பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வன்னியில் இலங்கைப் படையினர் மேற்கொள்ளும் தாக்குதலின் பின்னணியிலும், நேரடியாகவும் இந்திய அரசாங்கமும், படையினரும் முழு அளவில் இருப்பதாக, தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் பழ.நெடுமாறனும், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திவரும் ஒரேயொரு சிங்கள கட்சியான இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவும் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இலங்கை படையினரது தாக்குதல் முனைப்பு பற்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் கருத்து வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், தாக்குதல் முனைப்பு உண்மையாக இருந்தால், பல்லாயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட நேரிடும் என்பதால், இதனைத் தடுத்து நிறுத்த உடனடியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், தமிழ்நாடு, மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு இது தொடர்பான தார்மீகக் கடமை இருப்பதாகவும் குறிப்பிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.
பழ. நெடுமாறன் அவர்கள் திரு. கி. பழநியப்பனார் - பிரமு அம்மையார் ஆகியோருக்கு 1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தியதி மகனாக பிறந்தார். அவரது தந்தையார் மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.
1942 - ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 - ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 - ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையாரை சாரும். பழ. நெடுமாறனுக்கு 2 தமக்கைகளும், 3 தமையன்களும் உண்டு. பார்வதி அம்மையாரை மணந்தார்.
கல்வி மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளி படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரி படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வாழ்க்கை.
மாணவர் இயக்கம் பழ. நெடுமாறன் அவர்கள் மாணவப் பருவத்திலேயே தன்னை பொது வாழ்க்கைக்கு அற்பணித்தவர். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 - ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா அவர்களை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் அவர்களின ஹோம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் திரு. .டி.சோமசுந்தரம் அவர்களுடன் இணைந்து ரூ.10,000 நிதித் திரட்டி அளித்தார்.
அரசியல் ஈடுபாடு 1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி 1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர் 1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர் 1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர் 1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர் 1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்
உலகத் தமிழர் தொண்டு 1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டுகளுக்குத் தலைமை. 2002 - ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்.
தமிழீழப் பிரச்னையில் ஈடுபாடு 1982 - ஆம் ஆண்டில் யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பிரதமர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.ஜி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
1982 - ஆம் ஆண்டு, சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த திரு. தங்கத்துரை, திரு.குட்டிமணி, திரு. ஜெகன் ஆகியோரின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஏக மனதாக நிறைவேற்றச் செய்தார். 1983 - ஆம் ஆண்டில் கொழும்புவில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
1985 - ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் இரகசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார். 1987 - ஆம் ஆண்டு திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
1987 - ஆம் ஆண்டிலிருந்து 90 - ஆம் ஆண்டு வரை தமிழர் தேசிய இயக்கமும் மற்றும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் பிரச்னைக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் குடை அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவுச் செய்யப்பட்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை இந்த குடை அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடத்தப்பெற்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
1991 - ஆம் ஆண்டில் மீண்டும் இலங்கைச் சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளை ஆதாரப்பூர்வமாகத் திரட்டி வந்து பிரதமர் வி.பி.சிங் அவர்களை சந்தித்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார். நேயத் தொண்டுகள் 1981 - ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி கிராமப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
1991 - ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை கமிசனுக்கு புகார் செய்து அவர்கள் விடுதலைப் பெறுவதற்கு உதவினார்.
1993 - ஆம் ஆண்டு, சர்வ தேசக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார். 1998 - ஆம் ஆண்டு இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காகக் குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் அய்ம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது.
2000 - ஆம் ஆண்டு கன்னட நடிகர் இராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராஜ்குமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். 2000 - ஆம் ஆண்டு வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி கிராமவாசிகளின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
2007 - ஆம் ஆண்டு பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும், இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்.
சிறை மாணவ பருவத்திலிருந்து இன்று வரை பலப் போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 - க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு போலிஸ் காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
1993 - ஆம் ஆண்டு தடா சட்டத்தின் கீ.ழும் 2002 - ஆம் ஆண்டு பொடாச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார். பொடாவில் கைது செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமைப் பறிக்கப்பட்டார்.
இதழியல் பணி 1960 - “தமிழ்நாடு” நாளிதழ் துணை ஆசிரியர் 1962 - “குறிஞ்சி” வார இதழ், “செய்தி” நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர் 1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.
