இலங்கையில் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்த மலேசியா தலையிட வேண்டும்: மலேசிய அரசிடம் மனு கையளிப்பு

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து மலேசிய அரசாங்கம் உடனடியாக தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் எனக் கோரி மலேசிய தமிழ் மக்கள் சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ டொக்டர் ராய்ஸ் யாத்திமிடம் நேற்று மனு கையளிக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தலைமைச் செயலாளரும் மனிதவள அமைச்சருமான டத்தோ டொக்டர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் சென்ற குழுவினர், அமைச்சர் ராயிசிடம் இந்த மனுவை கையளித்தனர்.

உலகத் தமிழர் நிவாரண நிதியத்தின் அறங்காவலர் வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம், மலேசிய இந்திய காங்கிரஸ் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.மோகன் உட்பட எண்மர் அடங்கிய குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் ராயிசிடம் இந்த மனுவை சமர்ப்பித்து இந்த விடயத்தில் மலேசியா கொண்டிருக்க வேண்டிய கடப்பாட்டை விளக்கினர்.



இலங்கையில் போர் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இராணுவத்தின் கண்முடித்தனமான குண்டு வீச்சினால் மக்கள் உயிர்ச் சேதம் அதிகமாகி வருகின்றது.

இந்நிலையில் மலேசியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், காயமுற்ற அப்பாவி மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் உணவு வகைகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



மலேசிய மக்களுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்ட வரலாற்றுப் பூர்வ உறவுகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் குறிப்பாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மலேசிய அரசாங்கம் மத்தியஸ்தம் செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோ சிறீ ராய்ஸ் யாத்திமிடம் வழங்கப்பட்ட அந்த மனுவின் விபரம் பின்வருமாறு:

கடந்த மாதம் முதற் கொண்டு வடக்கு - கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதால் அளவு கடந்த நிலையில் மனிதப் பேரவலங்கள் நிகழ்ந்து வருகின்றன.

நூற்றுக்கணக்கில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர் என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்திருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாத குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

அனைத்துலக நாடுகளால் தடை செய்யப்பட்ட மிக மோசமான அழிவுகளை மனித அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் எனப்படும் கொத்துக்குண்டுகள் இப்பகுதியில் தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டிருக்கும் அதிர்ச்சி தரும் உண்மை அம்பலத்திற்கு வந்துள்ளது.

பாதுகாப்பான பகுதிகள் என அரசாங்கமே அறிவித்த பகுதிகளுக்குத் திரும்பிய தமிழ் மக்களுக்கு எதிராகவும் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு எண்ணற்றோர் உயிர் இழந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் மாண்டுள்ளனர். இந்த போர்ப் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ள இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக நிவாரண அமைப்புக்களும் கவலையைத் தெரிவித்துள்ளன.

இரு தரப்புக்கும் இடையிலான போரில், மருத்துவமனைகள், அவசர உதவி மருத்துவ வாகனங்கள் சிக்கி சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பாற்றும் வாய்ப்பும் வசதியும் இல்லாத நிலை நீடிக்கிறது என்று தென்னாசிய செஞ்சிலுவைச் சங்கம் கூறுகின்றது.

இப்பகுதிகளிலும் பொதுமக்களுக்கான மருந்து, உணவு உள்ளிட்ட அவசர உதவிகளைச் செய்வதில் ஈடுபட்ட ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக உணவுத் திட்ட தொண்டர் பணியாளர்கள் தங்களது மனிதாபிமான பணியைச் செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.



இந்த சூழ்நிலையில், இலங்கையில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக சமுதாயம் கோரிக்கை விடுத்து வருவதால், மலேசியாவும் இந்த அனைத்துலக சமுதாயத்தின் குரலுடன் இணைந்து போரை நிறுத்தும்படி சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்ள வேண்டும். போர் நிறுத்தப்பட்டு, மனிதாபிமான உதவிகளுக்கு வழிவிடப்பட வேண்டும்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கம் போர் நிறுத்த கோரிக்கைகளை நிராகரித்து விட்டு, போரில் ஈடுபட்டுள்ள போராளிகளை முற்றாக நசுக்கப் போவதாக கூறி வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

அதேவேளையில் சுதந்திரத்துடனும் கெளரவத்துடனும் வாழ்வதற்கான உத்தரவாதம் இல்லை என்று தாங்கள் ஆயுதங்களைக் கைவிட மாட்டோம் என்று விடுதலைப் புலிகளும் கூறி வருகின்றனர்.

அதேவேளையில் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் 2009 ஆம் ஆண்டு வரைக்குமான காலக்கட்டத்தில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களால், பல்லாயிரக்கணக்கில் மக்கள் மாண்டுள்ளனர். இந்த நவீன காலத்தில் இலங்கை படுகொலைகள் தான் மிக மோசமானவை என்பது தெளிவு.

போரின் விளைவால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஆனால் வாசிங்ரன் பல்கலைக்கழகம், மற்றும் ஹாவார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வுப் படி இரண்டரை லட்சம் பேர் மடிந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 20 ஆயிரம் தமிழ் சிறார்கள் ஆதரவற்றவர்களாக ஆகியுள்ளனர். 35 ஆயிரம் இளம் பெண்கள் விதவைகள் ஆகியுள்ளனர்.

