1 லட்சம் தமிழர்களை கொல்ல இலங்கை அரசு திட்டம்: ராமதாஸ்


மிகப்பெரிய தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளதாகவும், 1 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் ஆபத்து நிலவுவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை போர்ப்படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால், இடம் பெயர்ந்து போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் அவல நிலைமை குறித்த விவரங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. மருத்துவமனைகள், பாதுகாப்புப் பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகள் மீது இலங்கைப் படைகள் குண்டுவீசித் தாக்கி வருகின்றன. அங்குள்ள அப்பாவித் தமிழ் மக்களை அழித்து வருகின்றன'' என்று நிழூயார்க்கில் இருந்து செயல்படும் மனித உரிமைக் கண்காணிப்பகம்' என்ற பன்னாட்டு அமைப்பு இப்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில்கூட இலங்கைப் படைகள் தொடர்ந்து, கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்புப் பகுதிகள்' மற்றும் வன்னிப் பகுதியில் எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மீதும் எண்ணற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன'' என்று மனித உரிமைக் கண்காணிப்பகம்' அமைப்பின் சட்டம் மற்றும் கொள்கை இயக்குநர் ஜேம்ஸ் ராஸ் கூறியிருக்கிறார்.

அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டமாக இருக்கும் பகுதிகளில்கூட இலங்கைப் படைகள் தொடர்ந்து, கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன என்றும் கடந்த இரண்டு மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது என்றும் பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பகத்தின்' அறிக்கை கூறுகிறது.

முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏறக்குறைய 100 சதுர கி.மீ. பரப்புள்ள பகுதிக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் பின்வாங்கியதில் இருந்தே, இலங்கைப் படையினரால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்புப் பகுதிகள்', எஞ்சியுள்ள மருத்துவமனைகள் மீதும் எண்ணற்ற குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இரண்டு, மூன்று வாரங்களில், 2 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பிற வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள தகவல்களும் இதை ஆதரிக்கின்றன என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம்' தெரிவித்துள்ளது.

இதற்கும் மேலாக, சண்டை நடக்கும் பகுதியாக இருந்தாலும் சரி, அல்லது அரசு நடத்திவரும் இடர்நீக்கச் சிற்றூர்கள்' ஆக இருந்தாலும் சரி போதிய உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் அப்பாவித் தமிழ் மக்கள் திண்டாடித் தவிக்கும் நிலைமைதான் உள்ளது என்றும் பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பகம்' கூறியிருக்கிறது.

இலங்கை அரசின் ஏமாற்று நடவடிக்கை பின்வருமாறு இருக்கும் என்று தோன்றுகிறது. போர் நடக்கும் பகுதியில் இருந்து 35 ஆயிரம் மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்று இலங்கை அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அடுத்த சில நாட்களில் போர் நடக்கும் பகுதியில் இருந்து எஞ்சியுள்ள அனைத்து 70 ஆயிரம் பேரும் வெளியேறிவிட்டார்கள் என்றும், விடுதலைப்புலிகள் மட்டுமே அங்கு இருக்கிறார்கள் என்றும் கூறி இலங்கை அரசு ஏமாற்ற முயற்சிக்கலாம். அதன் பிறகு, மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக் காட்டியிருப்பதுபோல, சட்டத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு இலங்கை அரசு இசைவளிக்கலாம். உண்மையில் அந்த 100 சதுர கி.மீ. பகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.

பீரங்கிகள், டாங்கிகள், வானூர்திப் படையின் துணையுடன், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைப் படைவீரர்களால் பெரும் தாக்குதல் நடத்தப்படலாம். அதன் விளைவு, கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவுக்கு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்படும் அளவுக்கு, மனிதப் பேரழிவாக அது இருக்கும். இந்த இனப்படுகொலை உடனடியாக நிகழக்கூடிய பேராபத்து உள்ளது.

அது நிகழுமானால், இதுவரை எங்கும் கண்டிராத மிகக்கொடிய மனிதப் பேரழிவாக அது இருக்கும். இந்தப் பயங்கரங்களின் பயங்கரம்'' நடப்பதற்கு இந்திய அரசு இசைவளிக்கப் போகிறதா? அல்லது இந்த இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எல்லா வழிகளையும் அது பயன்படுத்தப் போகிறதா? என்பதே இப்போதைய வினா.

காலம் கடப்பதற்கு முன்பாக இதற்கு உடனடியாக விடை தேவை என்பதே இந்திய மக்கள் குறிப்பாகத் தமிழ் மக்கள் எழுப்பும் குரல். இதனை உணர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஆபத்தை தடுக்க செயல்பட முன்வரவேண்டும் என்று கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.