தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இந்திய பாராளுமன்ற தேர்தல் தமிழக பிரசாரக் களத்தில் முக்கிய சர்ச்சையாகும் இலங்கைப் பிரச்சினை


* காங்கிரஸை நியாயப்படுத்த வேண்டிய நிலையில் கருணாநிதி
இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழக பிரசாரக் களத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை முக்கியமான ஒரு சர்ச்சையாக்கப்படுவதற்கான சகல அறிகுறிகளையும் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கைப் பிரச்சினை தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தமாட்டாது என்று சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்த தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக்கழகத் தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி நேற்றைய தினம் சென்னையில் கழகத்தின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சிகள் இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசுவதற்கு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துடன் தேர்தல் கூட்டணியை அமைத்திருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுநர் டாக்டர் எஸ்.ராமதாஸ் இலங்கைப் பிரச்சினையை முதன்மைப்படுத்தியே தேர்தல் பிரசாரம் அமையும் என்று அறிவித்திருக்கும் நிலையிலேயே கலைஞர் கருணாநிதி எதிர்க்கட்சிகள் மீது இத்தகைய குற்றச்சாட்டைச் சுமத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமதாஸின் நிலைப்பாடு

"பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இலங்கைப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி மக்களிடம் பிரசாரத்தைக் கொண்டு செல்வோம். இது தொடர்பாக ஒரு மித்த கருத்து உருவானதன் அடிப்படையிலேயே அண்ணா தி.மு.க.கூட்டணியில் இணைந்திருக்கிறோம். இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.எந்தளவுக்குச் செயற்பட்டுள்ளது. என்பது தொடர்பாக உண்மையோடும் உறுதியோடும் பிரசாரங்கள் அமையும்' என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். சொற்பொழிவாளர்களுக்கு கலைஞர் அறிவுறுத்தல்

தேர்தல் பிரசாரங்களை எந்தவகையில் முன்னெடுக்க வேண்டும் என்பதை தி.மு.க.சொற்பொழிவாளர்களுக்கு விளக்குவதற்காக நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி "மத்திய, மாநில அரசுகள் மீது எந்தக் குற்றத்தையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் எதிர்க்கட்சிகள் இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல்சாயம் பூச நினைக்கின்றன. இது ஒருபோதுமே சாத்தியப்படாது. தேர்தல் பிரசாரங்களின்போது தி.மு.க.சொற்பொழிவாளர்கள் இலங்கைப் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவருவதை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்' என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

தி.மு.க.வும் காங்கிரஸும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதாக தேர்தல் பிரசாரங்களின் போது எதிர்க்கட்சிகள் தமிழக மக்களுக்கு கூற முற்படும் என்பதைநேற்றைய கூட்டத்தில் கலைஞர் கருணாநிதி வெளிப்படையாகவே குறிப்பிடத் தவறவில்லை. ஜனநாயக ரீதியில் இலங்கைத் தமிழர்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட அதிகம் மகிழ்ச்சியடைபவர்கள் வேறுயாரும் இருக்க முடியாது. இதையெல்லாம் மக்களுக்குச் சொல்லி தேர்தல் பிரசாரங்களை தி.மு.க.சொற்பொழிவாளர்கள் முன்னெடுக்கவேண்டும் என்று அவர்களுக்கு கலைஞர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சில தினங்களுக்கு முன்னர் கூறிய கலைஞர் தற்போது இலங்கைப் பிரச்சினையில் தி.மு.க.வின் தமிழர் சார்பு நிலையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டிய அளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலைமை தேர்தல் பிரசாரக்களத்தில் இலங்கைப் பிரச்சினை பெறப்போகும் முக்கியத்துவத்தைப் பறைசாற்றி நிற்கின்றன என்று அவதானிகள் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் மீதான அதிருப்தி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் இலங்கையில் போரை நிறுத்துவதற்கு அதன் செல்வாக்கை கொழும்பு அரசாங்கத்திடம் பயன்படுத்த வில்லை என்பதே தி.மு.க.வுக்கு எதிரான தமிழக கட்சிகளின் நிலைப்பாடாகும். மத்திய அரசாங்கம் அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கக்கூடியதாக கலைஞர் கருணாநிதியும் நெருக்குதல்களைக் கொடுக்கத் தவறியதாகவும் மத்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான அணுகுமுறையை ஆட்சேபிக்க அவர் துணிச்சல் கொள்ளவில்லை என்றுமே எதிர்க்கட்சிகள் குறிப்பாக ஜெயலலிதா அணியில் உள்ள வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க., ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமைத்துவம் இவர்களைத் தமிழர்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பில் தமிழகத்தில் உருவான அனுதாப அலையை உணர்வுகளை மதிக்கவில்லை என்ற குமுறல் தமிழக மக்களிடம் தற்போது பரவலாகக் காணப்படுகிறது. காங்கிரஸ்கரகளுக்கு ஒருபாடத்தைப் புகட்டுவதற்கு பாராளுமன்றத் தேர்தலை அருமையான வாய்ப்பாகப் பயன்படுத்தவேண்டும் என்ற பிரசாரங்கள் தமிழகத்தில் உள்ள தீவிர ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புகளினால் சந்தடியில்லாமல் முன்னெடுக்கப்படுவதாகவும் அறியக்கிடைக்கிறது. இத்தகைய சூழ்நிலையிலே தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கப்படக்கூடிய காங்கிரஸ் விரோத உணர்வு தனது கூட்டணியின் செல்வாக்கை குறைத்துவிடக்கூடும் என்று கலைஞர் கருணாநிதி சந்தேகப்படுவதாக சென்னை அவதானிகள் கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்ற தி.மு.க.வினர் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸின் அணுகுமுறையையும் நியாயப்படுத்த வேண்டிய ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தொல்.திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. ஆனால், அந்த அணியில் இருந்துகொண்டு தேர்தல் பிரசாரங்களில் திருமாவளவன் தனது தீவிர நிலைப்பாட்டை எவ்வாறு மக்கள் முன் வைக்கப்போகிறார் என்பதும் ஒரு பிரச்சினையாகும். ஆனால், ராமதாஸின் கட்சிக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகளைப் பயன்படுத்துவதற்கு கலைஞர் கருணாநிதி தீர்மானித்திருக்கிறார்.

ஜெயலலிதா அணியில்

அண்ணா தி.மு.க. தலைமையிலான அணியில் இருக்கும் கட்சிகளில் மறுமலர்ச்சி, தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் காம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இலங்கை நெருக்கடி தொடர்பிலான ஐக்கிய முயற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சிப்பவையாகும். நேற்றைய தினம் சென்னையில் ஜெயலலிதாவைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை கவனிக்கத்தக்கது.

இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் தமிழகத்தில் கடந்த வருட நடுப்பகுதியில் இருந்து தீவிரமடையத் தொடங்கியபோது அவற்றுக்கு ஆதரவு அளிக்காமல் இருந்து வந்த ஜெயலலிதா அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததே, காங்கிரஸுக்கும் கலைஞருக்கும் எதிராக இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு தமிழக நிலைமைகள் மாறியதை உணர்ந்தமையேயாகும் என்றும் சென்னை அவதானிகள் கூறுகிறார்கள்.

பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.

அரசியல் கோமாளிகள் என்று சொன்னான் பொன்சேகா. ஐயோ என்று பதறினோம் ஆறு கோடி தமிழரும். அமைதியாய் நின்றீர் நீர் அனைவரும், அதற்க்கு ஆம் என்று அர்த்தம் என்று இன்றுதான் புறிந்துகொண்டோம். பிறக்காத குழந்தைக்கும் சாவு கீதம் படுகிறார் ஈழத்தில். பிறக்கும் குழந்தைக்கும் வாக்கெடுப்பு நடத்துகிறீர் தமிழகத்தில்.

தமிழ் தமிழ் என்று கதற்றுகிரீர். அம்மா என்று கூட அழைக்காத குழந்தை அய்யோ என்று கதறுகிறதே அங்கே. தமிழனாக பிறந்த குழந்தை தலையின்றி கிடக்கிறதே. தமிழனின் சாவை தடுக்காத நீ தமிழனுக்கு தலைவனென்று ஏன் சொல்கிறாய் ? ஒரு தலைவன் ஒரு துரோகம் இன்னொரு தலைவன் இரு துரோகம் இன்னும் ஒருவன் பல துரோகம். துரோகத்தின் பாதையில் படையெடுத்து செல்கிறீர் தமிழகத்தின் கதி என்ன. யாரிடம் எங்களை ஒப்படைக்க போகிறீர்.

