இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசனின் இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு


இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசனின் இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த அமரேசன் உடலம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரின் வணக்கத்துடன் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (வயது 65). இவருக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். அமரேசன் அதே பகுதியில் கோழிக்கறி வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் அமரேசன் தனது உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அமரேசன் உயிரிழந்து விட்டார்.
மருத்துவமனைக்கு நள்ளிரவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவும் சென்று பார்த்தனர்.



அமரேசன், இலங்கை தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்ததாக கூறி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் அவரது இறுதி நிகழ்வு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

நேற்று காலை 10:00 மணியளவில் அமரேசனின் உடலம் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டையில் உள்ள அமரேசனின் வீட்டுக்கு உடலம் எடுத்துச் சென்று பொதுமக்கள் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது.





வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், பழ.நெடுமாறன், டொக்டர் தமிழிசை சௌந்ததராஜன் உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் வந்து வணக்கம் செலுத்தினர்.

"இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயிர் நீத்த தியாகி அமரேசனின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபா நிதி வழங்கப்படும்'' என்று நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மாலை 5:15 நிமிடமளவில் அமரேசனின் உடலம் மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.



ஊர்வலத்தில் பழ.நெடுமாறன், வைகோ, தொல். திருமாவளவன், "புதிய பார்வை" ஆசிரியர் எம்.நடராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், திராவிட விழிப்புணர்ச்சி இயக்க தலைவர் பி.டி.குமார் மற்றும் பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், தொண்டர்களும் நடந்து வந்தனர். அங்கு அவர்கள் வீரவணக்கம் செலுத்திய பின்னர் அமரேசனின் உடலம் அடக்கம் செய்யப்பட்டது.

நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் அமரேசனின் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக சென்றனர். அமரேசன் இறந்ததையொட்டி வண்ணாரப்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

1 comments:

தமிழ். சரவணன் சொன்னது…

ஐயோ கொடுமையே

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.