வந்தார் மேனன் நொந்தது தமிழர் மனம்
வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தும் வகையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தான் இலங்கை வரவில்லையென்று கடந்த வாரம் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளரும் இந்தியாவுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்திருந்தது ஆச்சரியத்தை அளிப்பதாகத் தெரியவில்லை. சிவ்சங்கர் மேனனின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகல்லாகமவும், சிவ்சங்கர் மேனன் வடபகுதி யுத்தம் குறித்தோ யுத்த நிறுத்தம் குறித்தோ இலங்கை அரசுடன் பேச வில்லையென்று தெரிவித்திருந்தார்.அவர் இலங்கைக்குப் புறப்படும் முன்னரே என்ன நோக்கத்துக்காக இங்கு வருகிறார் என்ற விடயம் பலருக்கும் தெரிந்ததொன்றே. பிரணாப் முகர்ஜியின் செயலாளராவது இலங்கை வந்து எமது பிரச்சினைகள் பற்றி அரசுடன் பேசி யுத்த நிறுத்தத்துக்கு வழிவகுப்பாரென எவரும் நினைத்திருந்தால் கூட அவர்களின் இந்த நினைப்பு தப்பானதென்றே கூற வேண்டும்.
சிவ்சங்கர் மேனன் இங்கு தெரிவித்தவை தமிழக அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றோருக்கு அதிர்ச்சியுடன் கூடிய ஏமாற்றத்தை அளித்திருந்தாலும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர் கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. வெளியுறவுச் செயலாளரின் இந்த விஜயத்தின் உண்மையான நோக்கம் வடபகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் குறித்தானதும் யுத்த நிறுத்தத்துக்குமானதாகவும் அமைந்திருந்தால் கூட அதனைக் காலம் கடந்த நிலையில் இந்தியாவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகவே கருத வேண்டும். இந்தத் தீர்மானத்தால் எந்த விமோசனமும் கிடைக்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. இலங்கையில் யுத்தம் உக்கிரமடையும் போதெல்லாம் இந்தியாவினால் செய்ய முடிந்தது நிவாரணத்தை வழங்குவதும் உணவுப் பொட்டலத்தைப் போடுவதும் இலங்கைக்கு யாரையாவது அனுப்பி எதையாவது பேசச் செய்வதுமேயாகும். கடந்த 25 வருட காலத்தில் இரு தடவைகள் இதனைக் கண்டுவிட்டோம்.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இலங்கை இராணுவம் வடமராட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்ற போது இந்திய அரசாங்கம் அந்த மக்களுக்குப் படகுகள் மூலம் உணவுப் பொருட்களை விரைந்து அனுப்ப முயற்சித்தது. அந்த முயற்சி கைகூடா ததையடுத்து யுத்த விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்களை போட்டது. இது இந்தியாவின் முதலாவது நிவாரணமாக அமைந்தது.
அடுத்த நிவாரண உதவிகள் அண்மைக்கால யுத்த நடவடிக்கைகளின்போது வழங்கப்பட்டவை. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் 1700 தொன் உணவுப் பொருட்களை இந்தியா அனுப்பியிருந்தது. சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்த போது 40 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களைக் கையளித் திருந்தார். விருந்தாளி ஒருவர் வீட்டுக்குப் போகும் போது ஏதாவது ஒன்றினைக் கொண்டு செல்ல வேண்டுமென்ற பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே இதுவும் நடந்திருக்கலாம். இவ்வாறு வழங்கப்பட்ட 40 மில்லியன் பெறுமதியான நிவாரணப் பொருட்களில் பெருந்தொகையானவை மருத்துவப் பொருட்களாகவே உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, இந்த மருத்துவப் பொருட்கள் கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சரியான முறையில் சென்றடையுமா என்பதும் சந்தேகமே.
இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் அண்மைக் காலமாக இந்தியாவின் அணுகுமுறையானது முற்றிலும் வேறுபட்டதாகவே அமைந்துள்ளது. வடக்கில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்காகத் தமிழகத்தில் உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அதே போன்று தமிழக அரசும் ஏனோதானோவென்று இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை காட்டுவது போல் சில நடவடிக்கைகளையும் எடுத்தது. ஆனால் இந்திய மத்திய அரசு எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் சரியென்று தலையாட்டியதே தவிர, இலங்கைத் தமிழ் மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டிருந்தால் இந்த நிலையேற்பட்டிருக்காது என்று சிவ்சங்கர் மேனன் இலங்கை வந்திருந்தபோது குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தையே கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இந்திய வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் கூறியிருந்த துடன் தமிழீழ விடுதலைப் புலிகளே இதன் அமுலாக்கத்துக்குத் தடையாகவிருந்ததாகவும் ஒருபடி மேல் சென்று தெரிவித்திருந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்டதே மாகாண சபை முறையாகும். வடக்கு,கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களுக்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையைப் புலிகள் முற்றாக நிராகரித்து விட்டார்களென்று வைத்தாலும் முதலமைச்சராக சில காலம் பதவி வகித்த வரதராஜப் பெருமாள் ஈழப்பிரகடனம் ஒன்றைச் செய்ய வேண்டிய நிலைக்கு ஏன் தள்ளப்பட்டார்? அவ்வாறான நிலையேற்படக் காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் யார்? அமைந்த காரணிகள் எவை என்பது கூட இந்திய வெளிவிவாகார அமைச்சருக்கும் அவரது செயலருக்கும் தெரியாது போனது ஏனோ? இலங்கையின் ஏனைய மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கூட ஜே.ஆரும் பிரேமதாசவும் தனது மாகாண சபைக்குத் தரவில்லையென்று வரதராஜப் பெருமாள் அறிக்கை விட்டு ஈழப் பிரகடனம் செய்ததை இந்தியத் தலைவர்கள் மறந்துவிட்டனரா? இந்திய மத்திய அரசின் நிர்ப்பந்தத்திலேயே வடக்குகிழக்கு மாகாண சபையை ஜே.ஆர். உருவாக்கினார் என்பதும் அதன் பின்னர் அதற்கான அதிகாரங்களை மத்திய அரசிடம் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஆளுநர் நியமனம் செய்யப்பட்டமையும் அவரையடுத்து ஆட்சிக்கு வந்த பிரேமதாசாவும் ஜே.ஆரை அடியொற்றிச் செயல்பட்டதனையும் சர்வதேசம் அறிந்துள்ள நிலையில் இன்றைய இந்திய மத்திய அரசுக்கு அவ்வாறானதொரு சம்பவம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளதென்பது கூடத்தெரியாமல் இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.
வடமராட்சி தாக்குதலின் பின்னராகக் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய (ராஜீவ் - ஜே.ஆர்.) ஒப்பந்தத்தையடுத்து இந்திய அமைதிப் படையினரின் வருகையையும் அதன் பின் இடம்பெற்ற கசப்பான சம்பவங்களையும் தமிழ் மக்கள் மறந்து விடப் போவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களையாவது அன்றைய வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு வழங்கியிருந்தால் சில வேளைகளில் இன்றைய இந்தப் பிரச்சினை இவ்வளவு பூதாகரமாக மாறியிருக்காது என்றே கூறலாம்.
வெறும் நிவாரணப் பொருட்களை மட்டும் இந்தியாவிடமிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இலங்கை அரசை நிர்ப்பந்திக்குமென்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிவ்சங்கர் மேனனின் வரவுடன் ஏமாற்றமாக மாறிவிட்டது. இவ்வாறானதொரு நிலையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கையை நிர்ப்பந்திக்கக் கூடாதென்றும் இது முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்காது என்றும் தெரிவித்திருப்பது கேலிக்குரியதே. மேலும் ராஜீவ் காந்தி கொலையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்று காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இது வேறு பிரச்சினை. ஆனால் ஒருவர் அல்லது ஓர் இயக்கம் செய்த தவறுக்காக இவ்வாறான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓர் இனத்தையே தண்டித்துப் பழிவாங்க இந்தியா நினைத்தால் அது வேதனைக்குரிய விடயமாகும். தமிழ் நாடு அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு என்ன அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை மீதான நிலைப்பாட்டில் இந்திய மத்திய அரசில் மாற்றம் எதுவும் இல்லையெனவும் இந்திய அரசாங்கம் இலங்கைக்குச் சார்பாகவே உள்ளதெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அண்மையில் தெரிவித்துள்ள கருத்தினையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளை, வேறொன்றினையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இலங்கை அரசுடன் நட்புறவைப் பேணிவரும் பெரும்பாலான நாடுகள் இந்தியா போன்றே இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் காட்டாத நிலையிலேயே உள்ளன. அண்மைக் காலப் போக்குகளிலிருந்து இதனை அறிந்து கொள்ள முடிகிறது.
