"உதயன்" ஆசிரியர் வித்தியாதரன் கைது! கடத்தல் பாணியில் கைவரிசை; பின்னர் கைது என அறிவிப்பு


"உதயன்" பத்திரிகையின் ஆசிரியரும் "சுடர் ஒளி" பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் நேற்றுக் காலை வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் வலுக்கட்டாயமாக கடத்தல் பாணியில் கூட்டிச்செல்லப்பட்டார்.
கொழும்பு கல்கிஸைப் பகுதியில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் அவர் கலந்து கொண்டிருந்தவேளை, வெள்ளை வான் ஒன்றில் பொலிஸ் சீருடையிலும், சிவில் உடையிலும் ஆயுதங்களுடன் வந்த ஏழுபேர் கொண்ட குழு ஒன்றே அவரை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றிச் சென்றது.

பொலிஸ் சீருடையில் இருந்த மூவர், முதலில் வானி லிருந்து ஆயுதங்களுடன் இறங்கிவந்து வித்தியாதரனை வலுக்கட்டாயமாக கையில் பிடித்து இழுத்துச் செல்ல முயன் றனர். எனினும் அங்கு நின்ற "உதயன்", "சுடர் ஒளி" பத்திரி கைகளின் நிர்வாக இயக்குநர் ஈ. சரவணபவன் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

"எங்கே கொண்டுசெல்கிறீர்கள்?" என்று அவர் பொலிஸாரிடம் கேட்டார். அதற்கு பொலிஸார் "பொலிஸ் நிலையத்திற்கு" என்று கூறிவிட்டு மீண்டும் வித்தியாதரனை இழுத்தனர்.அந்தவேளையில் குறித்த வெள்ளை வானில் இருந்து இறங்கிய, சிவில் உடை தரித்த நால்வர் உரத்துச் சத்தமிட்டு அங்கிருந்தோரை பயமுறுத்தியவாறு, அவ்விடத்துக்கு வந்து வித்தியாதரனை தரதரவென இழுத்துச் சென்று வானில் தூக்கிப் போட்டனர். அவர்களின் பலாத்காரத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து குறுக்கே நின்றவர்களை அவர்கள் கீழே தள்ளி விழுத்திவிட்டு வானில் வேகமாகச் சென்றுவிட்டனர். இதன்போது நிர்வாக இயக்குநரும் வேறுசிலரும் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர்
.
"வெள்ளை வான் கடத்தல்" பாணியில், பலாத்காரமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து அரசியல் உயர்வட்டாரங்களுக்கும் ஊடக அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்கிஸை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது ஒரு கடத்தல் சம்பவம் என்றே முதலில் பலதரப்பிலும் இருந்து செய்திகள் வெளியாகின. கல்கிஸைப் பொலிஸார், இச்சம்பவம் குறித்து அங்கு முறைப்பாடு செய்யச் சென்றவர்களின் வாகனத்தில் தாமும் ஏறி, ரத்மலானை, பொரலஸ்கமுவ பகுதிகளுக்குச் சென்று குறித்த வெள்ளை வான் அந்தப் பகுதிகள் ஊடாகச் சென்றதா என்று ஆங்காங்கே இருந்த சோதனைச் சாவடிகளில் விசாரித்தனர். பின்னர் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்டதாக பின்னர் அறிவிப்பு.ஆனால் இந்த அமளிதுமளிகளுக்கு மத்தியில் சிறிது நேரத்தின் பின்னர் வித்தியாதரன் பொலிஸாரால் விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்று அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் கொழும்பில் விடுதலைப் புலிகள் விமானங்கள் மூலம் தற்கொலைத் தாக்குதல் நடத்திய வேளையில் வித்தியாதரன் தமது கைத் தொலைபேசி மூலம் உரையாடியமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டியிருப்பதனாலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் குலுகல்லவும் தெரிவித்தனர்.

"கொழும்பில் புலிகள் விமானத் தாக்குதல் நடத்திய சந்தர்ப்பத்தில் வித்தியாதரனின் தொலைபேசிக்கு வழமைக்கு மாறாக கூடுதலான அழைப்புக்கள் வந்துள்ளன. இதனடிப்படையில் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரிலேயே விசாரணைக்காக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

"கைது செய்யப்படும் போது இவர் ஓர் ஊடகவியலாளர் என்றோ பத்திரிகையின் ஆசிரியர் என்றோ பொலிஸார் அறிந்திருக்கவும் இல்லை. இவர் நிரபராதியாக இருந்தால் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படுவார். குற்றவாளியாக இருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்" என்று ஊடக அமைச்சர் யாப்பா கூறினார்.இதேவேளை ஆசிரியர் வித்தியாதரன் தெமட்டக் கொடையில் உள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் உறவினர்களுக்கு அறிவித்தனர்.அதனைத் தொடர்ந்து அவரது மனைவி, பிள்ளைகள் அவரைப் பார்க்கவும் பொலிஸார் அனுமதி வழங்கினர்.

அதன் பிரகாரம் அவர்கள் நேற்று மாலை பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வித்தியாதரனைப் பார்வையிட்டு நலம் விசாரித்தனர் அவருக்கு உணவு மற்றும் மருந்து வகைகளையும் வழங்க பொலிஸார் அனுமதி வழங்கியிருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.