சர்வதேச சமூகத்துக்கு சொல்லப்பட்ட செய்தி


இலங்கையின் உள்நாட்டுப் போர் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், அடுத்துத் தோன்றக்கூடிய நிலைவரங்களை அது எவ்வாறு கையாளப்போகிறது என்பதை சர்வதேச சமூகம் அக்கறையுடன் நோக்கிக் கொண்டிருக்கிறது. போரின் முடிவு பற்றி ஒவ்வொருவரும் தங்களது அரசியல் நிலைப்பாடுகளுக்கு இசைவாகவே வியாக்கியானங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) இருதடவைகள் மேற்கொண்ட ஆயுதக் கிளர்ச்சிகள் முறியடிக்கப்பட்டதைப் போன்றே கால் நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்றுவந்த இனப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்ட ஆயுதப் போராட்டமும் முறியடிக்கப்படுகிறது என்று சில அவதானிகள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார்கள். உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து இலங்கையிலும் வெளிநாடுகளிலும் ஊடகங்களில் அவதானிகளும் அரசியல் விமர்சகர்களும் தற்போது கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இராணுவ வெற்றிகள் தொடர்பில் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தின் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் காணப்படக்கூடியதாக இருக்கின்ற குதூகல மனோபாவம் 6 தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இனரீதியான பாரபட்சங்களுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளுக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக்காண வேண்டியதன் அவசியத்தை அந்தகாரத்திற்குள்ளாக்கிவிடக் கூடிய ஆபத்து இருப்பதாக நியாயபூர்வமாகச் சிந்திக்கின்ற அவதானிகள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அரசாங்கமும் அதன் நேசசக்திகளும் வெற்றி எக்களிப்பு அரசியல் கலாசாரமொன்றை தோற்றுவித்து அதில் தாராளமாகக் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக இலங்கையின் இனப்பிளவு மேலும் ஆழமாகக்கூடிய ஆபத்து உருவாகிக்கொண்டிருக்கிறதே தவிர, மீள் நல்லிணக்கப் போக்குத் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. கொழும்பு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுகின்ற சிங்கள புத்திஜீவிகளில் சிலர் கூட இதை வெளிப்படையாகக் கூறத் தவறவுமில்லை. வெற்றிக்களிப்பு அரசியலைக் கைவிட்டு நல்லிணக்க அரசியல் பாதையில் பயணம் செய்யத் தயாராகுமாறு இவர்கள் அரசாங்கத்திற்கும் நேச சக்திகளுக்கும் அறிவுரை கூறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், அதேவேளை பேரினவாத அரசியல் தத்துவாசிரியர்கள் என்று வர்ணிக்கப்படக் கூடியவர்கள் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வருகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான செயன்முறைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடமிருந்து வரக்கூடிய நெருக்குதல்களுக்குப் பணிந்துவிடாமல் இராணுவ வெற்றிகளை அர்த்தமுடையவையாக்க வேண்டுமென்று அரசாங்கத்திற்கு அறிவுரை கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இன நெருக்கடிக்கும் அதன் விளைவாக மூண்ட உள்நாட்டுப் போருக்கும் இராணுவத் தீர்வே காணப்படவேண்டுமென்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்திவந்த இவர்களிடம் வேறெந்த அபிப்பிராயத்தையும் எதிர்பார்க்க முடியாது.

ஆனால், போரை முழு மூச்சாக முன்னெடுக்க வேண்டுமென்று அதிகார நிறுவனத்தின் மீது அண்மைக்காலமாக பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்களின் பின்னால் இருந்த பேரினவாத அரசியல் சக்திகளின் கடுமையான செல்வாக்கின் கீழ் அரசாங்கம் இருக்கிறதென்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. அதன் காரணத்தினால் அரசியல் தீர்வு என்கின்ற விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேச சமூகத்திடம் என்னதான் எதிர்பார்ப்பு இருந்தாலும் இன்றைய அரசாங்கம் முன்னோக்கிச் செயற்படுவதற்கான வாய்ப்பில்லையென்பதே எமது அபிப்பிராயமாகும்.

போரை நடத்துகின்ற முறை தொடர்பிலோ அல்லது போரின் விளைவாக அப்பாவித் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற அவலங்கள் காரணமாகத் தோன்றிய மனிதாபிமான நெருக்கடி தொடர்பிலோ எந்தவிதமான விமர்சனத்தையும் அரசாங்கம் சகித்துக்கொள்ளத் தயாராயில்லை. வடக்கின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக நேரில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டோன் பிறவுண் இலங்கைக்கான தனது விசேட தூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிறவுணை நியமனம் செய்தது தொடர்பில் அரசாங்கம் வெளிக்காட்டிய ஆவேசப் பிரதிபலிப்பு இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் வெளியுலகின் எந்தவொரு அபிப்பிராயத்தையும் செவிமடுக்கக்கூடிய மனோநிலையில் கொழும்பு இல்லை என்பதை தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

போர் முடிவுக்குப் பிறகு அரசியல் தீர்வுக்கான செயன்முறைகளில் இலங்கை அரசாங்கம் அக்கறை காட்டுமென்று எதிர்பார்க்கின்ற (சர்வதேச சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற) உலகின் முன்னணி வல்லாதிக்க நாடுகளுக்கு டெஸ் பிறவுண் விவகாரத்தின் மூலம் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.