இடம்பெயர்ந்தோரை 3 வருடங்களுக்கு முகாம்களில் வைத்திருக்கும் திட்டத்தை மாற்றியது அரசாங்கம்
ரைம்ஸ் ஒன்லைன் செய்திச் சேவை வடக்கிலுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை 3 வருடங்களுக்கு அரசியல் கைதிகளை பாதுகாப்புடன் வைத்திருக்கும் முகாம்களில் வைத்திருக்க இலங்கை அர சாங்கம் திட்டமிடுவதாகவும் இத்திட்டத்திற்கு பிரிட்டனிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக "லண்டன் ரைம்ஸ்' பத்திரிகையில் நேற்று வெள்ளிக்கிழமை முட்கம்பிக் கிராமங்கள், அகதிகளை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கான முகாம்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
67 சதுர மைல் பரப்பில் 5 நலன்புரிக் கிராமங்களை அமைத்து தமிழர்களுக்கு வழங்கவுள்ளதாக இலங்கை அரசு கூறுகின்றது.
இந்த முகாம்கள் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்படுமெனவும் பாடசாலைகள், வங்கிகள், பூங்காக்கள், தொழில் பயிற்சி நிலையங்கள் என்பன சுமார் 2 இலட்சம் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க அமைக்கப்படுமென்றும் இதற்குப் பொறுப்பான அமைச்சு கூறுகிறது.
இராணுவத்தினர் இடம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பார்களெனவும் புலிகளை அழித்து அந்தப் பகுதிகளிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் வரை இடம்பெயர்ந்த மக்கள் இந்த முகாம்களில் வசிப்பது கட்டாயமானதெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. முகாம்களை சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்குமெனவும் சோதனையின் பின்னர் உறவினர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவார்களெனவும் இளைய பராயத்தவரோ அல்லது தனியாட்களோ அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படமமாட்டார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களை 3 வருட காலம் வைத்திருப்பதாக யோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதும் ஐ.நா. அகதிகளுக்கான முகவரமைப்பு எதிர்ப்புகளை தெரிவித்ததையடுத்து இந்த வருட இறுதியில் 80 சதவீதமானோரை மீளக்குடியமர்த்துவதாக இப்போது கூறப்படுகிறது.
"சுயாதீனமாக அல்ல நாம் ஒவ்வொருவரையும் சோதிக்க வேண்டியுள்ளது' என்று மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரான ராஜீவ விஜயசிங்க ரைம்ஸிற்கு கூறியுள்ளார். "இது பயங்கரவாதிகளை கையாள வேண்டிய சூழ்நிலையாகும். அவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஊடுருவுகின்றனர். ஆகவே பாதுகாப்பு அதி முக்கியமானதாகும்' என்று தெரிவித்த ராஜீவ விஜயசிங்க, புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஒரேயொரு வழியாகுமென்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்திய இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இந்த முகாம்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இந்த முகாம்களை அமைக்கும் திட்டத்திற்கு சர்வதேச சமூகம் நிதி வழங்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளனர். நேரடி மேற்பார்வை மற்றும் சர்வதேச ஊடகத்துறையினர் சென்று வருவதற்கான அனுமதியில்லாமல் இதனை செய்யக் கூடாதென அவர்கள் கூறியுள்ளனர். "இவை வேறொன்றுமில்லை, ஆட்களை ஒன்றாக குவித்து வைக்கப்படும் முகாம்களே' என்று ராமன்செந்தில் என்ற இந்திய தமிழ் எம்.