தமிழ் தியாகிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் தியாகிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க (விஜயகாந்த்) பிரமுகர் தீக்குளிப்பு

இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தேமுதிக பிரமுகர் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 அகவையான கூலித் தொழிலாளி சீனிவாசன் சிறு அகவை முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட சீனிவாசனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் நேற்று வியாழக்கிழமை மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றபொழுது பேருந்து நிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இரவில் வீட்டுக்கு வந்தவர் தொலைக்காட்சி செய்திகளிலும் ஈழப்பிரச்சனை குறித்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். இதனால் மனம் கலங்கிய சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.







இரவு 10.50 மணியளவில் திடீரென்று மண்ணெண்ணெய் கானை எடுத்துக்கொண்டு தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு சென்றவர் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், " இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக்கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் " என்றார்.

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த தமிழ் இன தியாகி மரணம்

ஈழத்தமிழருக்காக தீக்குளித்த திமுக தொண்டர் சிவப்பிரகாசம் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்; தமிழர்கள் நலம் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி சார்பில் 21ஆம் தேதி மாலை, சென்னை, மாவட்ட தலைநகர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் மாபெரும் இளைஞர் சங்கிலி போராட்டம் நடந்தது.
அப்போது, தரமணி மகாத்மா காந்தி நகர் வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம் (55) என்பவர் செல்லம்மாள் கல்லூரி அருகே நின்றிருந்தார். திடீரென்று புதிதாக கட்டப்படும் ஓட்டல் வளாகத்துக்குள் சென்றார். அங்கிருந்து 2 லிட்டர் பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்து என்று கத்திக் கொண்டே உடலில் தீ வைத்துக் கொண்டார். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மற்றும் திமுகவினர் அவரை காப்பாற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிவபிரகாசம் தரமணி மகாத்மா காந்தி நகர் ஜன்டா தெருவை சேர்ந்தவர். திருவான்மியூர் மாநகர போக்குவரத்து டெப்போவில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்போது தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் திருவான்மியூர் பகுதி தி.மு.க. பிரதிநிதியாக 2 முறை இருந்தார். இவரது மனைவி மனோரமா (48). மகள்கள் செல்வி (28), தேவி (27), சுஜாதா (21) ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. மகன் சிவக்குமார் (25), மகள் சாந்திக்கு (22) திருமணமாகவில்லை.
சிவபிரகாசம் தீக்குளித்த தகவல் அறிந்த அவரது மனைவி மனோரமா மற்றும் பிள்ளைகள், மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்த்தனர். அவர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இதுபற்றி மனோரமா கூறுகையில், வேலைக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். மாலையில் தி.மு.க. கூட்டத்துக்கு சென்று வருகிறேன் என்றார். ஆனால் அவர் தீக்குளித்த தகவலைத்தான் கேட்டேன் என்று சோகத்துடன் கூறினார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிவபிரகாசத்தை, அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் நேரில் சென்று பார்த்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றிட வேண்டும். அங்கு இருதரப்பினரும் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன்படி, தி.மு.க. இளைஞரணியின் சார்பில் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக தரமணியை சேர்ந்த தி.மு.க. தோழர் சிவப்பிரகாசம் புறப்பட்டு இருக்கிறார். கிண்டி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் அருகே மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் தீக்குளித்து இருக்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், 80 சதவீதம் உடல் உறுப்புகள் கருகிய நிலையில் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று டாக்டரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டாத நிலையில்தான் உள்ளார். தீக்குளித்த சிவப்பிரகாசம் கையில் ஒரு கடிதத்தை வைத்திருந்திருக்கிறார். முதல் அமைச்சர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "தலைவர் அவர்களுக்கு, இலங்கையில் போரை நிறுத்த வேண்டும். அங்கு தமிழர்களுடைய உயிரை காக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். அவருடைய இந்த முயற்சிக்காக வருந்துகிறேன் என்பதை வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
முன்னதாக. கவிஞர் கனிமொழி எம்.பி, சிவப்பிரகாசத்தை பார்த்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, "சிவபிரகாசம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீக்குளித்துள்ளார். அவருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கட்சி தலைமையிடத்தில் பேசி விரைவில் வழங்கப்படும்'' என்றார். கவிஞர் கனிமொழியுடன் முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன், விஜயா தாயன்பன், டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் உடன் வந்தனர்.
தீக்குளித்த சிவப்பிரகாசத்தின் உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டு இருந்ததால் அவர் ஆபத்தான நிலையில் இருந்தார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக, சென்னை கொளத்தூரை சேர்ந்த முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், புதுவண்ணாரப்பேட்டை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன் ஆகியோர் தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த நிலையில், தி.மு.க. தொண்டர் சிவபிரகாசம் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தன் இறுதி நிகழ்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பு

