பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாத மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் போக்குத்தான், தனது கட்சி விலகலுக்குக் காரணம் என்கிறார். மதுரையில் அவரைச் சந்தித்தோம். தன்னையொத்த கருத்துடைய சிறு கூட்டத்தினர் மத்தியில் இருந்தார். கேள்விகளை முன்வைத்தோம். ஆவேசத்துடன் அருவியாகக் கொட்டின வார்த்தைகள்.
நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு இலங்கைப் பிரச்னை தான் காரணமா?
``நிச்சயமாக. இலங்கைப் பிரச்னையில் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் சுயநலப் பார்வையோடு நடக்கின்றன. தமிழகத்தின் நாற்பது எம்.பி.க்களும் தமிழின உணர்வோடு ஒன்றுபட்டு நின்றிருந்தால், மத்திய அரசின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி இலங்கைப் பிரச்னைக்கு உரிய தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஈழத்தில் விடுதலைப் புலிகள் ஒழிப்பு என்ற போர்வையில் தமிழினம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், சிங்கள பௌத்த பேரினவாத பாசிச அரசுக்குப் பக்கபலமாக நிற்கும் மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் அணுகுமுறையை மானமுள்ள எந்தத் தமிழனாலும் அங்கீகரிக்க முடியாது. காகித நியமனத்தால் புளகாங்கிதம் அடையும் காங்கிரஸில் எனது இன, மொழி அடையாளங்களை அடகு வைக்க என் இதயம் இடம் தரவில்லை. எனவேதான் மொழி, இன உணர்வற்ற காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட நீடிக்க நான் விரும்பவில்லை.''
தமிழக எம்.பி.க்கள் மீது உங்களுக்கு இவ்வளவு காட்டம் ஏன்?
``மும்பையில் ஒரு பீகாரி தவறுதலாக சுடப்பட்டான். இதையடுத்து, பீகாரில் மாறுபட்ட கட்சிகளின் தலைவர்களான நிதீஷ்குமார், லாலு, பஸ்வான் போன்றவர்கள் ஒன்றிணைந்து அந்த சம்பவத்தைக் கண்டித்தார்கள். ஒரு நபர் கொல்லப்பட்டதற்கே அப்படியென்றால், தமிழினத்தையே அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது ராஜபக்ஷே அரசு, குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை குவியல் குவியலாகக் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்டித்து தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டாமா? குறைந்தபட்சம் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களாவது சோனியா காந்தியைச் சந்தித்து, ஈழத்தமிழர் பிரச்னை குறித்துப் பேசியிருக்க வேண்டாமா? தங்களையும் தங்கள் பதவிகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுகங்களையும் பாதுகாத்துக் கொள்ள, இனத்தையே காட்டிக்கொடுக்கும் மனிதர்கள் இவர்கள்.
ராமதாஸ் ஈழத்தமிழர் நலனில் அக்கறை காண்பிக்கிறார். அறிக்கை விடுகிறார். சோனியாவைச் சந்தித்தார். சாதகமான பதில் கிடைக்கவில்லை. ஆனால், இன்னும் நூறு நாட்கள் ஆயுள் கூட இல்லாத மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தனது மகனை விலகச் சொல்ல அவருக்கு மனம் வரவில்லை. பதவியைக் கூட தியாகம் செய்யாதவர்கள், செய்யச் சொல்லாதவர்கள் தீக்குளித்தவர்களுக்காக ஒப்பாரி வைக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு இவ்வளவு மோசமான சூழல் உருவானதைத் தடுக்காமல்போன குற்றத்துக்குரியவர்கள் இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் தமிழனத் துரோகிகள்.''
இலங்கைத் தமிழர் பிரச்னையில் சோனியா காந்தி கூட மௌனம் தானே சாதிக்கிறார்?
