கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப்புலிகள் மேலும் வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாகக் கருதும் படையினர் சனிக்கிழமை முதல் நகரின் வான் வழிப் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் கூறுகையில்;
வெள்ளிக்கிழமை இரவு வெடிமருந்துகளை நிரப்பியவாறு கொழும்பு நகருக்குள் நுழைந்த இரு விமானங்கள் தங்கள் இலக்குகளை அடைந்து ஏற்படுத்தவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் வான் வழிப் பாதுகாப்பைப் படையினர் மேலும் அதிகரித்துள்ளனர்.
வன்னியில் முன்னேறும் படையினர் வசம் புலிகள் பெருமளவு நிலப்பகுதியை இழந்து விட்டதால் அவர்கள் மேலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக் கூடுமென பொலிஸாரும் படையினரும் எதிர்பார்க்கின்றனர்.
இது போன்று மேலும் பல தாக்குதல்களுக்கு அவர்கள் முயலக் கூடுமெனவும் எனினும் புலிகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் வகையில் வான் பாதுகாப்புப் பொறிமுறையை முழு அளவில் தயார் நிலையில் வைத்திருப்பதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் செக் தயாரிப்பான சிலின் 143 வகை விமானங்கள் ஐந்தை பாகங்களாகப் பிரித்து நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
எனினும், தற்போது அவர்கள் வசம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன எனத் தெரியாதென்றும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு நகரின் பாதுகாப்பும் முழு அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.