சாக்கடயாம் அரசியலில் குளிக்கிறீரே. அங்கே நம் தமிழர் பிணவாடை நாற்றத்தில் தவிக்கிறாரே. தலைவர்களை தலைக்குமேல் தூக்கி ஆடும் என் தமிழினமே, தமிழக இனமே, நம் உறவுகளை காக்க எந்த ஒரு தலைவன் குரல் கொடுத்தான் கூறுங்கள் பார்ப்போம். கட்சி புகழை பறைசாற்றும் தொண்டர்களே என் தமிழர்களே எந்த ஒரு தலைவன் ஆய்வு:

ஈழத்திகாக ஒரு ஆயிரம் பேரை திரட்டி ஒரு போராட்டம் நடத்தினான் கூறுங்கள் பார்ப்போம்.

புரட்சி இனத்தை போராட்ட இனத்தை குருட்டு பூனைகலாய் மாற்றிவிட்டீர் எம் தமிழக தலைவர்களே. கூட்டம் கூட்டமாக ஒன்று சேருகிறீர் தமிழினத்தின் எதிரிகளுடன் கூட்டணி சேருகிறீர் கருணாவும் நீயும் ஒன்றுதானா? நீயும் தமிழன்தான் நரிகளுடன் சேர்ந்துகொண்டு நாடாள நினைக்கிறீர் நாயைவிட கேவலமாய் நாளை உன்னை நடத்துவான். நரி என்ன செய்யும் என்று நம் தமிழ் பாடம் சொல்லுமடா. மானம் விட்டீர், மரியாதையை விட்டீர், உரிமை விட்டீர் தமிழ் உணர்வை விடாதீர் இல்லையேல் இவ்வுலம் உம்மை விட்டுவிடும்.


தமிழனுக்கு குரல் கொடுங்கள் தமிழன் உங்களுக்கு உயிர் கொடுப்பான் சான்று முத்துகுமார் மாற்றானுக்கு மயங்காதீர் அவன் உன் உயிரை எடுப்பன் சான்று உங்களுக்கு தெரியும் இனியாவது திருந்துங்கள் பொருள் பிச்சை கேட்ட காலம் போய் உயிர் பிச்சை கேட்கிறான் தமிழன் ஒருவன். தயங்காமல் முடிவெடுங்கள் தமிழர் இருக்கிறோம் ஆறுகோடிபேர்

ராஜீவ் கொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்தியா ஆதரவளித்திருக்காது: தமிழருவி மணியன்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்காது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து அண்மையில் விலகிய தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.03.09) ஒலிபரப்பாகிய 'செய்தி அலைகள்' நிகழ்ச்சிக்கு தமிழருவி மணியன் வழங்கிய நேர்காணல்:

தமிழக மக்கள் மத்தியில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பாரிய உணர்வெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து இதனை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் உணர்வலை மிகப்பெரியளவில் பெருகியிருக்கிறது என்பதைத்தான் நாம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான செய்திகள் வலம் வந்த நேரத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான உணர்வே தமிழகம் தழுவிய அளவில் மிகப் பெரிதாக இருந்தது. தமிழர்களின் இருதயங்கள் ரணப்பட்டன. விடுதலைப் புலிகள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்பது போல மக்களிடையே ஒரு மிகப்பெரிய சோர்வு இருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னர் விடுதலைப் புலிகள் எந்தளவுக்கு தமிழக மக்களால் ஆராதிக்கப்பட்டார்களோ அதனைவிடக் கூடுதலான அளவுக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. ஈழத்தமிழர்களின் இன்னல்கள் துடைக்கப்பட வேண்டும் என்ற உணர்வு தமிழக மக்களிடையே இன்று என்றுமில்லாதளவுக்கு உருவெடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஆறு கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களின் 12 கோடி கரங்களும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதுதான் வரலாற்று உண்மை.

ராஜீவ் காந்தி படுகொலையை சுற்றியே இலங்கை தொடர்பான இந்திய காங்கிரஸ் அரசின் வெளியுறவுக் கொள்கை பின்னப்பட்டிருக்கிறது. இதை எந்த வகையில் நீங்கள் பார்க்கிறீர்கள்?

காங்கிரஸ் அரசின் தலைமையில் இன்றுள்ள மத்திய அரசின் கருத்தோட்டமாயினும் -

வெளியுறவுக் கொள்ளை என்றாலும் -

இனி எந்தக் கட்சி மத்தியிலே ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வந்தாலும் -

வெளியுறவுக் கொள்கை என்று வரும்போது அவர்கள் இந்த அணுகுமுறையைத் தான் பின்பற்றுவார்கள்.

ஏனெனில், பாகிஸ்தான் ஒருபக்கம் பகையோடு இருக்கின்றபோது, வங்கதேசம் இன்னொரு பக்கம் பகையோடு இருக்கின்றபோது, சீனா எந்த நேரத்தில் பகை கொள்ளும் என்ற நிச்சயமற்ற நிலை இருக்கின்றபோது அதன் தெற்குப் பக்கம் இருக்கின்ற இலங்கைத் தீவு தனக்கு பகையாக மாறி விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காகவே இந்தியா பாசிச ராஜபக்ச அரசுக்கு பின்னால் நிற்கின்றது என்பதுதான் உண்மை.

எனவே, ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கலாம். ராஜீவ் காந்தி படுகொலை நிகழாமல் இருந்தாலும் கூட ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு மிகப்பெரிய அளவில் முன்வந்து துணை நின்றிருக்கும் என்று நான் நம்பவில்லை. அதனை செய்தவர் இந்திரா காந்தி.

இந்திரா காந்திக்கு இருந்த நம்பிக்கை, இந்திரா காந்திக்கு இருந்த துணிச்சல், இந்திரா காந்திக்கு இருந்த ஈடுபாடு இந்திரா காந்திக்கு பின்னால் வந்த எந்த அரசியல் தலைவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

ராஜபக்ச அரசாங்கம் எப்போதும் தமக்கு சார்பாக இருக்குமென்று இந்திய மத்திய அரசு எப்படி நம்புகிறது?

அதுதான் இந்திய மத்திய அரசு செய்யும் மிக மோசமான தவறு. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையின் பக்கமாக நின்று விடக்கூடாது என்பதற்காக இலங்கை எதைச் செய்தாலும் இந்தியா அதனை கண்மூடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தானின் பிடியில் இருந்தும் சீனாவின் பிடியில் இருந்தும் இலங்கையை விடுவித்து தனது பக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இது மிக மோசமான கண்ணோட்டம். வெளிவிவகாரத்துறை சார்ந்த மிகப்பெரிய பிழையான முடிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியாவுக்கு துணையாகவோ, சார்பாகவோ, நன்றி உணர்வோடோ இருந்தது கிடையாது.

வங்க தேசத்தை உருவாக்க இந்திரா காந்தி முனைந்தபோது பாகிஸ்தானின் வானூர்திகள் தரித்து நிற்க உதவி செய்ததுதான் இலங்கை என்பதை இன்றைய இந்திய அரசு மறந்து விட்டது.

பாகிஸ்தான் கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

சீனா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

இந்தியா கொடுக்கும் ஆயுதங்களையும் பயன்படுத்தி -

ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பாசிச அரசாக இன்று ராஜபக்ச அரசு இருக்கிறது. இந்த வெறிபிடித்த ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ இந்திய மத்திய அரசு துணை நிற்பதை தமிழ்நாட்டிலே இருக்கும் எவரும் விரும்பவில்லை - அங்கீகரிக்கவில்லை - ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் இங்குள்ள வருந்தத்தக்க செய்தி என்னவெனில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12 கோடி கைகளும் ஈழத் தழிழர்களின் துயர்துடைக்க தயாராக இருந்தாலும் இங்கு அவரவர் சுயநலம் சார்ந்து சிந்திக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாத அளவுக்கு அவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

வரவிருக்கும் தேர்தலில் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பதைப் பார்த்தால் நீங்கள் நெஞ்சம் புண்ணாகிப் போவீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக இன்று சொல்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவை என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது. வீதி வீதியாக கூட்டம் நடத்துவதும் பேரணி நடத்துவதும் மனிதச் சங்கிலி நடத்துவதுமாக ஈழத் தமிழருக்காக ஆதரவான ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது.

ஆனால் எந்த மத்திய அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறதோ அந்த மத்திய அரசே இதுவரை அது குறித்து சிறிதும் கவலைப்படாத நிலையில் - அந்த மத்திய அரசை இயக்குகின்ற, தலைமை தாங்குகின்ற காங்கிரசோடு எப்படியாவது தன்னுடைய தேர்தல் கூட்டணியை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிறது - தவிக்கிறது - தவமிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.

எந்த நிலையிலும் ஈழத்தமிழர்களின் நலனைப் புறக்கணித்து விட்டு தமது சுயநலனைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அளவில் காங்கிரசோடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. இது ஒரு பக்கம்தான்.