``உண்மைதான். காங்கிரஸ் தலைவர்கள், மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் எல்லாம் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, `அன்னை சோனியாகாந்தி வழிகாட்டுதலின் பேரில் நடக் கும் மன்மோகன் தலைமையிலான அரசு' என அகமகிழ்ந்து சொல்வார்கள். இப்போது அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில்தான் மன்மோகன் அரசு மறைமுகமாக ராஜபக்ஷேயின் பாசிச ராணுவத்துக்குத் துணை நிற்கிறதா? என்ற கேள்வி தமிழக மக்கள் மனதிலும் எழுந்துள்ளது. பாஸ்பரஸ் எரிகுண்டுகளால் அன்றாடம் கொத்துக்கொத்தாக தமிழினம் கரிக்கட்டைகளாகக் குவிக்கப்படும் சூழலில் கூட, சோனியா காந்தி ஈழத்தமிழர் நிலை குறித்து இன்று வரை வாய் திறக்கவில்லை. தமிழனுக்காகக் குரல் கொடுக்கவேண்டாம். அங்கு மனித உரிமை மீறப்படுகிறதே... அதற்காகவாவது குரல் கொடுக்கவேண்டாமா? ராஜபக்ஷே அரசுக்கு மறைமுகமாகத் துணை நிற்கிறது மத்திய அரசு.''
இலங்கைத் தமிழர் பிரச்னை வெளிநாட்டுப் பிரச்னை என்கிறாரே பிரணாப் முகர்ஜி?
``பிரணாப் முகர்ஜி மட்டுமா சொன்னார். பேராசிரியர் அன்பழகனும் சொல்கிறாரே. எவ்வளவு பொருத்தமற்ற பேச்சு இது? கிழக்கு வங்காளத்தில் இந்தியப் படையை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியபோது, அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? விடுதலைப்புலிகளுக்குப் புகலிடம் கொடுத்து அவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்து இந்திராகாந்தி துணை நின்றபோது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது வான்வழியாக இலங்கைத் தமிழர்களுக்கு உணவுப்பொட்டலம் அளித்தாரே, அப்போது அது வெளிநாட்டுப் பிரச்னையாகத் தெரியவில்லையா? ஈழத் தமிழர் பிரச்னையில் அரசியல்வாதிகள் அனைவரும் நடிக்கிறார்கள்.''
கலைஞர், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் ஈழத்தமிழர் பிரச்னையில் அக்கறை உள்ளவர்கள்தானே?
``அப்படி அக்கறையுள்ளவர்கள் என்றால், தமிழகத்தில் எதற்கு இரண்டு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்புகள்? தமிழ் இனத்தைப் பாதுகாக்கக் கூட ஒன்றுபடாதவர்கள் வேறு எதற்கு கட்சிமாச்சரியங்களைக் கடந்து ஒன்றுபடப் போகிறார்கள்? ஈழத்தமிழர் நலனுக்காக ஒரு கூட்டணி. கட்சிகளின் சுயநலனுக்காக ஓர் அரசியல் கூட்டணி என இரு வேடமிட்டு நடிக்கும் இந்த நடிகர்களை தமிழினம் முதலில் அடையாளம் கண்டு கொள்ளவேண்டும்.''
அப்படியென்றால் ஈழத்தமிழர் நலன் காக்க கட்சிகள் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
``தமிழ் மொழி, இனத்தின் மீது அக்கறை கொண்டவர் கலைஞர். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் மூன்று முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் `ஐயகோ.. தமிழினம் அழிகிறது' என அபயக்குரல் கொடுத்தும் சற்றும் செவிசாய்க்காத காங்கிரஸ் கூட்டணியில் இருந்து அவர் விடுபடவேண்டும். ஈழத் தமிழர் நலனுக்காகக் குரல் கொடுக்கும் பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரி இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். அந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் நாற்பது தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினால், மாநிலத்தில் ஆட்சி போய்விடும் என கலைஞர் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. அப்படியே ஆட்சி போனாலும், 1971 தேர்தலைப் போல சரித்திரம் காணும் வெற்றியை அவர் பெறுவார். முதல்வர் என்ற மகுடம் பறி போனால் மீண்டும் பெறலாம். ஆனால், தமிழினத் தலைவர் என்ற தகுதியை இழந்துவிட்டால் மீண்டும் பெறமுடியாது.''
பிரியங்கா - நளினி சந்திப்புக் குப் பிறகுதான் இலங்கையில் தமிழர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்ற பேச்சு உள்ளதே?
