சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 55 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 109 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மூதாளர் பேணலகம்
"அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வள்ளி ஆச்சி (வயது 99)
கறுப்பையா (வயது 101)
பொன்னம்மா (வயது 80)
இளையபிள்ளை (வயது 86)
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.
வேலாச்சி (வயது 97)
செல்லையா (வயது 98)
பழனி (வயது 79)
கிருஸ்ணன் (வயது 80)
இராஜேஸ்வரி (வயது 67)
பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35)
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிக்குள் இருந்த அன்புச்சோலை மூதாளர் பேணலகம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர்.
இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் படுகாயங்களுக்கும், எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை நோட்டம் பார்த்து சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி அடையாளம் காட்டிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால்
"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.