ஸ்ரீலங்கா அறிவிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா அறிவிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அபாயகரமான விளையாட்டை நடத்துகிறது ஐரோப்பா ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதர் எச்சரிக்கை


* இன்று மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வு
தமிழர்களுக்கு எதிராக "போர்க்குற்றங்கள்' புரிந்ததாக கொழும்பு மீது ஐரோப்பா குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கின்றன.

இன்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பாக விசேட அமர்வொன்று இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு நாளை புதன்கிழமை வரை நீடிக்கப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்ய விசேட அமர்வொன்றை நடத்துவதற்கு பேரவையிலுள்ள 47 உறுப்பினர்களில் 17 உறுப்பினர்களின் கையெழுத்தை டென்மார்க் பெற்றுள்ள நிலையில், இந்த அமர்வு நடத்துவது சாத்தியமாகியுள்ளது.

விசேட அமர்வை கூட்டுவதாயின் குறைந்தது 16 உறுப்பினர்களின் கையெழுத்து தேவையாகும்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதையும் அதன் தலைமைத்துவத்திலிருந்து குறைந்தது ஒரு பகுதியையாவது காப்பாற்றுவதற்கும் மேற்குலகின் ஒரு பகுதியினர் முயற்சித்திருந்ததாக ஜெனீவாவிலுள்ள ஐ.நா. விற்கான இலங்கைத் தூதுவரும் விசேட பிரதிநிதியுமான தயான் ஜயதிலக குற்றம் சாட்டியதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

""தோல்வி கண்டுள்ள நிலையில், இது (விசேட அமர்வு) தண்டிப்பதற்கான நடவடிக்கையாகும்' என்று தொலைபேசி மூலமான பேட்டியில் தயான் ஜயதிலக ஐ.ஏ.என்.எஸ். சேவைக்கு கூறியுள்ளார்.

சில மேற்கு நாடுகளில் புலிகள் கணிசமான அளவு போஷிக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தலிபான், அல்கைதாவுக்கு இதேமாதிரியான அந்தஸ்த்தை அந்நாடுகள் வழங்கியதா என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவுதி அரேபியா, நிக்கர குவா, பொலிவியா மற்றும் ஏனைய நட்பு நாடுகளின் உதவியுடன் எந்தத் தீர்மானத்தையும் இலங்கையால் தோற்கடிக்கமுடியுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதச் சந்தையில் பெரியளவிலான பெயர்களை கொண்டிருந்தவற்றில் ஒன்றை இலங்கை அழித்தமைக்காக உலகம் இலங்கைக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் அந்தத்தருணத்தில் இலங்கையை இவ்வாறு இழுந்துவிட்டிருப்பது கவலைக்குரியது என்றும் ஜயதிலக கூறியுள்ளார். "தமது சொந்த நாடுகளில் இராணுவ மயமாக்கும் பேச்சுகளுக்கு ஊக்குவிப்பு அளிக்கும் அபாயகரமான விளையாட்டை அவர்கள் விளையாடுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார். ஐரோப்பாவையும் புலிகள் சார்வு தமிழர்கள் பற்றியும் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

விசேட அமர்வுகான தனது பாதையில் ஐரோப்பா செல்லுமானால், இலங்கையின் உணர்வுகளை அது கடினமானதாக்கியிருப்பதுடன் அரசியல் ரீதியான இடத்தினை சுருக்கிவிடும் என்றும் ஆழமான எதிர்விளைவுகளை தோற்றுவிக்கும்' என்றும் அவர் எச்சரித்துள்ளார்

இழப்பை மூடி மறைக்க சிறிலங்கா படைத்தரப்பு கையாளும் உத்தி


முல்லைத்தீவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைப்பதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்ற செய்தியினை மகிந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள ஆனந்தபுரம், இரணைப்பாலை ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் 1,412 படையினர் கொல்லப்பட்டும் 6,123 படையினர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

இச்செய்திகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடாத வகையில் திசை திருப்பும் நோக்கிலேயே புதுக்குடியிருப்பு பகுதியின் மீது படையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி காயடைந்துள்ளார் என்று சிறிலங்கா படைத்தரப்பு ஊடகங்களுக்கு அறிவித்திருந்தது.

