தங்களது அனைத்து வளங்களையும் குவித்து சிறிலங்கா படையினர் இறங்கியுள்ள புதுக்குடியிருப்புக்கான போர்


முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றும் தீவிர முயற்சியில் படையினர் இறங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளின் கடைசிக் கோட்டையாக புதுக்குடியிருப்பே இருப்பதாகக் கருதும் படையினர் அதனை சகல முனைகளிலும் சுற்றிவளைக்க முயல்கின்றனர். அனைத்து படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய பாரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றபோதும் விடுதலைப் புலிகளின் மிகக் கடுமையான பதில் தாக்குதலால் புதுக்குடியிருப்புக்கான போர் நீண்டு செல்வதாக படைத்தரப்பு கூறுகிறது. இதனால் தங்களது அனைத்து வளங்களையும் இங்கு குவித்து பெரும் போரில் இறங்கியுள்ளனர்.
இந்தப் பகுதியிலேயே நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் சிக்குண்டுள்ளனர். இந்த மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. இங்கு இடம்பெறும் ஷெல், பல்குழல் ரொக்கட் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் தினமும் பெருமளவானோர் கொல்லப்படுகின்றனர். "கிளஸ்ரர்' ரக ஷெல்கள் இந்தப் பகுதிகளில் ஏவப்பட்டுள்ளதாக ஐ.நா.கடும் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. ஒரு ஷெல் பல ஷெல்களாகப் பிரிந்து சென்று வெடித்து பேரழிவை ஏற்படுத்தும் கிளஸ்ரர்கள் (கொத்தணிக் குண்டு) யுத்த முனையில் தடை செயப்பட்டதொரு போராயுதமாகும். இதனைப் படையினர் புதுக்குடியிருப்பில் பயன்படுத்தியுள்ளதாக ஐ.நா.அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


தற்போதைய போரில் தினமும் பெருமளவு அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தினமும் படுகாயமடைகின்றனர். ஆஸ்பத்திரிகள் தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுவதால் காயமடைவோரை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது. ஆஸ்பத்திரிகள் இல்லாமல் போனால் அங்கு மக்களால் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது. மக்களை வெளியேற்றுவதற்காக ஆஸ்பத்திரிகளை படையினர் இலக்கு வைப்பதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிகச் சிலரே மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வெளியிடங்களுக்கு அனுப்பப்படாத நிலையில் தினமும் பலர் இறக்கின்றனர். வன்னியில் அப்பாவி மக்கள் தினமும் சந்திக்கும் பேரவலத்தை எழுத்தில் வடிக்க முடியாது.


தொடர்ந்தும் மக்கள் கொல்லப்படுவதால் புலிகளுக்கே நெருக்கடிகள் அதிகரிக்கின்றன. அந்த மக்களை புலிகள் வெளியேற அனுமதித்தால் அப்பாவி மக்களுக்கான இழப்புகளை தடுக்க முடியுமென அரசும் படைத்தரப்பும் கூறுகின்றன. சர்வதேச நாடுகளும் இலங்கை அரசு கூறுவதற்கேற்ப அந்த மக்களை வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டுமெனக்கூறி புலிகள் மீது கடும் அழுத்தங்களை கொடுக்கின்றன. அங்கு மக்களுக்கான இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க புலிகள் மீதான இந்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதேநேரம் புலிகள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதற்காக அரசும் தாக்குதலைத் தீவிரப்படுத்துகிறதே தவிர, அப்பாவி மக்கள் தினமும் கொத்துக் கொத்தாக வீழ்ந்து மடிவது குறித்து சற்றும் பொருட்படுத்தவில்லை. புலிகளுக்கு அழுத்தத்தை அதிகரிப்பதற்காக அப்பாவி மக்களின் உயிர்களைக் காவுகொள்ளவேண்டாமென அரசை வற்புறுத்த சர்வதேச சமூகமும் தயாராயில்லையென்பது இலங்கைக்கு சற்று ஆறுதலாகவேயுள்ளது.


