இலங்கை இனப்படுகொலை; இந்தியாவும் குற்றவாளியா? : அமெரிக்க முன்னாள் அமைச்சு செயலர்கள் அறிக்கை



அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுக்கு அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள்.



இதுபற்றிக் கூட்டாக அறிக்கையொன்றை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
''தேச எல்லைகள் என்பவை சர்வதேசப் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தப் பயன்படுவதில்லை. இனப்படுகொலைகள் தடுக்கப்படாவிட்டால், அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறிவிடும்!'' என்று அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இனப்படுகொலைகள், பலவீனமான நாடுகளில் அரசியல் ஸ்திரத்தன்மையை அழிக்கின்றன. அவற்றிலிருந்துதான் பயங்கரவாதத்துக்கு ஆட்கள் வந்து சேர்கிறார்கள். அந்த நாடுகளை அது பாதிப்பது மட்டுமின்றி, சர்வதேச சமூகத்தையும் பாதிக்கிறது. அகதிகள் பெருகி, அண்டை நாடுகளில் தஞ்சம் புக நேர்கிறது.

இனப்படுகொலைகளை வேடிக்கை பார்த்தால், அமெரிக்காவின் மதிப்பு உலக அரங்கில் கேள்விக்குரியதாகி விடும். இப்படியான படுகொலைகள் நடக்கும் நாடுகளில் கடைசியாக அமெரிக்கா இராணுவரீதியில் தலையிட நேர்கிறது. ஆனால், தொடக்கத்திலேயே இதைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா முன்வரவேண்டும். என்று வலியுறுத்தியிருக்கும் அவர்கள், ஒபாமாவுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருக்கிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அதிபரின் பணி முதல் நாளில் இருந்தே தொடங்கிவிடுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இனப் படுகொலைகளைத் தடுப்பதும், வெகுமக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்துவதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் கூடுதலாகச் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் என்று நாங்கள் கருதவில்லை. இது நம்முடைய தார்மீகக் கடமை. இராணுவ ரீதியான முன்னுரிமை என்று மேடலின் ஆல்ப்ரைட்டும், வில்லியம் எஸ்.கோஹனும் அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இனப்படுகொலை குறித்து இவர்கள் பேசியிருப்பது, இலங்கைப் பிரச்சினைக்கு மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது. இலங்கையில் நடப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைதான் என்பதை சர்வதேச அமைப்புகள் பலவும் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
அண்மையில், சென்னைக்கு வந்திருந்த அமெரிக்க முன்னாள் 'டெபுடி அசோசியேட் அட்டர்னி ஜெனரல்' புரூஸ் ஃபெயின் இதுபற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாகச் சொல்லியிருப்பதை நாம் அறிவோம்.

அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க கிரீன்கார்டு பெற்றவரான இலங்கை இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்போவதாக ஃபெயின் கூறியிருந்தார். இனப்படுகொலைகளைச் செய்ததாகத்தான் அவர்கள்மீது ஃபெயின் குற்றம் சாட்டியிருந்தார்.

ஐ.நா. சபை 1948-ம் ஆண்டிலேயே இனப்படுகொலைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அதில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 'இனப்படுகொலை என்றால் என்ன?' என்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு தேசிய, இன, மத, சமூகக் குழுவை முற்றிலுமாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது; உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ காயப்படுத்துவது; அக்குழுவை அழிக்கும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்துவது; அக்குழுவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது; அக்குழுவிலிருந்து குழந்தைகளை வேறு குழுவுக்கு மாற்றுவது ஆகியவை இனப்படுகொலை எனப்படும். என்று ஐ.நா. ஒப்பந்தம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இனப்படுகொலையைச் செய்தாலும், இனத்தை அழிக்க சதி செய்தாலும், அப்படிச் செய்வதற்குத் தூண்டினாலும், செய்ய முயன்றாலும், இனப்படுகொலைக்கு ஒத்துழைத்தாலும் குற்றமாகக் கருதப்படும். அந்தக் குற்றத்தை செய்தது, தனி மனிதராகவோ ஒரு அரசாகவோ இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின்கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது.

