போர் நிறுத்தம் ஒன்றை அமுல்படுத்தி அரசியல் தீர்வு யோசனை ஒன்றுக்கு முன்னுரிமை கொடுத்த பின்னரே ஆயுதங்களை கைவிடும் கோரிக்கையை வலியுறுத்த முடியும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை அவர், இணைத்தலைமை நாடுகளுக்கு முன்வைத்துள்ளார். தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதற்கு சர்வதேச உத்தரவாதம் கிடைக்குமானால் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதம் என்ற விடயத்திற்கு அவசியம் இருக்காது என்றும் நடேசன் நேற்று விடுத்துள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி வன்முறைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், ஆயுதங்களை கீழே வைக்கவேண்டும் என்றும் இணைத்தலைமை நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நடேசன், தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் நாள்தோறும் இனப்படுகொலை பயங்கரத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர். இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதாக நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கை நாட்டின் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு அவர்களின் தாயகமாகும். இந்தநிலையில் கடந்த 50 வருடங்களாக இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை அரச பயங்கரவாதத்தின் மூலம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து 25 வருடங்கள் சாத்வீக போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும் அது இலங்கை அரசாங்கத்தினால் அடக்கப்பட்டது.
அதேநேரம் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகளும் தமிழர்களின் பிரதேசங்களில் சிங்களவர்களின் குடியேற்றங்களும் நடத்தப்பட்டன. தமிழர்கள் கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டார்கள்.
1977 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அவர்களின் வாக்குகள் மூலம் தமது அரசியல் இலக்கான சுதந்திர நாடு மற்றும் வடக்கு கிழக்கு தாயகம் என்பவற்றை உலகத்திற்கு அறிவித்தனர்.
இந்தநிலையில் தமிழ் மக்களின் தீர்ப்பை தமது தேசிய கடமையாக தமிழீழ விடுதலைப்புலிகள் ஏற்றதாக நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பாரிய அர்ப்பணிப்புகளை செய்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் முன்னிலையில் உள்ளபோது இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வருவதும் பின்னர் அந்த பேச்சுவார்த்தை காலத்தில் தமது இராணுவத்தை பலப்படுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையை முறித்து போருக்கு செல்கின்ற நடைமுறையை மேற்கொண்டு வந்துள்ளதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது 1985 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கம் எப்போதுமே இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்ததே தவிர அரசியல் தீர்வில் நாட்டம் கொள்ளவில்லை
இந்தநிலையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதம் என கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக எனத் தெரிவித்து மனிதாபிமான பணியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேற்றியது. அத்துடன் சிங்கள படையினரால் தமிழர்களின் உரிமைகள் மீறப்பட்டமையை சுட்டிக்காட்டியவர்கள், பயங்கரவாதிகள் அல்லது வெள்ளைப்புலிகள் என்ற முத்திரை குத்தப்பட்டனர்
ஹிட்லர் அரசாங்கத்தில் இருந்து ருவன்டா மற்றும் சூடான் அரசாங்கம் வரை இனப்படுகொலைகளை மேற்கொண்டன. அதேபோல தான் இலங்கை அரசாங்கமும் 1956 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிரான படுகொலையை ஆரம்பித்து இன்று வரை சுமார் இரண்டு இலட்சம் பேரை படுகொலை செய்துள்ளது.
சர்வதேசம், தமிழர்களின் அரசியல் குறிக்கோளுக்கு ஆதரவளிப்பதற்கு தயங்குகின்ற போதிலும், தமிழர்களின் அரசியல் குறிக்கோள்களுக்கு எதிராக செயற்படுவதுடன் சிங்கள அரசாங்கம் படைகளும் தமிழர்களை கொலை செய்து வருவதாக நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னியில் இலங்கைப்படையினர் எறிகணைகளையும், பல்குழல் பீரங்கிகளையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்துகின்றனர். இதன் காரணமாக பெண்கள் சிறுவர்கள் உட்பட்ட பலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 வரையிலான மக்கள் இவ்வாறான தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்
இந்தநிலையில், ஏற்கனவே இரண்டாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் ஐயாயிரம் பேர் வரை காயமடைந்துள்ளனர். இது 21 ஆம் நூற்றாண்டில் தமிழீழமும் தமிழர்களும் சந்தித்த பாரிய இனப்படுகொலையாகும் என நடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என எதிர்பார்க்கின்ற வேளையில் தமிழ் மக்கள் பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, சர்வதேசம் , தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை நிறுத்த முன்வரவேண்டும். அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கோருவதை விடுத்து. இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுத்து இனப்பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்த வேண்டும் என நடேசன் கோரியுள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம், தமது அதிகாரங்களை பயன்படுத்தி, போர் நிறுத்தம் ஒன்றை கொண்டு வந்து வன்னியில் உள்ள தமிழர்களை பாதுகாப்பதுடன் அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் நிவர்த்திக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இந்தநிலையில் போரை நிறுத்தி அரசியல் தீர்வு ஒன்றுக்காக தாம் பேச்சு நடத்தவும், ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.