அத்வானி பேச்சு : ஒரு திருப்பம்
ஈழத் தமிழர்கள் சிறிலங்க இராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய பிரச்சனை என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், ஈழத் தமிழர்களை கொன்று குவித்துவரும் இனவாத சிறிலங்க அரசிற்கு ஆயுதம் உள்ளிட்ட இராணுவ உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ தலைமையில் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் லால் கிஷண் அத்வானி, ஈழத் தமிழர் பிரச்சனையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எவ்வித அக்கறையும் காட்டாமல் பொறுப்பின்றி செயல்பட்டு வருகிறது என்று கூறியிருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஈழத் தமிழர் பிரச்சனையில் சிறிலங்க அரசை எவ்வித நிர்பந்தத்திற்கும் உட்படுத்தாத ஒரு மேம்போக்கான நிலையை கடைபிடித்துக் கொண்டு, ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை, பயங்கரவாததிற்கு எதிரான அந்நாட்டு அரசின் இராணுவ நடவடிக்கைதான் என்ற ஏமாற்று நிலைப்பாட்டை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதற்கு உதவியும் செய்து கொண்டு, அப்படிப்பட்ட (இராணுவ) உதவிகள் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகத்தான் என்று தமிழக மக்களை ஏமாற்றி வரும் நிலையில், தமிழர்கள் கவலைப்படும் ஒரு பிரச்சனை இந்தியா கவலைப்பட வேண்டிய ஒரு பிரச்சனைதான் என்று அத்வானி அழுத்தம் திருத்தமாக கூறியிருப்பது, குறுகிய எதிர்காலத்தில் ஈழம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் ஒரு தலைகீழ் மாற்றம் வரவிருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இலங்கையில் அப்பாவி மக்களைக் குறிவைத்து சிறிலங்க இராணுவம் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், “அது அந்நாட்டு உள்நாட்டுப் பிரச்சனை, அதில் ஒரு அளவிற்குத்தான் மத்திய அரசு தலையிட முடியும்” என்று தனது கூட்டணிக் கட்சியும், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியுமான தி.மு.க.வை பேச வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அத்வானியின் பேச்சு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அயலுறவுச் செயலர் சிவ் சங்கர் மேனனும், பிறகு அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அடுத்தடுத்து பயணம் மேற்கொண்டு சிறிலங்க அதிபர் ராஜபக்சவுடன் பேசியபோது கூட, போர் நிறுத்தம் பற்றிப் பேசவில்லை. மாறாக, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் சிறிலங்க அரசிடமே, அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை அளித்து, அதற்கான ‘உறுதிமொழியை’ பெற்று வந்துள்ளதாக கூறி ஒரு பெரிய கேலிக் கூத்தையே அரங்கேற்றியதால் மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்களிடையே ஏற்பட்ட கோபக் கொந்தளிப்பு பல்வேறு வகையிலும் போராட்டங்களாக வெடித்துவரும் நிலையில், தமிழர்களோடும், தமிழ்நாட்டு மக்களோடும் நாங்கள் நிற்கின்றோம் என்று அத்வானி கூறியிப்பது ஒரு பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
“இலங்கையில் கடந்த 23 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையினால் பெற்ற வெற்றிகள் தமிழர் பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை உருவாக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளது” என்று சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மறுகுரலாகவே ஒரு அறிக்கையை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி (இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து) வெளியிட்டார்.
இதற்கு நேர் மாறாக, இலங்கை இனச் சிக்கலிற்கு போர் மூலம் தீர்வு காண முடியாது என்றும், போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆயுதத்தைக் காட்டி ஈழத் தமிழர்களை ஒடுக்க முற்படக்கூடாது என்றும் அத்வானி கூறியிருப்பது இலங்கை தொடர்பான இந்திய அரசின் இன்றைய நிலைப்பாடு நீடிக்கப்போவதில்லை என்பதையும் காட்டுகிறது.
ஈழத் தமிழருக்கு எதிராக சிறிலங்க அரசு நடத்திவரும் இனப்படுகொலையை, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான போர் என்று ராஜபக்சவின் நிலையை ஏற்றுக் கொண்டு, அந்த நிலையை ஆதரிக்கிறது மன்மோகன் சிங் அரசு. அதற்கு நேர் மாறாக, அது இனச் சிக்கலே என்றும், இராணுவ நடவடிக்கை அதற்குத் தீர்வைத் தராது என்றும் அத்வானி கூறியிருக்கிறார். இது தமிழர்ளையும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளையும் சிந்திக்கத் தூண்டும் நேர் எதிர் நிலைகளாகும்.
அதுமட்டுமல்ல, இலங்கை இனப் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்பதிலும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிப்படையான ஆதரவாளருமான வைகோவின் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அத்வானி பேசியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
அத்வானி மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தோழமைக் கட்சியான பிஜூ ஜனதா தள உறுப்பினர் பேசியதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பேசியதை விட அவர் பேசியது அழுத்தம் திருத்தமாக இருந்தது.
பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் பெறுகிறது.
மக்களவைக்கு இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் கூட்டணிகளை நிர்ணயிக்கும் காரணிகளாக இலங்கைத் தமிழர் பிரச்சனையும், தமிழக மீனவர் பிரச்சனையும் அமையும் சாத்தியக் கூறுகள் அத்வானியின் பேச்சைத் தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது.
தலைப்புகள்
இந்தியா செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.