுக்கோள்களுக்கான நிலையத்தைச் சேர்ந்த பவானி பொன்சேகா என்பவர் கூறினார்.""பேசக்கூடாது என்ற கொள்கை உள்ளது யாவற்றையும் சுருட்டி வைத்துவிட வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கப்பலில் நாட்டிலுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்பதே உண்மை. ஆஸ்பத்திரிகளில் நீங்கள் பார்த்தால் இது அதிக தொகை என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இரண்டு மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்த பொன்சேகா இரு கால்களை இழந்த அல்லது இரு கால்களும் முடமாக்கப்பட்ட குழந்தைகளை தான் பார்த்ததாக தெரிவித்தார். அங்கவீனர்களான தலைமுறையினரையே நாங்கள் கொண்டிருக்கப்போகின்றோம் என்று அவர் கூறினார். உளரீதியாக பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

முகாம்களுக்குள் உரிய மருத்துவ வசதிகள் போதாது என்று ஐ.நா. விளங்கிக் கொண்டுள்ளது. ஆனால், வெளியிடத்திலிருந்து உதவிகளை கிடைக்கச் செய்வதற்கு அரசு தயங்குகிறது. சனிக்கிழமை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முகாமொன்றுக்குச் சென்றபோது ஒரு சிறுமி ஒருவரை சந்தித்தார். அந்தச் சிறுமியின் இரு கால்களும் காயமடைந்திருந்தன. சிதறல்கள் பட்டதால் தனக்கு காயமேற்பட்டதாகவும் முகாமில் மருத்துவ வசதிகள் இல்லை என்றும் அந்தச் சிறுமி அவருக்கு தெரிவித்திருக்கிறார்.

பதிலளிக்கப்படாத பல கேள்விகளுடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட பான் கீ மூன்


பதிலளிக்கப்படாத கேள்விகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை விட்டு புறப்பட்டிருப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.

மோதல் சூன்ய வலயத்துக்கு மேலாக சென்று பார்வையிட்டும் அகதிகள் முகாம் ஒன்றுக்கு சென்று நிலைமையை அவதானித்துவிட்டும் பான் கீ மூன் தலைமையில் வருகை தந்திருந்த அதிகாரிகளுடன் ஐ.நா. விமானம் கொழும்பை விட்டு புறப்பட்ட போதிலும் குழப்பகரமான பல கேள்விகள் தொடர்ந்தும் இருப்பதாக அந்த விமானத்தில் சென்ற நியூயோர்க்கிலுள்ள இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்யூ ரசல் லீ தனது செய்தியாய்வில் எழுதியிருக்கிறார்.

கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் என்று பான் கீ மூன் கூறியிருக்கிறார்.

கேள்வி பதில் அமர்வு இடம்பெறவில்லை. பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக இரத்தக்களறியென்று அதனை அழைப்பதை பான் தவிர்த்துக்கொண்டார். "அந்தக் குறிப்பிட்ட வார்த்தையை நான் சொல்லவில்லை. அது தொடர்பாக முழுமையான தெளிவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்' என்று அவர் கூறினார். கண்டியிலிருந்து விமானநிலையத்திற்கு ஊடகத்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டனர். (பான் கீ மூனின் பயணம் தொடர்பாக வழங்கப்பட்ட இரண்டு நாள் விசாவை மேலும் நீடிக்குமாறு இன்னர் சிற்றி பிரஸ் கேட்டிருந்தது. ஆனால் அது வழங்கப்படவில்லை.

கண்டியிலிருந்து விமானநிலையம் செல்லும் பாதையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகள் காணப்பட்டன. எங்கும் சிங்கக் கொடி பறந்தது. விமானநிலையத்தில் அரசாங்கம் மற்றொரு செங்கம்பள பிரியாவிடைக்கு ஏற்பாடு செய்திருந்தது. பான் கீ மூன் சிறிது நேரம் தாமதித்து வருகை தந்தார். பான் கீ மூனின் தலைமையதிகாரி விஜே நம்பியாரும் ஐ.நா. விமானத்தில் உடன் வந்தார். அவருடைய ஒருவார காலப் பணி பூர்த்தியாக்கப்பட்டிருந்தது. அவர் விமானத்தில் ஏறியபோது இன்னர் சிற்றி பிரஸ் பகிடிவிட்டது. திரும்பி வந்ததற்கு நல்வரவு என்று தெரிவித்தது. பான் கீ மூன் பேட்டியளித்துக்கொண்டிருந்தார். இறுதியாக இன்னர் சிற்றி பிரஸை அவர் கண்டுகொண்டார். நீங்களும் எங்களுடன் திரும்பி வருகிறீர்களா என்று கேட்டார். ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. விசா நீடிப்பு மறுக்கப்பட்டபோதும் ஐ.நா.விடம் உதவி இல்லை.