சாள்ஸ் அன்ரனி காயமடைந்த செய்தி கொழும்பில் செல்லிடப்பேசி மூலமான குறும் தகவல்கள் ஊடாக மிக வேகமாக பரப்புரை செய்யப்பட்டது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை வெளியான சகல சிங்கள மற்றும் ஆங்கில நாளேடுகளில் இச்செய்திக்கு முன்பக்கத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் தனியார் ஊடகங்களிலும் இச்செய்திக்கு மணிக்கு ஒரு தடவை முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்துகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான பரப்புரைகளை சிறிலங்கா படைத்தரப்பு செய்வது வழமையானது என கொழும்பில் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய இளைஞர்களை போரில் ஈடுபடுத்திக்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனது பிள்ளைகளையும் மனைவியையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டார் என்று இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு கூறியிருந்தது.

தற்போதும் இதே சிறிலங்கா படைத்தரப்புத்தான் சாள்ஸ் அன்ரனி காயமடைந்தார் என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த முரண்பாடான தகவல்கள் குறித்து கொழும்பு ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை என்று அவதானிகள் கேட்கின்றனர்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி இரண்டு இராணுவப் படைகளை அமைக்கலாம்: பாதுகாப்புச் செயலாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இராணுவ தளபாடங்களைக் கொண்டு இரண்டு பெரிய இராணுவப் படைகளை அமைக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் புலிகளிடம் காணப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்ட யூகங்களைவிடவும் பெருந்தொகையான ஆயுதங்கள் இதுவரையில்
மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இணையத்தள ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டபோது இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்திருந்த போது விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க முடியாதெனக் கூறும் தரப்பினரும், முடியும் எனக் கூறும் தரப்பினரும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருந்த மக்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களினால் வழங்கப்பட்ட நிதியுதவிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த காலத்தில் பாரியளவு ஆயுதங்களை தருவித்துள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வான்படையின் விமானம் வன்னியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

இலங்கை வான்படையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினர் இதனைச் சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவித அறிவித்தலும் வெளியிடவில்லை.

முன்னதாக சிறீலங்கா வான்படையின் விமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் ராடரைவிட்டு மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வன்னி வான்பரப்பில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல் நடாத்த சென்ற போது காணமல் போயுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி வெளிவந்துள்ளது.

இதேநேரம் தேவிபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினருக்கும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் இன்று மட்டும் பல தடவைகள் சிறீலங்கா வானூர்திகள் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன.

இதேவேளை விமானப்படையினர் இன்று வன்னியில் எவ்வித வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் புலிகளின் தாக்குதலுக்கு யுத்தவிமானம் எதுவும் இலக்காகவில்லை என்றும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போரை நிறுத்த முடியாது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அரசு பதில்

போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம் வந்து விட்டது.

இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.

வான் புலிகளின் தாக்குதலை அடுத்து கொழும்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

கொழும்பு நகரிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப்புலிகள் மேலும் வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடிய வாய்ப்பிருப்பதாகக் கருதும் படையினர் சனிக்கிழமை முதல் நகரின் வான் வழிப் பாதுகாப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் கூறுகையில்;

வெள்ளிக்கிழமை இரவு வெடிமருந்துகளை நிரப்பியவாறு கொழும்பு நகருக்குள் நுழைந்த இரு விமானங்கள் தங்கள் இலக்குகளை அடைந்து ஏற்படுத்தவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் வான் வழிப் பாதுகாப்பைப் படையினர் மேலும் அதிகரித்துள்ளனர்.

வன்னியில் முன்னேறும் படையினர் வசம் புலிகள் பெருமளவு நிலப்பகுதியை இழந்து விட்டதால் அவர்கள் மேலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தக் கூடுமென பொலிஸாரும் படையினரும் எதிர்பார்க்கின்றனர்.

இது போன்று மேலும் பல தாக்குதல்களுக்கு அவர்கள் முயலக் கூடுமெனவும் எனினும் புலிகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளும் வகையில் வான் பாதுகாப்புப் பொறிமுறையை முழு அளவில் தயார் நிலையில் வைத்திருப்பதாக இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் செக் தயாரிப்பான சிலின் 143 வகை விமானங்கள் ஐந்தை பாகங்களாகப் பிரித்து நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.