ஈழத் தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்த 'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தனின் இறுதி நிகழ்வில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டோர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதில் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனால் ஊர்வலத்தின் ஒரு பகுதியினர் கலைந்து சென்றுள்ளனர்.

பேருந்துகள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இதில் பல பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. முக்கிய சாலையில் இருந்த வங்கி மற்றும் சில கடைகளும் சேதமடைந்தன.



மஞ்சக்குப்பம் அரசு பணியாளர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 'வீரத் தமிழ்மகன்' தமிழ்வேந்தன் உடலுக்கு லட்சக்கணக்கானோர் வணக்கம் செலுத்தினர்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்களான மருத்துவர் இராமதாஸ், பழ. நெடுமாறன், வைகோ, தொல். திருமாவளவன், வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன், விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வம், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ.குரு, மாநிலத் துணைத் தலைவர் திருமால்வளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்து பாதுகாப்புக் குழுத் தலைவர் மருத்துவர் கோவிந்தசாமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திருஞானம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய வைகோ,

"இலங்கைத் தமிழர்களுக்காக இதுவரை வெளிநாட்டுத் தமிழர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரை மாய்த் கொண்டுள்ளனர். யாரும் உயிர் மாய்த்துக் கொள்ளவேண்டாம். தமிழ்வேந்தன் விட்டுச் சென்ற தீ இனி யாரையும் தொடக்கூடாது. இனி உயிருடன் இருந்து எல்லோரும் போராட வேண்டும்" என்றார்.



பழ. நெடுமாறன் உரையாற்றிய போது,
"தமிழ்வேந்தன், அர்ப்பணித்த உயிர் நம்மை நெகிழ வைக்கிறது. உணர்ச்சிவயப்பட்டு யாரும் இனி உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது. அமைதியான தமிழ்வேந்தன் எரிமலையாக வெடித்திருப்பது உலகத் தமிழர்களை உசுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் இதனை நினைத்து உலகத் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் போர் நிறுத்தத்திற்குப் போராட வேண்டும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக உயிர்நீத்த தமிழ்வேந்தன் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாவாக உதவியாக வழங்குகின்றோம்" என்றார்.



மருத்துவர் இராமதாஸ்,
"தமிழகத்தில் தனித்தனியாகப் போராடியவர்கள் இப்போது ஒன்றிணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை ஏற்படுத்தி ஓரணியாகப் போராடி வருகிறோம். திருமாவளவன் 4 நாள் உண்ணாநிலை இருந்தபோது உடல் சோர்ந்ததே ஒழிய உள்ளம் சோர்வடையவில்லை.

நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி உயிரை மாய்த்துக் கொள்வதில் எந்த நன்மையும் கிடையாது. நாம் ஒன்றாக இருந்து மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தி தமிழக அரசையும், ஒன்றுமே செய்யாத இந்திய அரசையும் திசை திருப்பும் அளவிற்குப் போராட்டம் நடத்தி இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துவோம் என்றேன்.

அதனை ஏற்று அவரும் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இதுவரை ஆட்சியில் இருப்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று இந்தியாவையும், உலகத்தையும் வலியுறுத்தி வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்வில் படுகாயமடைந்து 64 பேர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தமிழ்வேந்தனோடு இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை விட்டுவிட வேண்டும். இலங்கைச் சிக்கலுக்குத் தீர்வுகாணும் வழிகளை சிந்தியுங்கள்.

