ஈழத்தமிழர்களை காக்க தீக்குளிக்கும் தியாகம் நெஞ்சை உலுக்குகிறது:வைகோ


ஈழத்தமிழருக்காக தீக்குளிக்கும் தமிழர்கள் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர்.

25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார்.

ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.

அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு தி.மு.க. தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக்கிறேன்.

இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன். டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.

தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடு மாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.

இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.

எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.