நூல்கள் எழுதப்பட்ட கால வரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன) அரசியல் நூல்கள் 1. நேதாஜி எங்கே? 2. பெங்களுர் முதல் டில்லி வரை 3. காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள் 4. நீதி கேட்கிறோம்? 5. சட்டமன்றத்தில் நமது குரல் 6. தேர்தல் தந்த திருப்பம் 7. மத்திய - மாநில உறவு - சில குறிப்புகள் 8. மதுரை முதல் மாஸ்கோ வரை 9. தமிழர் தன்னுரிமை முழக்கம் 10. தமிழன் இழந்த மண் 11. தமிழகம் - நதிநீர் பிரச்னைகள் 12. தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ் 13. Why a new Constituent Assembly? 14. புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக 15. தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள் 16. பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம் 17. தன்னுரிமையா? மாநில சுயாட்சியா? 18. மனித குலமும் தமிழ்த் தேசியமும் 19. மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு 20. தடா முதல் பொடா வரை 21. உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் ஈழத் தமிழர் சிக்கல் 1. இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள் 2. Srilanka Tamils Problem - A Shocking Revelation 3. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும் 4. Palestine Liberation Struggle & Tamil Eelam Liberation Struggle 5. பாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம் 6. தில்லியின் துரோகக் கொள்கை 7. ஈழப் போர்முனையில் புலிகளுடன் 8. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் 9. காவிய நாயகன் கிட்டு 10. தமிழீழம் சிவக்கிறது 11. தங்கவங்கமும் தமிழீழமும் 12. Tamil Eelam and Golden Bengal 13. காகிதப் புலி கருணா 14. இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்
நெடுங்கதைகள் 1. தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் “தென்றல்”-இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது) 2. சோழ குல வல்லி 3. அருவிக்கரை அழகி 4. முல்லை வனத்து மோகினி 5. சந்தன முல்லை இலக்கியம் - வரலாறு 1. தமிழ் வளர்த்த மதுரை 2. தமிழ் உயர் தனிச் செம்மொழி 3. எழுக உலகத் தமிழினம் 4. தமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள் 5. தமிழரும் கீதையும் 6. கவியரசர் என் காவலர் 7. பழந்தமிழர் பரவிய நாடுகள்
ஈழத்தமிழருக்காக வேலூர் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேமுதிக தொண்டர் சீனிவாசன் நேற்று இரவு 10 மணிக்கு தீக்குளித்தார்.
அவர் வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரை நேற்று இரவு 11மணிக்கு நேரில் சென்று உடல்நலம் குறித்து தெரிந்துகொண்டார்.
மருத்துவர்களிடம் சீனிவாசனின் நிலைமையை அறிந்துகொண்ட அவர், வெளியே வந்ததும் செய்தியாளர்களிடம், ‘’இது மாதிரி தொடர்சம்பவங்கள் நடக்கக்கூடாது. திரும்ப திரும்ப வலியுறுத்திவருகிறோம்..அப்படியிருந்தும் இதுமாதிரியான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன.
ஈழத்தமிழர் துயர் தாங்காமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திவிடுகிறார்கள்.
மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.. இதுமாதிரி சம்பவங்களில் ஈடுபடவேண்டாம்’’ என்று தெரிவித்துக்கொண்டார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்த என் கனவரின் தியாகத்திற்கு பணம் வேண்டாம்:வைகோவிடம் சீனிவாசன் மனைவி
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சீனிவாசன் (வயது 36). தேமுதிகவின் தீவிர தொண்டர்.
இவர் நேற்று இரவு 10 மணிக்கு தனது வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீர் என்று, இலங்கை தமிழர்களுக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் ஏதாவது செய்ய வேண்டும் அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார்.
உடல் முழுவதும் வெந்த நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக, அவரை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீக்குறித்த வாலிபர் சீனிவாசன், காதல் திருமணம் செய்து கொண்டவர். இவருக்கு அம்மு என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு 11மணிக்கு மருத்துவமனை வந்து சீனிவாசனின் உடல் நலம் குறித்து பார்த்தும் விசாரித்தும் தெரிந்துகொண்டார்.
அப்போது அவர், அம்முவிடம் சீனிவாசனின் மருத்துவசெலவுக்காக 10ஆயிரம் கொடுத்தார். ஆனால் அம்முவோ, என் கனவர் ஈழத்தமிழருக்காக தீக்குளித்துள்ளார். அந்த தியாகத்திற்கு பணம் கொடுக்காதீர்கள் என்று மறுத்தார்.
வைகோ பிடிவாதமாக, இது மருத்துவசெலவுக்காகத்தான். இதை வாங்கிக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை என்று கூறி பணத்தை கொடுத்தார்.
இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈழத்தமிழருக்கு ஆதரவாக புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் மாணவர்களை வாழ்த்திப்பேசவந்த இயக்குநர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிதாக புதுச்சேரி போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இதைத்தொடர்ந்து அவரை புதுச்சேரி போலீசார் தேடி வந்தனர்.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கும் போதே சீமான் சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் நடந்த ஈழதமிழர் ஆதரவு போராட்டத்தில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசினார்.
புதுச்சேரி போலீசார் சீமானை கைது செய்வதற்கு தமிழக போலீசாரின் உதவியை நாடியது.
தமிழக சட்டசபையில் சீமான் ஏன் இன்னும் கைதாகவில்லை என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, இன்னும் 2நாட்களுக்குள் கைதாகிவிடுவார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சீமான் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக வக்கீல்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவரை கைது செய்வதற்கு புதுச்சேரி போலீசார் விரைந்துவந்தனர். ஆனால் அதற்குள் சீமான் தனது பேச்சு முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.
புதுச்சேரி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியது. அச்சமயம், தானே நேரில் வந்து ஆஜராவதாக சீமான் அறிவித்தார்.
அதன்படி நெல்லை காவல்துறை ஆணையர் முன்பு சீமான் நேரில் ஆஜரானார். நெல்லை காவல்துறை ஆணையர் சீமானை புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி நீதிமன்றத்தீர்ப்பின் படி அங்கே காலாப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார் சீமான்.
பாளையங்கோட்டையில் பேசியபோதும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நெல்லை போலீசாரும் சீமான் மீது வழக்கு தொடர்ந்தது.
க்ரைம் நம்பர் 308/2009, இந்திய தண்டனை சட்டம் 505, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் 13(1), (B), 13(2) ஆகிய சட்டப்பிரிவுகளில் காவல்துறை சீமான் மீது வழக்குப் பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் தமிழக அரசின் உத்தரவை புதுச்சேரி சிறையில் இருக்கும் சீமானிடம் பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன் வழங்கினார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் சிறையில் அடைக்கப்படுவதால் அவர் 1வருடத்திற்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபடும் எண்ணத்தில் இருந்தார் சீமான். இந்த நிலையில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார். இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து பேச இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று புதுவை வந்தார்.
