அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் சர்வதேச நாடுகள் அணுக வேண்டும் என 'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றம் கூறியுள்ளது.
'ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்' மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான டி.அருள்எழிலன், சரவணன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பான சமூக வாழ்வை முற்றிலுமாக சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே!
இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் சிறிலங்காவின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகின்றது.
மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட போர் பூமிக்குள் எப்பக்க சார்புமற்று பணி செய்ய முடியாத சூழல்.
ஒட்டுமொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் சிறிலங்கா அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருக்கின்றது.
வெள்ளை வான் எனப்படும் சட்டவிரோத ஆயுதக்குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகின்றனர்.
2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!
இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் இராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக, ஜயாத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், ரிச்சர்ட்டி டி சொய்ச, தேவிஸ் குருக, தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜ், நடராஜா அற்புதராஜா, ஐ.சண்முகலிங்கம், சுப்ரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜ், சம்பத் லக்மால் சில்வ, இசைவிழி செம்பியன், ரி.தர்மலிங்கம், சுரேஸ், கேதீஸ் லோகநாதன், சந்திரபோஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கின்றனர்.
அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் நாள் புகழ்பெற்ற 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
சமீபத்தில் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். 'இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை சிறிலங்கா அரசு தொடங்கவில்லை' என்று குற்றம் சுமத்தியும் இருக்கின்றார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் அடைக்கலம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அத்தாஸ் கூட இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கின்றார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.02.09) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் 'சுடரொளி' பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (வயது 51) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது.
சிறிலங்கா அரசு நடத்தும் போர் தொடர்பாகவும் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன.
இந்நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கின்றது.
இந்நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கின்றார்.
இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத் தூதுவர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகின்றது.
அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட 'நக்கீரன்' இதழை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
'மக்கள்' தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சிறிலங்கா அரசு ஊடகங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கின்றது.
சிறிலங்கா அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது.
ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்து விடுமோ என்று அச்சப்படுகின்றோம்.
அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் அனைத்துலக சமூகம் அணுக வேண்டும்.
உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை அனைத்துலக சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அனைத்துலக சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகின்றோம்.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்து உரிமைக்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.