அதேநேரம், புலிகள் வசமிருக்கும் எஞ்சிய நிலப்பரப்பையும் படையினர் கைப்பற்றி விடுவரென்பதால் தொடர்ந்தும் இழப்புகள் ஏற்படுவதை தவிர்க்க புலிகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்துவிட வேண்டுமென இணைத் தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளன. இணைத்தலைமை நாடுகளின் இந்தக் கோரிக்கை கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. மக்கள் தினமும் பெருமளவில் கொல்லப்பட்டு வரும் நிலையில் அதற்கான கூட்டுப் பொறுப்பிலிருந்து இலங்கை அரசை காப்பாற்றும் முயற்சியே இதுவெனத் தெரிவிக்கப்படுவதுடன் அப்பாவி மக்களைக் கொல்வதை நிறுத்துமாறு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க இணைத்தலைமை நாடுகள் முன்வராதது பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வன்னிப் போரில் இலங்கை அரசுக்கு இந்தியா பேருதவிகளைப் புரிந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துமாறு தமிழகத்திலுள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்ற போதும் அதனை சற்றும் பொருட்படுத்தாது ஒரு கோடிக்கும் மேற்பட்ட சிங்களவர்களுக்காக தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையையும் இந்திய அரசு நிராகரிப்பதாக கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. எனினும் இந்திய அரசு இது குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அடுத்த பொதுத் தேர்தலிலும் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றுவதிலேயே காங்கிரஸ் கட்சி குறியாக இருக்கிறதே தவிர, ஈழத் தமிழர்களுக்காக எதனையும் செயாது அவர்களுக்கு எதிரான போரில் இலங்கைக்கு பூரண ஆதரவு வழங்குவதில் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தீவிரம் காட்டுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் முல்லைத்தீவில் போர் உக்கிரமடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை நூறு சதுர கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் முடக்கிவிட்டதாக படைத்தரப்பு கூறுகின்றது. சகல முனைகளூடாகவும் புலிகளின் இறுதிக் கோட்டையான புதுக்குடியிருப்பு நோக்கி பாரிய படைநகர்வுகள் இடம்பெறுகின்றன. ஏழு படையணிகள் இந்தப் படைநகர்வுகளில் ஈடுபட்டுள்ளன. 53 ஆவது படையணி மட்டும் மாங்குளம் மற்றும் ஒலுமடு பகுதியில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இவை நிறுத்தப்பட்டுள்ளதால் புதுக்குடியிருப்புப் பகுதியில் தேவையேற்பட்டால் உடனடியாக இவை அங்கு விரைந்து செல்லும். யாழ்.குடாநாட்டில் கிளாலிப் பகுதியில் முன்னர் 53ஆவது படையணி நிலைகொண்டிருந்தது. இந்தப் படையணியே தற்போது மாங்குளத்திற்கு கிழக்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளான 55, 57, 58, 59 மற்றும் மூன்று விசேட படையணிகளும் புதுக்குடியிருப்பை நோக்கிய நகர்வில் ஈடுபட்டுள்ளன. புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டால் இலங்கையின் வரைபடத்தில் புலிகள் வசம் எந்தவொரு பகுதியையும் இல்லாது செய்து விடலாமென அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. அதேநேரம், புதுக்குடியிருப்புக்கான சமருக்காக அரசு அதிக விலையை கொடுத்து வருகிறது. பலத்த இழப்புகளை படையினர் சந்தித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகள் வசமிருந்த ஏழாவதும் கடைசியுமான விமான ஓடுபாதையை புதுக்குடியிருப்பு பகுதியில் கைப்பற்றிவிட்டதால் புலிகளின் வான் புலிகளை முழுமையாக முடக்கிவிட்டதாகவும் அதேபோல் கடற்புலிகளின் கடைசித் தளமாயிருந்த சாலையையும் (முல்லைத்தீவு) கைப்பற்றிவிட்டதால் கடற்புலிகளின் இதுவரை காலச் செயற்பாடுகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவும் படைத்தரப்பு கூறுகிறது. தற்போது புலிகளின் தரைப் படை மட்டுமே போரில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனையும் விரைவில் அழித்து புதுக்குடியிருப்பையும் கைப்பற்றிவிட்டால் புலிகளின் மரபுவழிப் படையணியின் இதுவரைகால நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துவிடுமெனவும் படைத்தரப்புக் கூறுகின்றது. இதனால் புதுக்குடியிருப்பு நோக்கிய படைநகர்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இங்கு தான் புலிகளின் தலைவர்களும் தளபதிகளும் இருப்பதால் புதுக்குடியிருப்பின் வீழ்ச்சியானது புலிகளின் வீழ்ச்சியாகிவிடுமென்றும் அரசு கூறுகிறது. இதற்காக அரசு தனது முழு வளத்தையும் பயன்படுத்தி வருகிறது. புதுக்குடியிருப்பை நோக்கி நகரும் ஒவ்வொரு படையணிக்கும் தேவையான அனைத்து வளங்களும் வழங்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பையும் கைப்பற்றி விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்துவிட்டதான செய்திக்காக அரசு தொடர்ந்தும் காத்திருக்கிறது.

