தமிழகத்தில் கலக்கமூட்டும் கருணா ஆட்கள்?! - விகடன்


இயக்குநர் சீமானின் கார் எரிப்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் கார் எரிப்பு என, ஈழப் பிரச்னையில் பெரிதாகக் குரல் கொடுப்பவர்கள் மீது பழிவாங்கல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன.
தா.பாண்டியனின் கார் எரிப்பு விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பதற்கான முகாந்திரத் தைக்கூட போலீஸால் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை! இந்நிலையில், 'சென்னையில் கருணா ஆட்கள் முகாமிட்டிருக்கிறார்கள்' என்கிற செய்தி ஈழ ஆர்வலர்களைப் பரபரக்க வைத்திருக்கிறது.

ஈழத்தமிழர் போராட்டங்களில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் சிலர் நம்மிடம், ''சிங்கள விமானப்படை வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்படுவதாகச் செய்தி கிளம்பியபோதே...

அவர்களுடன் கருணாவின் ஆட்களும் சென் னைக்கு வந்திருக்கிறார்கள் என்கிற செய்தியும் கசிந்தது. அதனால்தான் சிங்களவிமானப்படை வீரர்களைத் துரத்தியடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தமிழக அரசும் மத்திய அரசை நிர்ப்பந்தித்து அவர்களை தாம்பரத்தில் இருந்து அனுப்பிவிட்டதாகச் சொன்னது. ஆனால், இப்போது அந்த சிங்கள வீரர்களுக்கு தாம்பரத்தில் தான் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அதோடு, கருணாவின் ஆட்கள் இங்கே தங்கி இருப்பதும் அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.

இதெல்லாம் தமிழக அரசுக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? ஈழப் பிரச்னைக்காகத் தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வம்படியாகக் கலந்த சிலர் ஏதாவது கலவரத்தை ஏற்படுத்திவிட முடியாதா என்ற நோக்கோடு வன்முறையைத் தூண்டப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. தா.பாண்டியனின் காரை, சில விஷமிகள் எரித்ததற்குப் பின்னணியிலும் கருணா ஆட்களின் கைங்கர்யம் இருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

இதற்கிடையில், சென்னையில் உள்ள இலங்கையின் நுண்ணறிவுப் புலனாய்வுப் படையினர்தான் கருணாவின் ஆட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. கருணா ஆட்களின் மூலமாகத் தமிழகத் தலைவர்களுக்கு குறி வைக்கும் சதி திட்டங்களும் நடக்கிறது. தமிழகத்தில் ஈழ விடிவுக்காக உண்டாகி இருக்கும் எழுச்சியை எப்படியாவது தகர்த்துவிடவேண்டும் என்பதுதான் இலங்கையின் திட்டம். அதற்கான அபாயங்களை கருணாவின் ஆட்கள் நிறைவேற்றுவதற்குள் தமிழக அரசு உஷாராக வேண்டும்!'' என்றார்கள்.

இது குறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவரான வைகோவிடம் பேசினோம்.

''கருணாவின் ஆட்கள் பற்றி என் காதுகளுக்கும் செய்தி வந்தது. ஆனால், இதைச் சொன்னால் 'இதை வைத்துக்கூட வைகோ பரபரப்பைக் கிளப்பி தனிப்பட்ட ரீதியில் விளம்பரத்தைத் தேடப் பார்க் கிறார்!' என கருணாநிதி கூட்டம் அப்பட்டமான பொய்யை அவிழ்த்துவிடக் கூடும் என்றெண்ணி அமைதியாக இருந்தேன். சதித் திட்டங்களைத் தீட்டுவதும் கொடூரங்களை அரங்கேற்றுவதும் சிங்கள வெறி பிடித்த ராஜபக்ஷேவுக்குகைவந்த கலை.

அவருடைய திட்டப்படிதான்சென்னைக்கு துரோகி கருணாவின் ஆட்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு விதமான அசைண் மென்ட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஒன்று, ஈழ விவகாரத்தில் உறுதியாகக் குரல் கொடுக்கும் தலைவர்களைக் காலி செய்து பீதியைக் கிளப்புவது....

