தொடர் தாக்குதல்களும் வெளிவராத உண்மைகளும்


இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் வன்னிப் பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை எவ்வளவு? இதற்கான விடையை நாம் கூறும் முன்னர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து விடும். அந்தளவிற்கு ஒவ்வொரு கணமும் வன்னியில் கொல்லப்படும் மற்றும் காயப்படும் மக்களின் எண்ணிக்கைகள் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து செல்கின்றன.

தினமும் மேற்கொள்ளப்படும் பல நூற்றுக்கணக்கான எறிகணை வீச்சுகள் மற்றும் வான் தாக்குதல்களால் பொதுமக்கள் பேரழிவுகளை சந்தித்து வருகின்றனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலை பல தடவைகள் வான்குண்டு மற்றும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகிய நிலையில் அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் கொழும்பு வதிவிடப் பேச்சாளர் கோடன் வைஸ் தெரிவித்திருந்தார். இலங்கை படையினர் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்த போதும், இலங்கை அரசு அதனை மறுத்துள்ளது. அத்துடன் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா.வின் வதிவிடஇணைப்பாளர் வாய்மூல மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளைகடந்த சில நாட்களாக வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களின் மீது வெள்ளை பொஸ்பரஸ் சேர்க்கப்பட்ட அதியுயர் வெடிமருந்து கொண்ட எறிகணைகள் (எரிகுண்டுகள்) பீரங்கிகள் மூலம் ஏவப்படுவதாக வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் போது பொருட்களும், பொதுமக்களின் உடல்களும் தீப்பற்றி எரிவதுடன், பாரிய சேதங்களும் ஏற்படும். சர்வதேச விதிகளின் அடிப்படையில் பொதுமக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் இந்த வகை எறிகணைகள் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 1980களில் உருவாக்கப்பட்ட ஜெனிவா சட்டவிதிகளிலும் இந்த ஆயுதங்கள் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

வெள்ளை பொஸ்பரஸ் எறிகணைகள் வெடிக்கும் போது பாரிய புகைமண்டலங்களையும், தீயையும் உருவாக்கும் தன்மை கொண்டவை. இதன் போது ஏற்படும் எறிகணை சிதறல்கள் மனிதர்களின் தோல்களில் ஒட்டி எரிவதுடன், அதன் இரசாயனப்பொருள் உடலினுள் பரவும் தன்மையும் கொண்டது. உடலினுள் பரவும் பொஸ்பரஸ் இரசாயனம் ஈரல், சிறுநீரகம் போன்ற உறுப்புக்களை செயலிழக்க செய்யும் தன்மை கொண்டது. வளிமண்டலத்தில் ஒட்சிசன் போதியளவில் இருக்கும் வரையிலும் பொஸ்பரஸ் துகள்கள் தொடர்ந்து எரியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத் தரப்பின் தகவல்களின் படி ஏறத்தாழ 300 சதுரகிலோமீற்றர் பரப்பளவிற்குள் முடக்கப்பட்டுள்ள மக்களையும், விடுதலைப்புலிகளையும் சுற்றி தரை, கடல், வான் வழிகளில் அரசு ஒரு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது. தரைப் பகுதி முற்றுகையை பொறுத்தவரையில், வன்னியின் கிழக்குப் புறமாக சுண்டிக்குளம் பகுதியில் 55 ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ளதுடன், அது சாலை பகுதி நோக்கிய நகர்வில் கடந்த இரு வாரங்களாக ஈடுபட்டு வந்திருந்தது.



நீரேரியுடன் கூடிய ஒடுங்கலான இந்தப் பகுதியில் விடுதலைப்புலிகள் தமது மோட்டார் மற்றும் சினைப்பர் அணிகளை இலகுகாலாட்படை அணிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதனால் எதிர்த்தாக்குதல் அங்கு கடுமையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு தென்புறமாக இராணுவத்தின் 58ஆவது படையணி நிலைகொண்டுள்ளது. இந்த டிவிசன் படையணி இரு முனைகளில் நகர்வை மேற்கொண்டு வருகின்றது. வடக்குபுறம் நிலைகொண்டுள்ள 583 ஆவது பிரிகேட் சாலை நோக்கி நகர்ந்து 55 ஆவது படையணியுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்த முற்பட்டுவருகின்ற அதே வேளை, தென்பகுதியில் நிலைகொண்டுள்ள ஏனைய இரு பிரிகேட்டுக்களும் 57ஆவது படையணியுடன் இணைந்து விசுவமடு பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. 58ஆவது டிவிசனுக்கு தென்புறமாக 57ஆவது டிவிசன் நிலைகொண்டுள்ளது. தற்போது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவ டிவிசன்களில் 57 ஆவது டிவிசன் அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரை கொண்ட டிவிசன். இது நான்கு பிரிகேட்டுக்களை கொண்டது.

