ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தே.மு.தி.க (விஜயகாந்த்) பிரமுகர் தீக்குளிப்பு

இலங்கையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றக்கோரி தேமுதிக பிரமுகர் சீனிவாசன் என்பவர் தீக்குளித்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 36 அகவையான கூலித் தொழிலாளி சீனிவாசன் சிறு அகவை முதல் விஜயகாந்தின் தீவிர ரசிகர். விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து வள்ளிப்பட்டு கிராமத்தின் தேமுதிக கிளைச் செயலாளராக உள்ளார். காதல் திருமணம் செய்துகொண்ட சீனிவாசனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் நேற்று வியாழக்கிழமை மாலை வாணியம்பாடி நகருக்கு சென்றபொழுது பேருந்து நிலையத்தில் இலங்கையில் நடக்கும் போரில் பாதிக்கப்படும் அப்பாவித் தமிழர்களை காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்த முத்துக்குமாரின் படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இரவில் வீட்டுக்கு வந்தவர் தொலைக்காட்சி செய்திகளிலும் ஈழப்பிரச்சனை குறித்த நிகழ்ச்சியை பார்த்துள்ளார். இதனால் மனம் கலங்கிய சீனிவாசன், இலங்கையில் இப்படி கொடுமை நடக்கிறது இதை தடுக்க வேண்டும் என்று தனது குடும்பத்தாரிடம் சொல்லியுள்ளார்.







இரவு 10.50 மணியளவில் திடீரென்று மண்ணெண்ணெய் கானை எடுத்துக்கொண்டு தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு சென்றவர் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.தீ பற்றி எரிய ஆரம்பித்தவுடன், தீயின் எரிச்சலால், அவர் கத்திக்கொண்டு ஓடிய அவரை குடும்பத்தாரும், ஊராரும் சேர்ந்து தீயை அணைத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீக்காயம் அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சீனிவாசனை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

தீக்குளித்த சீனிவாசன் காவல்துறையினரிடம் கூறுகையில், " இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்ப்படுகிறார்கள். இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களை தமிழக அரசு காக்க வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்காக அதிகம் போராட வேண்டும். எங்களுடைய கட்சி (தே.மு.தி.க) இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை. தேமுதிக இலங்கை தமிழர்கள் வாழ்க்கையில் விடிவு பிறக்கும் வரையில் போராடிக்கொண்டிருக்க வேண்டும். நான் தீக்குளித்ததை கேப்டனிடம் (விஜயகாந்த்) சொல்லுங்கள் " என்றார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.