கடற்புலிகளின் இறுதித் தளமான சாலையைக் கைப்பற்றியதன் மூலம் கடற்புலிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாக படையினர் கூறுகின்றனர். முல்லைத்தீவுக்கான போரை ஆரம்பித்த போது முல்லைத்தீவு கடற்பரப்பில் 25 இற்கும் மேற்பட்ட டோராக்களும் பல நீருந்து விசைப் படகுகளும் பெருமளவு அதிவேக தாக்குதல் படகு அணிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. புலிகளின் தலைவர்கள் கடல் வழியாக தப்பிச் செல்வதைத் தடுக்கவும் புலிகளுக்கு கடல்வழியாக ஆயுதங்கள் வருவதைத் தடுக்கவுமே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு கூறியிருந்தது. அதேநேரம், முல்லைத்தீவு கரையிலிருந்து இந்தக் கடற்படைப் படகுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுமிருந்தன. மூன்று பக்கங்களிலும் புலிகள் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் நாலாவது பக்கமாக முல்லைத்தீவு கடல் உள்ளது. புலிகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கடல்வழியாலும் தரையிறங்க முற்படுவது போல் படைத்தரப்பு போக்குக் காட்டியது. இதனால் கடற் கரும்புலிகள் முல்லைத்தீவு கடலில் அடுத்தடுத்து இரு தாக்குதலை நடத்தி கடற்படைப் படகுகளை மூழ்கடிக்கவே கடற்படையினர் நடுக்கடலுக்குச் சென்றுவிட்டனர்.


சாலைப் பகுதியை தற்போது கடற்படையினர் கைப்பற்றி விட்டதால் கடற் புலிகளின் அனைத்து நடவடிக்கையும் தடுக்கப்பட்டு விட்டதாகக் கருதும் படையினர், இனி முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தல் இருக்கமாட்டாதெனக் கருதுகின்றனர். தற்போது சாலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பத்துக் கிலோ மீற்றருக்கும் குறைவான கரையோரப் பகுதியே புலிகள் வசமுள்ளது. இதனால் இந்தக் கடற்பகுதியில் கடற்புலிகள் ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடமுற்பட்டால் சாலையிலிருந்தும் முல்லைத்தீவு கரையிலிருந்தும் கடற்படையினர் செயற்பட்டு கடற்புலிகளுக்கு பலத்த இழப்புகளை ஏற்படுத்தி அவர்களது தாக்குதல் திட்டங்களை முளையிலேயே கிள்ளிவிட முடியுமென படைத்தரப்பு கருதுகிறது. இதைவிட, கடற்புலிகளின் பாரிய அச்சுறுத்தல் இல்லாது போவிட்டதால் முல்லைத்தீவு கடலில் கடற்படைப் படகுகள் கரையோரத்தை அண்டி வரவும் முடியுமென படையினர் நம்புகின்றனர். இதன் மூலம் முல்லைத்தீவுப் பகுதியில் புலிகளின் கரையோர நடவடிக்கையையும் முழுமையாக நிறுத்திவிட படையினர் முயல்கின்றனர்.