மக்களுடன் இன்னர் சிற்றி பிரஸுக்கு மக்கள் கதைக்க முடியுமா என்று ஐ.நா. விலுள்ள இலங்கைத் தூதுவரிடம் கேட்கப்பட்டது. ஓரளவுக்கு முடியும் என்று அவர் கூறினார். முகாம்களில் உள்ளே இருந்தவர்களிடம் மட்டுமே இன்னர் சிற்றி பிரஸால் கதைக்க முடிந்தது. அங்கு படையினரும் ஏனைய அரசாங்க அலுவலர்களும் இருந்தனர். இலங்கை அதிகாரிகளிலும் அங்குள்ள அதிகாரிகளே முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் இருந்தவர்களை அருகிச்செல்வதைத் தடுத்தனர். கொழும்பிலிருந்து விமானம் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னர் விமானத்தில் அங்கு கூடியிருந்தோர் மத்தியில் பான் கீ மூன் பேசினார். கொரியாவின் முன்னாள் தலைவரின் தற்கொலைக் கடிதம் மற்றும் தான் மலர்களை அங்கு அனுப்பி வைத்த விடயம் என்பன பற்றி அங்கு கதைத்தார்.

முன்நாட்களில் ஊடகங்களுடன் பேசுவதற்கு தென்கொரியா தடுத்திருந்தது. பின்னர் மூன்று மருத்துவர்களைப் பற்றியும் நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டீர்களா என்று பான் கீ மூனிடம் கேட்கப்பட்டது. ஆம், நான் கதைத்தேன் என்று அவர் பதிலளித்தார்.

அரசாங்கத்துடனான கூட்டறிக்கையின் போது அந்த மருத்துவர்கள் பற்றியோ அல்லது பத்திரிகை சுதந்திரம் குறித்தோ முகாம்களுக்கு அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் செல்வது தடுக்கப்பட்டமை குறித்தோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. அரசாங்கம் மனிதாபிமான நிறுவனங்கள் தொடர்ந்து பணிபுரிவதற்கு ஏற்பாடுகளைச் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ், எதிர்க்கட்சிகள் அல்லது சிவில் சமூகத்தை ஏன் பான் கீ மூன் சந்தித்திருக்கவில்லை. இது அரசாங்கங்கள் பக்கம் ஐ.நா. செல்வதாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துகின்றது. விமானத்தில் சென்றுகொண்டிருந்த போது பான் கீ மூன் பஹ்ரயினில் வைத்து நிருபர்களிடம் கதைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பான் கீ மூன் குழுவினர் வேறுபக்கமாகச் சென்றனர்.

ஒரு சில நிருபர்களுக்கே பேட்டியளித்தனர். அவர்களின் உள்ளூர் சந்தைகளைப் பற்றி பேட்டி காணப்பட்டது. இலங்கை என்ன செய்யவேண்டுமென்று தான் விரும்புவதாக பான் கீ மூன் தலைமையிலான ஐ.நா. எதனையும் கூறவில்லை என்று அவதானி ஒருவர் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கூறினார்.

புலிகளுக்கு எதிரான இலங்கையின் யுத்தத்துக்கு இந்தியா இராணுவ உதவி


முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக ரணில் தெரிவிப்புவிடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா உதவியளித்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
"ரைம்ஸ் நௌ'வுக்கு வழங்கிய பிரத்தியேகப்பேட்டியின்போது விடுதலைப்புலிகளை அதன் பலம்வாய்ந்த பகுதிகளிலிருந்தும் அழிப்பதற்கு இந்தியா முக்கியமான பங்களிப்பை வழங்கியதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்திருப்பதாவது; நான் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவும் அபிவிருத்தியடைந்த நாடுகளும் பாதுகாப்புத் துறையில் எமக்கு உதவியளித்தன. முன்னர் தடைகள் இருந்தன. ஆனால், சமாதான நடவடிக்கைகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அவர்கள் முன்வந்து உதவுவதற்கு இணங்கினார்கள். உதாரணமாக, இந்தியாவின் உதவியின்றி கடலில் புலிகளின் கப்பல்களை தடுப்பது சாத்தியமான விடயமாயிருக்காது. அமெரிக்கா, ஏனைய சில நாடுகளும் உதவின. வெளிநாடுகளில் புலிகளின் வலைப்பின்னலும் உடைக்கப்பட்டது.

ஏனைய நாடுகளும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு புலனாய்வு ஒத்துழைப்பை வழங்கி உதவின. இதனை நாம் ஏற்பாடுசெய்தோம். அதனை விரிவுபடுத்தினோம். பயிற்சியளிக்கப்பட்டது. புலனாய்வு ஒத்துழைப்பு கருத்துப்பரிமாற்றம் இடம்பெற்றது. இலங்கையில் எமது பாதுகாப்பில் சடுதியான தாக்குதல்களை மேற்கொள்வதற்கான உதவியை இந்தியா வழங்கியது என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அரசியல் தீர்வில் தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை: மனோ கணேசன்


தமிழ் மக்கள் இன்று அரசியல் தீர்வில் நம்பிக்கை இழந்து விட்டார்கள் எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இந்த அரசாங்கத்திடம் இருந்து இன நெருக்கடியைத் தீர்த்து வைக்கக்கூடிய அரசியல் தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது எனத் தெரிவித்திருக்கின்றார்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே இந்தக் கருத்துக்களை மனோ கணேசன் தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீமுடன் இணைந்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் முக்கியமாக தெரிவித்ததாவது:

அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதில்லை; இராணுவத் தீர்வு முனைப்புக்களை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புடன் இருக்கின்றது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கென அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணித்த நிலையில் அதில் நாம் கலந்து கொண்டோம்.

