தமிழகத்தில் தொடங்கியது "பந்த்": கடைகள் அடைப்பு; ஆயிரக்கணக்கானோர் கைது


இலங்கைத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பஸ்கள், ரயில்கள் மட்டும் ஓடுகின்றன.

இந்த பந்த் சட்டவிரோதம் இல்லை, தடை செய்ய முடியாது என நேற்று மாலை உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது.

இந்த பந்த்தில் பங்கேற்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து கோர்ட்களின் பல்வேறு வக்கீல்கள் சங்கம், டாக்டர்கள் சங்கம், மருத்துவ மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அறிவித்துள்ளனர்.

கடைகள் பெருமளவில் அடைப்பு

இன்று காலை பந்த் தொடங்கியது முதல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஏஐடியூசியின் கீழ் வரும் ஆட்டோக்கள் ஓடவில்லை. ஷேர் ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை.

இருப்பினும், பஸ், ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை. பலத்த பாதுகாப்பு அவற்றுக்குத் தரப்பட்டுள்ளது.

பந்த் போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பஸ்கள் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை- புளியரை இடையிலான ஒரு அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கி சேதப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேதமடைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கோவையில், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 25 ஆயிரம் குறுந்தொழில் கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன.2 பேருந்துகள் கல்வீசித் தாக்கப்பட்டன.

கடலூர் மாவட்டத்திலும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதிகாலையி்ல 3 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து ஒன்று தாக்கப்பட்டது. ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை.

ஓசூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள் பெருமளவில் ஓடவில்லை.

எம்.எல்.ஏ கைது

திருத்துறைப்பூண்டியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் பந்த் போராட்டத்திற்கு கணிசமான அளவில் ஆதரவு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தின் அனைத்து மாவட்ட பொலிஸாரும் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கக் கூடிய இடங்களில் அதிக அளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாக கைது செய்ய பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு அலுவலகங்கள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் அலுவலகங்கள் ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


பல இடங்களில் தொடருந்து மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனால் பல தொடருந்துகள் தாமதமாக இயங்கின.

மதுரை திருமங்கலம் அருகே தொடருந்து பாதையின் குறுக்கே சரக்குந்து சக்கரம் தீயிட்டு எரிக்கப்பட்டதால் அந்த வழியே வந்த தொடருந்து நிறுத்தப்பட்டது.

அரச பணியாளர்களில் பெரும்பாலாலோனோர் பணிக்குச் செல்லவில்லை. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தனர்.

வழக்குரைஞர்கள், மாணவர்கள் போன்றோரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளித்தனர். மருத்துவர்கள் பணிக்கு சென்றிருந்த போதிலும், தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புப் பட்டி அணிந்து பணிகளை மேற்கொண்டனர்.

ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், சில கடைகள் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், முழு அடைப்பு அமைதியாக நடைபெற்று முடிந்ததாகத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி.ஜெயின் தெரிவித்துள்ளார்.

போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டதாக பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அதிகளவாக திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து 200 பேரும், இராணிப்பேட்டையில் 2 ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.











0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.