எனினும், தற்போது அவர்கள் வசம் எத்தனை விமானங்கள் இருக்கின்றன எனத் தெரியாதென்றும் படைத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரின் பாதுகாப்பும் முழு அளவில் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்கொலைத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால் விமானப்படை முற்றாக நிர்மூலமாகியிருக்கும்: கெஹலிய ரம்புக்வெல


விடுதலைப் புலிகளின் வான் தற்கொலைத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இலங்கை அரசு தனது விமானப்படையை முற்றாக இழந்திருக்கும் என அரசின் பாதுகாப்புப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல செய்தியாளர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் முயற்சி வெற்றி பெற்றிருந்தால் விமானப்படையென்ற ஒன்று இங்கு இருந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த விமானங்கள் தமது இலக்குகளை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டமையால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளிடம் வேறு விமானங்கள் இருக்குமென்று தாம் நினைக்கவில்லையென மேலும் தெரிவித்துள்ள அவர், புதுக்குடியிருப்பிலுள்ள ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட விமானங்கள் மாங்குளம், மன்னார் ஊடாக கொழும்பிற்குள் நுழைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிற்குள் நுழைந்த ஒவ்வொரு விமானத்திலும் 215 கிலோகிராம் சி 4 ரக வெடிமருந்துகள் காணப்பட்டுள்ளன. அவர்கள் விமானப் படைத் தலைமையகத்தை இலக்கு வைத்துள்ளனர் என்றும் உதய நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்

பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும்: ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்


வன்னியில் உள்ள மக்களை இலக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தாக்குதல்களை மேற் கொண்டு வருகின்றது. வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் பெருமளவு ஆண்களும் இளம் பெண்களும் விசாரணைகளுக்காக என படையினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை பறிகொடுத்து விட்டு கதறியழுதபடி உள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ள பெண்கள் மீதான கொடுமைகள் ஒரு புறம் வேகமாக நடபெற்றுக் கொண்டிருக்க மறுபுறத்தில் வன்னியிலுள்ள மக்களை இலக்கு வைத்து பெருமளவு தினமும் படுகொலைகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்தவாரம் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உச்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் ”இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்’’ என்றும் கூறி படையினரை உசுப்பேத்தியுள்ளார்.

இதனைக் கேள்வியுற்று வவுனியா முகாமுக்குள் அடைபட்டுள்ள மக்கள் பதறிப் போயிருப்பதாக வவுனியாவில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டபோது அவர் இதனை எம்மிடம் தெரிவித்தார்.

புலிகளின் கெரில்லா முறைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு முன்னேற்பாடாக வடக்கு, கிழக்கு படைக் கட்டமைப்பில் மாற்றம்


வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் கெரில்லா முறைத் தாக்குதல் மேற்கொள் வதைத் தடுக்க விசேட பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கு ஏற்றவகையில் படைக்கட்டமைப் பில் விசேட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:
வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் மரபுரீதியான பெரும் தாக்குதல்களை மேற் கொள்ள முடியாதவாறு அவர்கள் முடக்கப் பட்டுவிட்டனர்.அவர்கள் இனிமேல் கெரில்லா தாக்கு தல்களை மட்டுமே மேற்கொள்ள இயலும் எனினும் கெரில்லாத் தாக்குதலை முறியடிப்பதற்கும் அவற்றுக்கு முகம் கொடுக்கும் வகையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தத் திட்டங்களின் பிரகாரம்
* வடக்கு கிழக்கில் விசேட அதிரடிப் படையினர் முழுமையாகப் பணியில் ஈடு படுத்தப்படுவர்.
* இப்போது செயற்படும் வன்னி, கிழக்கு, பலாலி இராணுவக் கட்டளைத் தலைமையகங்களுக்கு மேலதிகமாக இரு கட்டளைத் தலைமையகங்கள் அமைக்கப் பட உள்ளன. அந்தக் கட்டளைத் தலைமையகங்கள் ஏ9 வீதிக்கு கிழக்கு மேற்குப்பகுதியில் அமைக்கப்படவிருக்கின்றன.
* புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் கெரில்லா தாக்குதல்களை முறியடிப்பதற்கு வேண்டிய தகவல்களைச் சேகரிக்க விசேட வாகனங்கள் வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்படவிருக்கின்றன.
* விடுதலைப்புலிகளின் வசம் இருந்து மீட்கப்பட்ட இரணைமடு, முள்ளியவளை விமான ஓடுபாதைப்பிரதேசத்தில் விமானத்தளங்களை விமானப்படை அமைக்கவிருக்கின்றது. வன்னியில் உள்ள படையினருக்கான விநியோகங்களை சீராக்கும் இலக்குடன் மேற்கொள்ள இத்தளங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.
* கடற்படையினர் கரையோரங்களில் தளங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் ஊடுருவல்களைத் தடுப்பதற்காகவே கடற்படைத் தளங்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளினதும் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் வகுக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் திட்டத்துடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவும் இப்பிரதேசங்களில் அமைக்கப்படவிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையின் தேர்தல் முடிவு: சிங்கள மக்கள் யுத்தத்திற்கான அங்கீகாரமும்; மலையக தமிழ் மக்கள் யுத்தத்திற்கு எதிரான வெளிப்பாடும் நிரூபணம்