இலங்கை வரைபடத்தில் புலிகளின் பகுதி தற்போது ஒரு கைபிடி அளவிற்குள் வந்துவிட்டதால் அந்தப் பகுதியையும் மிக விரைவில் கைப்பற்றிவிட முடியுமென படையினர் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பை நோக்கி தற்போது ஏழு முனைகளிலிருந்து படையினர் சிறிது சிறிதாக முன்னேற முயல்கின்றனர். ஆட்லறிகள், பல்குழல் ரொக்கட்டுகள், பீரங்கிகள், மோட்டார்கள் புலிகளின் பகுதிகளை நோக்கி தொடர்ச்சியாக மழைபோல் குண்டுகளைப் பொழிய யுத்த டாங்கிகள் சகிதம் ஒவ்வொரு முனையிலும் படையினர் பாரிய முன்னகர்வு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தற்போது விடுதலைப் புலிகள் ஒவ்வொரு முனைகளிலும் மிகக் கடும் எதிர்ப்பைக் காட்டுவதால் படை நகர்வுகள் எதிர்பார்த்த வேகத்தைப் பெறவில்லை.

கடைசி யுத்தத்தில் புலிகளும் தங்களது அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றனர். வன்னிப் போர் தொடங்கிய பின்னர் இந்திய கடற்படையின் தீவிர கடல் கண்காணிப்பால் புலிகளின் ஆயுதக் கப்பல்களது வருகையில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. இருந்தும் இடையிடையே அவர்கள் ஆயுதங்களைத் தருவித்துமிருந்தனர். என்றாலும் தற்போதைய இறுதிக்கட்டச் சமரில் படையினர் கப்பல் கப்பலாக ஆயுதங்களை இறக்கி மிகத் தாராளமாகப் பயன்படுத்துகையில் புலிகளால் அவ்வாறு தங்கள் ஆயுதவளத்தை பயன்படுத்த முடியவில்லை. வன்னிக்கான போர் தொடங்கிய பின்னர் புலிகள் தந்திரமான பின்நகர்வுகளை மேற்கொண்டதற்கு இதுவுமொரு காரணம். ஆரம்பத்திலேயே மூர்க்கமாகப் போரிட்டு ஆயுத வளங்களையும் போராளிகளையும் பெருமளவில் இழந்திருந்தால் தற்போது இறுதிக் கட்டச் சமரில் படையினருடன் இந்தளவிற்கு மோத முடியாது போயிருக்குமென்பதுடன் படையினர் வன்னியை எப்போதோ முழுமையாகக் கைப்பற்றியுமிருப்பர்.

புதுக்குடியிருப்புக்கான போரை படையினர் சகல முனைகளினூடாகவும் தீவிரப்படுத்துகையில் ஒவ்வொரு முனையிலும் அதனை எப்படி முறியடிப்பது என்பது குறித்து புலிகளும் தீவிரமாச் சிந்தித்து அதற்கேற்ப செயற்பட முனைகின்றனர். பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தன்று புலிகளின் முழுமையான வீழ்ச்சி குறித்த செய்தியை உலகத்திற்குத் தெரிவிக்க அரசு முற்பட்டிருந்தது. ஆனால், அது சாத்தியப்படவேயில்லை.

கடந்த 1ஆம் திகதி புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் நந்திக்கடல் வாவிக்கு மேற்கேயுமுள்ள கேப்பாப்புலவு மற்றும் மன்னக்கண்டல் பகுதிக்குள் புலிகளின் அணிகள் புகுந்தன. சுதந்திரதினத்திற்கு முன் புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைந்துவிட வேண்டுமென்பதற்காக இந்தப் பகுதியில் படையினர் அன்றையதினம் (1ஆம் திகதி) முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். போர்த் தளபாடங்கள் அந்தப் பகுதியில் மிகப் பெருமளவில் குவிக்கப்பட்டு மிகப் பெருமளவில் படையினரும் முழு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த புலிகள் இந்தப் பகுதியில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர். 1ஆம் திகதி அதிகாலை ஆரம்பமான இந்தச் சமர் மறுநாள் மாலைக்குப் பின்னரும் தொடர்ந்ததாக படைத்தரப்பு தெரிவித்தது. படையினரின் வாகனங்கள், யுத்த டாங்கிகள், உழவு இயந்திரங்கள் என எல்லாவற்றின் மீதும் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்தனர். இதனைப் பின்னர் படைத்தரப்பும் உறுதிப்படுத்தியது.