இந்தச் சிக்கலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கடைசிவரை போராடுவோம். இலங்கையில் நடப்பது போர் அல்ல. அது ஒரு விடுதலை இயக்கம். விடுதலைப் புலிகள் எப்போதும் தோல்வியடைய மாட்டார்கள். ஈழம் வெல்லும். எனவே அனைவரும் நம்பிக்கையோடு இருப்போம். இணைந்து போராடுவோம். எல்லா முயற்சியும் செய்து போர் நிறுத்தம் செய்வோம். தமிழ்வேந்தனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்" என்றார்.



தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஊர்வலம் கடலூர் முதுநகரில் உள்ள சுடுகாட்டை அடைந்து அங்கு தமிழ்வேந்தனின் உடல் புதைக்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கடைசியாக வந்த சிலர் வழியில் இருந்த சில பதாகைகளை அப்புறப்படுத்தினர். அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

இதில் யு.என்.ஐ. ஊடகவியலாளர் சிறீதர், 'தினகரன்' ஒளிப்படக் கலைஞர் சேகர் மற்றும் முருகவேல் ஆகியோரையும் காவல்துறையினர் அடித்து விரட்டினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

கடலூரில் ஈழத்தமிழருக்காக விடுதலை சிறுத்தைகள் உறுப்பினர் தீக்குளித்து மரணம்

கடலூர் குழந்தை காலனியை சேர்ந்தவர் ஜோதி என்கிற தமிழ்வேந்தன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார்.
இன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் கோர்ட் அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார். அருகில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் தமிழ் வேந்தனின் முழக்க குரல் கேட்டு ஓடிவந்து அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.



ஆனால் அதற்குள் தமிழ்வேந்தனின் உடலில் பெருமளவு தீப்பற்றி எறிந்து போனது. அவரைக்காப்பாற்ற கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் காப்பாற்றிய போலீசாரும் பொதுமக்களும்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடலூரில் உள்ள தனியார் மருத்துமனையான கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தமிழ் வேந்தன். உயிருக்கு போராடி வரும் நிலையில் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்த தமிழ் வேந்தன், “ ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள்.

29 வயதான தமிழ் வேந்தனுக்கு பிறந்து 7 மாதமே ஆன கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீக்குளிக்க முன்னதாக சோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீக்குளிப்பு முடிவு குறித்து தெரிவித்ததாகவும், அவர் ஆறுதல் கூறியதுடன், அது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், அதனையும் மீறி சோதி தீக்குளித்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலதிக இணைப்புக்கள்

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ்வேந்தன் இந்திய நேரம் இரவு 1.20 மணியளவில் வைத்தியசாலையில் மரணமானார்.









திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்!

ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி,

“ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான்.

இன்னைக்கு காலையில அவனுக்கு சோறு போட்டுட்டு கூலி வேலைக்கு போயிட்டேன். அங்க இருந்தப்பதான் புள்ள இப்படி பண்ணிகிட்டான்னு சொன்னாங்க. அவனுக்கு எல்லாமே திருமாவளவனும், இலங்கையில இருக்கிற பிரபாகரனும்தான். அவங்க ரெண்டு பேரு மேலயும் பைத்தியமா இருப்பான். ” என்றபடி கதறினார்.

தமிழ்வேந்தனுக்கு ஜான்சி என்கிற மனைவியும், சந்தோஷ் என்கிற 7 மாத கைக்குழந்தையும் இருக்கிறார்கள்.

தமிழ்வேந்தனுடன் பிறந்த அண்ணன் சிவா, அக்கா சாந்தி இருவரும் மருத்துவமனையில் அழுதபடி இருந்தனர். தந்தை பஞ்சாங்கமும் கூலி வேலை செய்பவர்தான்

மரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் சுவிஸ் தமிழர்கள் போர்க்குரல்

இன்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர்.
ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர்.