7ஆவது டிவிசன் படையினருக்கு அப்பால் தென்மேற்குபுறமாக நடவடிக்கை படையணி மூன்று (63ஆவது டிவிசன்) நிலைகொண்டுள்ளது. இந்த படையணி விசுவமடு பகுதியில் முன்னகர்ந்து வருகின்றது. இதற்கு தென்புறமாக நடவடிக்கை படையணி இரண்டு (62ஆவது டிவிசன்) நிலைகொண்டுள்ளது. இது உடையார்கட்டுக்குளம் பகுதி நோக்கி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. நடவடிக்கை படையணி இரண்டுக்கு வலதுபுறமாக நடவடிக்கை படையணி நான்கு (64ஆவது டிவிசன்) நிலைகொண்டுள்ளது. இது புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வடமேற்கு பகுதியால் முன்னகர்ந்து வருகின்றது. இந்த படையணிக்கு தென்கிழக்குபுறமாக 59 ஆவது படையணி நிலைகொண்டுள்ளது. இந்த டிவிசன் நந்திக்கடல் நீரேரிக்கு அப்பால் இந்துசமுத்திர கடல் பகுதியுடன் தொடுப்பை ஏற்படுத்தி நிலைகொண்டுள்ளது. அதாவது நிலப்பரப்பில் ஒரு பிறைவடிவில் இராணுவத்தின் ஏழு டிவிசன்கள் நிலைகொண்டுள்ளதுடன், இந்த டிவிசன் படையணிகள் இழப்புக்களை சந்திக்கும் போது அவற்றை நிவர்த்தி செய்யும் வண்ணம் 53ஆவது தாக்குதல் டிவிசன் மாங்குளம் பகுதியில் பின்னிருக்கை படையணியாக பேணப்பட்டு வரப்படுகின்றது.

இருந்த போதும் கடந்த மாதம் 23ஆம் திகதி கல்மடு பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 57ஆவது டிவிசன் நிலைகொண்டிருந்த பகுதிக்கு 53ஆவது டிவிசனின் சில பற்றாலியன் படையினர் அனுப்பப்பட்டதுடன், கடந்த 1ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் 59ஆவது படையணி மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஊடறுப்பு தாக்குதலின் பின்னர் 53ஆவது டிவிசனின் மேலும் சில பற்றாலியன்கள் புதுக்குடியிருப்பு பகுதிக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. கடந்த 1ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த 59ஆவது படையணியின் முன்னணி நிலைகள் மீது ஓர் ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் இலகுகாலாட்படை அணிகள் புதுக்குடியிருப்புக்கு கிழக்குபுறம் இருந்து தாக்குதலை மேற்கொண்ட போது, ஈரூடகப்படையணியினர் நந்திக்கடல் ஊடாக ஒரு தரையிறக்கத்தை மேற்கொண்டு இராணுவத்தின் பின்னணி நிலைகளை ஊடறுத்து தாக்கியுள்ளனர்.

ஏறத்தாழ 30 ஈரூடகப்படை கொமாண்டோக்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதிகாலை 1.00 மணிக்கு ஆரம்பமாகிய தாக்குதல் 72 மணிநேரம் நீடித்ததாகவும், வான்படையினரின் மிக்27, கிபீர் மிகையொலி தாக்குதல் விமானங்களும், எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்தியும் உதவிக்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 150 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 350 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று ரீ55 ரக டாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்கள் அழிக்கப்பட்டதுடன், பெருமளவான கனரக ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வாகனங்களில் விடுதலைப்புலிகள் ஆயுத தளவாடங்களை எடுத்துச்சென்றுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இரு ரீ55 ரக டாங்கிகள், இராணுவ பேருந்து, உழவு இயந்திரங்கள் என்பன அழிவடைந்துள்ளதை படை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் அரசின் இறுக்கமான ஊடகத்தடைகளை மீறி படைத்தரப்பின் இழப்புக்களை அறிவதோ அல்லது வெளியிடுவதோ மிகவும் கடினமானது. புதுக்குடியிருப்பின் தென்பகுதியில் 59 ஆவது படையணியின் 9ஆவது சிங்க றெஜிமென்ட், 4 விஜயபா பற்றாலியன், 7 கெமுனுவோச் பற்றாலியன் ஆகிய படையணிகள் நிலைகொண்டிருந்த 1.5 கி.மீ நீளமான முன்னணி நிலைகளை விடுதலைப்புலிகள் ஊடறுத்து தாக்கியுள்ளதுடன், இராணுவ அணிகளை ஒரு முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தனர். இதன் போது சரமாரியான மோட்டார் மற்றும் பீரங்கி தாக்குதல்களையும் அவர்கள் மேற்கொண்டிருந்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் மணலாற்று பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய தனது நடவடிக்கையை ஆரம்பித்த 59ஆவது படையணி சந்தித்த கடுமையான மோதல் இதுவாகும்.