காலாப்பட்டு ஜெயிலுக்கு சென்ற அவர் ஒரு மணி நேரம் காத்திருந்து இயக்குனர் சீமானை சந்தித்து பேசினார். சுமார் 1/2 மணிநேரம் அவருடன் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இயக்குனர் சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு ஏவி உள்ளது. இதைநான் வன்மையாக கண்டிக்கிறேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களையும், திரை உலகை சேர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக மிரட்டுவதற்காகவே சீமான் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி ஏவி இருக்கிறார்.
இலங்கை தமிழர்களுக்காக பேசியதை தவிர தேசத்திற்கு எதிரான செயல்களில் சீமான் ஒருபோதும் ஈடுபடவில்லை. அவரின் பேச்சின் விளைவாக எந்த இடத்திலும் எத்தகைய கலவரமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் அவர் மீது இந்த கொடிய சட்டத்தை பயன்படுத்தி இருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத போக்காகும். சீமான் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக புதுவை வந்த பழ.நெடுமாறனை புதுவை பெரியார் திராவிடர் கழக தலைவர் லோகு.அய்யப்பன், செந்தமிழர் பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் தமிழ் மணி ஆகியோர் வரவேற்றனர்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஈழம் என்பதை ஏற்றுக்கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரிலே பெரியார் திராவிடர் கழக தலைமைக்கழக உறுப்பினர் பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன.108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி, எட்டயபுரம் சங்கரப்பேரி விலக்கு அருகே இன்று நடக்கிறது.
இதில் வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரணாப் முகர்ஜி தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அங்கிருந்து தூத்துக்குடி சென்றார்.
தமிழர் விரோதப்போக்கையே கடைப்பிடித்து இந்திய நாடாளுமன்றத்திலும் இராஜபக்சேயின் குரலையே ஒலித்த பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மதியம் 2.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் , தமிழர் தேசிய இயக்கத்தின் தூத்துக்குடி தமிழ்நேயன் ஏற்பாட்டில் , பெரியார் திராவிடர் கழக பால்.பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பிரணாப் முகர்ஜியின் உருவப்படத்தினை செருப்பாலும் , துடைப்பத்தாலும் அடித்து நெருப்பால் எரித்தனர். பின்பு ஊர்வலமாக செல்ல முயன்ற அனைவரும் வி.வி.டி சிக்னல் அருகில் காவல்துறையால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்க சுக.மகாதேவன் , பெரியார் திராவிடர் கழக மாநகரத்தலைவர் கோ.அ.குமார் , தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் டி.பிரபு , மனித உரிமைக்கழக வழக்கறிஞர் அதிசயகுமார் , பெரியார் திராவிடர் கழக மாவட்டத்தலைவர் சி.அம்புரோசு, மதிமுக தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜோயல், வழக்கறிஞர் நக்கீரன் , பெரியார் திராவிடர் கழக பால்ராசு சா.த.பிரபாகரன் , க.மதன், வ.அகரன் விருதுநகர் மதிமுக எம்.எல்.ஏ, வரதராஜன், சிவகாசி மதிமுக எம்.எல்.ஏ ஞானதாஸ் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் க.மோகன் , சந்தானம் , விடுதலைச்சிறுத்தைகள் மாநகரத்தலைவர் செந்தமிழ்பாண்டியன் மற்றும் திரளான தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டு கைதாகினார்கள்.
ஈழத்தமிழருக்காக தீக்குளிக்கும் தமிழர்கள் குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,
’’இந்திய வம்சாவளித் தமிழரான கோகுல ரத்தினம் இலங்கைக்கு மூன்று தலைமுறைக்கு முன்னால் சென்ற குடும்பத்தில் பிறந்தவர்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் வந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனையூர் ஊராட்சி காந்தி நகரில் சிலோன் காலனியில் வசித்து வந்தார்.
ஈழத்தமிழர்கள் படும் துன்பத்தை எண்ணி பல நாட்களாக வேதனையில் தவித்து வந்துள்ளார். தியாகி முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது மனம் வெதும்பி வருந்தி உள்ளார். அவர் வசிக்கின்ற அத்தெருவில் முத்துக்குமார் வீரவணக்க சுவரொட்டிகள் காணப்படுகின்றன.
அவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் தீக்குளித்து உடல்கருகி அந்த இடத்திலேயே மாண்டு விட்டார். அவர் எழுதிய கடிதமும், ரேசன் அட்டையும் பக்கத்தில் கிடந்தது.
அக்கடிதத்தில் இலங்கைத் தமிழருக்காகத் தீக்குளிக்கிறேன் என்று ஒன்றுக்கு மூன்று முறை குறிப்பிட்டு எழுதி உள்ளார். நான் ஒரு தி.மு.க. தொண்டன் உடன் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். உடன் காப்பாற்று. தமிழா எழுந்திரு, தமிழா உயிரைக்கொடு என் தமிழ்மக்களைக் காப்பாற்ற எனது உயிரை அர்ப்பணிக்கிறேன்.
இதுதான் எனது கடைசி ஆசை உடனடியாக என் தமிழர்களைக் காப்பாற்று என்று வேண்டி விரும்புகிறேன். டாக்டர் கலைஞர் உடல் நலம் முன்னேற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என் உயிரை தமிழ் மக்களுக்காகவும், தமிழினத் தலைவர்களுக்காகவும் அர்ப்பணிக்கிறேன்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காகவும், இந்தியாவில் வாழும் தமிழக மக்களுக்காகவும் நான் தீக்குளித்து எனது உயிரை தமிழ் உணர்வுக்காக என் உயிரை தமிழ் மண்ணுக்காக விட ஆசைப்படுகிறேன்.