பலத்த அழிவுகள் ஏற்பட்டன. புலிகளின் உக்கிர தாக்குதலையடுத்து படையினர் இந்தப் பகுதியில் தங்கள் முன்னரங்க நிலைகளை மீள அமைக்கும் நிலையேற்பட்டது. 59ஆவது படையணியின் பல பிரிவுகளது தலைமையகங்கள் இந்தப் பகுதிகளிலேயே அமைந்திருந்தன. இவையெல்லாம் புலிகளின் கடும் தாக்குதல்களுக்கிலக்காகின. இந்தப் பகுதியில் கடும் சமர் வெடித்தது. புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் நந்திக்கடல் வாவிக்கு மேற்கேயும் தொடர்ந்தும் மோதல் நடைபெற்றது. படையினரின் பாதுகாப்பு நிலைகள், அவர்களது வாகனங்களெல்லாம் தாக்குதல்களுக்கிலக்காகின. புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்றுவதற்கு இந்தப் பகுதிகளில் தயாராயிருந்த பெருமளவு படையினர் தாக்குதல்களுக்கிலக்கானார்கள்.

ஒரு கட்டத்தில் இவர்களுக்கு உதவுவதற்காக மாங்குளம் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 53ஆவது படையணியின் கமாண்டோப் பிரிவான எயார் மொபைல் பிரிகேட்டை வரவழைக்க வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மிகவும் உக்கிரமான சமர் நடந்தது. மறுநாள் 59ஆவது படையணியை வலுப்படுத்தவேண்டிய நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டன. விசேட படையணி 4 ம் கடும் தாக்குதலுக்குள்ளானது. மேலதிக படைகள் வரவழைக்கப்பட்டதுடன் முன்னரங்க பாதுகாப்பு நிலைகள் மீளமைக்கப்பட்டன (பின் நகர்த்தப்பட்டது). ஒட்டுசுட்டானுக்கு வடக்கேயும் புதுக்குடியிருப்புக்கு தெற்கேயும் புலிகள் ஊடுருவியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (3ஆம் திகதி) கரும்புலிகள் இரு பாரிய தாக்குதல்களை நடத்தினர். பெருமளவு வெடிபொருட்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு கேப்பாப்புலவில் இரு பகுதிகளில் படையினரின் முன்னரங்க நிலைகள் மீது இரு கரும்புலி வாகனங்கள் பாரிய தற்கொலைத் தாக்குதலை நடத்தின. தற்கொலைத் தாக்குலைத் தொடர்ந்து பெருமளவு புலிகள் படையினரின் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடத்தவே பெரும் சமர் வெடித்தது. பேரழிவுகள் ஏற்பட்டன. எனினும், புலிகளின் நோக்கத்தை தாங்கள் முறியடித்ததாக படைத்தரப்பு கூறியது.

