தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற ஐ.நா காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதது கவலையும் அதிர்ச்சியும் அளிக்கின்றது: பா.நடேசன்


அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அர்த்தமுள்ள, காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாதிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் போக்கு நிலைப்பாடு குறித்து நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்; அதிர்ச்சி அடைந்துள்ளோம்.
இவ்வாறு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துவதே இன்றைய உடனடித் தேவை. அதனைச் செய்யாமல், என்ன நடைபெறுகிறது என்ற உண்மை நிலையை நேரில் வந்து கண்டறியாமல், பிழையான தரப்பு மீது பயனற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருக்கும் தேவையற்ற பணியில் ஐ.நா. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பா. நடேசன் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது அறிக்கையின் முக்கிய பகுதிகள் சில வருமாறு:

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினாலேயே மனிதப் பேரவலமும் கொடுமைகளும் நடந்தேறுகின்றன. ஆகையால் போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட வேண்டும்.

ஆனால் பொதுமக்களின் நிலை குறித்து கவலை வெளியிடும் தரப்புக்கள் போரை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை தூண்ட வேண்டும்.

அவ்வாறின்றி, துரதிஷ்ட வசமாக, சர்வதேச சமூகத்தினர் போர் தொடந்து நடைபெற அனுமதித்துக் கொண்டு, மக்களது நிலை குறித்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

சர்வதேசத்தின் இரட்டை வேடம் கொழும்பு அரசு நடத்தும் போரை நியாயப்படுத்திக் கொண்டு, மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கவலை தெரிவிப்பது அடிப்படையில் தவறானதாகும்; இரட்டை வேடம் போடுவதாககும்.

ஐ.நா. சபை இந்தத் தவறான வாய்பாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே மனித உயிர்கள் காவுகொள்ளப்படுவதைத் தடுப்பதோடு மட்டுமன்றி இலங்கை முழுவதிலும் மனித உரிமைகளையும் காப்பாற்ற முடியும்.

தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம், உணவு, மருந்து, குடிதண்ணீர், தமது செந்தக் கிராமங்களுக்கு பயமின்றித் திரும்புதல் என்பனவே வன்னி மக்களின் உடனடிக் கவலைகளும் தேவைகளும் ஆகும்.

மக்களின் மேற்படி நலன்களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் செயற்படவில்லை. தற்காலிகப் போர் நிறுத்தத்துக்குக் கூட அரசாங்கம் தயாரில்லை என்பதனை ஐ.நா. நன்றாக அறியும்.

அதனால் மக்களின் கவலைகள் குறித்து அக்கறை வெளியிடும் போது பிழையான தரப்பின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. மக்கள் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தங்குகிறார்கள் என்பது அக்கறை உள்ள சகல தரப்புக்களுக்கும் தெரியும்.

அந்த மக்களைத் தான் கைப்பற்றிக் கொள்வதற்காகவே அரசு அவர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும், காயமுற வைத்தும் அத்தியாவசிய தேவைகளை வழங்காமலும் மறுத்து வருகின்றது.

இந்த நடவடிக்கையின் ஓர் அம்சமாகவே எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள் உட்பட்ட தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்துகின்றது.

தவறான கொள்கை

கொழும்பு அரசாங்கத்தை கண்டிக்கும் போதெல்லாம் முதலில் விடுதலைப் புலிகளைக் கண்டித்து அதன் தொடர்ச்சியாகவே அரசாங்கத்தை கண்டிக்கும் தவறான இராஜதந்திர கொள்கையைச் சர்வதேச முகவர்களும் ஊடகங்களும் கடைப்பிடிக்கின்றன.

இப்போதைய நெருக்கடியை நீக்குவதற்கு இவ்வாறு அணுகுவதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறு எதனையும் அடைய முடியாது.

ஆகையால், சர்வதேச சமூகம் கொழும்பு அரசின் நடவடிக்கைகளை பயனுள்ள முறையில் குற்றச்சாட்டுக்களாக முன்னிலைப்படுத்த முன்வரவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.