தமிழினத் தலைவர் உடல்நிலை நல்லபடியாக குணமடைய என்னுடைய உயிரை விடுகிறேன். திருமாவளவனைக் கைது செய்யாதே- வைகோவை கைது செய்யாதே- ராமதாசை கைது செய்யாதே- பழ. நெடு மாறனைக் கைது செய்யாதே. நான் ஒரு தமிழன் என்று எழுதி கோகுலரத்தினம் என்று கையெழுத்து இட்டுள்ளார்.
இவருக்கு ஒரு மகனும், இரண்டு புதல்வியரும் உள்ளனர். மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவரது மகன் கிருஷ்ண ஆனந்தராஜ் கும்பகோணம் கள்ளப்புலியூர் கல்லூரியில் பி.ஏ. படிக்கிறார்.
ஈழத்தமிழர்களுக்காக ஏற்கனவே தீக்குளித்து உயிர்துறந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம் வரிசையில் ஏழாவது தியாகியாக கோகுலரத்தினம் தீக்குளித்து ஈழத்தமிழருக்காக தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
அவரது உன்னதமான தியாகத்தைப் போற்றி அவரது உடலுக்கு மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செலுத்தினேன். ஈழத்தமிழர்களைக் காக்க நெருப்பில் தங்களை கருக்கிக் கொள்ளும் துணிவும், தியாகமும் நம் நெஞ்சை உலுக்குகிறது எனினும், அந்தக் குடும்பங்களின் வேதனையும், துயரமும் அதைவிட கடுமையானதாகும்.
எனவே, இனியாரும் தீக்குளிக்க வேண்டாம். உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் 26ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு அப்பகுதியின் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் விசை ஆனந்த் தலைமை தாங்கினார். (இது புதுக்கோட்டை காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் புஷ்பராஜின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.)
இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவன்னண், திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள்.
மணிவன்னண் பேசும்போது, பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானி, வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக்கொண்டவர்கள் ஏன் பிரபாகரன் படத்தைப் பார்த்து பயப்படுகிறார்கள்.
பிரபாகரன் படத்தை செய்தித்தாள்களில் போடுகிறார்கள். ஆனால் சட்டையில் குத்திக்கொண்டால் கைது செய்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் படங்களை எடுக்க காங்கிரஸ் கட்சியினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தங்களின் தலைவர்கள் படங்களை வைத்தால், இந்தக் கூட்டத்தினர் சும்மா விடுவார்களா? வரும் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வரக்கூடாது என்பதே நமது நோக்கம்.
படத்தில் நடிக்கிற மணிவன்னண், வடிவேலுவை விட காமெடிகாரர்களாக இருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். ஈழத்தை உடைத்து அதில் ஆட்சி செய்வது நமது நோக்கம் அல்ல. அமைதி நிலவ வேண்டும் என்பதே நமது நோக்கம்.
கடந்த 15 வருடங்களாக பிரபாகரன் இறந்துவிட்டார், இறந்துவிட்டார் என செய்திகளை பரப்பி வருகின்றனர். கடந்த 15 வருடமாக ஒரு நபர் தொடர்ந்து இறந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பிரபாகரன் மட்டும்தான்.
தமிழினத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம். தமிழகத்தை விட்டே துரத்துவோம் என்றார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரையில் வக்கீல்கள் தொடர் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வக்கீல்களை தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொது செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.
மாலை 5 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
மதிமுக பொதுசெயலாளர் வைகோ பேசும்போது,
’’தமிழீழ மக்களின் துன்பத்தை தவிர்க்க உறக்கத்தில் இருக்கும் தாய் தமிழகம் விழிக்காதா என்று நினைத்த நேரத்தில் தொப்புள்கொடி உறவினரான சகோதரர்களை பாதுகாக்க, வக்கீல்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பாராட்டுக்குரியது.
எந்த போராட்டம் என்றாலும் கந்தகம் என்னும் தீப்பொறி களம் பதிக்க வேண்டும். அதுபோல தீக்குளித்து இறந்த முத்துக்குமார் என்னும் கந்தகம் மூட்டிய தீயை இனி யாராலும் அணைக்க முடியாது.
அது இன்று ஐ.நா.சபையிலும் எரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக 4 மாதங்களாக போராட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் இருந்து கொண்டு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் சுப்பிரமணியசாமி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை.
தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க முட்டைகளை வீசி உள்ளனர். தேனி மாவட்டத்தில் 400 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன் உயிர்பிழைக்க மாட்டானா என்று அவனது தயார் போல நாமும் எப்படி ஏங்கினோம்.
அதேபோல இலங்கையில் தாய்மார்கள், குழந்தைகள் அழிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு அரணாக போராடும் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவோம் என்று கூறும் ராஜபக்சேவின் நாக்கை அறுக்க முடியாதா என்று நாங்கள் துடித்துக்கொண்டு இருக்கிறோம். சென்னை ஐகோர்ட்டில் கற்களே இருக்காது.
போலீசாரே திட்டமிட்டு மூட்டை, மூட்டையாக கற்களை கொண்டு வந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். தற்காப்புக்காக வக்கீல்களும் தாக்குதலில் ஈடுபட்டதில் தவறில்லை.
