சிறிலங்காவின் வான், கடல், தரைப் படைகள் வன்னியில் கோரத் தாக்குதல்: 143 தமிழர்கள் படுகொலை; 350 பேர் காயம்

வன்னியில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைந்து நடத்திய கோரத் தாக்குதல்களில் நேற்றும் இன்றும் 143 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 350 காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் மாலை வரை சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 98 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 265 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர் மடம் பகுதிகளில் நேற்று முழு நாளும் சிறிலங்காவின் தரை, கடல், வான் படையினர் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 45 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றும் இன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களின் போது தரைப்படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் கடலில் இருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதல்களையும் வான் படையினர் எம்.ஐ.-24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் மூலம் தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.