கடந்த 1966ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்த ஏ.ஆர்.ரகுமானின் இயற்பெயர் ஏ.எஸ்.திலீப்குமார். இவருடைய தந்தை சேகர். மலையாள படவுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்தவர். இவருடைய தாய் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்கள் எல்லாம் விற்று வாடகை வீட்டில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தாயாரின் அன்பு அரவணைப்பில் வளர்ந்த ஏ.எஸ்.திலீப்குமார் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர்.ரகுமான் என்று மாற்றிக்கொண்டார்.
தனது இளவயது நண்பர்களான டிரம்ஸ் சிவமணி, ஜான் ஆண்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து கீபோர்ட் பிளேயராக தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.
ஆரம்பத்தில் மாஸ்டர் தனராஜிடம் இசைப்பயின்ற ஏ.ஆர்.ரகுமான், 11 வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.
பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல். சங்க்ர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். குறிப்பாக எல். சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரியில் இணைந்து பணியாற்றினார்.
1992ஆம் ஆண்டு ரகுமானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப்பதிவு மற்றும் இசைக்கலப்பு ஸ்டூடியோவை தொடங்கினார் ரகுமான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டூடியோவை தொடங்கினார். பங்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதிநவீன ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் உருவில் ரகுமானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று மணிரத்னம் கேட்டார்.
சந்தோஷத்துடன் ஒத்துக்கொண்ட ரகுமான் தனது திறமைகளை ரோஜா படத்தில் காட்டினார். முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரகுமான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.
அதன் பிறகு ரகுமானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ஆம் ஆண்டு இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ஆம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.
அதிக அளவிலான தேசிய விருதுகளைப் ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு ரகுமான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
úரொஜாவுக்கு பிறகு தமிழில் மட்டுமல்லாமல், இந்தியிலும் தனது முத்திரையைப் பதிததார் ரகுமான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.
இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குஸ்ஸார், மேஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுக்க பெருமைக்குரியவர் ரகுமான்.
அதேபோல மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியவரும் ரகுமான்தான்.
திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரகுமான். இவரது இசையில் உருவான வந்தே மாதரம் இன்றைய தேதிக்கு இந்தியாவில் அதிகம் கேட்கப்பட்ட இசை வடிவமாக உள்ளது. 1997ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திர தின பொன்விழாவையொட்டி வந்தே மாதரத்தை வெளியிட்டார் ரகுமான்.
1999ஆம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரகுமான்.
கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக நிகழ்ச்சிகளை நடத்தினார் ரகுமான்.
கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவாலி இசையில் திறமை மிக்கவரான ரகுமானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அவருக்கு கைவந்த கலையாகும்.
ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது. அவரது மனைவி சாய்ரா பானு.
இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.
தமிழில் ரகுமானுக்கு முதல் படம் ரோஜா, இந்தியிலும் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடியது.
இந்தியில் ரகுமானின் நேரடி முதல் படம் ரங்கீலா.
மலையாளத்தில் முதல் படம் யோதா.
தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.
ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.
1992ஆம் சுதந்திர தினத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்பார் ரஹ்மான். காரணம் 'ரோஜா படம் வெளியாகி தென்னிந்தியா திரும்பி பார்த்த நாள் அதுதான். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார் ரஹ்மான். இந்திய இசைமைப்பாளர்களிலேயே அதிக தடவை தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரஹ்மான் தான்.
த்மஸ்ரீ, பத்மபூஷன், ராஜீவ்காந்தி விருது, தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிரபல இந்தி இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மன் நினைவாக வழங்கப்படும் ஆர்.டி.பர்மன் விருது. எம்.டி.வி.யின் வாழ்நாள் சாதனை விருது. 18 முறைகளுக்கு மேல் பிலிம்ஃபேர் விருது என ரஹ்மானை பெருமைப்படுத்திய விருதுகளின் எண்ணிக்கை அதிகம்.
உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் 23ஆம் தேதி அறிவிக்கப்டடது. ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று உலக சாதனைபடைத்துள்ளார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.