தொடர்ந்து தாயகத்தினதும் தமிழீழ விடுதலையினதும் அளப்பரிய பற்றினால் நாடு கடந்து வந்து மனித உரிமை மன்றத்துக்கு முன்னால் தீ மூட்டி உயிர்த்தியாகம் புரிந்த முருகதாசனின் மரணம் உலகத் தமிழ் மக்களை ஆற்றாத துயரத்துக்குள் தள்ளியுள்ள இவ்வேளையில் சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற நேரம் முதல் ஐநாவை நோக்கி வருகை தந்த வண்ணமிருந்தனர்.

கதறியழும் தாய்மார் கண்ணீர் விட்டு அழும் மாணவர்கள் உணர்வுகளை அடக்கமுடியாது தவிக்கும் தமிழர்கள் என்று எல்லோரும் சோகம் சூழ எமது மக்கள் மீதான சிறீலங்கா அரசின் கொலை வெறி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென முழக்கம் இட்டவாறு ஐ.நா முன்றலை ஊடறுத்துச் செல்லும் பிரதான சாலையை வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.







































ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்; மரணசாசன அறிக்கை இணைப்பு

இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களை காப்பாற்றக்கோரி சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை ஐரோப்பிய தலைமையகம் முன்பாக ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்துள்ளார்
காவற்துறையினர் தீக்குளித்த தமிழரை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மருத்துவ சிகிச்சைசெய்தும் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞர் லண்டனில் வசிப்பவர் எனவும், இந்த இளைஞரின் பெயர் முருகதாஸ் எனவும், இவருக்கு 27 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகதாஸ் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று 14.00 மணியளவில் ஐ. நா முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






இலங்கைத்துயர் தாங்க முடியவில்லை. தீயிட்டுக் கொள்கிறேன்: அமரேசன் தனது கைப்பட எழுதிய கடிதங்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை கோழிக்கறிக்கடை வியாபாரி அமரேசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் இழந்தார். பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அவர் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தார் என்று கூறியதை சிலர் மறுத்தனர்.


திங்கட்கிழமை நடந்த அவரது இறுதிச் சடங்கில் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், தா.வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவரும் இலங்கத் தமிழர்களுக்காகத்தான் அமரேசன் உயிர் நீத்ததாக குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமரேசன் வீட்டுக்கு ஒரு உள்நாட்டு தபால் வந்தது. அமரேசன் தனது மூத்த மருமகன் முத்து கணேஷுக்கு எழுதிய அந்தக் கடிதம் அமரேசன் விலாசத்துக்கே திரும்பி வந்துள்ளது.

அந்தக் கடிதத்தை அமரேசன் குடும்பத்தினர் பிரித்து படித்தனர்.

அமரேசன் கடிதம்

''எல்லாம் அவன் செயல். உயர்திரு பெரிய மாப்பிள்ளை அவர்களுக்கு மாமா எழுதியது. நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்.

இறைவன் கொடுத்த கெடு முடிந்து விட்டது. இலங்கை தமிழர்களை நினைத்து, அவர்கள் படும் துயரங்களை கற்பனையில் நான் அங்கு வசிப்பதாக நினைத்துப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. நினைப்பதற்கே மிக, மிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்தால்....ஒரு மணி நேரம் கரண்ட் போய் விட்டாலே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்டுக்குள் குழந்தை குட்டிகளுடன் பயந்து, பயந்து வாழ்கிறார்கள்.

ஆகையால் என் உடம்பை தீயிட்டுக் கொள்கிறேன். தற்கொலை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த தற்கொலை என்னோடு முடியட்டும். உலகத்தில் இனிமேல் யாரும், எதற்கும் இந்தச் செயலை செய்ய வேண்டாம். எல்லாரும் நலமுடன் வாழுங்கள்.''