அதேநேரம் உலகத் தமிழர்களின் உரத்துக் குரல் கொடுக்கும் வைகோ. சென்னைக்கு பிராணப் முகர்ஜி வந்தபோது கறுப்புக் கொடி காட்டி சிறை சென்று வெளியே வந்திருக்கிறார், உலகத் தமிழர்களுக்காக ஓங்கிக்குரல் கொடுக்கிறார், ஈழத் தழிழர்களுக்காக அவர் மிகப் பெரிய அளவுக்கு போராடுகிறார், விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்காக தான் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் என்று கூறுகிறார். அவரது தமிழின உணர்வு குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அதேநேரத்தில் முழுக்க முழுக்க தமிழின உணர்வு அற்றவராகவும் தமிழினத்திற்கு விரோதியாகவும், ஈழத் தமிழர்களை அழித்தொழிப்பதில் ராஜபக்ச அரசுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு கொடுப்பவராகவும் இருக்கின்ற ஜெயலலிதாவின் பக்கமாக போய் நின்று குறைந்தது ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளைப் பெற்று அதில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக வைகோ மேற்கொள்ளும் அரசியல் சமரசம் இருக்கிறதே அது மிகவும் பரிதாபகரமானது - வருந்தத்தக்கது.

பாட்டாளி மக்கள் கட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவர் இராமதாஸ் காலையில் இருந்து மாலை வரை ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் - குரல் கொடுக்கிறார். ஆனால் இன்றைக்கும் அவரது பிள்ளை மத்திய அரசில் தான் இடம்பெற்றிருக்கிறார். காங்கிரசிலிருந்து அவர் வெளியே வரவில்லை. அவரின் கட்சி மீண்டும் காங்கிரசோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும் கூட்டணி அமைக்க மறைமுகமாகப் பேச்சு நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் அணி திருமாவளவன் தலைமையில் இயங்குகிறது. பிரபாகரனை 1980 தொடங்கி நான் நேசிப்பவன், பிரபாகரனின் அன்புக்குரியன் என்று சொல்கின்ற திருமாவளவன் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி தொடரும் என்று தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்றால் யாருடன் கூட்டணி? காங்கிரசுடன் சேர்ந்துதானே கூட்டணி. திருமாவளவனை சிறைக்குள் தள்ள வேண்டுமென காங்கிரஸ் கூறுகிறது, தேசப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

எனினும் அவரை கைது செய்யாமல் விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகளும் இருந்தால்தான் தேர்தல் நேரத்தில் தனக்கு பலம் கிடைக்கும் என்று கருணாநிதி நம்புகிறார். எனவே ஒரு பக்கத்தில் விடுத்தலைச் சிறுத்தைகளுக்கும் இன்னொரு பக்கத்தில் சோனியா காந்திக்கும் பாலமாக கருணாநிதி இருக்கின்றார்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதியைப் பெற்று அதில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக சோனியா காந்தியின் உறவை திருமாவளவனால் ஏற்றுக்கொள்ள முடிகிறது எனில் -

தமிழ்நாட்டில் நெடுமாறன் என்கிற ஒரு மனிதனைத் தவிர ஈழத்தமிழர்களுக்காக, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக உண்மையான உணர்வோடு பாடுபடுகிற ஒருதலைவர் இந்த தமிழ்நாட்டில் இல்லை என்பதை நான் மீண்டும் மீண்டும் கூறிவைக்கிறேன். காரணம் நெடுமாறனுக்கு அரசியல் நிர்ப்பந்தம் இல்லை.

அரசியல் கடந்து நிற்கக்கூடிய அத்தனை பேரும் ஈழத் தமிழர்களுக்காக உண்மையாகப் போராடுகிறார்கள். ஆனால் அரசியல் அரங்கத்திற்குள்ளே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களும் ஈழத்தமிழர்களை வைத்துக்கொண்டு தங்களது அரசியல் நாடாகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நம்மை ரணப்படுத்துகிற கசப்பான உண்மை.

தாயகத்தில் நாளாந்தம் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் படுகொலை செய்யப்படும் இந்த நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தமிழக மக்களா அல்லது அரசியல் தலைவர்களா?

இன்றல்ல என்றுமே ஆதரவாக இருப்பவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களைக் குழப்புகின்ற வேலையைச் செய்துகொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.

ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போட்டர், ஆனந்த விகடன் மற்றும் மேடைப் பேச்சுகளில் நான் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது என்னவெனில் - ஈழத் தமிழர்களின் நலனைக் காக்க வேண்டுமென நீங்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டால், தமிழகத்து மக்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென விரும்பினால், எல்லாக் கட்சி தலைவர்களும் கட்சி மாற்றங்களை மீறி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து தமிழின உணர்வொடு ஒரே குரலாக நீங்கள் முழங்குங்கள் - ஓரணியில் நில்லுங்கள்.

காங்கிரஸ் என்பது இன உறுதிப்பற்றற்ற சுயநலவாதிகளின் கூடாரமாக தமிழகத்தில் தன்னிலை தாழ்ந்து விட்டது என்பதை நாற்பதாண்டு காலம் தமிழகத்து அரசியலில் பெருந்தலைவர் காமராஜரின் காலம் தொட்டு இன்றுவரை காந்திய வழியில் நெறி சார்ந்து - நேர்மை தவறாது - நேர்கோடாய் நடந்த நான் அந்த கட்சியின் மூலமாக இனிமேல் இனப்பற்றையும், மொழிப்பற்றையும் வளர்த்தெடுக்க முடியாது என்ற உண்மையின் அடிப்படையிலேதான் அந்த கட்சியை விட்டே வெளியே வந்திருக்கிறேன்.

தமிழகத்தை பொறுத்த வரை என்ன செய்ய வேண்டும். ஜெயலலிதா இன உணர்வு அற்ற ஒரு பெண்மணி. ஜெயலலிதாவின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் உருவாக்கிவிட முடியாது. அதேநேரம் அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி என்பது கடந்த மூன்றாண்டு காலமாக ராஜபக்ச அரசுக்கு மறைமுகமாக எல்லா வகையிலும் துணைநின்று இன்று எனது தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படுகிற இழி நிலைக்கு காரணமாக இருந்திருக்கிறது.

எனவே, அந்த காங்கிரஸ் அது யாரோடு கைகோர்த்து வந்து நின்றாலும் நாற்பது தொகுதிகளிலும் அது முற்றாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவும் புறக்கணிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு தமிழர்களுக்கு இருக்கிறது. வாக்காளர்களுக்கு இருக்கிறது.

அந்த வாக்களர்களின் உணர்வுகளுக்கு வடிகாலாக இருக்க வேண்டுமெனில் சூழ்நிலையில் தெளிவிருக்க வேண்டும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கைகோர்த்து நிற்கட்டும். கருணாநிதிக்கு நான் அதையே மீண்டும் மீண்டும் கூறினேன்.

காங்கிரசை கைகழுவி விடுங்கள் என்றேன். நீங்கள் கைகழுவி விட்டால் காங்கிரஸ் அடுத்த கணமே ஜெயலலிதாவிடம் போய் நிற்கும். ஜெயலலிதாவும் காங்கிரசும் சேர்ந்து தமிழின விரோதக் கூட்டணியை உருவாக்குவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருக்கும் இடதுசாரி இயக்கங்கள் அங்கிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகப் பக்கமாக வருவார்கள்.

எனவே திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என்று மிக வலிமையான கூட்டணி அமைக்க முடியும். அரசியலுக்கு பின்னாலுள்ள தமிழின உணர்வாளர் அமைப்புக்கள் அனைத்தும் இந்த கூட்டணிக்கு பின்னாலே நிற்கும். எனவே மிகப்பெரிய கூட்டணியை இது உருவாக்க முடியும். இது தமிழின உணர்வை வெளிப்படுத்துகின்ற கூட்டணியாக இருக்கும்.

காங்கிரசும் ஜெயலலிதாவும் சேர்ந்து தமிழின எதிர்ப்பு கூட்டணியாக இருக்கின்ற போது வாக்களிப்பதற்கு வாக்குச் சீட்டோடு வரும் வாக்காளனுக்கும் ஒருதெளிவு இருக்கும். இது தமிழினத்தின் நலன் காக்கும் கூட்டணி, இது தமிழினத்தை வேரறுக்கும் கூட்டணி என்ற தெளிவான சிந்தனையோடு அவன் வாக்களிப்பான்.

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை எப்படி? கலைஞர் காங்கிரசோடு கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறார். வைகோ ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நிற்கிறார். ஆனால் ஈழத்திற்காக கண்ணீர் வடிக்கின்றார். இராமதாஸ் ஜெயலலிதாவுடன் போவதா, கலைஞருடன் போவதா என்று இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கலைஞரைக் கைவிடுவதாக இல்லை.

ஈழத் தமிழர்களை பற்றி பேசும் இவர்களே இப்படி அணி பிரிந்து நின்றால் இதில் எந்த அணி ஈழத் தமிழர்களுக்காக உண்மையாக இருக்கும் அணி என்று மக்களுக்கு தெளிவு வரும்? யாருக்கு வாக்களிப்பது என்று அவர்கள் எந்த நிலையில் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும்?