இலங்கையில் நடைபெற்று முடிந்த வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகள், சிங்கள மக்கள் கொடுர யுத்தத்திற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளமையை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பெயரைக் குறிப்பிட விரும்பாத சிங்கள கல்விமான் ஒருவரின் கருத்துப்படி, இந்தத் தேர்தல் முடிவுகள், தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள மக்கள், இந்த யுத்தத்திற்கு தமது முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். இந்தநிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று விடயத்திலும் சிங்கள மக்கள் இதே கொள்கையையே பின்பற்றுவர் என குறித்த சிங்கள கல்விமான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மலையகத்தின் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்கள் மத்திய மாகாண தேர்தலில் இந்த அரசாங்கத்தின் யுத்தத்திற்கு எதிராக வாக்குகளை அளித்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் மஸ்கெலியா தொகுதிகளில் பெரும்பாலான வாக்காளர்கள் தமிழர்களாக உள்ளநிலையில் அங்கும் கண்டி தொகுதியிலும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இதில் நுவரெலியவில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் சந்திரசேகரனுக்கும் மலையக மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். 6 ஆசனங்களை எதிர்பார்த்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் கட்சிக்கு நுவரெலியாவில் 3 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளது. அமைச்சர் சந்திரசேகரனுக்கு ஒரு ஆசனமேனும் கிடைக்கவில்லை.

ஆறுமுகன் தொண்டமானுடைய கட்சியின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசியகட்சியின் மூலம் தெரிவான 5 தமிழர்களுக்கு அடுத்தபடியான விருப்பு வாக்குகளையே பெற்றுள்ளனர். இது தொண்டமானுக்கும் சந்திரசேகரனுக்கும் மலையக மக்கள் தந்த வரலாற்று பாடம் என மலையக புத்திஜீவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சிகளுடனேயே இருந்துக்கொண்ட மலையக மக்களின் வளர்ச்சிக்கு பாதமாக இருந்தமைக்காக அவர்கள் சுமார் 50 வருடங்களின் பின்னர் கற்றுக்கொண்ட பாடம் என்றும் அந்த புத்திஜீவி குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தோரை 3 வருடங்களுக்கு முகாம்களில் வைத்திருக்கும் திட்டத்தை மாற்றியது அரசாங்கம்


ரைம்ஸ் ஒன்லைன் செய்திச் சேவை வடக்கிலுள்ள 2 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை 3 வருடங்களுக்கு அரசியல் கைதிகளை பாதுகாப்புடன் வைத்திருக்கும் முகாம்களில் வைத்திருக்க இலங்கை அர சாங்கம் திட்டமிடுவதாகவும் இத்திட்டத்திற்கு பிரிட்டனிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக "லண்டன் ரைம்ஸ்' பத்திரிகையில் நேற்று வெள்ளிக்கிழமை முட்கம்பிக் கிராமங்கள், அகதிகளை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கான முகாம்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றது என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

67 சதுர மைல் பரப்பில் 5 நலன்புரிக் கிராமங்களை அமைத்து தமிழர்களுக்கு வழங்கவுள்ளதாக இலங்கை அரசு கூறுகின்றது.

இந்த முகாம்கள் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அமைக்கப்படுமெனவும் பாடசாலைகள், வங்கிகள், பூங்காக்கள், தொழில் பயிற்சி நிலையங்கள் என்பன சுமார் 2 இலட்சம் தமிழ் மக்களுக்கு புனர்வாழ்வளிக்க அமைக்கப்படுமென்றும் இதற்குப் பொறுப்பான அமைச்சு கூறுகிறது.

