பிரிட்டனின் விசேட தூதுவரை நிராகரித்தது இலங்கை அரசு
இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் நோக்கத்தில் விசேடதூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிரவுணியை நியமித்திருப்பதாக பிரிட்டன் அறிவித்திருக்கும் அதேசமயம், அதனை முழுமையாக நிராகரித்திருக்கும் அரசாங்கம் லண்டனின் இந்த நடவடிக்கையானது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத தன்மையை ஒத்தது என்று விசனம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் இது தொடர்பாக இனி பிரிட்டனுடன் எதுவிதமான பேச்சுக்கும் இடமில்லையென்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவானது கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது.
இலங்கை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து செயற்படும் பொருட்டு பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் தனது விசேட பிரதிநிதியாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான டெஸ் பிரவுணியை நியமித்திருப்பதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அரசியல் தீர்வொன்றை காண்பது தொடர்பில் டெஸ் பிரவுணி கவனம் செலுத்துவாரெனவும் கூறப்பட்டிருந்தது.
மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் அதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இலங்கையில் மனிதாபிமான ரீதியிலான உடனடி போர்நிறுத்தமொன்று அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென கடந்தவாரம் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபான்ட் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் பிரிட்டன் பிரதமரினது இலங்கைக்கான விசேட பிரதிநிதி தொடர்பான இந்த அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னர் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இவ்விடயம் பற்றி வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் கலந்து பேசியிருக்கிறார்.
இதேநேரம், பிரிட்டன் பிரதமர் பிரவுணின் இந்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்த யோசனைக்கமைய, பிரிட்டிஷ் பிரதமரின் இந்த விசேட பிரதிநிதி நியமனமானது ஒருதலைப்பட்சமானதென நிராகரிக்கப்பட்டு விட்டதாக வெளிநாட்டமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், இராஜதந்திர செயற்பாடுகளில் பண்பாடுகள் மதிக்கப்பட வேண்டிய நேரத்தில், இந்த நியமனம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரிட்டன் அரசாங்கத்தினால் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாதது மட்டுமன்றி, கலந்தாலோசிக்கக்கூட இல்லையென்றும் இலங்கை அமைச்சரவை சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நியமனமானது இலங்கையின் உள்விவகாரங்களில் அழையாமல் தலையிடுவதற்கு சமனானதெனவும் வெளிநாட்டமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன், வெளிநாட்டமைச்சின் இந்த அறிக்கையே இவ்விடயத்தில் பிரிட்டன் அரசுக்கான இலங்கை அரசாங்கத்திற்கு பதிலாக கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.
இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா;
""ஒரு நாட்டில் பிறிதொரு நாட்டிற்கு தூதுவரையோ அல்லது பிரதிநிதியையோ நியமிக்கும் போது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று இருக்கவேண்டும். ஆனால், பிரிட்டிஷ் பிரதமரது இலங்கைக்கான விசேட பிரதிநிதி நியமனமானது ஒருதலைப்பட்சமானது.
ஏற்கனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் பயங்கரவாதிகளுடன் மட்டுமே போரிட்டுக் கொண்டு, மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்.
மக்களுக்கான அனைத்துத் தேவைகளும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி நியமனமானது அவசியமற்றது' என்று கூறினார்.
இதேநேரம், பிரிட்டன் பிரதமரின் இந்த நடவடிக்கையை நிராகரித்து பிரான்ஸ் செய்திச்சேவையான ஏ.எவ்.சி.க்கு கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம; ""இது இலங்கையின் உள்விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிடுவதற்கு சமனானது மட்டுமல்லாது, நாட்டின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத தன்மையை ஒத்ததுமாகும்' என்று கூறியுள்ளார்.
அத்துடன், இந்த விடயமானது பிரிட்டனுடனான உறவுகளில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமென்றும் அமைச்சர் போகொல்லாகம எச்சரித்திருக்கிறார்.
பிரிட்டனின் இந்த நடவடிக்கை உதவியாக அமையப்போவதில்லையென்றும், இது விடயத்தில் லண்டனுடன் இனி எந்தப் பேச்சுகளுக்கும் இடமில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.
தலைப்புகள்
ஸ்ரீலங்கா அறிவிப்புகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.