மக்கள் இங்கு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழம் கிடைப்பதுதான் தீர்வு என்றால் அந்த தீர்வும் உருவாகட்டும் என்று இங்கிருப்பவர்கள் வேள்வி நடத்துகிறார்கள். ஆனால் இன்று அந்த வேள்வித் தீயை அணைப்பதிலும் அழிப்பதிலும் அவரவர் கட்சி நலன் கருதி - அவரவர் சொந்த நலன்கருதி - அவரவர் பதவிகளுக்காக - அவரவர் சுகங்களுக்காக இன்று அரசியலையும் குழப்பி, அதன் ஆரோக்கியத்தையும் கெடுத்து, இன உணர்வை அழித்து ஒட்டுமொத்தமாக மக்களிடையே இன விரோதிகளாக அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் என்றுதான் மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.

அரசியல் சாணக்கியன் என்று கருதப்படும் முதல்வர் கருணாநிதி எதற்காக இப்படியான ஒரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு பின்நிற்கிறார்?

"ஒரு இராஜதந்திரி தன்னுடைய அதிகபட்ச இராஜதந்திரத்தாலேயே அழிந்து விடுகிறான்." கலைஞரும் தமிழ் மக்களை மனதில் நிறுத்தினால் இந்த கூட்ணியை உருவாக்குவதற்கு அவர் முனையலாம். ஆனால், கலைஞருக்கு வைகோவின் மீது கோபம். வைகோவுக்கு கலைஞரின் மீது கோபம். வைகோவுடன் இருக்கும் கோபத்தை தணித்துக் கொண்டு தேர்தல் நேரத்தில் கலைஞர் வைகோவுடன் கரம் கோர்த்து நிற்க தயாராக இருப்பார். அது எனக்கு தெரிந்த விடயம்.

ஆனால் கலைஞர் போடும் கணக்கு என்னவெனில் தமிழகத்தில் காங்கிரசுக்கு மிகப்பெரிய ஆதரவு இல்லாமல் போனாலும் ஓட்டுமொத்த இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி நடந்து முடிந்த நான்கு மாநிலத் தேர்தலில் எதிர்பார்த்தது போல வெற்றியைப் பெறத் தவறியதால் அகில இந்திய அளவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமென்று கலைஞர் கணக்குப் போடுகிறார்.

எனவே காங்கிரஸ் தலைமையில் மீண்டும் மத்தியிலே கூட்டணி அரசு வருமானால் அந்த கூட்டணியில் தன்னுடைய அரசும் வரவேண்டுமென கலைஞர் விரும்புகிறார். மீண்டும் ஆறு அல்லது ஏழு அமைச்சர்கள் மத்தியிலே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் தனது குடும்ப நலனிற்கும் கட்சி நலனிற்கும் உகந்ததாக இருக்கும் என்பது கலைஞருடைய கணிப்பு.

இதற்கு மாறாகு அவர் கணக்கு போட்டு தமிழகத்தில் அவர் வெற்றிபெற்றாலும் கூட ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு தமிழகத்தில் அடுத்த நிமிடமே கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும். காங்கிரஸ் ஆட்சியை திரும்ப பெற்றுக்கொண்டால் கலைஞரின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்பது வரலாற்று உண்மை. அதனை மறுக்க முடியாது.

அத்துடன், கலைஞரின் குடும்பத்திற்கு ஓராயிரம் தொல்லைகள் ஜெயலலிதாவின் மூலமாக உருவாகக் கூடும். எனவே ஜெயலலிதா எந்த சந்தர்ப்பத்திலும் சோனியா காந்தியின் பக்கத்தில் போய் நின்றுவிடக் கூடாது என்றே கலைஞர் நினைக்கிறார். ஜெயலலிதாவின் சக்தி இந்திய அரசியலிலே வலுப்பெற்றுவிடக்கூடாது, மத்திய அரசில் ஜெயலலிதாவைச் சார்ந்தவர்கள் இடம்பெற்றுவிடக் கூடாது, எனவே கலைஞரின் எல்லா கவலைகளும் போயஸ் தோட்டத்தை சுற்றித்தான் அமைந்திருக்கிறது. ஜெயலலிதாவின் எல்லா பார்வைகளும் கோபாலபுரத்தை சுற்றித்தான் இருக்கிறது. எனவே கலைஞர் ஜெயலலிதாவை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை. ஜெயலலிதாவும் கலைஞரை மீறி எதையும் பார்ப்பதற்கு தயாராக இல்லை.

தமிழ்நாட்டை பொறுத்த வரை தமிழகத்தின் விதி மட்டும் நிர்ணயிக்கப்படும் சூழல் இருக்குமானால் சாணக்கியராக இருக்கும் கலைஞருக்கு தெரியாமல் இல்லை. கலைஞர் நிச்சயமாக இப்படியான வலுவான கூட்டணியை அமைப்பார், தமிழினத்திற்காக குரல் கொடுப்பார், "வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழினமாக இருக்கட்டும்" என்று சொல்வார். இருப்பது ஒரு உயிர் அது போகப் போவதும் ஒரு முறைதான் என்று மீண்டும் மீண்டும் ஒரே பல்லவியை வெவ்வேறு இராகங்களில் பாடுவார், உணர்சியை தூண்டுவார், வெற்றிக் கனியை சுவைப்பார். ஆனாலும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டால் அந்த கூட்டணியில் நின்று தான் விலகி நின்றது பிழையாகிவிடுமே என்ற அச்சம்தான் அவரை காங்கிரசில் இருந்து வெளியேவராது பார்த்துக் கொண்டிருக்கிறது.

அனைத்துலகத்தில் இருந்து தமக்கு சார்பான ஒரு ஆதரவு நிலை வருமென்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படியானால் அந்த எதிர்பார்ப்பு தவறானதா?

அவர்களின் எதிர்பார்ப்பு நியாயமானது. காரணம் அவர்கள் நமது தொப்புள் கொடி உறவு. எனவே இந்த தமிழ்நாட்டு தொப்புள்கொடி உறவுகள் தமது அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் மத்திய அரசுக்கு கொடுத்தால் -

அந்த மத்திய அரசு முன்னின்று முனைப்பாக உலக நாடுகளின் கருத்துக்களை எல்லாம் திரட்டி, ராஜபக்ச அரசுக்கு எதிராக அணிவகுக்கச் செய்தால் -

நிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு சரியான ஒரு தீர்வு கிடைக்கும். அந்த நம்பிக்கை பிழை இல்லை. அது மிகச் சரியான நம்பிக்கை. அந்த நம்பிக்கை நிறைவே வேண்டும் என்றால் இந்திய அரசு உடனடியாக காரியமாற்ற வேண்டும். இந்திய அரசு காரியமாற்ற வேண்டுமெனில் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இருந்து தெரிவு செய்யப்படும் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கட்சிகளை மறந்துவிட்டு ஈழத் தமிழர் குறித்த நிர்ப்பந்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வளவும்தான். இதில் ஒரு இரகசியமும் இல்லை.

எனவே இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இனநலன் சார்ந்து தெரிவு செய்வதற்கு தமிழகத் வாக்காளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் இந்த கூட்டணிக் குழப்பங்களில் இவர்கள் மாறிமாறி முகம் காட்டினால் யாரை பார்த்து எப்படி வாக்களிப்பது?

எனவே தேர்தல் வரட்டும். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நான் தெளிவாகச் சொல்கிறேன் தமிழகத்தில் இருக்கும் நூற்றுக்கு தொண்ணூறு சதவீத மக்கள் தேர்தலுக்கு பின்னாலும் ஈழத் தமிழர்களின் இன்னலை துடைப்பதற்கு, ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதற்கு தொடர்ந்தும் போராடுவார்கள்.

தமிழகத்தை பொறுத்த வரையில் ஈழத்திற்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருக்கும். அந்த நம்பிக்கையோடு இருக்கலாம் நீங்கள். புலம்பெயர்ந்து உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் எனது தமிழினச் சகோதரர்களே என் இன மக்களே! உங்களை தமிழன் ஒருபோதும் கைவிட மாட்டான். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். இங்குள்ள அரசியல்வாதிகளை ஒருபோதும் நம்பாதீர்கள். ஆனால் அரசியலுக்கு அப்பால் இந்த இனம் ஒன்றுபட்டு நின்று ஈழத்தமிழர்களை ஆதரிக்ககூடிய சூழல் நிச்சயம் விரைவில் வரும்.

ஈழத் தமிழர்கள் தங்களுக்காக இந்த அரசியல்வாதிகள் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் ஒரு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?

கலைஞர் ஒருநாள் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது நான் அன்பு கூர்ந்து அவரிடம் "அய்யா நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுங்கள்" என்று கூறினேன். நீங்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினால் தேசிய அளவில் மிகப்பெரிய அழுத்தம் உருவாகும். அப்போதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு விரைவாக காரியமாற்றும் என்று கூறினேன்.