பங்களாதேஷ் படைத்தரப்பு முக்கிய அதிகாரிகள் கடந்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்து இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேசியிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகளில் கூட இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பங்களாதேஷ் எதனையும் தெரிவிக்கவில்லை. இதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கு இரு தடவைகள் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன் பயனாக சீன அரசாங்கம் எவ்வாறான உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறதென்பதும் இவ்வாறான உதவிகள் மூலம் சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது என்னவென்பதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமே.
இதேபோன்று, பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து அந்த நாடுகளினது தலைவர்களையும் பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருகிறார். இந்த மாத ஆரம்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தோனேசியா சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உளவுப் பரிமாற்றம், கூட்டுப் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, இராணுவ பயிற்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பாக இந்தோனேசிய அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இலங்கையின் இன்றைய நிலவரம் குறித்த இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறியதுடன் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கையால் தமிழ் மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லையென உறுதிபடத் தெரிவித்திருந்தார். இலங்கை இராணுவத்தின் வடபகுதி யுத்த முன்னெடுப்புகளால் பொதுமக்கள் பாதிக்கப்படாமை காரணமாக மக்கள் இராணுவத்தின் மீது நன்மதிப்பை வைத்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதேபோன்று கடந்த 19 ஆம் திகதி பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், இராணுவப் பயிற்சி வழங்குதல் போன்றவை குறித்து இருதரப்பிலும் ஆராயப்பட்டதுடன் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வகையில் பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து செயல்படவும் இந்தச் சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது. இலங்கைக்குத் தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தமது நாடு தொடர்ந்து வழங்குமென பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் இந்தச் சந்திப்பின் போது உறுதியளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்துக்குத் தொடர்ந்து உதவிகள் அளித்து வரும் பாகிஸ்தான் அரசுக்கு கோத்தபாய ராஜபக்ஷ நன்றியும் தெரிவித்திருந்தார். சார்க் வலயமைப்பு நாடுகளில் வறுமைமிக்க நாடான வங்கதேசத்தின் புதிய ஜனாதிபதி அண்மையில் இலங்கை வந்திருந்த போது, அவர் கூட ஒரு கருத்தைத் தெரிவித்து விட்டே சென்றிருந்தார். வடக்கில் இடம்பெறும் யுத்தத்தில் படையினர் கண்டு வரும் வெற்றி பாராட்டுக்குரியதென கூறியிருந்தமையும் இங்கு கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். ஆகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழ் மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டையோ அல்லது ஓர் அனுதாபப் பார்வையையோ இலங்கையுடன் நட்புறவைக் கொண்டுள்ள நாடுகள் வெளிக்காட்டுமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாகும். இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை அரசுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதன் மூலம் இந்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் காலூன்றுவதே இவ்வாறான நாடுகளின் நோக்கமாகவுள்ளது என்பது மட்டும் வெளிப்படையான உண்மை
தலைப்புகள்
இந்தியா செய்திகள்
0 comments:
கருத்துரையிடுக
உங்களின் கருத்துரைகளை பின்னூட்டம் இடுவதின் மூலம் எம்மால் முடிந்த அளவுக்கு அதிகமான பதிவுகளை பதிய இயலும். முடிந்தால் முயற்சி செய்து எனக்கும் எழுத வாய்ப்பு கொடுங்கள்.