நான் அரசுக்கு தலைவலி கொடுக்க விரும்புபவன் அல்ல:சரணடைந்த சீமான்

திருநெல்வேலி காவல் ஆனையர் மஞ்சுநாதா முன் இன்று இயக்குநர் சீமான் சரண் அடைந்தார்.


அப்போது அவர் செய்தியாளர்களிடம், ‘’தமிழ் மக்களை இந்த தேசம் மதிக்கவில்லை என்பதுதான் என் ஆதங்கம். அப்படி மதிக்காதவர்கள்தான் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்துகொள்கிறார்கள்.

நான் ஒரு போதும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவன் அல்ல.

நான் சட்டத்தை மதிக்காதவனோ,இந்த அரசுக்கு தொந்தரவு கொடுப்பவனோ, தலைவலி கொடுப்பவனோ அல்ல. அதை விரும்புபவனும் அல்ல’’ என்று தெரிவித்தார்.

கடந்த 12ம் தேதி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தனர். டைரக்டர் சீமான், அவர்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசியதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கி பேசியதாகவும் புதுச்சேரி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் சீமானை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் செயல்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கில் புதுச்சேரி போலீசார் கைது செய்தால், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

இந்நிலையில் 19ஆம் தேதி காங்கிரஸ் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சீமானை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று (19.02.09) அல்லது நாளைக்குள் (20.02.09) கைது செய்துவிடுவோம் என்றார். மேலும் சீமானை கைது செய்வதற்காக 5 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து இன்று இயக்குநர் சீமான் தானே முன்வந்து திருநெல்வேலி காவல் ஆணையர் முன் சரண் அடைந்தார்.

சீமான் சரண் அடைந்தது குறித்து நெல்லை ஆணையர் மஞ்சுநாதா, புதுச்சேரி வழக்கு சம்பந்தமாக சீமானை கைது செய்திருப்பதாகவும் அவரை புதுச்சேரி காவல் துறையிடம் ஒப்படைக்க விருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் சீமானை காவல் வேனில் ஏற்றிக்கொண்டு போலீசார் புறப்பட்டனர்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.