``பிரியங்கா- நளினி சந்திப்பால் அகமகிழ்ந்ததில் நானும் ஒருவன். தவறு செய்தவர்களை மன்னிக்கும் மாண்பு சோனியா காந்தி குடும்பத்தினருக்கு இருக்கிறது என பெருமிதம் கொண்டேன். காந்திஜியின் தாக்கம் காங்கிரஸில் இருக்கிறது என மகிழ்ந்தேன். ஆனால், இன்றைக்கு ஈழத்தமிழர் பிரச்னையில் சோனியாகாந்தி வாய்மூடி மௌனமாக இருப்பதைப் பார்க்கிறபோது, நளினி - பிரியங்கா சந்திப்பு ஏற்படுத்திய நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மறைந்து விட்டது. சந்தேகம்தான் எஞ்சி நிற்கிறது.''
விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் நீங்கள். அந்த இயக்கத்தைத் தவிர்த்து இலங்கையில் ஈழத்தமிழர்கள் அமைதியான வாழ்வு வாழ்வது சாத்தியமென நினைக்கிறீர்களா?
``ஆயுதம் தூக்கும் எந்த இயக்கத்தையும் ஆதரிக்க முடியாது. அதே நேரத்தில் இலங்கையில் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி. பௌத்தம் மட்டுமே ஆட்சி மதம் என்றிருந்தால் சமத்துவம், சகோதரத்துவம் எப்படி சாத்தியம்? இந்த இரண்டுமில்லாத இடத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? வன்முறை கூடாது என்று கூறும் காந்திஜியே கூட ஒரு பெண்ணின் கற்புக்கு ஆபத்து வருமென்றால், அவள் தனது கூரிய நகத்தைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்கிறார். இலங்கையில் அறவழியில் நடந்த ஒப்பந்தங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால், பிரபாகரனால்தான் முடியும் என உலகளவிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்கள் நினைக்கிறார்கள். வரலாறு திரும்பும் என்பார்கள். இப்போது அது நடந்திருக்கிறது. அன்றைய ஹிட்லர்தான் இன்றைய ராஜபக்ஷே.''
ஈழத்தமிழர் போராட்டத்துக்கு தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகக் கருதுகிறீர்களா?
``என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது, `தி.மு.க. தூண்டுதலால் சிலர் நடத்தும் கிளர்ச்சி இது. இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்தில்லை' என ஆரூடம் சொன்னார் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம். ஆனால், அன்றைக்கு மக்கள் மனதில் இருந்த கொதிநிலையே தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இது அண்ணாவே எதிர்பார்க்காத வெற்றி. அந்தக் கொதி நிலை இன்று உள்ளது. மக்கள் மௌனமாக இருக்கிறார்கள். இனத்துக்குத் துரோகம் இழைப்பவனை என்றும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.''
நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டீர்கள். வேறு கட்சிக்கு செல்வீர்களா?
``இந்தத் சூழலில் தமிழக காங்கிரஸைப் பற்றிச் சொல்ல வேண்டும். தமிழக காங்கிரஸ் தற்போது இறுதி மூச்சை நிறுத்திவிடும் நிலையில் உள்ளது. தமிழக மக்களின் எந்த வாழ்வாதாரப் பிரச்னையிலும் தமிழக காங்கிரஸின் தலைமையை அலங்கரிப்பவர்களுக்கு அக்கறையில்லை. திராவிடக் கட்சிகளின் தோளில் அமர்ந்து கொண்டு சிலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளைப் பெற்றுத் தரும் ஒரு தரகு நிறுவனமாகி விட்டது தமிழக காங்கிரஸ். இனப்பற்றோ, மொழிப்பற்றோ தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இல்லை. இனத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதென்றால், அதை எதிர்க்கும் தார்மீக ஆவேசமும் இம்மியளவு இல்லை. எந்த அரசியல்கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. நாற்பதாண்டுகளை அர்த்தமற்று அரசியல் அரங்கில் வீணாக்கிவிட்டோமோ என்ற கழிவிரக்கம் ஏற்பட்டுள்ளது. இனி அரசியலுக்கு அப்பால் சமூக நலம் சார்ந்து என் எழுத்து, பேச்சின் மூலம் முனைப்பாகப் போராடுவேன். பணம் சம்பாதிக்கும் நோக்கம், அதிகாரப் பதவி வேட்கை என இரண்டுமற்ற, பொதுவாழ்வைத் தூய்மைப்படுத்த விரும்பும் அரசியல் சாராத அமைப்புகளுக்கு காந்தியவாதியாய்த் துணை நிற்பேன்...'' என முடித்தார் தமிழருவி மணியன்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.