இராணுவத்தினர் இடம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பார்களெனவும் புலிகளை அழித்து அந்தப் பகுதிகளிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் வரை இடம்பெயர்ந்த மக்கள் இந்த முகாம்களில் வசிப்பது கட்டாயமானதெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. முகாம்களை சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருக்குமெனவும் சோதனையின் பின்னர் உறவினர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவார்களெனவும் இளைய பராயத்தவரோ அல்லது தனியாட்களோ அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படமமாட்டார்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை 3 வருட காலம் வைத்திருப்பதாக யோசனை தெரிவிக்கப்பட்டிருந்த போதும் ஐ.நா. அகதிகளுக்கான முகவரமைப்பு எதிர்ப்புகளை தெரிவித்ததையடுத்து இந்த வருட இறுதியில் 80 சதவீதமானோரை மீளக்குடியமர்த்துவதாக இப்போது கூறப்படுகிறது.

"சுயாதீனமாக அல்ல நாம் ஒவ்வொருவரையும் சோதிக்க வேண்டியுள்ளது' என்று மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரான ராஜீவ விஜயசிங்க ரைம்ஸிற்கு கூறியுள்ளார். "இது பயங்கரவாதிகளை கையாள வேண்டிய சூழ்நிலையாகும். அவர்கள் பொதுமக்கள் மத்தியில் ஊடுருவுகின்றனர். ஆகவே பாதுகாப்பு அதி முக்கியமானதாகும்' என்று தெரிவித்த ராஜீவ விஜயசிங்க, புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களை தடுப்பதற்கு இது ஒரேயொரு வழியாகுமென்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்திய இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் இந்த முகாம்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் இந்த முகாம்களை அமைக்கும் திட்டத்திற்கு சர்வதேச சமூகம் நிதி வழங்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளனர். நேரடி மேற்பார்வை மற்றும் சர்வதேச ஊடகத்துறையினர் சென்று வருவதற்கான அனுமதியில்லாமல் இதனை செய்யக் கூடாதென அவர்கள் கூறியுள்ளனர். "இவை வேறொன்றுமில்லை, ஆட்களை ஒன்றாக குவித்து வைக்கப்படும் முகாம்களே' என்று ராமன்செந்தில் என்ற இந்திய தமிழ் எம்.பி. கூறியுள்ளார். "அவர்கள் ஏன் முகாம்களில் வைக்கப்பட வேண்டும்? அவர்கள் பிரஜைகளாக இருந்தால் நேரடியாக புனர்வாழ்வளிக்க முடியுமே?' என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் இதனை ஆட்களை குவித்து வைத்திருக்கும் முகாம்களென நான் கூறவில்லை. ஆனால், ஏற்கனவே தடுப்பு முகாம்களும் இராணுவ சோதனை நிலையங்களும் உள்ளன. அந்த முகாம்கள் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இயங்க வேண்டுமென்று மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் யூதர்கள் வைக்கப்பட்டிருந்ததைப் போன்ற தடுப்பு நிலையங்கள் போன்றவை இவை என்று பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பாராளுமன்ற தொழில்கட்சி உறுப்பினரும் தெற்காசிய உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவருமான ரொபேர்ட் இவான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டவராகும். அவர் இது தொடர்பாக கூறுகையில்; இவை நலன்புரி நிலையங்கள் அல்ல, இவை யுத்தக் கைதிகள் மற்றும் ஆட்களை ஒன்று திரட்டி வைத்திருக்கும் முகாம்கள் என்று கூறியுள்ளார்கள். இவற்றை "தடுப்பு முகாம்கள்' என்று மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டிருப்பதுடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான ஐ.நா. வழிகாட்டல் விதிமுறைகளை அவர்கள் மீறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அங்கு (முகாம்கள்) அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் அல்லது அசாதாரணமான சூழ்நிலைகளின் கீழ் இருப்பார்கள் என்று மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. "இத்தகைய சூழ்நிலைகள் இருப்பதை இலங்கை அரசு வெளிப்படுத்தவில்லை' என்று மனித உரிமை கண்காணிப்பக பெண் பேச்சாளர் சாரு கொக் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரினதும் சுதந்திரமான உரிமையை பலாத்காரமாக பறிப்பதை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்திற்கமைய செயற்பட வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. "சர்வதேச உதவியை அரசு விரும்புகிறது; ஆனால், சர்வதேச தரத்தில் இல்லை' என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இலங்கை தொடர்பான நிபுணர் ஜோலந்த போஸ்ரர் கூறியுள்ளார்.

