பான் கீ மூன் பார்வையில் இலங்கை!


வன்னியில் நாளாந்தம் நூற்றுக் கணக்கில் தமிழ் மக்கள் சாகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள்.அங்கு நடை பெறும் போரின் அட்டூழிய விளைவு இது. தமிழ் மக்கள் நாளாந்தம் கொன்றொழிக்கப்படுவதைக் கேட்பதற்கு எவருமில்லை என்ற நிலையில் அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உள்நாட்டு விவகாரங்களில் வேறுநாடுகள் தலையிடலாகாது என்ற சர்வதேச நியமத்துக்கு ஏற்ப தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுவதை ஏனைய நாடு கள் கண்மூடி மௌனிகளாக கருத்திற்கொள்ளா துள்ளன.
ஆனால், ஒரு நாட்டின் குடிமக்கள் நாளாந்தம் கொலை செய்யப்படுவதை அறிந்தும் உலகத் தேசங்களின் உயர் சபையாக விளங்கும் ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்துக் கண்டும் காணாமல் இருப்பது வியப்புக்குரியது; வருத்தத்துக்குரியது.
மேலும், இலங்கையில் மக்கள் இனம் ஒன்று பெரும் எண்ணிக்கையில் அழிந்துபோகும் விவகாரத்தில் உலக அரங்கில் கனதியான பிரச்சினையாகக் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான் கீ மூன் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் குதர்க்கமானதாகும்.
இலங்கையில் அதாவது வன்னியில் நடைபெறும் மனித அழிவுகள் குறித்து தமக்கு ஐ.நா.சபைக்கு குறைந்த அளவிலேயே தகவல்கள் கிடைப்பதாக "வேறு சொற்களில்" கூறியிருக்கிறார் அவர். இலங்கையில் நடை பெறும் போரினால் உண்டாகும் பாதிப்புகள் குறைவா கவே வெளிப்படுத்தப்படுகின்றன என்கிறார் அவர்!
உலகப் பெருஞ்சபையை நிர்வகிக்கும் அவரால் இலங் கையில் போரினால் உண்டாகும் பாதிப்புகளை அறிய முடியவில்லை என்று கூறுவது ஐ.நாவுக்கே வெட்கம்! வெட்கத்திலும் வெட்கம்!! ஆள்கள் அதிகாரிகள், ஆய்வா ளர்கள், அம்பு, சேனை ஏராளம் ஏராளம் என்று கூறப் படுவதற்கு இணங்க வளங்கள் யாவும் நிறைந்த உலகப் பெருமன்றத்தின் தலைமை அதிகாரி இவ்வாறு கூறுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலுமா, என்ன? சின்ன வயதுக்காரர் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப் பாடு இது.
இலங்கையில் அளவுக்கு அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே நியாய பூர்வமாகச் சிந்திக்கும் அனைவரினதும் கருத்தாகும் என்று "இன்னர் சிற்றி பிறெஸ்" ஊடகவியலாளருக்கு ஒரு கட்டத்தில் கூறிய பான் கீ மூன், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யுமாறு தம்மால் கேட்கமுடியாது என்று கூறியிருப்பதை எவராலும் விளங்கிக் கொள்ளமுடியாதுள்ளது.
அதுபோலவே ஈரான் மற்றும் காஷ்மீர் பிரச்சினைகள் சம்பந்தமாகக் கருத்துத் தெரிவித்த மூன், பிணக்குகள் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படவேண்டும் இராணுவ நடவடிக்கைகளால் அல்ல என்று கூறியிருக்கிறார்.
ஆனால், பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் சேர்க்கப்படாத நிலையில் அங்கு போர் நிறுத்தத்தைக்கோரமுடியாது என்று அவர் கூறியுள் ளமை வியப்புக்குரியது; கண்டிக்கத்தக்கதுமாகும். இத னைக் கோணங்கித்தனம் என்று சொல்வதா அல்லது.....?
இலங்கையில் போர் நிறுத்தம் கோரமுடியாது என்று பான் கீமூன் கூறியிருப்பது "உள்ளாடு கள்ளாடாக" ஏதோ நடை பெறுகிறது என்ற சந்தேகத்தை இயல்பாகவே எழுப்புகிறது.
ஐ.நா.பாதுகாப்புச் சபையின் தலைவர் யுகியோ டக்காசு கூறியுள்ள கருத்து இந்தச் சந்தேகத்துக்கு மேலும் வலுவூட்டுகிறது. நாடு ஒன்றினது அமைதி மற்றும் பாது காப்புக்கு குந்தகம் ஏற்படும்போது அது குறித்துச் சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வரும் மிக முக் கியமான பொறுப்பு ஐ.நா. சாசனத்தில் அதன் பொதுச் செய லாளருக்கே வழங்கப்பட்டுள்ளது என்ற விடயத்தை பாது காப்புச் சபையின் தலைவர் புட்டுக்காட்டியிருக்கிறார்.
