'வீசுங்கள் ஒரே குண்டு!' முகத்தில் அறையும் முல்லைத்தீவு தமிழ்மகனின் உள்ளக்குமுறல்: ஜுனியர் விகடன்


தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்திரவதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம்.

ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து இலட்சம் தாய்த் தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் காட்டுகிறது.

எண்பதுகளில் இந்திரா காந்தி அம்மையார் இலங்கை அரசிடம் நடந்துகொண்ட விதமும் இன்றைய மன்மோகன் அரசு இலங்கை அரசிடம் நடந்துகொள்ளும் வித்தியாசத்திலும்தான் ஆயிரமாயிரம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது சிங்களப் பேரினவாதம். இந்தியாவின் அணுகுமுறையைப் பார்த்த சர்வதேச சமூகமோ தட்டுத் தடுமாறி இலங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்கவேண்டிய இந்தியாவோ... தொழில்நுட்ப உதவிகளை மட்டும்தான் இலங்கைக்கு வழங்குகிறோம் என்று சொல்லி, போரை முட்டுக்கொடுத்து ஊக்கு விக்கிறது.

இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசியல்வாதிகளுக்கு ஈழ மக்களாகிய நாங்கள் ஓட்டு வங்கியாக மாறிப் போனோம். ஒரு பக்கம் கருணாநிதி எங்களை கைகழுவிவிட்டார். இன்னொரு பக்கம் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தேர்தல் அரசியலில் சிக்கி தங்களின் எதிர்கால அரசியல் வாழ்வு குறித்து உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

எப்போதும் எங்கள்பால் இரக்கம் கொண்ட தாய்த் தமிழர்களாகிய நீங்களோ எங்களுக்காகக் கண்ணீர் விடுகிறீர்கள். ஒரு துளிக் கண்ணீர், எங்கள் போரை நிறுத்திவிடாது. உங்கள் இரக்கமும் கண்ணீரும் எங்கள் கல்லறைகளின் மீதுதான் விழுந்து கொண்டிருக்கிறது. அது இடம் மாறி, எங்களில் உயிரோடிருப்பவர்களை ஈரப்படுத்தினால் மட்டுமே நாங்கள் இனி ஜீவித்திருக்க முடியும். இங்கு என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியுமா?

நாங்கள் வன்னிப் பிரதேசத்து மக்கள். முதலில் எங்களுக்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதி மக்களுக்குமான வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே, இங்கே நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை நீங்கள் அப்பட்டமாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப காலம் தொட்டே வன்னிப் பகுதிதான் இதயப் பகுதி. வடக்கு, கிழக்கின் எல்லாத் தமிழ்க் குடும்பங்களும் ஈழ விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும், அங்குள்ள மக்கள் எல்லாக் காலத்திலும் அரசப் படைகளின் கண்காணிப்புக்குள்ளேயே வாழ நேர்ந்து வந்திருக்கிறது.

ஆனால், வன்னி மக்களை மட்டும் புலிகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்துவிட முடியாது. ஒவ்வொரு வன்னிக் குடும்பமும் ஒரு புலிக் குடும்பமே. நாங்கள் யாரும் புலியாகப் பிறந்ததில்லை. புலியாகவேண்டும் என வளர்ந்ததும் இல்லை. சிங்களவன் எழுதி வைத்த தலைவிதியே தவிர்க்க முடியாமல் எங்கள் கைகளில் துப்பாக்கியைத் திணித்தது. தங்கை, தம்பி என கனவுகளோடு உங்களைப் போல வாழவேண்டிய வயதில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது நாங்கள் முல்லைத்தீவுக்குப் போனோம். எங்கள் உடைமைகளையும், கால்நடைகளையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போனோம். புலிகள், எங்களை முல்லைத்தீவுக்குக் கடத்திச் சென்றுவிட்டதாக சிங்கள இராணுவம் சொன்னது. ஒருவேளை... புலிகளோடு நாங்கள் செல்லாமல் கிளிநொச்சியில் இராணுவத்தை வரவேற்றிருந்தால், இன்றைக்கு வவுனியாவிலும் மன்னாரிலும் என்ன நடக்கிறதோ, அது எங்களின் தாய்வீடான கிளிநொச்சியிலேயே நடந்திருக்கும்!

நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரத் தொடங்கியது ஒரு மழைக்காலத்தில். சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சேறும் சகதியுமான சதுப்பு நிலத்துக்குள் சிக்கி, கிட்டத்தட்ட பத்து நாட்கள் தடைப்பட்டபோது நாங்கள் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 நெடுஞ்சாலையோரமாக குடும்பம் குடும்பாக இடம்பெயர்ந்தோம். தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு கிராமமாகப் பட்டினியாகப் பயணமானோம். ஒவ்வொரு கிராமத்தையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தது.

எந்த இடத்தை பிடிக்கப் போகிறார்களோ, அந்த இடத்தைப் பாதுகாப்பு வலயமாக (safty zone) அறிவிக்கிறது சிங்கள இராணுவம். உண்மையில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசு உருவாக்குகிற இடங்களுக்குள் செல்கிற மக்களின் கதி என்ன தெரியுமா? நரிவளைக்குள் போய் சிக்கிக் கொண்ட முயல்களுக்கு என்ன கதி நேருமோ... அதே கதிதான் எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு இடமாக ஓடினோம். ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் ஒதுங்கினோம். கிடைத்ததை உண்டோம்.

வள்ளிபுனம், தேவிபுரத்துக்குப் போனோம், (இவை இரண்டும் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப் பட்ட இடங்கள்) அங்கிருந்தும் கடைசியில் ஓட வேண்டியதாயிற்று. ஓடிஓடி இப்போது நாங்கள் வந்து நிற்பது முல்லைத்தீவின் கடைசிக் கடலோர சிறு நகரமான முள்ளியவாய்க்காலில்! இலட்சக்கணக்கான மக்கள் இரணைப்பாலையில், புதுக்குடியிருப்பில், தேவிபுரத்தில், உடையார்க்கட்டில் என போக்கிடம் தெரியாமல் பைத்தியங்களைப் போல அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது, கிளிநொச்சியிலிருந்து நாங்கள் எடுத்து வந்த எந்தப் பொருளும் எங்களுடன் இல்லை. அது மட்டுமல்ல... ஒரு குடும்பத்தில் இன்னும் எஞ்சி யிருப்பது ஒரு சில உயிர்கள் மட்டுமே. கண்ணெதிரில் குழந்தையைத் துளைத்துச் சாய்க்கிறது குண்டு. கண்ணெதிரில் தங்கை அடிபட்டு சாய்வதைப் பார்த்த ஏனைய இரண்டு பிள்ளைகளும் தங்கையைப் பிடிக்கக் கதறியபடி பாய்கிறார்கள். பெற்றவளோ பாய்கிற இரண்டு பிள்ளைகளையும் தடுத்து நிறுத்தி... இழுத்துக் கொண்டு ஓடுகிறாள். தன் இளைய குழந்தை வீதியில் செத்துக் கிடக்கிறாள். சாய்கிற குழந்தையை எடுக்கப் போனால், இருக்கிற குழந்தைகளையும் இழந்து விடுகிற கோரம்!

முல்லைத்தீவு முழுக்க வீதியோரம் புதைக்க ஆளில்லாமல் சிதறிக்கிடக்கின்றன, ஆயிரக்கணக்கான உடல்கள். அத்தனையும் பாதுகாப்பு வலயத்துக்குள் வீசப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளால் எரிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தமிழர்கள் என்பதால் எரிந்து சாம்பலாகிக் கிடக்கிறார்கள். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டோம். உறவென்று சொல்லிக் கொள்ளவோ, தஞ்சமடையவோ எங்களுக்கென்று ஒரு இடமில்லை. இனி கடலில் குதித்துச் சாக வேண்டியதுதான் மீதி. ஒருவேளை, அப்படிக் குதித்தால் எங்கள் பிணங்கள் தாய்த் தமிழக உறவுகளே உங்களின் முதுகுப்புறத்தில்தான் வந்து ஒதுங்கும்.