ஆனால், அனைத்து கட்சிக்குழுவின் பரிந்துரைகளில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அனைத்துலக கட்சிக்குழுவின் நிபுணர்கள் குழு தயாரித்தளித்த பெரும்பான்மை அறிக்கையைத் திறந்து பார்க்காமலேயே அவர் தூக்கி எறிந்தார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளைப் பகிரங்கப்படுத்துவதற்குக் கூட அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. பதிலாக இராணுவ நிகழ்ச்சி நிரலை நீடிப்பதிலேயே அரசாங்கம் முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்கள் அரசியல் தீர்விலும் அரசாங்கத்திலும் நம்பிக்கை இழந்து விட்டனர். இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அரசியல் தீர்வில் அரசாங்கத்துக்கு நம்பிக்கை இருக்குமானால் முதலில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை நான் அரசுக்கு ஒரு சவாலாகவே விடுக்கின்றேன்.

அரசியல் அமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் 20 வருடங்களுக்கு முன்னரே நிராகரித்து விட்டனர். ஆனால், மாகாண சபைத் திட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு தயாராகவில்லை எனவும் மனோ கணேசன் இங்கு தெரிவித்தார்.

நாள்தோறும் மக்களை கொன்று குவித்துவிட்டு பொய்யுரைக்கும் சிறிலங்கா

வன்னியில் நாள்தோறும் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசாங்கம் தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்று தொடர்ந்து பொய்யுரைத்து வருகின்றது.
'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளை நோக்கி நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய மிகச் அகோர வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையின் போது 52 பேரின் உயிரிழப்புக்கள் மருத்துவமனையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும் மாத்தளன், பச்சைப்புல்மோட்டை பகுதிகளில் அதிகளவில் மக்கள் உடல் சிதறிக் கொல்லப்பட்ட நிலையில் சிறிலங்கா படையினரின் எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களால் உடலங்களை புதைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை.

பெருமளவிலான மக்களை நேற்றும் படுகொலை செய்துவிட்டு தாங்கள் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றும் அங்குள்ள மருத்துவர்கள்தான் பொய் சொல்கின்றனர் என்றும் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர்.

இலங்கை இராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலை புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கை படையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
விசுவமடு, யாழ்ப்பாணம், கிளாலி உள்ளிட்ட இடங்களில் இராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் இராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலை புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலை புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத் தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வன்னி பகுதியில் இலங்கை இராணுவம் நேற்று நடத்திய தாக்குதல்களில் 57 தமிழர்கள் பலியானார்கள்.

அதே சமயத்தில், புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த சண்டையில் 41 விடுதலை புலிகளை கொன்று விட்டதாகவும், ஏராளமானமான ஆயுதங்களை கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்படுகிறார்: சிறிதுங்க ஜயசூரிய

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆரம்பகால அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் ஆட்சி நடத்தி வருவதாக ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இலங்கையில் தலையீடு செய்வதனை அடியோடு வெறுத்த ஜனாதிபதி தற்போது இரு கரம் கூப்பி குறித்த அமைப்புக்களை கடன் வழங்குமாறு அழைப்பது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்கும் தெரியாமல் மேற்கொள்ளப்படும் இந்த கொடுக்கல் வாங்கல்களின் ரகசிய நிபந்தனைகள் என்ன என்பதை நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவசர அவசரமாக மின்சார சபை திருத்தச் சட்டமூலம் இந்த நிபந்தனை ஒன்றின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டதாகவும் சிறிதுங்க ஜயசூரிய கூறியுள்ளார்.

யுத்த வெற்றிகளை தவிர இந்த அரசாங்கத்தினால் பற்றிபிடிக்க வேறு விடயங்கள் இல்லை. ஆயிரத்து 800 கோடி ரூபாவை செலவிட்டு, 500 பேருக்கும் மேல் இல்லை என கூறும் விடுதலைப்புலிகளுடன் மோதலில் ஈடுபட 50 ஆயிரம் படையினரை ஈடுபடுத்தியுள்ளனர். இவ்வாறு பெறும் வெற்றி ஒருபோதும் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த காரணமாக அமையாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வொன்று நாட்டுக்கு அவசியம் என்பதனை கருத்திற் கொண்டு அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.