இலங்கையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரு மாறு தாம் கோரமுடியாது. அதுவும் பாதுகாப்புச் சபைக்கு அந்த விவகாரம் வராததால் அவ்வாறு செய்யமுடிய வில்லை என்று பான் கீ மூன் கூறியிருப்பது அவர் தமக் குள்ள கடமைகளையும் அதிகாரங்களையும் அறியாதிருக் கிறார் என்பதனையே எடுத்துக்காட்டுவதாகவும் யுகியோ டக்காசு விமர்சித்திருக்கிறார்.
உலகப் பெரும் பதவியில் உள்ள ஒருவர் தமது கடமை களையும் அதிகாரங்களையும் அறியாதிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; நம்பவும் இயல வில்லை. அத்தகு நிலையில் இலங்கை அரசுக்கும் மூனுக்கும் வேறு வகையான அந்தரங்க உறவுகள் உண்டோ என்றே ஐயுற வைக்கிறது. இங்கிருந்து நெய் தடவிக் கொடுக்கப்பட்ட வெற்றிலையை மென்ற பின்னர் இவ் வாறு கூறுகிறாரோ தெரியாது...!
மேலும்..
ஊடகவியலாளருக்கு வழங்கிய பதிலில் இன்னொரு சம்பந்தா சம்பந்தம் இல்லாத ஒரு கருத்தையும் ஐ.நாவின் பொதுச் செயலாளர் அவிழ்த்துவிட்டிருக்கிறார். "நான் நாடுகளின் இறைமையை மதிப்பவன்" என்பதே அதுவாகும். நாடுகளின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதனைப் போர் நிறுத்தம் கோரமுடியாது என்ற நிலைப்பாட்டை வெளியிட்டபோது மூன் கூறியிருப்பது, இன்னொரு அர்த்தத்தையும் உள்ளே மறை பொருளாகப் பொதித்துள்ளதாகவே தோன்றுகிறது! போர் நிறுத்தத்தைக் கோரினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படலாம் என்பதால் அதனைக் கோரமுடியவில்லை என்று பூடகமாகக் கூறியிருப்பாரோ? அல்லது அதிலும் ஓர் புதுவித ராஜீக உறவு இருக்குமோ....?
இதற்கு மேலாக மூனின் மற்றொரு செயற்பாடு ஐ.நா.வில் பணிபுரியும் ஊடகவியலாளரின் மனதைக் குடை வதனை அறியமுடிகிறது.
வன்னி நிலைவரம் குறித்து நேரில் விளக்கிக் கூறுவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியின் சிறப்புப் பிரதிநிதியாக அவரது சகோதரர் பஸில் ராஜபக்ஷ பான் கீ முனைச் சந்தித்துப் பேசியுள்ளார். அரசின் நிலைப் பாட்டையும் போரின் பாதிப்புகளையும் அவற்றை நீக்குவதற்கு அரசு ஆற்றும் கருமங்களையும் பஸில் அப்போது நிச்சயமாக எடுத்துரைத்திருப்பார் என்று நம்பலாம்.
வழமையான சம்பிரதாயத்தின் பிரகாரம் அந்தச் சந்திப்புக் குறித்து தகவல் குறிப்பு எதனையும் ஐ.நா. வெளியிடவில்லை. பல நாடுகளுக்கும் விஜயம் செய்து திரும்பிய பின்னர் கடந்த செவ்வாயன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவரின் விஜயம் குறித்து ஐ.நா.செயலாளர் பிரஸ்தாபித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு அல்லது ஒடுக்குவதற்காக இலங்கை அரசுக்கு கால ஒதுக்கீடு வழங்கு வதற்காகவே இவ்வாறு மூடிமறைப்பு நடத்தப்பட்டிருக் கலாம் என்ற சந்தேகம் சர்வதேச ஊடகவியலாளர் மத்தி யில் தோன்றியுள்ளது. அது மட்டுமின்றி, அவ்வாறு செய்வதன் மூலம் இலங்கையில் போர் நிறுத்தம் கோருவதைத் தவிர்க்கலாம் என்ற உள் நோக்கத்துடன் சந்திப்புக்குறித்த விவரம் 18 நாள்கள் தாமதப்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அந்த வட்டாரங்களில் நிலவுகிறது.
இதேபோன்ற ஒரு வகைப் புரிந்துணர்வு, 2006 ஆம் ஆண்டில் ஹிஸ்புல்லா இயக்கத்தை லெபனானில் தோற்கடிப்பதற்காக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவியதையும் அதன் காரணமாக தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தப் போவதாக பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா அச்சுறுத்தியதையும் சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒப்பிடுகிறார்கள்...!

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.