வக்கீல்களின் அறவழி போராட்டம் தொடர வேண்டும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடும் அமைப்பே விடுதலைப்புலிகள் என்று தமிழர்களின் தாயக பகுதியில் நாள்தோறும் தமிழ் மக்களை சிங்கள அரசு அழித்து வருவதைக் கண்டித்தும் வழக்குரைஞர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் இன்று மதுரையில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உரையாற்றினார்.
’ஈழத்தமிழர்களின் தாய்மண்ணில் தற்போது தமிழ் இனம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு பிரச்சினையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கூறி வருகிறது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால் தமிழர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. இந்த பிரச்சினையில் இலங்கை அரசு என்ன சொல்கிறதோ அதை இந்திய அரசு ஏற்கக்கூடாது.
2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்தபோது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதில் தி.மு.க., பா.ம.க. உட்பட 15 கட்சிகள் கையெழுத்திட்டு இருந்தோம். ஆனால் அந்த கோரிக்கை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.
இலங்கை பிரச்சனை தொடர்பாக நான் டெல்லியில் சோனியாகாந்தியை 35 நிமிடங்கள் சந்தித்து உரையாடினேன். அவர் ஆர்வத்துடனும், இரக்கத்துடனும் இலங்கை தமிழர் பிரச்சினையை கேட்டறிந்தார். அதன் பிறகு வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியை சந்திக்கும்படி கூறினார். ஆனால் நான் அவரை சந்திப்பதற்கு முன்பே அவர் வெளியிட்ட அறிக்கை 7 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அமைந்து விட்டது.
இலங்கையில் வாழும் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக 60 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதில் 30 ஆண்டுகள் சாத்வீகமாகவும், 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் ஆர்வமாக உள்ளது. இலங்கையுடன் வெளியுறவு கொள்கையை வகுக்கும்போது எங்கள் கருத்துக்களை கேட்காமல் வகுக்கக் கூடாது. தமிழக முதல்வரை கலந்து பேசாமல் இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது. ஏனென்றால் ஜனாதிபதி உரைக்கு முரண்பாடாக பிரணாப் முகர்ஜியின் அறிக்கை அடுத்த நாளே அமைந்து விட்டது.
இலங்கையில் தற்போது நாள்தோறும் 100 பேர் வரை பலியாகி வருகிறார்கள். இப்போது நடக்கும் போர் தமிழ் இன அழிப்பு போராகும். இதை விடுதலைப்புலிகளால் மட்டும் தான் தடுக்க முடியும். தமிழர்களின் உரிமைகளுக்காக போராடி வரும் அமைப்புத்தான் விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகும். இலங்கை தமிழர் பிரச்சினையை திசை திருப்பத்தான் காவலர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இது சம்பந்தமாக இதுவரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைக் கண்டித்து போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அனுமதி வழங்க மறுக்கப்படுகிறது. எனவே 27-ந் திகதி போராட்டம் நடத்த மீண்டும் அனுமதி கேட்டு உள்ளோம். இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்க்க முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறினோம். ஆனால் அவர் நாங்கள் நாடகம் ஆடுவதாக கூறுகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காகத்தான் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கும் தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்று தனது உரையில் தெரிவித்தார்.
திருநெல்வேலி காவல் ஆனையர் மஞ்சுநாதா முன் இன்று இயக்குநர் சீமான் சரண் அடைந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ‘’தமிழ் மக்களை இந்த தேசம் மதிக்கவில்லை என்பதுதான் என் ஆதங்கம். அப்படி மதிக்காதவர்கள்தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்துகொள்கிறார்கள்.
நான் ஒரு போதும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவன் அல்ல.
நான் சட்டத்தை மதிக்காதவனோ,இந்த அரசுக்கு தொந்தரவு கொடுப்பவனோ, தலைவலி கொடுப்பவனோ அல்ல. அதை விரும்புபவனும் அல்ல’’ என்று தெரிவித்தார்.
கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.
அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று இயக்குநர் சீமான் தானே முன்வந்து திருநெல்வேலி காவல் ஆணையர் முன் சரண் அடைந்தார்.
சீமான் சரண் அடைந்தது குறித்து நெல்லை ஆணையர் மஞ்சுநாதா, புதுச்சேரி வழக்கு சம்பந்தமாக சீமானை கைது செய்திருப்பதாகவும் அவரை புதுச்சேரி காவல் துறையிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் சீமானை காவல் வேனில் ஏற்றிக்கொண்டு போலீசார் புறப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்தும் அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.
கறுப்புச்சட்டை அணிந்து இதில் கலந்து கொண்ட விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில் விஜயகாந்த் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகின்றது. எமது மக்கள் இலங்கையில் நாளாந்தம் செத்து மடிகின்றனர். அதனால் எமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.
இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சினையில் நாடகமாடி வருகின்றனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவோ, 'விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்' என்று கூறுகின்றார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும்.
விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.
அடுத்த நாட்டு பிரச்சினையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகின்றது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. எனவேதான் இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகின்றோம்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்து விட்டதாக கூறுகின்றனர்.
நான் என்றும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை தொடக்கத்தில் இருந்தே கூறி வருகின்றேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லை. ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் என்று நான் கூறுகின்றேன்.
தமிழர்கள் மீது இலங்கையில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி தொடர்பாகத்தான் பேசுகின்றனரே தவிர, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதில்லை.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பெரிய கட்சிகள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார் அவர்.
பேரணியின் நிறைவில் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு கையளித்தனர்.
நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி படித்த அறிக்கை ஈழ தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விட கொடுமையானது. இந்த துரோகத்துக்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தமிழ் இன மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று தாய்த் தமிழகத்து மக்களின் உள்ளம் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கையில், அந்த நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போடும் அக்கிரமத்தை இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் சிங்கள கொடியோரின் ஊது குழலாக மாறி அறிக்கை தந்துள்ளார்.
