இலங்கையில் தற்போது தோன்றியுள்ள மனித அவலங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்படவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
இலங்கை தொடர்பான விவாதங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை தலைவர் யூகியோ ரகாசோ கடந்த வாரம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான விவாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிகழ்ச்சி நிரலில் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐந்து நிரந்தர உறுப்புரிமை உள்ள நாடுகளில் ஒரு நாட்டைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பது குறித்து கடந்த புதன்கிழமையே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் பாதுகாப்புச் சபையில் சேர்க்கப்பட்டது இலகுவான காரியம் அல்ல. சிறிலங்கா அரசுடனும் இது குறித்து தொடர்பு கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு அறிவித்தலும் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலை குறித்தான விவாதம் 'ஏனைய விவாதங்கள்' பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.