இதே போல அமரேசன் தனது மூத்த மகன் சங்கருக்கும் எழுதிய ஒரு கடிதம் வந்து இருப்பதாகவும், அதிலும் இலங்கை தமிழர்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் அமரேசன் குடும்பத்தினர் தெரிவித்தனர்

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசனின் இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு


இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசனின் இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசன் உடலம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் வணக்கத்துடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவருக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். அமரேசன் அதே பகுதியில் கோழிக்கறி வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் அமரேசன் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார்.
மருத்துவமனைக்கு நள்ளிரவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவும் சென்று பார்த்தனர்.



அமரேசன், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்ததாக கூறி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் அவரது இறுதி நிகழ்வு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நேற்று காலை 10:00 மணியளவில் அமரேசனின் உடலம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டையில் உள்ள அமரேசனின் வீட்டுக்கு உடலம் எடுத்துச் சென்று பொதுமக்கள் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது.





வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பழ.நெடுமாறன், டொக்டர் தமிழிசை சௌந்ததராஜன் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் வந்து வணக்கம் செலுத்தினர்.

"இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயிர் நீத்த தியாகி அமரேசனின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும்'' என்று நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மாலை 5:15 நிமிடமளவில் அமரேசனின் உடலம் மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.



ஊர்வலத்தில் பழ.நெடுமாறன், வைகோ, தொல். திருமாவளவன், "புதிய பார்வை" ஆசிரியர் எம்.நடராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், திராவிட விழிப்புணர்ச்சி இயக்க தலைவர் பி.டி.குமார் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், தொண்டர்களும் நடந்து வந்தனர். அங்கு அவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின்னர் அமரேசனின் உடலம் அடக்கம் செய்யப்பட்டது.

நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் அமரேசனின் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக சென்றனர். அமரேசன் இறந்ததையொட்டி வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

"வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலத்தில் 15,000-க்கும் அதிகமானேர் கறுப்புக்கொடியுடன் பங்கேற்பு

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி சீர்காழியில் தீக்குளித்து இறந்த காங்கிரஸ் தொண்டர் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பழ.நெடுமாறன் தலைமையில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் உட்பட 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கறுப்புக்கொடியுடன் கலந்துகொண்டனர்.

நேற்று சனிக்கிழமை இறந்த "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலம் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் மு.க.பெரியசாமி தலைமையில் 1,000-க்கும் அதிகமானோர் மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

பின்னர், மயிலாடுதுறையில் இருந்து வைத்தீஸ்வரன் கோவில் வழியாக சீர்காழி எல்லைக்குச் சென்று, அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வீட்டுக்கு உடலம் கொண்டு செல்லப்பட்டது.




இதனை அறிந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், காங்கிரஸ் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி, ம.நடராஜன், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சித் தலைவர் துரையரசன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மாவட்டத் தலைவர் பரசுராமன், பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் உட்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை சோ்ந்தவர்களும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனின் உடலத்துக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர்.

மாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் "வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரன் உடலம் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, ஈசானித் தெருவில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் வேல்முருகன், மு.க.பெரியசாமி, உலகநாதன், பத்மாவதி, சிவபுண்ணியம், துரை. ரவிக்குமார், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, மாநிலத் துணை செயலாளர் பழனிச்சாமி, நாகை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் செல்வராசு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மார்கோனி, கோகுல், மாநில வன்னியர் சங்க துணைத் தலைவர் ஐயப்பன், வன்னியர் சங்கத் துணை பொதுச் செயலாளர் மூர்த்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அகோரம், அப்துல் ஹமீட், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் சேகர், மாவட்டச் செயலாளர் குணவேந்தன், ஈழவளவன் உட்பட15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கறுப்புக்கொடிகளுடன் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்வில் மருத்துவர் இராமதாஸ் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

தமிழ் இன உணர்வை நாம் இருந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்காக உங்கள் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம்.

ஈழத்தமிழர்களுக்கான போராட்டத்தில் இளைஞர்களை அணித்திரட்டுங்கள். தீக்குளிப்பு சம்பவத்தை யாரும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். 1995 இல் ஈழத் தமிழர்களுக்காகப் பெரம்பலூரில் பெரியார் சிலை முன்பு அப்துல் ரகுப் என்ற இளைஞர் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். அதுபோல் இனி நடக்கக் கூடாது.