மோதல் பகுதிகளிலிருந்து 32 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறியிருப்பதாகவும் அவர்கள் 13 தற்காலிக முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அவை தடுப்பு முகாம்கள் போன்றவை என்று சர்வதேச மன்னிப்பு சபை விபரிக்கிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச உதவி வழங்கும் நிறுவனங்கள் புலிகள் தொடர்பாக தவறாக விளங்கிக் கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது. இந்தக் காரணத்தினாலேயே முகாம்களுக்கு உதவி வழங்கும் குழுக்கள் செல்வதையும் பத்திரிகையாளர் செல்வதையும் அரசு மட்டுப்படுத்துவதாக பேராசிரியர் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான யோசனைகளை இரு வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி ராஜபக்ஷவின் அலுவலகம் தயாரித்திருந்ததாகவும் நிதி திரட்டுவதற்காக அந்த யோசனைகள் வெளிநாட்டு தூதரங்களுக்கும் உதவி வழங்கும் முகவரமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் ராஜீவ விஜயசிங்க தெரிவித்திருக்கிறார். 2 மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கவுள்ளதாக பேச்சு இருப்பதாக ராஜீவ விஜயசிங்க கூறியுள்ளார்.

இதனை பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் மறுத்துள்ளது. இந்த மக்களின் நீண்டகால இடம்பெயர்வு எவரதும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாக இல்லை. பிரிட்டிஷ் அரசின் பணம் எதுவும் இந்த முகாம்களை சென்றடையாது என்று பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது இவ்வாறிருக்க 3 வருடம் தடுத்து வைத்திருக்கும் காலப்பகுதி தொடர்பாக கவலைகள் எழுப்பப்பட்டதையடுத்து யோசனைகளை அரசாங்கம் மாற்றியுள்ளதாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. மக்களை சாத்தியமான அளவுக்கு விரைவாக மீளக் குடியமர்த்துவதே புதிய யோசனையென்று யூ.என்.எச்.சி.ஆர்.இன் பெண் பேச்சாளர் சுலக்ஷானி பெரேரா கூறியுள்ளார். அத்துடன் முகாமுக்குள் எவரும் சென்றுவர முடியாதென்பது கட்டாயமல்ல என்று ஜனாதிபதியின் சகோதரரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ தெரிவித்ததாக சுலக்ஷானி பெரேரா கூறியுள்ளார்.

பிரிட்டனின் விசேட தூதுவரை நிராகரித்தது இலங்கை அரசு


இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடிக்கு உதவும் நோக்கத்தில் விசேடதூதுவராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டெஸ் பிரவுணியை நியமித்திருப்பதாக பிரிட்டன் அறிவித்திருக்கும் அதேசமயம், அதனை முழுமையாக நிராகரித்திருக்கும் அரசாங்கம் லண்டனின் இந்த நடவடிக்கையானது இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத தன்மையை ஒத்தது என்று விசனம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் இது தொடர்பாக இனி பிரிட்டனுடன் எதுவிதமான பேச்சுக்கும் இடமில்லையென்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவானது கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அந்நாட்டு அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது.

இலங்கை விவகாரங்கள் தொடர்பாக ஆராய்ந்து செயற்படும் பொருட்டு பிரிட்டன் பிரதமர் கோர்டன் பிரவுண் தனது விசேட பிரதிநிதியாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான டெஸ் பிரவுணியை நியமித்திருப்பதாக நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து, அரசியல் தீர்வொன்றை காண்பது தொடர்பில் டெஸ் பிரவுணி கவனம் செலுத்துவாரெனவும் கூறப்பட்டிருந்தது.

மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் அதைத் தவிர்த்துக் கொள்ளும் முகமாக இலங்கையில் மனிதாபிமான ரீதியிலான உடனடி போர்நிறுத்தமொன்று அமுலுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென கடந்தவாரம் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபான்ட் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே நேற்று முன்தினம் பிரிட்டன் பிரதமரினது இலங்கைக்கான விசேட பிரதிநிதி தொடர்பான இந்த அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னர் கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் இவ்விடயம் பற்றி வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் கலந்து பேசியிருக்கிறார்.