மகுடங்கள் என்பவை இடம் மாறக்கூடியவை. இன்று ஒரு தலையில் இருக்கக்கூடிய மகுடம் நாளை இன்னொருவர் தலைக்கு தானாக இடம் மாறலாம். ஆனால் புகழ் மகுடம் ஒன்றை ஒருவன் உருவாக்கிக்கொண்டால் அது என்றும் அவனையே அலங்கரிக்கும்.

எனவே இடம்மாறக்கூடிய மகுடங்களைக் பற்றி கவலைப்படாது தமிழினத் தலைவர் என்ற புகழ் மகுடம் உங்கள் தலையில் என்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்காக உங்களது முதல்வர் பதவியை விட்டு விலகுங்கள் என்று அவரிடம் தொலைபேசியில் கூறினேன்.

அதன் பின்னர் கலைஞர், வைகோ, திருமாவளவன், இராமதாஸ் ஆகியோரையும் தனித்தனியாகச் சந்தித்து தமிழர் நலனுக்காவது நீங்கள் ஓரணியாக நின்று ஒன்றுபட வேண்டுமென்று சொல்வதற்கு முயன்றேன். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது. காங்கிரசை நோக்கி திராவிட முன்னேற்ற கழகம் சென்று விட்டது. ஜெயலலிதாவை நோக்கி வைகோ சென்றுவிட்டார். இனிமேல் இவர்களிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை நான் தனியாளாகச் சென்று என்னுடைய கருத்துக்களை சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் அனைவரும் அரசியல் சார்ந்து சிந்திக்காமல் இந்த அரசியல் வாதிகளின் முகமூடிகளைக் கழற்றி அவர்களின் சுயமுகங்களைப் பாரத்து அவர்களிடம் இருந்து விலகி நின்று ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களுக்காக ஆதரவுக் குரல்கொடுக்க நீங்கள் அத்தனை பேரும் இணைய வேண்டும் என்று நான் முனைப்பளவில் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னளவில் என்னால் இதனைத்தான் செய்ய முடியும்.

இராமன் சேது மண்டலம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு ஒரு அணில் மணல் சுமந்தது. அணில் சுமக்கின்ற மணலில் பாலமாகி விடாது என்பது அணிலுக்கு தெரியும். ஆனாலும் அதன் பங்களிப்பை அதன் மனச்சான்றுக்கு மாறில்லாமல் அது செய்தது போல் நான் செய்து கொண்டிருக்கிறேன் - என்று அந்த நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார்.

ஈழத்தில் தமிழினம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால் தான் முடியும்: தமிழருவி மணியன் குமுதம் இதழுக்கு பேட்டி

பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாத மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் போக்குத்தான், தனது கட்சி விலகலுக்குக் காரணம் என்கிறார். மதுரையில் அவரைச் சந்தித்தோம். தன்னையொத்த கருத்துடைய சிறு கூட்டத்தினர் மத்தியில் இருந்தார். கேள்விகளை முன்வைத்தோம். ஆவேசத்துடன் அருவியாகக் கொட்டின வார்த்தைகள்.

நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு இலங்கைப் பிரச்னை தான் காரணமா?

``நிச்சயமாக. இலங்கைப் பிரச்னையில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் சுயநலப் பார்வையோடு நடக்கின்றன. தமிழகத்தின் நாற்பது எம்.பி.க்களும் தமிழின உணர்வோடு ஒன்றுபட்டு நின்றிருந்தால், மத்திய அரசின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இலங்கைப் பிரச்னைக்கு உரிய தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்ற போர்வையில் தமிழினம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்கள பௌத்த பேரினவாத பாசிச அரசுக்குப் பக்கபலமாக நிற்கும் மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை மானமுள்ள எந்தத் தமிழனாலும் அங்கீகரிக்க முடியாது. காகித நியமனத்தால் புளகாங்கிதம் அடையும் காங்கிரஸில் எனது இன, மொழி அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவேதான் மொழி, இன உணர்வற்ற காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட நீடிக்க நான் விரும்பவில்லை.''

தமிழக எம்.பி.க்கள் மீது உங்களுக்கு இவ்வளவு காட்டம் ஏன்?

``மும்பையில் ஒரு பீகாரி தவறுதலாக சுடப்பட்டான். இதையடுத்து, பீகாரில் மாறுபட்ட கட்சிகளின் தலைவர்களான நிதீஷ்குமார், லாலு, பஸ்வான் போன்றவர்கள் ஒன்றிணைந்து அந்த சம்பவத்தைக் கண்டித்தார்கள். ஒரு நபர் கொல்லப்பட்டதற்கே அப்படியென்றால், தமிழினத்தையே அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ராஜபக்ஷே அரசு, குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை குவியல் குவியலாகக் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டாமா? குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களாவது சோனியா காந்தியைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்னை குறித்துப் பேசியிருக்க வேண்டாமா? தங்களையும் தங்கள் பதவிகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுகங்களையும் பாதுகாத்துக் கொள்ள, இனத்தையே காட்டிக்கொடுக்கும் மனிதர்கள் இவர்கள்.
ராமதாஸ் ஈழத்தமிழர் நலனில் அக்கறை காண்பிக்கிறார். அறிக்கை விடுகிறார். சோனியாவைச் சந்தித்தார். சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், இன்னும் நூறு நாட்கள் ஆயுள் கூட இல்லாத மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தனது மகனை விலகச் சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. பதவியைக் கூட தியாகம் செய்யாதவர்கள், செய்யச் சொல்லாதவர்கள் தீக்குளித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இவ்வளவு மோசமான சூழல் உருவானதைத் தடுக்காமல்போன குற்றத்துக்குரியவர்கள் இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் தமிழனத் துரோகிகள்.''

இலங்கைத் தமிழர் பிரச்னையில் சோனியா காந்தி கூட மௌனம் தானே சாதிக்கிறார்?

``உண்மைதான். காங்கிரஸ் தலைவர்கள், மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, `அன்னை சோனியாகாந்தி வழிகாட்டுதலின் பேரில் நடக் கும் மன்மோகன் தலைமையிலான அரசு' என அகமகிழ்ந்து சொல்வார்கள். இப்போது அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில்தான் மன்மோகன் அரசு மறைமுகமாக ராஜபக்ஷேயின் பாசிச ராணுவத்துக்குத் துணை நிற்கிறதா? என்ற கேள்வி தமிழக மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. பாஸ்பரஸ் எரிகுண்டுகளால் அன்றாடம் கொத்துக்கொத்தாக தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படும் சூழலில் கூட, சோனியா காந்தி ஈழத்தமிழர் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. தமிழனுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். அங்கு மனித உரிமை மீறப்படுகிறதே... அதற்காகவாவது குரல் கொடுக்கவேண்டாமா? ராஜபக்ஷே அரசுக்கு மறைமுகமாகத் துணை நிற்கிறது மத்திய அரசு.''

இலங்கைத் தமிழர் பிரச்னை வெளிநாட்டுப் பிரச்னை என்கிறாரே பிரணாப் முகர்ஜி?

``பிரணாப் முகர்ஜி மட்டுமா சொன்னார். பேராசிரியர் அன்பழகனும் சொல்கிறாரே. எவ்வளவு பொருத்தமற்ற பேச்சு இது? கிழக்கு வங்காளத்தில் இந்தியப் படையை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியபோது, அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? விடுதலைப்புலிகளுக்குப் புகலிடம் கொடுத்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து இந்திராகாந்தி துணை நின்றபோது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது வான்வழியாக இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப்பொட்டலம் அளித்தாரே, அப்போது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ஈழத் தமிழர் பிரச்னையில் அரசியல்வாதிகள் அனைவரும் நடிக்கிறார்கள்.''

கலைஞர், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அக்கறை உள்ளவர்கள்தானே?

``அப்படி அக்கறையுள்ளவர்கள் என்றால், தமிழகத்தில் எதற்கு இரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்புகள்? தமிழ் இனத்தைப் பாதுகாக்கக் கூட ஒன்றுபடாதவர்கள் வேறு எதற்கு கட்சிமாச்சரியங்களைக் கடந்து ஒன்றுபடப் போகிறார்கள்? ஈழத்தமிழர் நலனுக்காக ஒரு கூட்டணி. கட்சிகளின் சுயநலனுக்காக ஓர் அரசியல் கூட்டணி என இரு வேடமிட்டு நடிக்கும் இந்த நடிகர்களை தமிழினம் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.''

அப்படியென்றால் ஈழத்தமிழர் நலன் காக்க கட்சிகள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?

``தமிழ் மொழி, இனத்தின் மீது அக்கறை கொண்டவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் மூன்று முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் `ஐயகோ.. தமிழினம் அழிகிறது' என அபயக்குரல் கொடுத்தும் சற்றும் செவிசாய்க்காத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அவர் விடுபடவேண்டும். ஈழத் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் நாற்பது தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால், மாநிலத்தில் ஆட்சி போய்விடும் என கலைஞர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அப்படியே ஆட்சி போனாலும், 1971 தேர்தலைப் போல சரித்திரம் காணும் வெற்றியை அவர் பெறுவார். முதல்வர் என்ற மகுடம் பறி போனால் மீண்டும் பெறலாம். ஆனால், தமிழினத் தலைவர் என்ற தகுதியை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியாது.''