தமிழின உணர்வுக்குப் பேட்டியாகப் பேரணி, பொதுக்கூட்டம் என்று பல ஆண்டுகளாக கலைஞர் செயற்பட்டு வருகிறார்.


கலைஞரே நீங்கள் அழைத்தால் போரை நிறுத்துவதாக உறுதி அளித்தால் உங்களுக்காக நாங்கள் ஓடி வருகிறோம்.

இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லை. அரசியல் கட்சியாகவும் இல்லை. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் துளியுமில்லை.

இலங்கையில் உடனடியாக நாளையே போரை நிறுத்த உத்தரவாதம் தந்தால் உங்கள் பின்னால் அணிவகுத்து வருகிறோம் என்றார் மருத்துவர் இராமதாஸ்.

இந்நிகழ்வில் வைகோ உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழர்களைப் பாதுகக்க வேண்டும் என்கிற உணர்வு தமிழகம் முழுவதும் உள்ளது என்பது உண்மை. அதற்காக மருத்துவர் இராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன் உள்ளிட்ட நாங்கள் யாரும் தீக்குளிப்பை ஊக்குவிக்கவில்லை.

முத்துக்குமார் தீக்குளித்த போதே நாங்கள் மன்றாடி கேட்டுக்கொண்டோம். வாழ வேண்டிய தமிழர்களுக்காக போராடுங்கள்.

எந்த வேதனையைக் காட்டி சொன்னாலும் போர் நிறுத்தம் செய்ய சொல்ல இந்தியா மறுக்கிறது. சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் தந்து உதவுகிறது.

உலக நாடுகள் ஒன்று சேர்ந்து போரை நிறுத்த சொன்னாலும், இந்திய அரசு சொல்லவில்லை.

இந்நிலையில், ரவிச்சந்திரன் தீக்குளிப்பதற்கு முன்பு அவர் மரண சாசனம் எழுதியுள்ளார். அதனை அவரின் பெற்றோர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதைக் காவல்துறையினர் வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் என்று எல்லோருக்கும் தெரியும். இந்தத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யர் வந்தபோது அவருடன் ரவிச்சந்திரன் இலங்கைத் தமிழருக்காக வாதாடியுள்ளார். அவரின் குடும்பமே காங்கிரஸ் குடும்பம் தான், ஆனால், தங்கபாலு ஏன் இதை மறுக்க வேண்டும். கட்சியை கடந்து இன உணர்வுடன் ரவிச்சந்திரன் தீக்குளித்துள்ளார்.

தமிழ் உணர்ச்சியை யாரும் தடுத்துவிட முடியாது. தடை போட முடியாது. இப்போதாவது இந்திய அரசு, இலங்கையில் போரை நிறுத்தச் சொல்ல வேண்டும். நாங்கள் பிணத்தை வைத்து அரசியல் செய்யவில்லை.

நேற்று பட்டி தொட்டியெல்லாம் கறுப்புக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆனால், ஆங்கில நாளேடுகளில் ஒரு வரி செய்தி கூட வரவில்லை. ஆங்கில ஊடகங்கள் ராஜபக்சவின் கைக்கூலிகளாக மாறிவிட்டார்களா என்ற ஐயம் உள்ளது.

விடுதலைப் புலிகளை எப்போதும் அரசியலில் கேடு வந்தாலும் ஆதரிப்போம். கட்சி கடந்து ஈழத் தமிழர்களுக்காகப் போராடி வருகின்றோம் என்றார் அவர்.

இந்நிகழ்வில் பழ.நெடுமாறன் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:

இலங்கைத் தமிழருக்காக மாய்த்துக்கொள்வது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இனி யாரும் செய்யக்கூடாது என்றார்.

இந்நிகழ்வில் திருமாவளவன் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளதாவது:

ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவதற்கு களங்கள் தயாராக உள்ளன. அங்கு வந்து நின்று நிலைத்து உறுதியுடன் போராடுங்கள். யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்றார் அவர்.