"சொந்த நிலத்தில் நிம்மதியாய் வாழ வழி செய்யாமல் தமிழர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் மேற்குலகம்": 'புதினம்' நிருபரிடம் பா.நடேசன் கவலை

அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் மனித உரிமைகளையும், அரசியல் சுயநிர்ணய உரிமையையும் பாதுகாத்து உறுதி செய்வதை விடுத்துவிட்டு - ஐக்கிய நாடுகள் சபையும், இணைத் தலைமை நாடுகளும் அவர்களை நிரந்தர அகதிகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளி்ன் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் 'புதினம்' நிருபரிடம் தெரிவித்துள்ளார்.
வன்னியில் போர் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் மேற்குலகமும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற நிறுவனங்களும் ஈடுபட உள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக பா.நடேசனிடம் 'புதினம்' நிருபர் கருத்து கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து கூறும் போது -

"தமது வாழ்வாதாரங்களை விடுத்து, 'நலன்புரி நிலையம்' என்ற போர்வையில் சிறிலங்கா அரசு திறந்து வைத்திருக்கும் இராணுவத் தடுப்பு வதை முகாம்களுக்கு போய்விடும் படி கூறுவது ஒரு சுத்தமான இன அழிப்பு ஊக்குவிப்பு முயற்சி.

தமிழர்களின் வளமான நிலங்களை ஆக்கிரமித்து - அவர்களை பொருளாதார ஆதாரங்கள் அற்றவர்களாக்கி - அவர்களின் தேசியத் தன்மையைச் சிதைத்து, அவர்களை நிரந்தரமாக அகதிகள் முகாம்களுக்குள் முடக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு துணை போகும் செயல்." என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும் போது -

"யாழ். குடாநாட்டில் - 1990 ஆம் ஆண்டில் பலாலி படைத் தளத்தை விரிவுபடுத்திய போது, அதனைச் சூழ இருந்த மிகுந்த வளம்மிக்க ஏராளமான நிலத்தை சிறிலங்கா ஆக்கிரமித்தது. அந்த ஊர்களில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்று வரை - பதினெட்டு வருடங்களாக - அகதிகள் தான்.

யாழ். குடாநாடு சிறிலங்கா அரச கட்டுப்பாட்டில் கடந்த 13 வருடங்களாக இருக்கின்ற போதும் - அந்த வளமான நிலங்களை 'உயர் பாதுகாப்பு வலயங்க'ளாக்கி, அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர விடாமல் நிரந்தர அகதிகள் ஆக்கிவிட்டது சிறிலங்கா.

இதேபோன்று - மிக அண்மையில் - சம்பூர் முதற்கொண்டு கிழக்கில் சிறிலங்கா ஆக்கிரமித்த பல இடங்களில் மீளக்குடியமர தமிழ் மக்கள் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக - 1948 ஆம் ஆண்டில் தொடங்கிய சிங்கள குடியேற்ற நடவடிக்கைகள் தான் இப்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வன்னி மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து அப்புறப்படுத்த முயலும் மேற்குலகம், இந்த வரலாற்றுப் பின்னணிகளையும் - சிங்களப் பேரினவாதத்தின் கபட எண்ணங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

தமது சொந்த நிலங்களில் நிம்மதியாய் வாழ விரும்பும் மக்களை - புலிகளின் 'மனிதக் கேடயங்கள்' எனப் பிரசாரமிட்டு - வதை முகாம்களுக்கள் முடக்க முயற்சிக்கும் சிறிலங்காவின் திட்டத்திற்கு, மனித நேயத்தினை மதிக்கும் நாடுகள் துணை போகக் கூடாது," எனவும் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்தார்.

"சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் 'நலன்புரி நிலையம்' எனப் போர்வையிடப்பட்ட வதை முகாம்களில் நடைபெறும் கொடூரங்கள் நன்கு அம்பலமாகியுள்ள நிலையில் தமிழர்கள் ஏன் அங்கு போவதனை விரும்பப் போகின்றனர்?...

வன்னிப் பகுதியின் போர்ச் சூழலில் இருந்து வெளியேறுவது மட்டுமே, தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பினைக் கொடுத்துவிடும் என எப்படிச் சொல்ல முடியும்?...