இந்தத் தாக்குதல் மூலம் ஒட்டுசுட்டான் வரை செல்வதும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே நிலைகொண்டுள்ள படையினரின் தொடர்புகளைத் துண்டிப்பதுமே புலிகளது நோக்கமாயிருந்ததாகவும் எனினும் அது கைகூடவில்லையெனவும் படைத்தரப்பு தெரிவித்தது. மிகப் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சமரில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டும் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளதாக இணையத்தளச் செதிகள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு மீதான தாக்குதலுக்காக படையினர் களஞ்சியப்படுத்தியிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் புலிகள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளதாக "தமிழ்நெற்' இணையத் தளம் தெரிவித்துள்ளது. படையினரின் பகுதிக்குள் அவர்களுக்கான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 20 இற்கும் மேற்பட்ட வாகனங்களையும் தாங்கள் அழித்துள்ளதாக புலிகள் தெரிவித்ததாக அந்த இணையத் தளங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு புதுக்குடியிருப்புக்கான சமர் மிகத் தீவிரமடைந்துள்ளது. புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கிய நகர்வுகளுக்காக தாங்கள் மேற்கொள்ளும் ஆயத்தங்களை அந்தந்தப் பகுதிகளுக்குள் ஊடுருவி அறியும் புலிகள் அந்தத் தயாரிப்பு வேலைகளை சீர்குலைப்பதற்காக அந்தப் பகுதிகளில் பாரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்த முயலக்கூடுமென படைத்தரப்பு கருதுகிறது. இதனால் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி இந்தப் பகுதிகளில் புலிகள் ஒன்றுகூடும் இடங்கள் மீது 24 மணி நேரமும் கடும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. புலிகள் ஒன்றுகூடி, படையினர் பெருமளவில் திரண்டுள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளிலும் படையினர் இறங்கியுள்ளனர். புலிகளின் பகுதிகள் படையினரின் அனைத்து வகைத் தாக்குதலுக்குமுரிய எல்லைக்குள்ளிருப்பதால் படையினரின் முன்னரங்க நிலைகளுக்கு அப்பால் குறிப்பிட்ட தூரம் வரை கனரக ஆயுதங்கள் 24 மணிநேரமும் குண்டுகளைப் பொழிந்து வருகின்றன. புலிகள் பதில் தாக்குதலையும் முறியடிப்பு மற்றும் ஊடறுப்புத் தாக்குதலையும் பெருமளவில் நடத்தக் கூடுமென படையினர் கருதுகின்றனர்.

இதற்கேற்ப அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைகின்றனர். வன்னியில் 99 வீதமான பகுதியைக் கைப்பற்றிவிட்டு ஒரு வீதமான பகுதியை கைப்பற்றுவதில் நெருக்கடிகள் இருப்பதை படையினர் உணர்கின்றனர். இதுவரை காலப் போரில் ஏற்பட்ட இழப்புகளாலும் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைப்பதில் பெருமளவு படையினரை நிறுத்தியதாலும் கடைசி நேர யுத்தத்திற்காக குறிப்பிட்டளவு படையினரையே பயன்படுத்தக்கூடிய நிலையுள்ளது. இதனால் களமுனைக்கு தொடர்ந்தும் படையினரை அனுப்பி புலிகளின் எந்த வகைத் தாக்குதலையும் முறியடிக்க படையினர் முயல்கின்றனர். இறுதிப் போரில் புலிகள் தங்கள் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்த முயல்வரெனப் படையினர் கருதுகின்றனர். அதேநேரம், யுத்தம் மிகக் குறுகலான பகுதிகளில் நடைபெறும் போது கனரக ஆயுதங்களை பயன்படுத்த முடியாத நிலை கூட வரலாம். கனரக ஆயுதத் தாக்குதல் முன்னேறும் படையினரைக் கூட பாதிக்கலாமென்பதால் படையினர் மேலும் முன்னேறும்போது கனரக ஆயுதப் பாவனையை நிறுத்தி சிறிய ரக ஆயுதங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கும்.

தற்போதைய நிலையில் மக்களுக்கு ஏற்படும் பேரழிவுகள் குறித்து சர்வதேச சமூகம் கவலை கொண்டுள்ள போதும் யுத்த நிறுத்தமொன்றுக்குச் செல்ல அரசு தயாரில்லை. யுத்த நிறுத்தம் பற்றி எவர் கோரிக்கை விடுத்தாலும் அவர்கள் புலிகளின் ஆதரவாளர்களென முத்திரை குத்தப்படுகின்றனர். இந்தப் போர் குறித்து எந்த நாட்டது அக்கறையையும் ஏற்றுக்கொள்ள அரசு தயாரில்லை. சில அயல்நாடுகள் போருக்கு பூரண ஆதரவு வழங்குவதால் சர்வதேசத்தின் அழுத்தங்களை அந்த நாடுகளின் ஆதரவுடன் சமாளிக்க அரசு முற்படுகிறது. இதனால் முடிவொன்று கிட்டும் வரை இந்தப் போருக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கப்போவதில்லை என்பது நிச்சயம்.

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.