தற்போது இலங்கையில் நடந்துவருவது இன அழித்தொழிப்புதான், இனப்படுகொலைதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை புரூஸ் ஃபெயின் திரட்டியிருக்கிறார். 1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின்போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது முதல் இப்போது சிங்கள இராணுவத்தின் மூன்று படைகளும் சேர்ந்து தமிழர் மீது நடத்திவரும் தாக்குதல் வரை அவர் ஏராளமான சான்றுகளை இதற்காகச் சேர்த்திருக்கிறார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டமே இனச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதையும், இன்றைய ஆட்சியாளர்கள் 'ஒற்றைத் தன்மை கொண்ட ஆட்சிமுறைதான் சாத்தியம்' என்று சொல்வதையும்கூட அவர் உதாரணங்களாகக் காட்டுகிறார். சிங்கள இனவெறிக்கு ஆதாரமாக அவர்களின் புராணக் கதையான மகாவம்சம் எவ்வாறு விளங்குகிறது, அங்குள்ள பௌத்த பிக்குகள் எப்படி இனவெறியைப் பிரசாரம் செய்கிறார்கள் என்பதையெல்லாம் புரூஸ் ஃபெயின் விரிவாகத் தொகுத்திருக்கிறார்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை நாம் அடுக்க முடியும். இப்படியான இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட பல்வேறு சர்வாதிகாரிகள் இன்று சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், அதில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதும் அண்மைக் கால உதாரணங்களாகும்.

அதுபோல, கோத்தபாய ராஜபக்ஷவும், சரத் ஃபொன்சேகாவும் தண்டிக்கப்படுகிற காலம் வெகுதொலைவில் இல்லை. இனப்படுகொலை குற்றத்திலிருந்து ராஜபக்ஷவும் தப்பிக்க முடியாது.ஆனால், குற்றவாளிகள் அவர்கள் மட்டுமல்ல.இதில் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறது.

இனப்படுகொலைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தின் உறுப்பு 3 பிரிவு 5-ல் இனப்படுகொலைக்கு ஒத்துழைப்பு நல்குவதும் கூட குற்றமாகவே கருதப்படுமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிப் பார்த்தால், இலங்கை அரசின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக்கிற இந்தியாவும் குற்றவாளியாகவே கருதப்படக் கூடிய ஆபத்து உள்ளது' என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, ராடார் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவது, தமிழர்களுக்கு எதிரான போரில் இராணுவ ரீதியான வியூகங்களை வகுத்துத் தருவது, நிபுணர்களின் ஆலோசனைகளை அளிப்பது உட்பட பல உதவிகளை இந்தியா அளித்து வருவதான குற்றச்சாட்டுகள் இலங்கை தமிழ் அமைப்புகளாலும், இங்குள்ள அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றன.

அவற்றை இந்திய அரசு மறுத்துவிடவில்லை. இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள் என்று அவற்றையெல்லாம் இந்திய அரசு நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், ஐ.நா. ஒப்பந்தப்படி இவையெல்லாம் இனப்படுகொலைக்கு உதவிய குற்றமாகவே கருதப்படும்' என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே இலங்கையோடு இந்தியா கொண்டுள்ள உறவு என்பது, அங்கு வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் கேடு விளைவிப்பதாகவே உள்ளது. இந்திய வம்சாவளி தமிழர்களை இங்கே அழைத்து வருவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம், கச்சதீவை தாரைவார்த்துத் தருவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என இதற்கான சான்றுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
முந்நூறுக்கும் அதிகமான இந்திய குடிமக்களை (மீனவர்களை) இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றபோதிலும், அதற்கு இந்தியா எவ்வித நடவடிக்கையும் எடுக்காததும் கூட இத்துடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டிய விஷயமாகும்.

புரூஸ் ஃபெயினின் வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டால், இந்தியாவுக்கு எதிரான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படுவதும் உறுதியாகி விடும். நம்முடைய ஆட்சியாளர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவது, இந்திய குடிமக்களான நம் எல்லோருக்குமே அவமானம்தான். இதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. தங்களுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் இந்திய வெளியுறவுக் கொள்கையை சீரழித்துக் கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்திய பிரஜைகள் எல்லோருக்குமே இருக்கிறது.
தற்போது இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையைப் பற்றி எடுத்துரைத்து, அது எப்படி இந்தியாவின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு விளக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டின் தலைவர்களுக்கு உள்ளது. இங்கே எழுச்சிமிகுந்த போராட்டங்களை வகுத்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், தொலை நோக்குக் கொண்ட இத்தகைய கடமையையும் அவர்கள் ஆற்றுவதற்கு முன்வர வேண்டும்.
ஈழப் பிரச்சினைக்காகத் தன்னையே எரித்துக் கொண்ட முத்துக்குமாரின் உணர்ச்சிகளை நாம் மதிப்போம். ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே போதாது. அறிவு பூர்வமாகச் செயல்படுவதற்குத் தவறினோமென்றால், நம்மை எதிர்கால சந்ததியினர் மன்னிக்க மாட்டார்கள்!

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.