இலங்கைத்துயர் தாங்க முடியவில்லை. தீயிட்டுக் கொள்கிறேன்: அமரேசன் தனது கைப்பட எழுதிய கடிதங்கள்

சென்னை வண்ணாரப்பேட்டை கோழிக்கறிக்கடை வியாபாரி அமரேசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் இழந்தார். பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அவர் இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் தீக்குளித்தார் என்று கூறியதை சிலர் மறுத்தனர்.


திங்கட்கிழமை நடந்த அவரது இறுதிச் சடங்கில் வைகோ, பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், தா.வெள்ளையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவரும் இலங்கத் தமிழர்களுக்காகத்தான் அமரேசன் உயிர் நீத்ததாக குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அமரேசன் வீட்டுக்கு ஒரு உள்நாட்டு தபால் வந்தது. அமரேசன் தனது மூத்த மருமகன் முத்து கணேஷுக்கு எழுதிய அந்தக் கடிதம் அமரேசன் விலாசத்துக்கே திரும்பி வந்துள்ளது.

அந்தக் கடிதத்தை அமரேசன் குடும்பத்தினர் பிரித்து படித்தனர்.

அமரேசன் கடிதம்

''எல்லாம் அவன் செயல். உயர்திரு பெரிய மாப்பிள்ளை அவர்களுக்கு மாமா எழுதியது. நல்லதே நினையுங்கள், நல்லதே நடக்கும்.

இறைவன் கொடுத்த கெடு முடிந்து விட்டது. இலங்கை தமிழர்களை நினைத்து, அவர்கள் படும் துயரங்களை கற்பனையில் நான் அங்கு வசிப்பதாக நினைத்துப் பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. நினைப்பதற்கே மிக, மிகக் கஷ்டமாக இருக்கிறது.

இப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் நடந்தால்....ஒரு மணி நேரம் கரண்ட் போய் விட்டாலே நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காட்டுக்குள் குழந்தை குட்டிகளுடன் பயந்து, பயந்து வாழ்கிறார்கள்.

ஆகையால் என் உடம்பை தீயிட்டுக் கொள்கிறேன். தற்கொலை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் அம்மா தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த தற்கொலை என்னோடு முடியட்டும். உலகத்தில் இனிமேல் யாரும், எதற்கும் இந்தச் செயலை செய்ய வேண்டாம். எல்லாரும் நலமுடன் வாழுங்கள்.''

இதே போல அமரேசன் தனது மூத்த மகன் சங்கருக்கும் எழுதிய ஒரு கடிதம் வந்து இருப்பதாகவும், அதிலும் இலங்கை தமிழர்களுக்காக தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் அமரேசன் குடும்பத்தினர் தெரிவித்தனர்

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.