மத்திய அரசின் மீது 4 ஆண்டு காலமாக நான் கொடுத்த குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு பிரணாப் முகர்ஜி தந்த அறிக்கையே ஒப்புதல் வாக்குமூலம் ஆகிவிட்டது.
வெறும் 150 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவுக்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், அதுவும் 70,000 தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக புலிகள் பிடித்து வைத்திருப்பதாகவும் பிரணாப் முகர்ஜி கூறுகிறார். தமிழர்களை சிங்கள இராணுவம் துடிக்க துடிக்க கொல்வதை மூடி மறைத்து தமிழர்களை விடுதலைப் புலிகள் கொல்கிறார்கள் என்று மன சாட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு பிரணாப் முகர்ஜி குற்றம் சாட்டுகிறார்.
முல்லைத்தீவு பகுதியில் ஏற்கனவே மூன்று இலட்சம் தமிழர்கள் இருந்தனர். இப்போது வவுனியாவிலிருந்தும், கிளிநொச்சியிலிருந்தும் இரண்டு இலட்சத்து இருபதாயிரம் மக்கள் முல்லைத்தீவுக்குள் வந்துள்ளனர்.
தமிழ் இனத்தையே அழிக்க தன் கொலைகார இராணுவத்தை ஏவி உள்ள ராஜபக்ச கூறியதை இந்திய வெளிவிவகார அமைச்சர் அப்படியே வழி மொழிகிறார். 35 ஆயிரம் தமிழர்கள் புலிகளின் பிடியில் இருந்து விடுபட்டு வந்து விட்டார்களாம்.
இலங்கை அதிபர் சொன்னதை இந்தியாவின் மந்திரியும் சொல்கிறார். அதுமட்டுமல்ல, போர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் விரைவில் எல்லாம் முடிந்து விடும் என்றும், அதற்குமுன் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்து விடவேண்டும் என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உள்ளனர். பச்சிளம் குழந்தைகளும், தாய்மார்களும் வயது முதிர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். இக்கொடூர தாக்குதலுக்கு உலகின் பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், நெஞ்சை பிளக்கும் இந்த கொடிய துயரம் குறித்து ஒருவார்த்தைகூட பிரணாப் முகர்ஜி தன் அறிக்கையில் சொல்லவில்லை.
தமிழ்ப் பெண்கள் வவுனியா முகாமிலிருந்து இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு, அந்த இராணுவ மிருகங்களால் கூட்டம் கூட்டமாக கற்பழிக்கப்பட்டு அதன்பின் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சிங்களக் காடையர்கள் பிடியிலிருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை கூறியதை அறியும் போதே நம் அங்கமெல்லாம் பதறுகிறது. இதயமே நொருங்குகிறது.
இத்தனை கொடுமைகளையும், தமிழர் இன அழிப்புப்போரையும் சிங்கள அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க ஆயுதம் உதவி மட்டுமின்றி எல்லாவிதமான உதவிகளையும் இந்திய அரசு செய்து வருவதால்தான் ஒப்புக்கு கூட போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்திய அரசு தயாராக இல்லை.
பிரணாப் முகர்ஜியின் அறிக்கை ஈழ தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகளை விட கொடுமையானது. தமிழ் மக்கள் அருந்தும் தண்ணீர் தடாகத்தில் கலக்கப்படுகின்ற ஆலகால விஷம் ஆகும். இந்த துரோகத்துக்கு இனி எந்நாளும் மன்னிப்பு கிடையாது.
தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் போடப்பட்ட கொடூர சதித்திட்டத்தை யார் வகுத்தார்களோ அந்த மாபாவிகளுக்கு மன்னிப்பே கிடையாது. வினையை விதைத்து இருக்கிறார்கள். வினையை அறுப்பார்கள் என்று வைகோ கூறியுள்ளார்.
ஈழத்தில் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தின் சார்பில் தமிழ்நாடு தழுவிய மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தம் 2 ஆயிரம் கிலோ மீற்றர் நீளத்துக்கு நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் 30 லட்சத் திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
வடக்கே தாம்பரத்தில் தொடங்கி செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக தெற்கே கன்னியாகுமரி வரை கிட்டத்தட்ட 717 கிலோ மீற்றர் தொலைவுக்கு முதல் அணிவகுப்பு நடைபெற்றது.
மேற்கே கோவையில் தொடங்கி திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், நாகப்பட்டினம் வரை 352 கிலோ மீற்றர் தொலைவுக்கு 2 ஆவது மனிதச் சங்கிலி அணிவகுப்பு இடம்பெற்றது.
3ஆவது அணிவகுப்பு புதுச்சேரியில் தொடங்கி கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், கடலாடி வழியாக தூத்துக்குடி வரை நடைபெற்றது. கிட்டத்தட்ட 500 கிலோ மீற்றர் நீளத்திற்கு இந்த மனிதச் சங்கிலி நீண்டிருந்தது. இது தவிர மற்ற பகுதிகளில் ஏறக்குறைய 500 கிலோ மீற்றர் தொலைவுக்கு மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டிருந்தது.
அரசியல் தலைவர்கள் பேரணியில் தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலியில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, அக்கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் கண்ணப்பன், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா, "புதிய பார்வை" ஆசிரியர் ம.நடராசன், திண்டிவனம் இராமமூர்த்தி உள்ளிட்டோர் தாம்பரத்தில் கலந்து கொண்டனர்.
