விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது; போர் நிறுத்தமும் இல்லை: கோத்தபாய ராஜபக்சே தெரிவிப்பு


இலங்கையில் அப்பாவி தமிழர்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்து வருவதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், அங்கு போரை நிறுத்தி விட்டு, சமரச பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று அந்த நாடுகள் வற்புறுத்தியுள்ளன.

இந்நிலையில், விடுதலைப்புலிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம், போரையும் நிறுத்த மாட்டோம்'' என்று கோத்தபாய ராஜபக்ஷ திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு உதவி செய்து வரும் நாடுகளான அமெரிக்கா, நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டாக இலங்கை அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்தன.

குறிப்பிட்ட காலம் வரை போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அதில் கூறியிருந்தன. அமெரிக்கா, இங்கிலாந்து தனியாகவும் இந்த கோரிக்கையை விடுத்தன.

இதற்கு இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும், அதிபர் ராஜபக்சவின் தம்பியுமான கோத்தபாய ராஜபக்ச ’’இதுபோல கேலிக்கூத்து வேறு எதுவும் இருக்க முடியாது. விடுதலைப் புலிகள் நிபந்தனையின்றி முழுவதுமாக சரணடைந்து ஆயுதங்களை கீழே போட்டால்தான் அவர்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படும்’’ என்று கூறியதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

இணைத் தலைமை நாடுகளின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த கோத்தபாய, "இது புலிகளை காப்பாற்றுவதற்கான பகிரங்க முயற்சி' என்றும் தெரிவித்திருப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு வருங்காலத்தில் அரசியல் பங்களிப்பு எதுவும் இருக்க முடியாது என்றும், புலிகளுக்கு எதிரான போர் முடிவடைந்த பிறகு தொடங்கப்படும் புதிய அமைதி பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளையும் பங்கேற்க செய்யுமாறு இலங்கை அரசிடமிருந்து சர்வதேச சமுதாயம் எதிர்பார்க்கக் கூடாது என்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை ஆயுதங்களை களைந்து சரணடையுமாறு இணைத் தலைமை நாடுகள் விடுத்த வேண்டுகோளை புலிகள் நிராகரித்துள்ளனர்.
ஆயுதங்களை களைந்து அடிபணிய முடியாதென தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழப்போரை கைவிடும் எண்ணம் இல்லை எனவும், தற்போது தேவைப்படுவது ஓர் யுத்த நிறுத்தமொன்றே எனவும் புலிகள் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.