பள்ளிகள், வீடுகள், தேவாலயங்கள், கோயில்கள், கிராமங்கள் என பல்லாயிரக்கணக்கில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்னர். பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.

சொந்த நாட்டிலேயே, 6 லட்சம் தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பத்து லட்சம் தமிழர்கள் பிறந்த மண்ணை விட்டு வெளிநாடுகளுக்கு ஓட நேர்ந்துள்ளது.

இனம், நிறம், சமயம், பண்பாடு பொருளாதார வேறுபாடுகள், அரசியல் மாறுபாடுகள் என்ற பிரச்சினைகளுக்கு அப்பால் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள எல்லா நாடுகளிலும் மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக்கு உண்டு.

மனித உரிமை காப்பாளனாக விளங்கும் கடமையானது மிகப் பெரிய கெளரவமாகும். அத்தகைய ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் ஓர் உறுப்பினர் என்ற மிகப் பெரிய கெளரவத்தைப் பெறும் வகையில் மலேசியா அந்த மன்றத்தில் ஓர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றத்தின் உறுப்பினர் என்ற மலேசியாவின் அந்தஸ்தைக் கருத்தில் கொள்ளும் வேளையில், பிலிப்பைன்ஸ் அரசாங்கத்திற்கும் மிண்டானோ விடுதலை முன்னணி போராளிகளிடையே, நடந்த சண்டையானது, பிலிப்பைன்சின் உள்நாட்டு விவகாரம் என்ற போதிலும், மலேசியா தலையிட்டு இரு தரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, வழி அமைத்ததை நாங்கள் மனதார பாராட்டுகின்றோம்.

ஒரு நாடும் அதன் மக்களும் மிக மோசமான அழிவுப் போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில் அது உள்நாட்டுப் போராவோ அல்லது வேறு விதமாவோ இருந்தாலும் மனித உரிமை சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் சம்பந்தப்பட்ட அந்த மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும். குரல் கொடுக்க வேண்டும்.



மனித சமுதாயத்தின் நாகரிகத்தையும் மாண்புகளையும் மேலும் மேலும் மேம்படுத்த வேண்டியது ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் கடமை ஆகும்.

மனித உரிமைக்கு எதிராக அநீதி எப்போது நடந்தாலும், எங்கே நடந்தாலும் அதனை தடுத்து நிறுத்தி மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தவும், உயரிய பங்கினை ஆற்றவும் மலேசியாவினால் முடியும் என நம்புகின்றோம்.

இந்த அடிப்படையில் கீழ்கண்ட சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.

- மலேசிய மக்களுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்ட வரலாற்றுப்பூர்வ உறவுகளைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையில் மலேசிய அரசாங்கம் மத்தியஸ்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.

- தற்போது இருபது லட்சம் தமிழர்களை மலேசியா கொண்டுள்ளது. இந்த தமிழர்கள், இலங்கை தமிழர்களுடன் வரலாற்றுப் பூர்வமான, தொன்மையான பண்பாட்டு ரீதியிலான உறவைக் கொண்டுள்ளனர்.

- இலங்கையில் நடைபெற்று வரும் அண்மைய சம்பவங்கள் எல்லா மலேசியர்களையும் குறிப்பாக எல்லா தமிழர்களையும் பாதித்துள்ளது. இவர்களில் சிலர் இலங்கையில் உள்ள தங்களின் உறவினர்களை அல்லது நண்பர்களை இழந்ததன் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மலேசியா வாழ் அனைத்துலக தமிழர்களின் உணர்வுகளையும் பிரதிநிதிக்கும் வகையில், மலேசிய வெளியுறவு அமைச்சருக்குக் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

- மலேசிய மக்களின் உணர்வுகளைச் சொல்லும் வகையில் முறையான அரச தந்திர வழிகளின் மூலம் சிறிலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.

- இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியாக, உடனடியாக ஒரு போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் மலேசியா ஓர் உந்துதலாக விளங்க வேண்டும்.

- வெகு நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வைக் கொண்டு வரக்கூடிய ஆலோசனைத் திட்டங்கள் மற்றும் வழிமுறைகளுக்கு மலேசியா ஆதரவு தர வேண்டும்.

- மிக மோசமான மனிதப் பேரவலங்களுக்கு உள்ளாகி இருப்போருக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களையும் தொண்டர் பணியாளர்களையும் அனுப்பி உதவ வேண்டும்.

- போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தகைய உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்தக்கூடிய வழிகளை மலேசியா ஏற்படுத்த வேண்டும்.

என அந்த மனுவில் குறி்ப்பிடப்பட்டிருந்து.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்களிடம் பேசிய அமைச்சர் ராயிஸ், இந்த விவகாரம் உடனடியாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாக உறுதி அளித்தார்.

போர்ப்பகுதியில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை யாரும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில் பல நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்துள்ளோம்.

எனவே, இலங்கையில் குறிப்பாக போர்ப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மாதிரியான உதவிகளை நல்குவது என்பது குறித்து தமது அமைச்சு ஆழமாக பரிசீலனை செய்து, உரிய பரிந்துரைகளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் என உறுதி அளித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.