கோவை முதல் நாகை வரை நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் கலந்து கொண்டார். அவருடன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
தாம்பரத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி கன்னியாகுமரி வரை இடைவிடாமல் நீண்டிருந்தது. ஒரு சில இடங்களில் இடைவெளி இருப்பதை பார்த்ததும் அந்தந்த பகுதி மக்களும் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்குச் செல்வோரும் தாங்களாக முன்வந்து மனிதச் சங்கிலியில் நின்றிருந்தவர்களுடன் கரம் கோர்த்தனர். இதனால் 3 பாதைகளிலும் அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலி இடைவிடாமல் நீடித்தது.
மொத்தம் 30 இலட்சம் பேர் இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றனர் என்று மதிப்பிடப்பட்டிருக்கின்றது. அனைத்து ஊர்களிலும் பாடசாலை, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். பல இடங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் தங்களின் பெற்றோருடன் கைகோர்த்து நின்றனர்.
மனிதச் சங்கிலி அறிவிக்கப்படாத தேனி, திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் தனித்தனியாக மனிதச் சங்கிலி நடத்தினர். தாம்பரத்தில் மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்கள் "இந்திய அரசே இலங்கைப் போரை தடுத்து நிறுத்து', "துணை போகாதே துணை போகாதே இலங்கை அரசுக்குத் துணை போகாதே', "உதவி செய்யாதே உதவி செய்யாதே சிங்கள அரசுக்கு உதவி செய்யாதே', "இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு', என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.
இலங்கை பிரச்சினை என்பது விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை போர் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் என்றும், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை என்றும் மட்டுமே இந்தியா கருதுகிறது. இந்தியாவின் இந்த கண்ணோட்டத்தில், இந்த பிராந்தியத்தில் மாறி வருகிற சூழ்நிலையை மனதில் கொண்டு தீவிரமான மாற்றம் ஏற்பட வேண்டும். என டாகடர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பகை நாடு பாகிஸ்தான், சீனாவும் நமக்கு பகை நாடு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் நமக்கு நட்பு நாடல்ல. இந்த இரு நாடுகளும் இலங்கையில் இப்போது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இலங்கை போர்ப்படைக்கு தேவையான கன ரக ஆயுதங்களையும், எறிகணைகள் போன்ற குண்டுகளையும் சீனா வழங்கி வருகிறது. அத்துடன் திருகோணமலையில் சீனாவின் கப்பற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அம்பாந்தோட்டை என்ற இடத்தில் சீனா ஒரு முழு அளவிலான துறைமுகத்தை கட்டிக்கொண்டு வருகிறது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டால், அது சீனாவின் பராமரிப்பிலேயே இருந்து வரும்.
அதிபர் ராஜபக்ச தனது இளம் வயதில் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்தவர். அதுவும் சீனா சார்புடைய கம்யூனிஸ்டு பிரிவைச் சேர்ந்தவர், அவர் பதவிக்கு வந்த நாளிலிருந்து சீனாவுடன் மிக நெருக்கமாக உறவு வைத்துக் கொண்டு வருகிறார். இலங்கையுடன் வைத்துள்ள உறவின் மூலம் இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா ஆகியவற்றில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
இன்னொரு புறத்தில் பாகிஸ்தானும், இலங்கைக்கு பெருமளவில் ஆயுத உதவியும், போர் படைபயிற்சியும் அளித்து வருகிறது. இலங்கையைச் சேர்ந்த உளவுப்படையையும் பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப் படையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இதன் காரணமாக அண்மையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அந்த பயிற்சி அளிக்கப்பட்டு திரும்பியிருக்கிறார்கள். இந்த படையினரால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து இருக்கிறது. குறிப்பாக கூடங்குளம் அணுமின் நிலையம், கல்பாக்கம் அனல் மின் நிலையம் போன்ற இந்தியாவின் கேந்திரமான இடங்களுக்கு அச்சுறுத்தல் உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு உருவானால், அது இந்தியாவின் நட்பு நாடாக விளங்கும் சிங்களர்களை விட தமிழர்கள் உண்மையாகவும், நட்புறவு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். சிங்களர்களை நம்பி இந்தியா ஏமாந்து விடக்கூடாது. வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்தில் மாற்றங்களை செய்வதன் மூலம் இலங்கையுடனான உறவை மறுபரிசீலனை செய்வதற்கு இந்திய அரசு முன் வரவேண்டும். இலங்கையில் 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் மிக குறுகிய பகுதியில் தஞ்சம் புகுந்து உணவு, தண்ணீர் இருப்பிடம் இல்லாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களெல்லாம் போர்க்கைதிகளை அடைத்து வைக்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் செய்திகள் வருகின்றன. அந்த திறந்த வெளி சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களை நாள் தோறும் கடத்திச் சென்று கொன்று குவிக்கிறார்கள். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழித்து பின்னர் கொல்லுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மருத்துவமனைகள் தாக்கப்படுகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வெளியேறி விட வேண்டும் என்று இலங்கை அரசு கெடு விதித்து எச்சரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே அங்கிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த அலுவலர்களை வெளியேற்றக்கூடாது என்றும், அவர்களை அங்கிருந்து திரும்பி அழைக்கக் கூடாது என்றும், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்பி வைக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான தந்திகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு சென்றடைய வேண்டும். தொலைபேசி, பேக்ஸ், இ-மெயில், தந்தி போன்றவை மூலம் இந்திய வேண்டுகோள்களை உடனே அனுப்பி வைக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பு, நல்லுறவு, எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்து ஆகியவற்றை மனதில் நிறுத்தி இந்திய அரசு உடனடியாக தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. ஆனால் அது மட்டும் போதாது. போரை நிறுத்து என்று கட்டளையிட வேண்டும். போர் நிறுத்தப்படாவிட்டால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும். நமது போர்ப்படையை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள், உளவு விமானங்கள் உள்ளிட்ட அனைத்து சாதனங்களின் உதவியையும் இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இலங்கையில் அரசுக்கு விரோதமானவர்கள் என்று கருதும் நபர்களையெல்லாம் இலங்கை போர்ப்படையை சேர்ந்த உளவுப்படையினர் கடத்திச்சென்று படுகொலை செய்து வருவதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இதற்காக இராணுவத்தை சேர்ந்த உளவுப்படையினர் வெள்ளைவான் என்ற வாகனத்தை பயன்படுத்தி கடத்திச்சென்று கொன்று வருவதாக சொல்லப்படுகிறது. இதுவரையில் இத்தகைய கடத்தல் மூலம் 8000 முதல் 10000-க்கும் மேற்பட்ட நபர்கள் கடத்தி செல்லப்பட்டு திரும்பி வரவில்லை என்று சொல்கிறார்கள். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள் மற்றும் கொலைகள் இவ்வாறுதான் நடந்துள்ளன. இவ்வாறு டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பெப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த இந்திய அரசு ஓங்கி குரல் கொடுக்கும் நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்றும், இலங்கை இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் அதனால் அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் உரை மூலமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு தரப்பு மட்டும் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று உலகில் யாரும் இதுவரை சொன்னதில்லை.