இதனிடையே தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் இனந்தெரியாத விமானம் ஒன்று விசுவமடுவின் கிழக்கு பகுதியில் தரையிறங்கிதை தாம் அவதானித்ததாக 58ஆவது படையணியினர் கொழும்பு தலைமையகத்திற்கு அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து படைத்தரப்பு அப்பகுதியை நோக்கி பீரங்கி தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன. எனினும் விமானம் மீண்டும் எழுந்து சென்றதற்கான தடயங்கள் இல்லை என படையினரின் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே விமானம் தரையிறங்குவதை இலகுவாக்கும் பொருட்டு இராணுவத்தினரின் கவனத்தை திசைதிருப்பவே 59ஆவது படையணியினரின் முன்னணி நிலைகள் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என படைத்தரப்பு தெரிவித்து வருகின்றது. விமானம் மூலம் விடுதலைப்புலிகள் முக்கியமான ஆயுதங்களை எடுத்து வந்தனரா? என்ற கேள்விகளும் படை அதிகாரிகளின் மத்தியில் தோன்றியுள்ளது. இருந்த போதும் வன்னியில் மோதல்கள் தொடர்வதாகவே வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்றில் சென்ற இரு கரும்புலிகள் புதுக்குடியிருப்புக்கும் முள்ளியவளைக்கும் இடையில் உள்ள கோப்பாபுலவு பகுதியில் உள்ள இராணுவ முன்னணி நிலை மீது கரும்புலித் தாக்குதலை நிகழ்த்தியதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இழப்புக்கள் தொடர்பாக இரு தரப்பும் எதனையும் தெரிவிக்கவில்லை. கோப்பாபுலவு புதுக்குடியிருப்பில் இருந்து தென்மேற்காக 6 கி.மீ தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் 61ஆவது சுதந்திர தினக்கொண்டாட்டங்களுக்கு முன்னர் சுண்டிக்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 55ஆவது டிவிசன் படையணி 59ஆவது டிவிசன் படையணியுடன் ஓர் இணைப்பை ஏற்படுத்துவார்களாயின் போரின் பெரும் பகுதியை நிறைவு செய்துவிடலாம் என அரசு எதிர்பார்த்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சுண்டிக்குளம் பகுதியில் இருந்து சாலை பகுதி நோக்கிய நகர்வில் ஈடுபட்ட 55ஆவது படையணி கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்திருந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதும் கடந்த வியாழக்கிழமை மாலை 55ஆவது படையணியின் இரண்டாவது பிரிகேட்டை சேர்ந்த 7ஆவது விஜயபா றெஜிமென்ட், 6ஆவது இலகுகாலாட்படை பற்றாலியன், 1ஆவது கொமாண்டோ றெஜிமென்ட ஆகியவற்றை சேர்ந்த பற்றாலியன் படையினர் சாலைப்பகுதியை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. சாலைப்பகுதிக்கும் சுண்டிக்குளத்திற்கும் குறுக்காக இரண்டு கி.மீ. இடைவெளியில் மூன்று மண் அணைகளை உருவாக்கியிருந்த விடுதலைப்புலிகள் கடந்த ஒரு வாரமாக கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வந்திருந்தனர். கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இந்த பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே கடல் பகுதியிலும் படைத்தரப்பு முற்றுகையை இறுக்கியுள்ளது. நான்கு வலயங்களாக கடல்பாதுகாப்பை கடற்படையினர் பலப்படுத்தியிருந்த போதும் கடந்த மாதம் 19ஆம் நாள் முல்லைத்தீவுக் கரையில் இருந்து 8 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டிருந்த டோரா படகு கடற்புலிகளின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரமும் கடற்பகுதியில் முன்னணி பாதுகாப்பு வலயமாகத் திகழும் சிறப்பு கடல் கொமாண்டோ அணியினர் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

விடுதலைப்புலிகளின் பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் தமது நகர்வுகளை முனைப்பாக்கி வருகையில் விடுதலைப்புலிகளும் தரையிலும், கடலிலும் தமது தாக்குதல்களை அதிகரித்து வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே அரசின் எதிர்பார்ப்புகளை போலவோ அல்லது கணிப்புக்களை போலவோ களமுனைகளும், காலச்சக்கரமும் இருக்கப்போவதில்லை என்பது தெளிவானது

0 comments:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.