கொழும்பு - லண்டன் இராஜதந்திர சர்ச்சை


யுத்தத்தில் வெற்றி முனையில் நிற்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், மோதலில் சிக்குண்டிருக்கும் இரண்டரை இலட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களின் மனிதாபிமான நெருக்கடி தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கரிசனையும் கவலையும் தீவிரமாக அதிகரித்திருக்கும் அதேசமயம் இந்த விடயம் தொடர்பாக பிரிட்டனுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சை மூண்டிருக்கிறது.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக கவனம் செலுத்த விசேட தூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிரவுணியை பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்திருப்பதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு உடனடியாகவே கொழும்பு கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது.

ஆனால் டெஸ் பிரவுணி விசேடதூதுவராக நியமிக்கப்பட்டமை "ஒரு தலைப்பட்சமான' தீர்மானம் அல்ல என்று பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் தெரிவித்ததுடன் இலங்கையுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம் பெறுவதாக தெரிவித்ததாக ஏ.எவ்.பி செய்திகள் தெரிவித்தன.

வெளிவிவகார அமைச்சர் (டேவிட் மில்லிபான்ட்) இன்று காலை இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். விசேட தூதுவரை நியமிக்க உத்தேசித்த காரணங்கள் குறித்து மில்லிபான்ட் இந்த உரையாடலின்போது விளக்கியிருந்தார். இது ஒரு தலைப்பட்சமான தீர்மானம் அல்ல என்று பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கூறியிருந்தார்.

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி பிரதமர் (கோர்டன்பிரவுண்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல்களை வெளிவிவகார அமைச்சர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். திங்கட்கிழமை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் மேலும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது என்றும் அப்பேச்சாளர் கூறியிருந்தார்.

ஆனால் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம இதனை நிராகரித்ததுடன் டெஸ் பிரவுணியின் நியமனத்தை கொழும்பு ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க இலங்கையில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக கவனம் செலுத்த விசேட தூதுவரை நியமிப்பதற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் அலுவலம் தவறுதலாக நினைத்ததைத் தொடர்ந்தே இந்த விடயம் குறித்து இலங்கைக்கும் பிரிட்டனுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருப்பதாவது;

பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பமைச்சர் டெஸ் பிரவுணியின் நியமனமானது எந்தவிதத்திலும் உதவியாக அமையாது என்றும் இரு நாட்டு உறவுகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இலங்கையில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் குறுகிய நிலப்பரப்பிற்குள் சிக்கியுள்ள 2 1/2 இலட்சம் மக்களின் நிலைமை தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.

டெஸ் பிரவுணியின் நியமனம் தொடர்பாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லி பான்ட் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் கதைத்ததாகவும் அவர் அதற்கு பச்சைக்கொடி காட்டியதாக நம்பப்பட்டதாகவும் டவுனிங் வீதி (பிரதமர் அலுவலக) வட்டாரங்கள் "ரைம்ஸ்' செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளன.

வியாழக்கிழமை காலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் மில்லிபான்ட் தொலைபேசியில் உரையாடி இலங்கையின் கவலைகளைப் போக்குவதற்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக தமது அரசாங்க சகாக்களுக்கு போகொல்லாகம தெரிவித்திருந்தார்.

வியாழன் இரவு இந்த நியமனம் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் நாட்டின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத தன்மையையும் ஒத்தது என்று கண்டித்திருந்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாக கொழும்புக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான பதற்ற உணர்வு அதிகரித்திருப்பதற்கு மத்தியிலேயே பிரிட்டனுடன் இந்த தூர விலகி நிற்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.