ஈழத்தமிழருக்காக தீக்குளித்த தமிழ் இன தியாகி மரணம்

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த திமுக தொண்டர் சிவப்பிரகாசம் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 21ஆம் தேதி மாலை, சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் சங்கிலி போராட்டம் நடந்தது.
அப்போது, தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்தார். திடீரென்று புதிதாக கட்டப்படும் ஓட்டல் வளாகத்துக்குள் சென்றார். அங்கிருந்து 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்து என்று கத்திக் கொண்டே உடலில் தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மற்றும் திமுகவினர் அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிவபிரகாசம் தரமணி மகாத்மா காந்தி நகர் ஜன்டா தெருவை சேர்ந்தவர். திருவான்மியூர் மாநகர போக்குவரத்து டெப்போவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் திருவான்மியூர் பகுதி தி.மு.க. பிரதிநிதியாக 2 முறை இருந்தார். இவரது மனைவி மனோரமா (48). மகள்கள் செல்வி (28), தேவி (27), சுஜாதா (21) ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. மகன் சிவக்குமார் (25), மகள் சாந்திக்கு (22) திருமணமாகவில்லை.
சிவபிரகாசம் தீக்குளித்த தகவல் அறிந்த அவரது மனைவி மனோரமா மற்றும் பிள்ளைகள், மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்த்தனர். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதுபற்றி மனோரமா கூறுகையில், வேலைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். மாலையில் தி.மு.க. கூட்டத்துக்கு சென்று வருகிறேன் என்றார். ஆனால் அவர் தீக்குளித்த தகவலைத்தான் கேட்டேன் என்று சோகத்துடன் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிவபிரகாசத்தை, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் நேரில் சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றிட வேண்டும். அங்கு இருதரப்பினரும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன்படி, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக தரமணியை சேர்ந்த தி.மு.க. தோழர் சிவப்பிரகாசம் புறப்பட்டு இருக்கிறார். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் தீக்குளித்து இருக்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், 80 சதவீதம் உடல் உறுப்புகள் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று டாக்டரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலையில்தான் உள்ளார். தீக்குளித்த சிவப்பிரகாசம் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்திருக்கிறார். முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தலைவர் அவர்களுக்கு, இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுடைய உயிரை காக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்காக வருந்துகிறேன் என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முன்னதாக. கவிஞர் கனிமொழி எம்.பி, சிவப்பிரகாசத்தை பார்த்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, "சிவபிரகாசம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்துள்ளார். அவருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கட்சி தலைமையிடத்தில் பேசி விரைவில் வழங்கப்படும்'' என்றார். கவிஞர் கனிமொழியுடன் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், விஜயா தாயன்பன், டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் உடன் வந்தனர்.
தீக்குளித்த சிவப்பிரகாசத்தின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, சென்னை கொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், புதுவண்ணாரப்பேட்டை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன் ஆகியோர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. தொண்டர் சிவபிரகாசம் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.