பிரியங்கா - நளினி சந்திப்புக் குப் பிறகுதான் இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற பேச்சு உள்ளதே?

``பிரியங்கா- நளினி சந்திப்பால் அகமகிழ்ந்ததில் நானும் ஒருவன். தவறு செய்தவர்களை மன்னிக்கும் மாண்பு சோனியா காந்தி குடும்பத்தினருக்கு இருக்கிறது என பெருமிதம் கொண்டேன். காந்திஜியின் தாக்கம் காங்கிரஸில் இருக்கிறது என மகிழ்ந்தேன். ஆனால், இன்றைக்கு ஈழத்தமிழர் பிரச்னையில் சோனியாகாந்தி வாய்மூடி மௌனமாக இருப்பதைப் பார்க்கிறபோது, நளினி - பிரியங்கா சந்திப்பு ஏற்படுத்திய நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மறைந்து விட்டது. சந்தேகம்தான் எஞ்சி நிற்கிறது.''

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் நீங்கள். அந்த இயக்கத்தைத் தவிர்த்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழ்வது சாத்தியமென நினைக்கிறீர்களா?

``ஆயுதம் தூக்கும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே ஆட்சி மதம் என்றிருந்தால் சமத்துவம், சகோதரத்துவம் எப்படி சாத்தியம்? இந்த இரண்டுமில்லாத இடத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? வன்முறை கூடாது என்று கூறும் காந்திஜியே கூட ஒரு பெண்ணின் கற்புக்கு ஆபத்து வருமென்றால், அவள் தனது கூரிய நகத்தைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்கிறார். இலங்கையில் அறவழியில் நடந்த ஒப்பந்தங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என உலகளவிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைக்கிறார்கள். வரலாறு திரும்பும் என்பார்கள். இப்போது அது நடந்திருக்கிறது. அன்றைய ஹிட்லர்தான் இன்றைய ராஜபக்ஷே.''

ஈழத்தமிழர் போராட்டத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?

``என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, `தி.மு.க. தூண்டுதலால் சிலர் நடத்தும் கிளர்ச்சி இது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை' என ஆரூடம் சொன்னார் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம். ஆனால், அன்றைக்கு மக்கள் மனதில் இருந்த கொதிநிலையே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இது அண்ணாவே எதிர்பார்க்காத வெற்றி. அந்தக் கொதி நிலை இன்று உள்ளது. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இனத்துக்குத் துரோகம் இழைப்பவனை என்றும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.''

நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டீர்கள். வேறு கட்சிக்கு செல்வீர்களா?

``இந்தத் சூழலில் தமிழக காங்கிரஸைப் பற்றிச் சொல்ல வேண்டும். தமிழக காங்கிரஸ் தற்போது இறுதி மூச்சை நிறுத்திவிடும் நிலையில் உள்ளது. தமிழக மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்னையிலும் தமிழக காங்கிரஸின் தலைமையை அலங்கரிப்பவர்களுக்கு அக்கறையில்லை. திராவிடக் கட்சிகளின் தோளில் அமர்ந்து கொண்டு சிலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றுத் தரும் ஒரு தரகு நிறுவனமாகி விட்டது தமிழக காங்கிரஸ். இனப்பற்றோ, மொழிப்பற்றோ தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இல்லை. இனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதென்றால், அதை எதிர்க்கும் தார்மீக ஆவேசமும் இம்மியளவு இல்லை. எந்த அரசியல்கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நாற்பதாண்டுகளை அர்த்தமற்று அரசியல் அரங்கில் வீணாக்கிவிட்டோமோ என்ற கழிவிரக்கம் ஏற்பட்டுள்ளது. இனி அரசியலுக்கு அப்பால் சமூக நலம் சார்ந்து என் எழுத்து, பேச்சின் மூலம் முனைப்பாகப் போராடுவேன். பணம் சம்பாதிக்கும் நோக்கம், அதிகாரப் பதவி வேட்கை என இரண்டுமற்ற, பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்த விரும்பும் அரசியல் சாராத அமைப்புகளுக்கு காந்தியவாதியாய்த் துணை நிற்பேன்...'' என முடித்தார் தமிழருவி மணியன்.

கருணாநிதிக்குத் தேவை தியாக உணர்வும் துணிவும்


-பழ.நெடுமாறன்-
இலங்கையில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென்றும் அங்குள்ள தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தமிழகம் ஒன்றுபட்டு குரல் எழுப்பியும்கூட இந்திய அரசு அதை அலட்சியம் செய்ததைக் கண்டிக்கும் வகையில்தான் பெப்ரவரி 4ம் திகதி தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்தது. இவ்வேண்டுகோளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மற்றும் பல அரசியல் கட்சிகள், தொழிலாளர் சங்கங்கள், மீனவர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தமிழ் அமைப்புகள், திரைத்துறையினர் ஆகியவை ஆதரவாகத் திரண்டன.

ஆனால் தமிழக அரசு இப்போராட்டம் சட்ட விரோதமானது என அறிவித்ததோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியது. இதுவரை தமிழகத்தில் எந்த அரசும் செய்யாத ஒன்றை தி.மு.க. அரசு செய்யத் துணிந்தது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே எச்சரிக்கைக் கடிதங்களை பெப்ரவரி 3ம் திகதி நள்ளிரவில் வழங்கச் செய்தார். அக்கடிதத்தில் ""உச்ச நீதிமன்றம் முழு அடைப்பு நடத்துவதையே சட்ட மீறல் என்ற பொருளில் தடுத்து நிறுத்தி இருப்பதாலும், அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முடியாது இருக்கும் நிலையில் நீங்கள் அறிவித்துள்ள 4ம் திகதி முழு அடைப்பு சட்ட விரோதமானது என்று எச்சரிக்கப்படுகிறது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது..

பெப்ரவரி 3ம் திகதி நள்ளிரவில் இக்கடிதம் ஒவ்வொரு தலைவரையும் தட்டி எழுப்பி வழங்கப்பட்டது. அதாவது 1997ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினைச் சுட்டிக்காட்டி எங்களை தலைமைச் செயலாளர் எச்சரித்திருக்கிறார். ஆனால் அதற்கு பல மணிநேரங்களுக்கு முன்னதாகவே 322009 அன்று பிற்பகல் 3 மணி அளவில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தலைமையில் மேலும் இரண்டு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் "பந்தை நடத்துவது ஜனநாயக உரிமையாகும். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே பந்த்கள் நடத்தப்படுகின்றன. எனவே, அதற்குத் தடை போட முடியாது' என்ற தீர்ப்பனை வழங்கிய பிறகு, பழைய தீர்ப்பனைத் தேடி எடுத்து மேற்கோள் காட்டி எங்களை தலைமைச் செயலாளர் மிரட்டுகிறார். அவராக இதைச் செய்திருக்க மாட்டார் என்பது திண்ணம். முதல்வர் ஆணையின்றியோ அனுமதியின்றியோ இவர் அதைச் செய்திருக்க முடியாது. நாட்டில் நடைபெறுவது எதுவுமே தெரியாமல் தமிழக அரசு எப்பேர்பட்ட குழப்பத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
அரசு தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் போன்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு மக்களையும் அரசியல் கட்சிகளையும் ஒருபுறம் மிரட்டுகிற முதலமைச்சர், தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி வேறு வகையில் புலம்புகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றிக் குழப்புகிறார்.



ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பில் இருப்பவர் இவ்வாறு நடந்து கொள்வது முறைதானா? சரிதானா? ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசை வற்புறுத்திச் செயல்பட வைக்கத் தவறியவர் தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து எனக் கூக்குரலிடுவது கேலிக்கூத்தாகும்.

தமிழகத்தின் முதல்வர் பதவி இந்தியாவின் பிற மாநிலங்களின் முதல்வர்களுக்கே பலமுறை வழிகாட்டிய பதவியாகும். ராஜாஜி, காமராஜ், அண்ணா போன்ற பெருமைக்குரிய பல தலைவர்கள் வகித்த பதவி அது. தமிழர்களுக்கு நெருக்கடியான காலகட்டங்கள் இருந்தபோது அவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழுக்கும் தமிழர்களுக்கும் அபாயம் நேரிட்டபோது எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களைக் கண்டு அவர்கள் ஒருபோதும் அஞ்சியது இல்லை. ஆட்சிக்கு ஆபத்து என்று புலம்பியதும் இல்லை. மாறாக அப்போராட்டங்கள் நடக்க ஜனநாயக ரீதியில் அனுமதி அளித்துவிட்டு அந்தப் போராட்டங்களையும் அதன் விளைவுகள் குறித்தும் மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்து தமிழர்களுக்கு வர இருக்கும் அபாயங்களையும் இழப்புகளையும் தடுத்து நிறுத்தக்கூடிய மதியூகமும் துணிவும் அந்தத் தலைவர்களுக்கு இருந்தது. இங்கே இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.




