இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்?


நீரஜா சௌத்ரி (தினமணி )

மக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான "சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதிள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றிவைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறது. நேருகாந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகும் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. தன்னால் எந்தப் பிரச்சினையும் வராது என்ற எண்ணத்தை அவர் சோனியாவிடம் ஏற்படுத்தியுள்ளார்.

எனவே, அவர் பிரதமருக்கான பந்தயத்தில் முதல் நிற்கிறார். கட்சியினரும் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடும். இதன் மூலம் முதல் தடையை அவர் தாண்டிவிட்டார். ஆனால், தேர் தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைப் பிடிப்பதற்கு அவரால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இதை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார்?

வரும் பொதுத் தேர்தல் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் இருந்தால், ஆட்சியமைப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளின் உதவியை காங்கிரஸ் நாடலாம். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு 2004ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பது சந்தேகமே.

பிரதமர் மன்மோகன் சிங், "பைபாஸ்' அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவுடன் அவர் பூரண உடல்நலம் பெற வாழ்த்தி முதல் பூச்செண்டு கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத்.

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநில பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவரை மார்க்சிஸ்ட் கட்சியினர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். மன்மோகன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சியினருக்கும் காங்கிரஸுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலரும் வாய்ப்பு ஏற்பட்டு, அதை இடதுசாரிகள் ஆதரிக்க முன்வந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, யாரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும் என்று இடதுசாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடும்.

2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது பாராளுமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டனர் இடதுசாரிகள். ஆனால், இந்த முறை அப்படிச் சொல்ல முடியாது. குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை வலியுறுத்தும்போது பிரதமர் யார் என்பதையும் வலியுறுத்தக்கூடும்.

எனினும், மன்மோகன் மீண்டும் பிரதமராவதை இடதுசாரிகள் விரும்பாவிட்டால் அல்லது காங்கிரஸ் குறிப்பிடும் சிலரின் பெயரை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் ஒருவரை சந்தடியில்லாமல் தயார்படுத்தி வருகிறது காங்கிரஸ் தலைமை. அவர்தான் சுஷில் குமார் ஷிண்டே. அசாதாரண சூழ்நிலையில் மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட சுஷில் குமார் ஷிண்டே பெயரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக களத்தில் நிற்பவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை இடதுசாரிகளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடும். பிரதமர் இல்லாத சமயங்களில் அவர் பிரதமரின் பொறுப்புகளை திறம்பட வகித்து வந்துள்ளார்.

பல்வேறு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். அரசுக்கும் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், தனது திறமையான பேச்சால் நிலைமையைச் சமாளித்துள்ளார்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது புலனாய்வு அமைப்புகள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால், ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி நிலைமையைச் சமாளித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டபோது கூட, நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார்.

பிரணாப் சிறந்த ராஜதந்திரி, கட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் திறன்பெற்றவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவரை நம்புவதற்கு காங்கிரஸ் மேலிடமோ, சோனியா காந்தியோ தயாராக இல்லை.

மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை இடதுசாரிகள் பிரதமராக ஏற்கமாட்டார்கள். சிவராஜ் பட்டீல், சோனியா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்றாலும் உள்துறை அமைச்சர் பதவியிருந்தபோது அவர் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை.

மேலும் பிரதமர் பதவிக்குப் போட்டியிட அவர் திட்டமிடுவதாகத் தெரியவில்லை. பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோனி, நல்லவர் மட்டுமல்ல; சோனியாவுக்கு வேண்டிய நபருந்தான். ஆனால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படும் சோனியா காந்தி, "ஒரு கிறிஸ்தவரை பிரதமராக்க முயல்கிறார்' என்ற குற்றச்சாட்டு எழுவதை விரும்பமாட்டார்.

இது ஒருபுறம் இருந்தாலும், மத்திய மின் துறை அமைச்சராக உள்ள சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. முதலில் அவர் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர். சோனியாவுக்கு நம்பிக்கையானவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தலித்.

2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற பேச்சு எழுந்தபோது ஷிண்டேயின் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது மாயாவதி மற்றொரு தலித் அதிகாரப் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டேயை பிரதமராக்க விரும்பினால் பல்வேறு தரப்பனரும் ஏற்றுக்கொள்ளக் கூடும்.

சென்ற ஆண்டு, அடுத்த பிரதமர் தலித்தாக இருக்க வேண்டும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்தபோது, மாயாவதியின் பெயரை இடதுசாரிகள் ஆதரித்தனர். வரும் தேர்தல் மாயாவதி பிரதமர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தலித் வகுப்பைச் சேர்ந்த ஷிண்டேயை காங்கிரஸ் பிரதமராக்க முயன்றால் அதை இடதுசாரிகள் ஏற்கக்கூடும்.

ராம்விலாஸ் பாஸ்வானின் பரம எதிரியான லல்லு பிரசாத் யாதவ், ஷிண்டே பிரதமராவதை ஆதரிக்கக் கூடும். 1970களில் சுஷில் குமார் ஷிண்டேயை முதன் முதலாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத் பவார்தான் (அப்போது ஷிண்டே காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவந்தார்).

ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை, மன்மோகன்தான் அடுத்த பிரதமர் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறிவந்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி 180 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று, கட்சிக்குள் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ராகுல் பிரதமராகக் கூடும். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படியும் 150 இலிருந்து 155 இடங்களில் வென்றுவிடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

பிரதமர் பதவிப் போட்டியாளராக சரத் பவார் பெயரும் அடிபடுகிறது. அவரைப் பிரதமராக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர். சரத் பவார், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர் அல்ல.

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் தவிர்ந்த பிராந்தியக் கட்சிகள் அதிக இடங்களை வென்றாலோ அல்லது தேசிய வாத காங்கிரஸ் கட்சி 25 இடங்களைப் பிடித்தாலோ, சுயேச்சை எம்.பி.க்கள் சரத் பவாரை ஆதரிக்க முன்வந்தாலோ அவர் பிரதமராவதை காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும்.

இதேபோல மாயாவதி, ஜெயலலிதா, முலாயம்சிங் ஆகியோரும் தேர்தல் வெற்றியைப் பொறுத்து பிரதமர் ஆக முயற்சிக்கக் கூடும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிதான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தனிப் பெருங்கட்சியாக பாஜக இருந்தால் கூட்டணிக் கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெற்றால் அத்வானி பிரதமராவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. இப்போது இடதுசாரி பக்கம் உள்ள ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, ஏன் மாயாவதிகூட அணி மாறி அவரை ஆதரிக்கக் கூடும்.

இறுதியாகச் சொல்ல வேண்டுமானால், தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைப் பொறுத்துதான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சிகள் அணிமாறும் வாய்ப்பு உள்ளதால், யார் எத்தனை இடங்களில் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்!

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.