இந்தியச் சிங்களக் கூட்டுச் சதியில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் இளைஞர்களும் நேற்று மாலை சரியாக நான்கு மணிக்கு தூத்துக்குடி பனிமய மாதா கோயில் அருகிலிருந்து கண்டன ஊர்வலத்தைத் தொடங்கினர்.
இந்திய சிங்கள அரசுக்கு எதிரான பதாகைகளைக் கையில் ஏந்திக் கொண்டும் கறுப்புக் கொடிகளை ஏந்திக் கொண்டும் ஆயிரக்கணக்கானோர் அணிவகுத்தது நகரை ஸ்தம்பிக்க வைத்தது. மிகவும் கட்டுக்கோப்புடனும் உறுதியுடனும் நடந்த இந்த ஊர்வலம் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டத்திற்காக வந்தடைந்தபோது அனைத்துச் சாலைகளும் மூடப்பட்டன! மேலும் பலநூறுபேர் ஒற்றிணைந்திருந்தனர். கூடியிருந்த ஒட்டு மொத்த மக்களும் தமிழருக்காக உயிர் நீத்த தியாகிகளுக்காக வீரவணக்க முழக்கமிட்டனர்.
பின்னர், இந்திய தமிழக அரசுகளின் துரோகத் தனத்தைக் கடுமையாகச் சாடி முழக்கமிட்டனர். “வெல்லட்டும் வெல்லட்டும் புலிப்படை வெல்லட்டும்” என்ற முழக்கம் விண்ணை அதிர வைத்தது! சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் இயக்கத்தின் துரோகத்தனத்தை மக்கள் தங்கள் முழக்கங்களில் கிழித்துக் கொட்டினர். ஆர்ப்பாட்டத்திற்கு பேராசிரியை பாத்திமா அவர்கள் தலைமையேற்று ஈழப் போராட்ட வரலாற்றை எடுத்துரைத்தார்.
சிறப்புரை ஆற்றிய தமிழர் களத்தின் பொதுச்செயலாளர் அரிமாவளவன் அவர்கள் தன்னுடைய எழுச்சியுரையில், இந்திய அரசின் வஞ்சகத்தன்மையைச் சாடியதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் இறையாண்மையைக் காக்கப் போகிறோம் என்ற போர்வையில் எம் தமிழினத்தையை அழிக்கும் ஈனச் செயலில் ஈடுபட்டுள்ள இந்திய அரசும் அதற்கும் முட்டுத் தாங்கல் செய்யும் தமிழக அரசும் தமிழகத்தில் எழுந்துள்ள வரலாறு காணாத எழுச்சியைத் துச்சமென எடுத்தெறிந்து தன் நடவடிக்கைகளைத் தொடர்கிறது, இந்த நிலை தொடருமானால், “தனி ஈழமா? தனித் தமிழ்நாடா? என்கிற நிலைக்குத் தள்ளப்படும் என்று எச்சரித்தார்.
அதுபோல, சனநாயக நாட்டில் இந்தியர்கள் சிங்களப் படைகளுக்கு ஆள் அனுப்பி களமாடுவது ஞாயம் என்றால், லட்சோப வட்சம் தமிழ் இளைஞர்களும் புலிப்படையில் சேர்ந்து செயலாற்ற அணியமாயிருக்கின்றனர், எனவே அதையும் குடியாட்சி நெறிப்படி அனுமதி!” என்று பெருத்த ஆரவாரத்திற்கிடையில் உரையாற்றினார்.
அதன் பின்னர் உரையாற்றிய வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபு அவர்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றாலும் அழுத்தம் திருத்தமாக, “தமிழினத்தின் ஒரே தலைவர் பிரபாகரன்தான்” என்று முழக்கமிட்டார். தமிழகத்தில் எல்லாத் துறையினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக அணி திரண்டுவிட்ட நிலையில் தமிழகக் காவல்துறை மட்டும் இன்னும் போராட்டத்தில் குதிக்கவில்லை என்றும் அவர்களும் இனி போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தூத்துக்குடி நகரிலுள்ள அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டு உயரிய எழுச்சியை ஏற்படுத்தினர் குறிப்பாக கடல்சார் வணிக அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும் தமிழர்களத்தின் களப்பணியாளர்களும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.