தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டு விட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா?" என்று தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்தும் அங்கு போரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் தலையிட வலியுறுத்தியும் தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை அக்கட்சியின் சார்பில் தீவுத்திடலில் இருந்து சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை பேரணி நடைபெற்றது.
கறுப்புச்சட்டை அணிந்து இதில் கலந்து கொண்ட விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி, இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவில் விஜயகாந்த் உரையாற்றிய போது தெரிவித்துள்ளதாவது:
"இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நமக்கு உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த கூட்டமே சான்றாகும். இவ்வளவு பேர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டிருப்பது அதனை எடுத்துக் காட்டுகின்றது. எமது மக்கள் இலங்கையில் நாளாந்தம் செத்து மடிகின்றனர். அதனால் எமக்கு இந்த வெயில் ஒன்றும் பெரிதல்ல.
இங்குள்ள கட்சிகள் இலங்கை பிரச்சினையில் நாடகமாடி வருகின்றனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவோ, 'விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம்' என்று கூறுகின்றார். அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர்களான பிரணாப் முகர்ஜியும், சிதம்பரமும் தெரிவிக்கின்றனர். பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு வந்தால்தானே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட முடியும்.
விடுதலைப் புலிகள் வைத்திருப்பது கேடயம் தான். சிங்கள அரசு தான் கத்தி வைத்திருக்கின்றது. கேடயம் வைத்திருப்பவர் அதனை கீழே போட்டுவிட்டால் கத்தி வைத்திருப்பவர் அவரை குத்திவிட மாட்டாரா? ஆகையால் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டு அதன் பிறகே விடுதலைப் புலிகளை ஆயுதங்களை கீழே போட சொல்ல வேண்டும்.
அடுத்த நாட்டு பிரச்சினையில் ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்று மத்திய அரசு கூறுகின்றது. அப்படியானால் இலங்கையுடன் இந்தியா எப்படி ஒப்பந்தம் போட்டது. மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று சொன்னதால்தான் இந்த பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
இலங்கையில் தமிழினம் அழிந்து கொண்டிருக்கின்றது. எனவேதான் இதில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போரை நிறுத்த வழிவகை காண வேண்டும் என்று இந்த பேரணியை நாங்கள் நடத்துகின்றோம்.
திராவிட முன்னேற்றக் கழக அரசு சாதாரண சட்டக் கல்லூரி சண்டையையே நிறுத்த முடியவில்லை. நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சண்டையையும் இந்த அரசால் நிறுத்த முடியவில்லை. இவர்களால் எப்படி இலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியும். அதனால் தான் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன். உடனே தேர்தலுக்கு நான் பயந்து விட்டதாக கூறுகின்றனர்.
நான் என்றும் தேர்தலை கண்டு அஞ்சுபவன் அல்ல. ஒவ்வொரு கட்சியும் தனித்து நின்று தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதை தொடக்கத்தில் இருந்தே கூறி வருகின்றேன். அப்படி தனித்து நிற்பதற்கு இங்கு எந்தக்கட்சிக்கும் தைரியம் இல்லை. ஒரு சாதாரண தண்ணீர் பிரச்சினைக்காக கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும்போது, அதிகாரிகள் ஓடோடி வந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அந்த அடிப்படையில் தான் நாடாளுமன்ற தேர்தலையும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணித்தால் இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடும் என்று நான் கூறுகின்றேன்.
தமிழர்கள் மீது இலங்கையில் வான் வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். அதனை இந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இங்குள்ள கட்சிகள் கூட்டணி தொடர்பாகத்தான் பேசுகின்றனரே தவிர, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதில்லை.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பெரிய கட்சிகள் என்று கூறுகின்றனர். இந்த இரண்டு பெரிய கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒன்றிணைந்து போராடுவார்களா? அவ்வாறு இவர்கள் ஒன்றிணைந்து போராடினால் நானும் அவர்களின் பின்னால் வருவேன்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியின் தொண்டர்கள் அனைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கும் அமெரிக்க அரச தலைவர் பாராக் ஒபாமாவுக்கும் இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒரு கோடி தந்திகள் அனுப்ப வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்" என்றார் அவர்.
பேரணியின் நிறைவில் விஜயகாந்த் தலைமையில் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் நிர்வாகிகள் அமெரிக்க தூதரகம் சென்று இலங்கையில் போரை நிறுத்த கோரி மனு கையளித்தனர்.
1 comments:
appo thaniya porada mattaraa?
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.