தமிழீழ மக்களின் அறிவு ஆளுமை, பொருளாதார மேம்பாடு, கலாச்சாரம் வாழ்வு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை அழித்தொழிப்பதனை நோக்கமாக கொண்ட ஒரு நிரந்தர இன அழிப்பு நடவடிக்கையே இதுவாகும் என்பதை ஏன் இந்த உலகம் உணர்ந்துகொள்ளத் தவறுகின்றது?.." என அவர் சில கேள்விகளையும் எழுப்பினார்.

"சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலை, ஆட்கடத்தல், மனித உரிமை மீறல் மற்றும் இராணுவப் படையெடுப்புக்களினால் - ஏற்கனவே பல லட்சம் தமிழர்கள் தமது சொந்த இடங்களை விட்டு விரட்டப்பட்டு - இரவல் வீடுகளிலும், தமது உறவுகளுடனும், வெளிநாடுகளில் வாழும் தமது உறவுகளின் உதவிகளில் தங்கி வாழவும், வேறு நகரங்களில் போதிய வருமானங்கள் இன்றி அல்லற்படவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரசின் ஏதேச்சாதிகாரப் போக்கினை மாற்றி, தமிழ் மக்கள் மீது அதனால் திணிக்கப்பட்டுள்ள மனிதப் பேரவலங்களை நீக்கி, தமிழர்களுக்கு எந்த உத்தரவாதமும் அற்ற அதன் அரசமைப்பையும் மாற்றியமைக்க முடியாத இந்த உலகம் - இவ்வாறான சூழ்நிலையில் தமிழர்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு போகும்படி எப்படிச் சொல்ல முடியும்?... அங்கு போவதனை தமிழர்களும் ஏன் விரும்பப்போகின்றனர்?

நியூயோர்க் நகரில் தலைமையகத்தினை கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடந்த வார அறிக்கை, சிறிலங்கா அரசு செய்து வரும் மனிதப் படுகொலைகளையும், மருத்துவ நிலையங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களையும் மற்றும் வன்னியில் இருந்து வெளியேறுவோர் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவதனையும் கண்டித்திருந்தது.

பல அனைத்துலக செய்தி நிறுவனங்களும் - இந்த தடுப்பு முகாம்களை - இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போதான யூத இனப் படுகொலை வதை முகாம்களுக்கு இணையானவை என சுட்டிக்காட்டி இருந்தன.

இவ்வாறான வதை முகாம்களுக்குள் தமிழ் மக்களினை தள்ளி விடுவதற்கே, அவர்கள் வன்னியில் தற்போது புலிகளின் 'மனிதக் கேடயங்கள்' ஆக உள்ளனர் என்ற பிரசாரம் சிறிலங்காவால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ள வேண்டும்." என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

"பல உலக நாடுகளுக்கும், அனைத்துலக அமைப்புக்களுக்கும் இந்த விடயங்கள் நன்கு தெரிந்திருந்தும், அவை 'மனிதக் கேடயம்' என்ற சொல்லை தமது அறிக்கைகளில் பாவிப்பதால், தனது போர் நடவடிக்கைகளை தொடர்வதற்கான அங்கீகாரமாகவே சிறிலங்கா அரசு அதனை எடுத்துக்கொள்ளுகின்றது," எனவும் அவர் கவலை தெரிவித்தார்.

இறுதியாக -

"உலக வரலாற்றில் இவ்வாறு தமது பூர்வீக பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப் பட்ட பல லட்சம் மக்களை அடக்குமுறை அரசுகள் மீளக் குடியமர்த்தியதாக தடயம் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் தமிழ் மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு போவதனை விரும்பவில்லை.

'நலன்புரி நிலையங்கள்' என்ற போர்வையில் தமிழின அழிப்பு வதை முகாம்கள் அமைக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசிற்கு மனித நேயமிகு அனைத்துலகம் துணை போகக் கூடாது என்பதுடன் -

வன்னிக்கு உடனடியாக பக்க சார்பற்ற உலக ஊடகவியலாளர்கள், மனித உரிமை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை அனுப்பி நிலைமைகளை நேரில் அவதானித்து - போரை நிறுத்தி, உணவு மற்றும் மருத்துவ வசதிகள் மக்களுக்கு சென்றடையச் செய்வதுமே இன்று இந்த உலகம் ஆற்ற வேண்டிய உடனடி மனிதாபிமான பணியாகும்" என அவர் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.