அரசியல் தீர்வின்றி ஆயுதப் போராட்டம் முடிவுறாது: "நிலவரம்" ஏடு

உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை என்று "நிலவரம்" வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுவிற்சர்லாந்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (13.02.09) வெளிவந்த "நிலவரம்" வார ஏட்டின் 50 ஆவது இதழில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வன்னியில் பொதுமக்கள் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல்களை நடாத்தி அவர்களைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் வரும் சிங்கள அரசு இத்தகைய செயற்பாடுகள் ஊடாக அவர்களை வன்னியை விட்டு வெளியேறச் செய்ய முயற்சித்து வருகின்றது.

இதற்கு ஊடாக விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களைப் பிரித்து விட்டதாக அனைத்துலக சமூகத்துக்கு காட்டுவதுடன் முடிந்தால் விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி அவர்களை முற்றாக அழித்து விடலாம் எனவும் மனப்பால் குடித்து வருகின்றது.

பொதுமக்களைப் பொறுத்தவரை அவர்களைக் குறை கூற முடியாது. சுதந்திரமான வாழ்வுக்காக எத்தனையோ தியாகங்களைச் செய்த அவர்கள் இன்று உயிரையே தியாகம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமது கண்முன்னாலேயே கணவனை, மனைவியை, தாயை, தந்தையை, சகோதரனை, சகோதரியைப் பறிகொடுத்து விட்டு தாங்களும் இறப்பதா மீதி இருப்பவர்களையாவது காப்பதா என்ற கடினமான கேள்விக்கு விடை தேட வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.

இதனால் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, விருப்பமில்லாத போதிலும் கூட வன்னியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

திறந்தவெளிச் சிறைச்சாலை முதல் திறந்த வேலிச் சிறைச்சாலை வரை அவர்களுக்கு அனைத்தும் தயாராகக் காத்திருக்கின்றன. அங்கே அவர்களைத் தேடி வரும் உறவினர்களைக் கூடப் பார்க்க முடியாத அளவிற்குப் "பாதுகாப்பாக" அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

சில இடைத்தங்கல் முகாம்களில் உறவினர்கள் 20, 30 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்தே உரையாடுமாறு "அன்புக் கட்டளை" பிறப்பிக்கப் பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

சொந்த மண்ணிலே இத்தகைய அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாததனாலேயே தமிழ் மக்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், இன்று முன்னை விடக் கேவலமான சூழலில் வாழும் நிலை அவர்களுக்கு உருவாக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் சிங்களம் தனது இலக்கில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது என்றே கூறலாம்.

ஆனால், தமிழ் மக்களின் மனங்கள் முன்னிலும் கடினமாகப் போய் உள்ளமைக்கு யார் பொறுப்பு? அதற்கு மருந்து என்ன?

ஓநாய்க்குத் தேவையான சகல உதவிகளையும், ஒத்தாசைகளையும் வழங்கிக் கொண்டு ஆடு நனைகிறதே என்று ஒப்புக்கு அழுதுவரும் உலக நாடுகள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நிர்மூலம் செய்து விட்டு நீங்கள் வழங்கப் போகும் தீர்வில் உங்களுக்குப் பின்னால் வால்பிடிக்கும் எடுபிடிகள் மயங்கலாம்.

ஆனால், இலட்சிய தாகத்துடன் சுதந்திரத்துக்காக ஆத்மார்த்தமாக பங்கெடுத்த எந்தவொரு தமிழனும் உங்களுடைய தீர்வை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள மாட்டான்.

விடுதலைத் தாகம் கொண்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் தோற்கடிக்க முடியாது. அது ஒரு தீ. அது கொழுந்து விட்டு எரியாது விட்டாலும் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டே இருக்கும் சந்தர்ப்பம் வரும் போது அது மீண்டும் எரியவே செய்யும்.

உலகத்திலே நடைபெற்ற எந்தவொரு ஆயுதப் போராட்டமும் அரசியல் ரீதியான தீர்வு இன்றி முடிவுக்கு வந்ததாகச் சரித்திரம் இல்லை.

அதேநேரம், தம்மீது திணிக்கப்படும் தீர்வை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் விடுவதும் போராடுகின்ற மக்களின் மன வைராக்கியத்திலேயே தங்கியிருக்கின்றது என்பதே உண்மை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.