உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள் - இயக்குநர் சீமான்
ஈழத்தமிழ் மக்களுக்காக தீக்குளித்த முத்துக்குமரனுக்கு பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய இயக்குநர் சீமான் " உயிரை ஆயுதமாக்கி போராடும் மக்கள் இராணுவமே விடுதலைப்புலிகள்" என்று உணர்ச்சிபொங்க உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தமிழ் தேசியப்பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இயக்குநர் சீமான் உரையாற்றுகையில், " இன்று நடக்கும் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் தடை விதிக்கப்போவதாக சொன்னார்கள். தடை தடை என்றால் அதை உடை உடை என்றுதான் எனக்கு தோன்றுகிறது. மகிழுந்து எரிக்கிற கட்சியாக காங்கிரசு கட்சி இருக்கிறது. பிரபாகரனுக்கு ஆதரவாகவும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசுகிறார் என்று என்னை கைது செய்பவர்கள், என்னுடைய மகிழுந்தை எரித்தவர்களை, இந்திய பொதுவுடைமைக்கட்சியின் அய்யா தா.பாண்டியன் அவர்களின் மகிழுந்தினை எரித்தவர்களை கைது செய்யாதது ஏன்?
நான் கலவரம் செய்வதாக புதுச்சேரி அரசு சொல்கிறது. கலகக்காரர் பெரியாரின் பேரன் நான். தமிழின எழுச்சிக்காக கலகத்தைச் செய்தேன். தமிழர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்கிறார்கள். முத்துக்குமரனும் ஜனநாயகவாதியாகத்தான் இருந்திருக்கிறான். அதனால்தான் தீக்குளித்தான். ஆனால் நாடு சொல்கிறது தமிழன் தீவிரவாதி என்று. முத்துக்குமரன் தீவிரவாதி, நான் தீவிரவாதி ஆனால் என் மகிழுந்தையும், தா.பாண்டியன் மகிழுந்தையும் எரித்த காங்கிரசுகாரன் தேசியவாதி.
தமிழீழ மண்ணில் அமைதிப்படை செய்த அக்கிரமங்களை தமிழர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இலங்கையில் 48 மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை இராஜபக்சே சொல்லவில்லை. இந்திய அரசின் அதிகாரிகள்தான் சொல்கிறார்கள். அப்படியானால் போரை நடத்துவது யார்? இந்த போரில் விடுதலைப்புலிகள் கொல்லப்படுகிறார்கள் என்ற செய்தி வருகிறதா? அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றுதான் செய்திகள் வருகிறது.
புலிகளை நெருங்க முடியாது. ஏனென்றால் மக்கள்தான் புலிகள். புலிகள் தான் மக்கள். மக்களிடம் இருந்துதான் புலிகள் உருவாகிறார்கள் என்பதால் மக்களை திட்டமிட்டு அழிக்கிறது சிங்கள அரசு.7 நாடுகளின் இராணுவ தளபதிகள் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார்கள். ஆனால் இவர்களால் விடுதலைப்புலிகளை நெருங்க முடியவில்லை. நெருங்கி பார். என்ன ஆகும் என்று தெரியும்.
உலகின் மிகப்பெரிய புரட்சியாளன் எங்கள் அண்ணன் பிரபாகரன். புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்களை ஆயுதங்களை கீழே போடச்சொல்லாதீர்கள். அது ஒரு மக்கள் ராணுவம். உயிரையே ஆயுதமாக்கி போராடும் மக்கள் ராணுவத்தை ஆயுதத்தை கீழே போடச் சொல்லாதீர்கள். எதுவும் தானாக மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். அதுபோல் நாடு தானாக வராது. நாம்தான் அடைய வேண்டும். தமிழீழம் அமைந்தே தீரும் " என்றார்.
கூட்டத்தில் பேசிய சீமான், நடுவண் அரசையும், இலங்கை அதிபரையும் சற்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இடையில் பேசிய அவர் ஏற்கனவே இரு வழக்குகள் இருக்கிறது. அந்த வழக்கை சந்திக்க தயார் என்றும், மேலும் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன், எந்த சிறைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார்.
இலங்கையில் போரை நிறுத்தக்கோரியும், இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் புதுவையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கடந்த 12 ந் திகதி சந்தித்த இயக்குநர் சீமான் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவரது பேச்சினை புதுவை காவலர்கள் வீடியோவில் பதிவு செய்தனர்.
இப்போது அந்த பேச்சின் அடிப்படையில் அவர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோத நடவடிக்கை தடை சட்டம் 13(1)(பி), பிரச்சினையை உருவாக்கும் விதமாக பேசுதல் 1பி, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல் 124 ஆகிய 3பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் அனைத்தும் பிணையில் வெளிவர முடியாதையாகும்.
புதுவையில் காங்கிரசு கட்சி ஆட்சியில் இருப்பதால், சீமானை கைது செய்வதில் உறுதியாக உள்ளது. மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி பத்திரிகைகளில் சீமானை கைது செய்தாக வேண்டும் என்று கூறிவருகிறார். சீமானை கைது செய்ய புதுச்சேரி காவலர்கள் தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. இதையடுத்து சீமான் எந்நேரத்திலும் மூன்றாம் முறையாக கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்புகள்
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.