1953ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீ ராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார். அதன் விளைவாக ஆந்திரத்தில் பெரும் போராட்டங்கள் வெடித்தன. அதுவரை மொழிவழி மாநிலப் பிரிவினையை ஏற்க மறுத்த பிரதமர் நேரு 21053ல் ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.

ஆனால் ஆந்திரர்கள் சென்னை நகரின் மீது உரிமை கொண்டாடினார்கள். முழுமையாக சென்னையை அளிக்க முடியாவிட்டால் அதை இரண்டாகப் பிரித்து ஆந்திரமும் தமிழகமும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்கள். அதுவும் முடியாது என்றால் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக சென்னை ஆக்கப்பட வேண்டும் என்றார்கள். இதுவும் இயலாது என்றால் சென்னையை மத்திய ஆட்சிக்குட்பட்ட பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்.


ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை தர நியமிக்கப்பட்ட நீதிபதி வாஞ்சு தனது பரிந்துரையில் ஆந்திராவின் தலைநகராக இடைக்காலத்தில் சென்னையே இருக்கலாம் என்று கூறியுள்ளார் என்ற செய்தி தமிழர்களைக் கொதித்தெழ வைத்தது. சென்னை மாகாண சட்டமன்றத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சென்னை தமிழகத்திற்கே உரியது என்பதை வற்புறுத்தி கையெழுத்திட்ட அறிக்கையை ம.பொ.சி., மேயர் செங்கல்வராயன் ஆகியோர் பிரதமர் நேருவிடம் கொடுத்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னை தமிழகத்திற்கே உரியது என்ற கூட்டறிக்கையை டில்லியில் வெளியிட்டனர்.

13253 அன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சென்னை நகரம் தமிழகத்திற்கே உரியது என்ற தீர்மானத்தை வலியுறுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராஜ் ""சென்னை நகரில் ஆந்திராவிற்கு எந்தவிதமான பங்கு தந்தாலும் சரி, இதுவரை கண்டிராத அளவுக்கு பெரும் எழுச்சி எழும்' என எச்சரித்தார்.
இப்படி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று குரல் கொடுத்ததோடு நில்லாமல் பல போராட்டங்களையும் நடத்தின. அந்தப் போராட்டங்களைக் கொச்சைப்படுத்துவதற்கோ அடக்குவதற்கோ முதலமைச்சர் ராஜாஜி முயலவில்லை. மாறாக பிரதமர் நேருவைச் சந்தித்துப் பேசுவதற்காக டில்லி சென்றார்.

தமிழ் மக்களின் கொதிப்புணர்வை நேருவிடம் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார். பிறகு பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். "சென்னையையோ அதன் பகுதியையோ ஆந்திரத்திடம் தருவதென மத்திய அரசு முடிவெடுக்குமானால் அதை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரும் சக்தி எனக்கு இல்லை. இந்த நிலையில் வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என பிரதமரிடம் கூறிவிட்டேன்' என்று பத்திரிகையாளரிடம் ராஜாஜி கூறினார்.

அவரின் இந்த அறிக்கை பிரதமர் நேருவை அதிர்ச்சி அடைய வைத்தது. 23553 அன்று நாடாளுமன்றத்தில் நேரு வெளியிட்ட அறிவிப்பில் சென்னை தமிழ்நாட்டிற்கே உரியது என்பதை ஒப்புக்கொண்டார்.

ராஜாஜி தனது முதல்வர் பதவியைத் துறக்க முன்வந்த செயல் நேருவின் மனதை மாற்றியது. தமிழர்களுக்குச் சென்னை நகரைப் பெற்றுத் தந்தது.
அதேபோல 1956ம் ஆண்டில் தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் தமிழகமே இல்லாமல் செய்துவிட அபாயகரமான திட்டம் ஒன்றினை பிரதமர் நேரு உருவாக்கினார். மொழிவழி மாநிலங்களுக்குப் பதில் பல மாநிலங்களை இணைத்து இந்தியாவையே ஐந்து மண்டலங்களாக்கும் திட்டத்தை வகுத்தார். அதன்படி தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டு தட்சிணப்பிரதேசம் என்ற அமைப்பை உருவாக்க நேரு விரும்பினார்.

இத்திட்டத்திற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 27156ல் ம.பொ.சி.யின் முயற்சியின் பேரில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அண்ணா, இரா. நெடுஞ்செழியன், ப. ஜீவானந்தம், க.ர. நல்லசிவம், ப.சு. சின்னத்துரை, பாரதிதா சன், சி.பா. ஆதித்தனார், கா. அப்பாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். பி.டி. இராசன் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழுவின் சார்பில் 20256ல் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. பெரியார் இக்குழுவில் சேராவிட்டாலும் தட்சிணப்பிரதேசத் திட்டத்தை எதிர்த்துத் தனியே போராட்டம் நடத்தினார்.


இப்போராட்டங்களைத் தடுக்கவோ, திசைதிருப்பவோ முதல்வர் காமராஜ் எதுவும் செய்யவில்லை. மாறாக இத்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் பிரதமர் நேரு கூட்டியிருந்த மூன்று மாநில முதல்வர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால் தமிழக முதலமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டத்தைச் சுட்டிக்காட்டி தமிழர்கள் இத்திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை எடுத்துக் கூறினார். காமராஜ் இதை உறுதியாக ஏற்க மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட நேரு இத்திட்டத்தைக் கைவிட்டார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகள் ஒன்றுபட்டு நடத்திய போராட்டம் தனது ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்று கருதாமல் அதை பிரதமர் நேருவிடம் துணிவாகச் சுட்டிக்காட்டி தட்சிணப்பிரதேசத் திட்டத்தை கைவிடச் செய்தவர் காமராஜ்.
ராஜாஜியும் காமராஜும் முதல்வர்களாக இருந்தபோது தமிழ்நாட்டுப் பிரச்சினைகளுக்காகப் பதவியைத் தூக்கி எறியவும், மத்திய அரசுடன் துணிந்து போராடவும் அவர்கள் முன்வந்த காரணத்தினால்தான் சென்னை நகரம் தமிழர்களுக்குச் சொந்தமாயிற்று. தட்சிணப்பிரதேசத்திற்குள் தமிழகம் மூழ்கிப் போகாமல் காப்பாற்ற முடிந்தது. இவ்வளவுக்கும் இந்த இரு தலைவர்களும் நேருவுடனும் பிற தலைவர்களுடனும் தோளோடு தோள் நின்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். அகில இந்திய அரசியலில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தவர்கள். டில்லி தலைவர்களால் நன்கு மதிக்கப்பட்டவர்கள். நேரு போன்ற தலைவர்களுடன் கொண்டுள்ள உறவு முக்கியமா அல்லது தமிழகத்தின் நலன் முக்கியமா என்ற கேள்வி எழுந்தபோது, பின்னதையே தேர்ந்தெடுத்தனர். நேருவுடன் மோதவும் துணிந்தனர்.

இன்றைய முதல்வர் கருணாநிதிக்கு டில்லி தலைமையுடன் எத்தனை கால உறவு? வாஜ்பாய் இருந்தால் அவருடன் உறவு, மன்மோகன் வந்தால் அவருடன் உறவு, வேறு யாராவது வந்தாலும் அவருடன் உறவு, இது அரசியல் ரீதியாக தன்னலம் சார்ந்த உறவே தவிர வேறு ஆழமான தோழமை அல்ல.
ராஜாஜியும் காமராஜும் தேசியத் தலைவர்களாக இருந்தும், தியாகத்தாலும் நட்பாலும் பிணைக்கப்பட்ட உறவை டில்லி தலைமையுடன் கொண்டிருந்தபோதும் அதைத் தூக்கி எறியத் தயங்கவில்லையே.
ஆனால் தன்னலம் சார்ந்த குறுகிய கால உறவுக்காக தமிழர்களின் நீண்டகால நலன்களைப் புறக்கணிப்பது எல்லா வகையிலும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, வரலாற்றில் அழியாத பழியையும் சுமக்கத் தக்கதாகும்.
தினமணி

கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் விடுத்த மஹிந்தவின் அழைப்பு செய்தியானது தமிழ் இன அழிப்பை மறைக்கும் பிரச்சாரமே!


தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி, அவரது ஆதரவு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் மட்டுமின்றி மேலும் சில தமிழ் ஏடுகளிலும் இன்று வெளிவந்துள்ளது.