முல்லைத் தீவில் இலங்கை அரசின் அழைப்பை ஏற்று தமிழர்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் 35 ஆயிரம் பேர் வந்துவிட்டதாக அந்த அரசு பொய் சொல்கிறது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தாங்காமல் லண்டனில் இருந்து ஜெனீவா சென்று, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் எதிரே முருகதாசன் என்ற தமிழ் இளைஞர் தீக்குளித்து இறந்துள்ளார்.
தமிழகத்திலும் பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இந்திய அரசு இலங்கையிலே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஓங்கிக் குரல் கொடுத்தாக வேண்டும். அந்த நிலையை உருவாக்க தமிழகம் கொந்தளிக்க வேண்டும். நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக வீதிகளில் கரம் கோர்த்து நிற்குமாறு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது.
தண்ணீரில் தத்தளிக்கும் குழந்தை, தாயின் கரங்களைப் பற்றி துடிப்பதைப் போல இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் இருந்து நம்முடைய கரங்களை எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள (பிப்ரவரி 17) மனிதச் சங்கிலியில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரனுக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் " உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள்" என்று உணர்ச்சிபொங்க உரையாற்றினார். இக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழ் தேசியப்பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், " இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மகிழுந்து எரிக்கிற கட்சியாக காங்கிரசு கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய மகிழுந்தை எரித்தவர்களை, இந்திய பொதுவுடைமைக்கட்சியின் அய்யா தா.பாண்டியன் அவர்களின் மகிழுந்தினை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?
நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமரனும் ஜனநாயகவாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. முத்துக்குமரன் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் மகிழுந்தையும், தா.பாண்டியன் மகிழுந்தையும் எரித்த காங்கிரசுகாரன் தேசியவாதி.
தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை இராஜபக்சே சொல்லவில்லை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.
புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு.7 நாடுகளின் இராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.
உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் " என்றார்.
கூட்டத்தில் பேசிய சீமான், நடுவண் அரசையும், இலங்கை அதிபரையும் சற்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இடையில் பேசிய அவர் ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
இலங்கையில் போரை நிறுத்தக்கோரியும், இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் புதுவையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந் திகதி சந்தித்த இயக்குநர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை காவலர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.
இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் பிணையில் வெளிவர முடியாதையாகும்.
புதுவையில் காங்கிரசு கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார். சீமானை கைது செய்ய புதுச்சேரி காவலர்கள் தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் மூன்றாம் முறையாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சிக்கலில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக செயற்படுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதை கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
புதுடில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே காலை 8:00 மணிக்கு உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், தேசியச் செயலாளர் அ.ராஜா, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.இராமதாஸ், பொன்னுசாமி, அ.கி.மூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அத்வானி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசித் தாக்கப்படுகின்றது.
உலக வரலாற்றில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய கொடுமையை நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாக்கப்படுகின்றனர்.
இவை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.
இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் வருத்தமளிக்கக்கூடிய விடயம் என்னவெனில், இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு இந்த விடயத்தில் பொறுப்பின்றி செயற்படுகின்றது.
இலங்கை இனச் சிக்கலுக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுக்கள் மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, இலங்கையில் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அத்வானி.
முன்னதாக வைகோ ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:
இலங்கையில் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய அரசுதான் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இராணுவ உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி போன்ற அனைத்தையும் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்குகின்றது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது போது சிறிலங்காவுக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா இதுவரை பெயருக்குக்கூட போரை நிறுத்தும்படி வலியுறுத்தவில்லை என்றார் வைகோ.
இப்போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும், இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.
போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது.
இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.
போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைப்புலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.
போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும்.
இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
படித்ததோ மின் அணுவியல் பட்டயம் வேலை பார்பதோ கப்பல் பட்டறையில்.
அனுபவம் துரோகிகளிடம் இருந்து கற்று கொண்டது,
கற்க விரும்புவது நல்லவர்களிடம் நான்கு வார்த்தை.