கடைசியில், எதிரியிடமே சரணடைந்தால்என்ன என்று விசுவமடுவில் நாங்கள் கைகளைத் தூக்கினோம். யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது, அங்குள்ள மக்களை எப்படி அவரவர் இல்லத்தில் குடியமர்த்தி மொத்தமாக அந்தப் பிரதேசங்களை திறந்தவெளி சிறைச்சாலை யாக்கினார்களோ... அப்படி எங்களையும் எங்கள் பூர்வீக நகரமான கிளிநொச்சிக்கு அனுப்புவார்கள் என நம்பினோம்.

ஆனால், நாங்கள் எங்கு சரணடைந்தோமோ... அந்த இடத்திலேயே எங்கள் பிள்ளைகள் இரு வேறாகப் பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என வகை பிரித்தார்கள். குழந்தைகளையும், முதியவர்களையும் எங்கோ கொண்டு சென்றார்கள். இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறப்பு முகாம் என அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவுக்குக் கொண்டு சென்றார்கள். எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்றோ, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றோ எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.

கிளிநொச்சியில் ஒரு குடும்பம்கூட குடியமர்த்தப்படவில்லை. ஆனால், வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆண்களைச் சுடலாம். பெண்கள்... அவர்கள் சிங்களச் சிப்பாய்களின் காமவேட்டைக்குக் கிடைத்த இரைகளல்லவா? அதனால் சிறப்பு முகாம்கள் என்னும் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் வதை முகாம்களில் சிங்களக் காடையர்களுக்கு தினம்தோறும் இரையாகிறார்கள். தற்கொலை செய்துகொள்ளும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமா... கர்ப்பிணித் தமிழ் பெண்களை மிரட்டி கருக்கலைப்பு பயங்கரங்களை நிகழ்த்தி வருகிறது இலங்கை இராணுவம். என் சமூகத்து மக்களுக்கு நிகழ்த்தப்படும் இத்தனை கொடூரங்களையும் கண்ணெதிரே கண்டும் இந்த உயிர் இருக்கவும்தான் வேண்டுமோ?

தாய்த் தமிழக உறவுகளே! அய்யா கலைஞரே... என்ன செய்யப் போகிறீர்கள்?

வடக்கு கிழக்குக்கு அதிகாரப்பரவல் பற்றிப் பேசும் நேரம் இதுவல்ல... தமிழீழம் பற்றிப் பேசும் நேரம் இதுவல்ல. சகோதரப் படுகொலைகள் பற்றி பேசும் நேரம் இதுவல்ல.

உங்களால் மூன்று விஷயங்கள் செய்ய முடிந்தால் செய்யுங்கள்!

ஒன்று, தமிழகத்திலிருந்து ஒரு குழுவை அனுப்பி வீதிகளெல்லாம் கொத்துக் கொத்தாகச் செத்துக் கிடக்கும் ஈழத் தமிழனின் பிணங்களைப் புதையுங்கள்.

இரண்டு, வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை அகதிகளாகத் தமிழகத்துக்கு அழைத்து மிச்சமிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள். அது முடியவில்லையென்றால்...

மூன்றாவதாக, ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய குண்டைப்போல ஒரு குண்டை எங்கள் மீது வீசச் செய்யுங்கள். நாங்கள் மொத்தமாக அழிந்து போகிறோம்.

தமிழக மக்களே! மாபெரும் மக்கள் போராட்டங்களின் மூலம் இந்திய சரித்திரத்தை மாற்றி எழுதிய மாமனிதர்களே! ஈழத்தின் வரலாற்றை மாற்றி எழுத வீதிக்கு வந்து போராடுங்கள். போராட்டங்களைச் சடங்குகளாக மாற்றாதீர்கள். நீங்கள் நடத்தப் போகும் போராட்டங்களில்தான் எங்களின் எஞ்சிய உயிர்கள் மிஞ்சியிருக்கின்றன. நான் புலிகளுக்காக போராடச் சொல்லவில்லை. போரை நிறுத்தவும் சிங்களப் பேரினவாதிகளின் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கும் பல்லாயிரம் தமிழ் உயிர்களையும் காப்பாற்றுவதற்காகவும் கெஞ்சுகிறேன்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.