தாங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத்தான் போர் நடத்தி வருகிறோம், அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக அல்ல என்றும், விடுதலைப் புலிகள்தான் அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று‌ம் சிறிலங்கா அரசும், உண்மையை திட்டமிட்டு மறைக்கும் வல்லமை கொண்ட அதன் ஆதரவு ஊடகங்களும் தொடர்ந்து செய்துவரும் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இப்படி ஒரு செய்தி (பிரச்சாரம்) மூலம் சிறிலங்கா இராணுவம் ஈழத் தமிழ் மண்ணில் நிகழ்த்தி வரும் இனப் படுகொலையை மறைக்கவும், அதற்குக் காரணம் விடுதலைப் புலிகள்தான் என்று திசை திருப்பவும் முயன்றுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் குரலை, பேட்டி கண்டு எழுத்தாக ஒளி, ஒலி பரப்பி ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு தொடர் பிரச்சாரத்தை செய்துவரும் அந்த பாரம்பரிய ஆங்கில நாளிதழின் இன்றைய தலைப்புச் செய்தியை படிக்கும் எவரும், தமிழக முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் கடந்த திங்கட்கிழமை திடீரென்று இந்த அழைப்பை ராஜபக்ச விடுத்துள்ளார் என்றுதான் கருதுவார்கள். அப்படி ஒரு தலைப்பு. எப்பொழுது அவர் கூறினார் என்பதை மறைத்து செய்தி எழுதப்பட்டுள்ளது.

‘ஏசியன் டிரிபுயூனல்’ என்ற இணையத்தளத்திற்கு (இது அப்பட்டமான சிங்கள ஆதரவு இணையத்தளம் என்பதை அறிக) அதிபர் ராஜபக்ச அளித்துள்ள ஆங்கில பேட்டியில் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:

"I have already invited Tamil Nadu Chief Minister M.Karunanidhi to make an official visit to Sri Lanka and meet the Tamil people in Jaffna, as well as those in the East and in the Upcountry to see for himself how the Tamils in Sri Lanka are living with honor and dignity", Rajapaksa said hailing the DMK chief as a veteran Indian leader.

“யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கிழக்குப் பகுதியிலும், மலையகப் பகுதியிலும் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் எவ்வாறு கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்கின்றனர் என்பதை நீங்களே அரசுப் பூர்வமாக இங்கு வருகை தந்து அவர்களைச் சந்தித்துத் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் ஏற்கனவே தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்துள்ளனே” என்று ராஜபக்ச கூறினார் என்றுதான் அந்தப் பேட்டியில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ராஜபக்ச, ‘ஏற்கனவே விடுத்த அழைப்பை’ ஏதோ புதிதாக விடுத்த அழைப்பு என்பதுபோல காட்டி ஒரு செய்தியை வெளியிட்டு அதன்மூலம் ஒரு பிரச்சாரத்தையும் செய்துள்ளார்கள்.

அந்த ‘புகழ்பெற்ற இணையத் தளத்திற்கு’ அளித்த பேட்டியை, ஒரு ‘அறிக்கை’ (A report posted in the Preisdents secretariat website) என்று பெரிதுபடுத்தி, சிறிலங்க அரசுடன் இணைந்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை செய்துள்ளார்கள் இந்த உண்மையின் காவலர்கள்.

இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம்? ‘அப்பாவித் தமிழர்களை விடுதலைப் புலிகள் கேடயமாக பயன்படுத்துகிறார்கள்’ என்று அடிப்படையற்ற ஒரு சொத்தை வாதத்தை தமிழ்நாட்டு தமிழர்கள் எண்ணங்களில் ஆழ‌ப் பதிய வைக்க தங்களது செய்திகளையே பிரச்சாரமாக்கியுள்ளார்கள்.

இலங்கையில் கடும் போர் நடக்கும் முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை பாதுகாப்பு வலயம் என்று கூறி, அவர்கள் தங்கியிருந்த பகுதி‌யி‌ன் ‌மீது‌ம், தற்காலிக மருத்துவமனையையும் குறிவைத்து தொடர்ந்து குண்டு வீசித் தாக்கி, 400க்கும் மேற்பட்டோரை அழித்ததை மறைக்க இந்த கேடய வாதத்தை செய்திகளாக வீசியுள்ளார்கள்.

தமிழக முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைக்கு வந்து, போர் நடக்கும் இடங்களில் நாடோடிகள் போல பிள்ளை, குழந்தைகளை தூக்கிக் கொண்டு காடுகளில் பதுங்கி வாழும் மக்களிடம் உண்மை என்ன என்பதை அவர்களை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது அதிபர் ராஜபக்சயின் விருப்பமாக இருந்தால், அதனை அதிகாரப்பூர்வமான வழிகளில் செய்திருக்கலாமே? அப்படிப்பட்ட அழைப்பை பேட்டியின் வாயிலாக, அதுவும் இப்படிபட்ட உலகப் பிரசித்துப் பெற்ற இணையத் தளத்திற்கு அளிக்கும் பேட்டியின் வாயிலாகவா அழைப்பை விடுப்பார்கள்?

ஒரு வாரத்திற்கு முன்னர் அயலுறவுச் செயலர் சி‌வ்சங்கர் மேனன் அங்கு சென்றாரே? கண்டிக்குச் சென்று ராஜபக்சயை சந்தித்தாரே. அப்பொழுது அவரிடம் இந்த அழைப்பை விடுத்திருந்தால், தமிழக சட்டப் பேரவையில் ‘அய்யகோ’ என்று தீர்மானம் போடாமல் தவிர்த்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

ஆனால் ராஜபக்சயின் பேட்டியை வெளியிட்ட இணையத்தளம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

In a smart diplomatic initiative, President Mahinda Rajapaksa Sunday invited 'veteran' Indian leader Karunanidhi, also his arch rival Jayalalithaa Jayaram of AIADMK to visit Jaffna and Vanni and personally appeal to LTTE to release the Tamilians held as human shield at gun point.

‘மிக அறிவார்ந்த ராஜதந்திர நடவடிக்கையாக’ (In a smart Diplomatic initiative) என்று கூறித்தான் பேட்டியைப் பற்றிய விவரிப்பை ஆரம்பிக்கின்றார் அதன் இதழியலாளர்.

முதலமைச்சர் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் அழைப்பு விடுத்துள்ளது ‘போல’ ஒரு உருவகத்தை ஏற்படுத்தும் முயற்சி என்பது இந்த வார்த்தைகளே புலப்படுத்தவில்லையா? பத்திரிக்கையை படிப்பவர்கள் அந்த இணையத்திற்குச் சென்று படிக்கவா போகிறார்கள் என்ற அறிவார்ந்த நம்பிக்கையுடன் செய்யப்பட்டுள்ள செய்திப் பிரச்சாரம் இது.

இன்று நேற்றல்ல, கடந்த அக்டோபர் மாதம் முதல் போரை நிறுத்தக் கோரி தமிழ்நாட்டில் எழுந்த குரலோடு, எழுந்து ஒரு முக்கிய கோரிக்கை, அங்கு (ஈழத்தில்) என்னதான் நடக்கிறது என்பதை அறிய அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்பதே. அவர்கள் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை சந்திக்கட்டும், உண்மையை அறியட்டும் என்றுதான் தமிழகத் தலைவர்கள் கோரி வருகிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாஸ், இலங்கை செல்லும் அயலுறவு செயலருடன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று குரல் கொடுத்தாரே? மத்திய அரசு அதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லையே?

உண்மையறிய தமிழ்நாடு தயாராகவே உள்ளது. ஆனால் சிங்கள இனவாத அரசு தயாராக இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட ‘எளிமையான’ பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது.

குழந்தைகளும், பள்ளிச் சிறார்களும் நாளைய புலிகள் என்ற பார்வையே சிறிலங்கா அரசிற்கும், அதன் முப்படையினருக்கும் உள்ளது என்பதை அறியாமல் இங்கு யாரும் ஈழப் பிரச்சனையை பேசிக்கொண்டிருக்கவில்லை என்பதை சிங்கள சிறிலங்கா அரசும், அதன் துதிபாடிகளும் உணர வேண்டும்.

கிழக்கில் உள்ள தமிழர்கள், மேற்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் வாழும் தமிழர்கள், சிறிலங்கா இராணுவத்தின் கொலை வெறித் தாண்டவத்திற்கு பயந்து நாட்டை விட்டு கடல் கடந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழர்கள் என்று எல்லோருடனு‌ம் பேசி அறிந்துதான் இங்கு அரசியல் நடைபெறுகிறது, அவர்களின் இன விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு பெருகுகிறது.

சிறிலங்கா அரசின் இன வெறி நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கட்டுரை தீட்டிய சிங்கள இன பத்திரிக்கையாளர்களைக் கொன்று குவிக்கும், கடத்திக் காணடிக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இன வெறியாட்டத்தைக் கண்டு கொள்ளாமல், அதற்கு எதிர்ப்பு காட்டாமல், அந்த ஆட்சி கொடுக்கும் விருதை பெற்றுக்கொண்டு புளகாங்கிதம் அடையும் ‘பத்திரிக்கை தருமிகள்’ நடத்தும் இப்படிப்பட்ட திட்டமிட்ட பிரச்சாரம் தமிழனத்தை திசை திருப்பும் என்று எதிர்பார்ப்பது அறியாமையே.