இதேநேரம், பிரிட்டன் பிரதமர் பிரவுணின் இந்த நியமனம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு, வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகம சமர்ப்பித்த யோசனைக்கமைய, பிரிட்டிஷ் பிரதமரின் இந்த விசேட பிரதிநிதி நியமனமானது ஒருதலைப்பட்சமானதென நிராகரிக்கப்பட்டு விட்டதாக வெளிநாட்டமைச்சினால் விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், இராஜதந்திர செயற்பாடுகளில் பண்பாடுகள் மதிக்கப்பட வேண்டிய நேரத்தில், இந்த நியமனம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரிட்டன் அரசாங்கத்தினால் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படாதது மட்டுமன்றி, கலந்தாலோசிக்கக்கூட இல்லையென்றும் இலங்கை அமைச்சரவை சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறான நியமனமானது இலங்கையின் உள்விவகாரங்களில் அழையாமல் தலையிடுவதற்கு சமனானதெனவும் வெளிநாட்டமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், வெளிநாட்டமைச்சின் இந்த அறிக்கையே இவ்விடயத்தில் பிரிட்டன் அரசுக்கான இலங்கை அரசாங்கத்திற்கு பதிலாக கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா;

""ஒரு நாட்டில் பிறிதொரு நாட்டிற்கு தூதுவரையோ அல்லது பிரதிநிதியையோ நியமிக்கும் போது சம்பந்தப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று இருக்கவேண்டும். ஆனால், பிரிட்டிஷ் பிரதமரது இலங்கைக்கான விசேட பிரதிநிதி நியமனமானது ஒருதலைப்பட்சமானது.

ஏற்கனவே அரசாங்கம் என்ற வகையில் நாம் பயங்கரவாதிகளுடன் மட்டுமே போரிட்டுக் கொண்டு, மோதல்கள் இடம்பெறும் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்.

மக்களுக்கான அனைத்துத் தேவைகளும் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் நிலையில், பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி நியமனமானது அவசியமற்றது' என்று கூறினார்.

இதேநேரம், பிரிட்டன் பிரதமரின் இந்த நடவடிக்கையை நிராகரித்து பிரான்ஸ் செய்திச்சேவையான ஏ.எவ்.சி.க்கு கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை வெளிநாட்டமைச்சர் போகொல்லாகம; ""இது இலங்கையின் உள்விவகாரங்களில் தன்னிச்சையாக தலையிடுவதற்கு சமனானது மட்டுமல்லாது, நாட்டின் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்காத தன்மையை ஒத்ததுமாகும்' என்று கூறியுள்ளார்.

அத்துடன், இந்த விடயமானது பிரிட்டனுடனான உறவுகளில் பாரிய விளைவுகளை ஏற்படுத்திவிடக் கூடுமென்றும் அமைச்சர் போகொல்லாகம எச்சரித்திருக்கிறார்.

பிரிட்டனின் இந்த நடவடிக்கை உதவியாக அமையப்போவதில்லையென்றும், இது விடயத்தில் லண்டனுடன் இனி எந்தப் பேச்சுகளுக்கும் இடமில்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது; போர் நிறுத்தமும் இல்லை: கோத்தபாய ராஜபக்சே தெரிவிப்பு


இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்து வருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அங்கு போரை நிறுத்தி விட்டு, சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று அந்த நாடுகள் வற்புறுத்தியுள்ளன.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம், போரையும் நிறுத்த மாட்டோம்'' என்று கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்கா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டாக இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தன.

குறிப்பிட்ட காலம் வரை போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அதில் கூறியிருந்தன. அமெரிக்கா, இங்கிலாந்து தனியாகவும் இந்த கோரிக்கையை விடுத்தன.

இதற்கு இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச ’’இதுபோல கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் நிபந்தனையின்றி முழுவதுமாக சரணடைந்து ஆயுதங்களை கீழே போட்டால்தான் அவர்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படும்’’ என்று கூறியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த கோத்தபாய, "இது புலிகளை காப்பாற்றுவதற்கான பகிரங்க முயற்சி' என்றும் தெரிவித்திருப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு வருங்காலத்தில் அரசியல் பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும், புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பிறகு தொடங்கப்படும் புதிய அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளையும் பங்கேற்க செய்யுமாறு இலங்கை அரசிடமிருந்து சர்வதேச சமுதாயம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு இணைத் தலைமை நாடுகள் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்துள்ளனர்.
ஆயுதங்களை களைந்து அடிபணிய முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழப்போரை கைவிடும் எண்ணம் இல்லை எனவும், தற்போது தேவைப்படுவது ஓர் யுத்த நிறுத்தமொன்றே எனவும் புலிகள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது