"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இலங்கையில் நடப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே: "த சன்டே இந்தியன்" ஆசிரியர் அரிந்தம்
சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப்போர் கிட்டத்தட்ட முற்றுப்பெறும் நிலையில் உள்ளதாகவே தோன்றுகிறது. ஆனால் இன்னொருபுறத்தில் போர் என்ற பெயரில் தற்போதைய அரசு தமிழ் இனத்தைக் களைவதன்மூலம் மிகப்பெரிய மனித அவலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு "த சன்டே இந்தியன்" இதழின் பிரதம ஆசிரியர் அரிந்தம் செளத்ரி அவர்கள் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தனது ஆய்வில் குறிப்பிட்டிருப்பவை வருமாறு:-
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் இனப்படுகொலை. புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான போரில் இன்று 250,000 தமிழர்கள் சிக்கிக்கொண்டிருக்கின்றார்கள். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் வித்தியாசப்படுத்திப் பார்க்க தற்போதைய அரசு எந்தவிதத்திலும் விரும்பவில்லை.
அது மட்டுமல்ல பத்திரிகைத்துறையை எடுத்துக்கொண்டால் எதிர்ப்புக்குரல் எந்தவிதத்தில் எழுந்தாலும் அதை மூடுவதற்கு சிறையில் போடுவது அல்லது திட்டமிட்டுக் கொலை செய்வது போன்றவற்றில் சிங்கள அரசு ஈடுபடுகின்றது. தற்போதைய ஆட்சியின்கீழ் உலகில் பத்திரிகையாளர்களுக்கு் , ஊடக நிறுவனங்களுக்கும் மிகமோசமான இடங்களில் ஒன்றாக மாறும் அளவிற்கு நிலைமை மிகவும் சீரழிந்து போயிருக்கிறது.
பத்திரிகையாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளின்படி ஈராக்கிற்கு அடுத்தபடியாக உலகில் பத்திரிகையாளர்களுக்கு இரண்டாவது மிகப்பெரிய ஆபத்து உள்ள இடமாக இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது. லசந்த விக்ரமதுங்க போன்ற பல பெரும்பாலான மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் ஒன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் அல்லது முழுமையாக காணாமல் போய்விட்டனர். ஜுனவரி 2006 ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 9 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டு வட்டதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
விமானப்படைமூலம் குண்டுகளை வீசாமல் இருந்திருந்தால் புலிகளுக்கு எதிராக வெற்றிபெறும் நிலைக்கு இலங்கை அரசு வந்திருக்காது என்பது உண்மைதான். ஆனால் இந்த வான்வழித் தாக்குதல்களின்போது ஏற்படக்கூடிய பொதுமக்களின் உயிரிழப்பு, அந்தத் தாக்குதலின் நோக்கத்தைவிட மிகவும் அதிகமானதாக இருக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரால் மருத்துவமனைகள், பள்ளிகள் ஆகியவைதான் குறிவைக்கப்பட்டன.
அப்பாவித் தமிழ்மக்களை இனப்படுகொலை செய்வது இந்தச்சமூகத்தை அரசின் மைய நீரோட்டத்திற்கு வருவதிலிருந்து விலக்கியே வைக்கும் எதிர்வினையைத்தான் உருவாக்கும். அதன்பிறகு இப்போதைய அல்லது எதிர்கால அரசுகள் இந்த அன்னியமாதலைப் போக்குவது இயலாத காரியம். இது எதிர்காலத்திலும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக அமையும்.
புலிகளுக்கு எதிரான மரபு ரீதியான போர் ஓய்ந்து விட்டதாகவே கருத்தில் கொள்ளலாம். அத்துடன் விரைவில் விடுதலைப்புலிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்களையும், கெரில்லாத் தாக்குதல்களையும் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள் என்பதை இலங்கை அரசு அறியும். ஆண்டுக்கணக்கில் இந்தத்தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பு அது.
இலங்கை அரசு தமிழர்களை ஒடுக்குவதையும், புறக்கணிப்பையும், திட்டமிட்ட படுகொலைகளையும் தொடர்ந்தால், இப்போதைய போரில் அழிவுற்றாலும், மீண்டும் இன்னொரு பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் பிறப்பார்கள்.
தலைப்புகள்
பத்திரிக்கை செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.