பி. கூறியுள்ளார். "அவர்கள் ஏன் முகாம்களில் வைக்கப்பட வேண்டும்? அவர்கள் பிரஜைகளாக இருந்தால் நேரடியாக புனர்வாழ்வளிக்க முடியுமே?' என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் இதனை ஆட்களை குவித்து வைத்திருக்கும் முகாம்களென நான் கூறவில்லை. ஆனால், ஏற்கனவே தடுப்பு முகாம்களும் இராணுவ சோதனை நிலையங்களும் உள்ளன. அந்த முகாம்கள் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இயங்க வேண்டுமென்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் யூதர்கள் வைக்கப்பட்டிருந்ததைப் போன்ற தடுப்பு நிலையங்கள் போன்றவை இவை என்று பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பாராளுமன்ற தொழில்கட்சி உறுப்பினரும் தெற்காசிய உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவருமான ரொபேர்ட் இவான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவராகும். அவர் இது தொடர்பாக கூறுகையில்; இவை நலன்புரி நிலையங்கள் அல்ல, இவை யுத்தக் கைதிகள் மற்றும் ஆட்களை ஒன்று திரட்டி வைத்திருக்கும் முகாம்கள் என்று கூறியுள்ளார்கள். இவற்றை "தடுப்பு முகாம்கள்' என்று மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டிருப்பதுடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான ஐ.நா. வழிகாட்டல் விதிமுறைகளை அவர்கள் மீறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அங்கு (முகாம்கள்) அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அசாதாரணமான சூழ்நிலைகளின் கீழ் இருப்பார்கள் என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. "இத்தகைய சூழ்நிலைகள் இருப்பதை இலங்கை அரசு வெளிப்படுத்தவில்லை' என்று மனித உரிமை கண்காணிப்பக பெண் பேச்சாளர் சாரு கொக் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நபரினதும் சுதந்திரமான உரிமையை பலாத்காரமாக பறிப்பதை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்திற்கமைய செயற்பட வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. "சர்வதேச உதவியை அரசு விரும்புகிறது; ஆனால், சர்வதேச தரத்தில் இல்லை' என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் ஜோலந்த போஸ்ரர் கூறியுள்ளார்.
மோதல் பகுதிகளிலிருந்து 32 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறியிருப்பதாகவும் அவர்கள் 13 தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அவை தடுப்பு முகாம்கள் போன்றவை என்று சர்வதேச மன்னிப்பு சபை விபரிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் புலிகள் தொடர்பாக தவறாக விளங்கிக் கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது. இந்தக் காரணத்தினாலேயே முகாம்களுக்கு உதவி வழங்கும் குழுக்கள் செல்வதையும் பத்திரிகையாளர் செல்வதையும் அரசு மட்டுப்படுத்துவதாக பேராசிரியர் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனைகளை இரு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி ராஜபக்ஷவின் அலுவலகம் தயாரித்திருந்ததாகவும் நிதி திரட்டுவதற்காக அந்த யோசனைகள் வெளிநாட்டு தூதரங்களுக்கும் உதவி வழங்கும் முகவரமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ராஜீவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார். 2 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கவுள்ளதாக பேச்சு இருப்பதாக ராஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.
இதனை பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மறுத்துள்ளது. இந்த மக்களின் நீண்டகால இடம்பெயர்வு எவரதும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக இல்லை. பிரிட்டிஷ் அரசின் பணம் எதுவும் இந்த முகாம்களை சென்றடையாது என்று பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 3 வருடம் தடுத்து வைத்திருக்கும் காலப்பகுதி தொடர்பாக கவலைகள் எழுப்பப்பட்டதையடுத்து யோசனைகளை அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. மக்களை சாத்தியமான அளவுக்கு விரைவாக மீளக் குடியமர்த்துவதே புதிய யோசனையென்று யூ.என்.எச்.சி.ஆர்.இன் பெண் பேச்சாளர் சுலக்ஷானி பெரேரா கூறியுள்ளார். அத்துடன் முகாமுக்குள் எவரும் சென்றுவர முடியாதென்பது கட்டாயமல்ல என்று ஜனாதிபதியின் சகோதரரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக சுலக்ஷானி பெரேரா கூறியுள்ளார்.
தலைப்புகள்
ஸ்ரீலங்கா அறிவிப்புகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.