வன்னியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகின்றது. அப்பாவி மக்கள் மீதான துப்பாக்கி பிரயோகங்களும், ஷெல் தாக்குதல்களும் எறிகணை வீச்சுக்களும் தொடர்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசாங்கமும் புலிகளும் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் ஆர். சம்பந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான க.கனகசபை,எஸ். தங்கேஸ்வரி, அரியநேந்திரன்,சிவநாதன் கிஷோர், மாவை சேனாதிராஜா,எஸ். காந்தா,சிவசக்தி ஆனந்தன், ஐ.எம். இமாம், சொலமன் சிறில், எஸ் .பத்மநாதன், எஸ் .சந்திரநேரு ஆகியோர் பங்கேற்ற இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;
முல்லை தீவில் டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து பெப்ரவரி நடுப்பகுதி வரை மட்டும் 2 ஆயிரம் பேர் படுகொலைச்செய்யப்பட்டுள்ளனர். 4500 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். எனினும் பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகின்றது இதனை யாரும் நம்பமாட்டார்கள் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.
அரசாங்கம் தமிழ் மக்களை விடுவிப்பதாக கூறுக்கின்றது எனினும் கொலைச்செய்தல்,காயப்படுத்தல்,வீடுகளை உடைத்தல் மருந்துப்பொருட்களை வழங்காது விடல் மற்றும் ஷெல்தாக்குதல்களை மேற்கொள்வது ஏன்?
ஆயிரம் ஆயிரம் மக்கள் மோசமான காலநிலையையும் கருத்தில் கொள்ளாது மரநிழல்களிலேயே வாழ்ந்துவருகின்றனர் .மக்களை விடுவிப்பதாக கூறுகின்ற அரசாங்கம் அங்கு இன அழிப்பையே மேற்கொள்கின்றது.
கேள்வி பதில்
இந்த ஊடக வியலாளர் மாநாட்டில் கலந்த கொண்ட செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது;
கேள்வி நீங்கள் கூறுவதை போல வன்னியில் குறுகிய பிரதேசத்திற்குள் பல இலட்சக்கணக்கான மக்கள் எவ்வாறு வாழ முடியும்?
பதில் வாழ்கின்றார்கள் ,அகதிகளாக வாழ்கின்றனர். நாளாந்தம் இடம்பெயர்ந்துகொண்டே இருக்கின்றனர். அரசாங்கம் கூறுவதை போல அங்கு ஒருலட்சத்திற்கு குறைவான மக்கள் வாழவில்லை. 4 இலட்சத்திற்கு மேற்படாத மக்களே வாழ்கின்றனர்.
கேள்வி ஐ.நா நிறுவனமொன்றின் பணியாளர் ஒருவரை புலிகள் பலவந்தமாக தமது படையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதே?
பதில் ஐ.நாவின் சர்வதேச பணியாளர்கள் அங்கில்லை உள்ளூர் பணியாளர்கள் அங்கு நீண்டகாலமாக கடமையாற்றுகின்றனர் எனினும் பணியாளர் ஒருவர் அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டாரா? என்பது தொடர்பில் சரியான தகவல் இல்லை
கேள்வி அனுராதபுர பகுதியில் எரிந்த நிலையில் சடலங்கள் கிடப்பதாக கூறப்படுகின்றதே?
பதில் சடலங்கள் கிடப்பதாக எங்களுக்கும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் உண்மையா? பொய்யா என்று உறுதியாக கூறமுடியாது. எங்குதான் சடலங்கள் இல்லை.
கேள்வி அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகின்ற பொதுமக்களை மீது புலிகள் தற்கொலைத்தாக்குதலை மேற்கொள்வதாக கூறப்படுகின்றதே?
பதில் புலிகள் செய்திருக்கமாட்டார்கள் என்று கூறவில்லை, படையினரை இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொண்டிருக்கலாம் அவ்விடத்தில் பொதுமக்களும் இருந்திருக்கலாம். எனினும் அங்கு என்ன நடக்கிறது, நடந்தது என்று யாருக்கும் தெரியாது?
கேள்வி அரசியல் தீர்விற்காக அரசாங்கதத்திற்கு ஏன்? ஒத்துழைப்பு நல்க முடியாது?
பதில் தமிழ் மக்களும் சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளகூடி தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம தயாராக இல்லாத நிலையில் எவ்வாறு ஒத்துழைப்பு நல்க முடியும்.. அரசியல் தீர்விற்காக நாம் முட்டாள் தனமாக மாட்டிக்கொள்ள மாட்டோம்.
கேள்வி போர் நிறுத்தத்தை கோருவதன் நோக்கம்?
பதில் மனிதபிமான அடிப்படையின் பொதுமக்கள் பாதுகாக்கப்படல் வேண்டும் போர் நிறுத்தத்தின் மூலமாகவே மக்களை பாதுகாக்கமுடியும் போர் நிறுத்தம் ஏற்பட்டால் மக்கள் எங்கு செல்லவேண்டும் என்பதை சுயமாகவே தீர்மானிப்பார்கள். புலிகளுக்காக போர் நிறுத்தம் கோரவில்லை.
கேள்வி சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்தும் மக்கள் வருகைதரவில்லையே?
பதில் வவுனியாவிற்கு இதுவரையில்ம் 42 ஆயிரத்து 830 பேர் வருகைதந்துள்ளனர்.
கேள்வி மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படுகின்றன. வவுனியாவிற்கு வருகின்ற மக்களை காட்சிப்பொருளாக்கவிரும்ப விலை என்பதனால் தான் அங்கு எவரையும் செல்வதற்கு அனுமதிவழங்கப்படுவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றாரே?
பதில் எங்கள் மக்கள் ,மதிப்பிற்குரிய எங்கள் மக்கள் என்று கூறிக்கொண்டு மக்களை கொலைச்செய்ய முடியுமா? காயப்படுத்த முடியுமா? அகதி முகாம்களில் உறவினர்களை பார்க்க முடியாது அவர்களுடன் 2 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும் கணவன் முகாமிற்கு வெளியிலும் மனைவி முகாமிற்கு உள்ளேயும் வாழ்கின்றனர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அங்கு செல்லஅனுமதிப்பதில்லை.
அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் எங்களுடைய இரத்தங்கள், சொந்தங்கள் ஆறுதல் கூறுவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் எங்களுக்கும் உரிமையுண்டு எனினும் முகாம்களின் உண்மைகளை அறிவதை மறுப்பதற்காகவே அங்கு போவதற்கு தடுக்கப்படுகின்றனர்.
அரசாங்கம் இராணுவ வெற்றியை கொண்டு அரசியல் செய்வதற்கு முயறசிக்கின்றது எனினும் அகதி முகாம் திறந்த வெளிச்சிறைச்சாலை அங்கு மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலைமையே காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன அவர்களை தடுத்து வைப்பதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை.
கேள்வி 2000 பேர் பலியானார்கள் என்று எங்கிருந்து தகவலை பெற்றீர்கள்?
பதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் முல்லைதீவிலேயே இருக்கின்றார் அவரே இந்த தகவல்களை தெரிவித்தார் என்பதுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டனர்.
கேள்வி பிரபாகரன் முல்லை தீவிலா இருக்கின்றார்?
பதில் எங்களுக்கு தெரியாது ஜனாதிபதி அனுமதிகொடுத்தால் நாங்கள் சென்று பார்த்துவிட்டு வந்து சொல்கின்றோம்.
கேள்வி புலிகளின் ஈழம் கனவு கலைந்துவிட்டதே?
பதில் ஈழம் கோரிக்கையை முன்வைத்தது புலிகள் அல்ல தந்தை செல்வநாயக்கத்தினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கோரியிருக்கின்றார்.ஈழம் கோரிக்கையை விடுவதற்கு புலிகளுக்கு எவ்விதமான உரிமையும் இல்லை.
கேள்வி தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுவிட்டதா?
பதில் ஐ.தே.க,ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளை பிளவுப்படுத்திய அரசாங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பிளவுப்படுத்துவதற்கு முயற்சித்தது எனினும் ஜனநாயக்க கட்சி என்பதனால் கூட்டமைப்பை பிளவுப்படுத்த முடியவில்லை.
கேள்வி சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் பங்கேற்று தீர்வு திட்டத்தை தயாரிக்கலாமே?
பதில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கு நாம் தயாராவே இருக்கின்றோம் எனினும் சர்வக்கட்சி ஆலோசனை குழுவில் பங்கேற்குமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.