அடுத்தது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் பேசும் தலைவர்களில் யாரையாவது ஒருவரைக் காலி செய்துவிட்டு பழியை புலிகளின் மீதே திருப்பி விடுவது... இலங்கையில் நடக்கும் போரைக் கண்டித்து சர்வதேச அளவில் பல நாடுகளும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டன.

போர்நிறுத்தம் கோரி இந்தியா ஒரு வார்த்தை சொன்னாலே, அடுத்த கணமே மற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளும் போர்நிறுத்தம் செய்யச் சொல்லி கண்டனங்களை எழுப்பத் தொடங்கிவிடும். தமிழர்களின் கோரிக்கைக்கு இந்தியா செவி சாய்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஆனாலும், 'தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது' என்றும், 'தமிழர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு திரும்பவேண்டும்' என்றும் ஒப்புக்குச்சப்பாக நம் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்லிக் கொண்டிருக்கிறார். இலங்கையில் உள்ள தமிழர்களைப் பூண்டோடு அழித்துவிட திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ராஜபக்ஷே அரசால், தமிழகத்தின் எழுச்சியைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதனால்தான் தமிழகத்தில் சதி வேலைகளைக் கட்டவிழ்த்துவிட நினைக்கிறார்!'' எனச் சீறிய வைகோ,

''இன்றைக்கு ராஜபக்ஷேயின் வலையில் சிக்கி துரோகியாக மாறியிருக்கும் கருணா, 'வைகோவும் ராமதாஸ§ம் என்னிடமே பணம் பெற்றுச் சென்றார்கள்' என்றும், 'வைகோவும் நெடுமாறனும் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தினார்கள்' என்றும் சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். புலிகள் இயக்கத்தில் அனைத்து மட்ட தலைவர்களையும் சந்தித்திருக்கிறேன்.

ஆனால், கருணா கறுப்பா சிவப்பா என்றுகூட எனக்குத் தெரியாது. ஈழ விவகாரத்தில் முன்னின்று செயல்படும் தலைவர்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்பிவிட்டு, தமிழகத்தின் எழுச்சியை அடக்க நினைத்த கருணா, அதில் தோல்வியடைந்து விட்டார். அதனால் இப்போது தன்னுடைய ஆட்கள் மூலமாக மிகப் பெரிய சதித் திட்டத்தை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனை ஒழித்துக் கட்டவேண்டும் என்பது காங்கிரஸின் திட்டமாக இருந்தாலும், அதன் சூத்ரதாரியாக இருப்பவர் யார் என்று தமிழக மக்கள் அனைவருக்குமே தெரியும். வேலூர் சிறைக்குப் போய் நாடகம் நடத்தியவர்கள் கருணாவின் திட்டங்களுக்குத் துணை போக மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? கருணாவின் ஆட்கள் சென்னையில் சதித் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கும் பின்னணியில் மத்திய அரசோ, ரா-வோ இருப்பதாக நான் அபாண்டமாகச் சொல்ல விரும்பவில்லை.

ஆனால், தமிழகத்துக்கு சம்பந்தமில்லாத ஆட்கள், அதிகாரத் தரப்புக்குத் தெரியாமல் இங்கே வந்து பதுங்கி இருக்க வாய்ப்பில்லை. ஈழ விவகாரத்தில் வேகம் காட்டிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் இதர தலைவர்களுக்கும் கருணா ஆட்களைப் பற்றிய தகவல்கள் வந்திருக்கின்றன. எனவே, அசம்பாவிதங்கள் நடப்பதற்குள் தமிழக அரசும் போலீஸ§ம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!'' என உணர்ச்சிவசப்பட்டார் வைகோ.

இது குறித்து தமிழக போலீஸ் வட்டாரத்தில் பேசியபோது, ''தா.பாண்டியனின் கார் எரிப்பு பின்னணியில் சம்பந்தப்பட்டவர்கள்விரை விலேயே பிடிபடுவார்கள். இதில் இலங்கை யைச் சேர்ந்தவர்களுக்கு சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. கருணாவின் ஆட்கள் சென்னையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கள் பரப்புபவர்களின் மனநிலையைப் பரிசோதிக்க வேண்டுமே தவிர, அதில் எள்ளளவுக்கும் உண்மை இல்லை. அதனால், தமிழகத் தலைவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்!'' என்றார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.