நாளை நடைபெறவுள்ள மனித சங்கிலியில் அனைவரும் பங்குபற்றி தமிழகம் கொந்தளிக்கச் செய்ய வேண்டும்: வைகோ
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.
முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.
தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது.
தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
தலைப்புகள்
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.